Published:Updated:

அரையிறுதிக்கு முன் இந்திய அணி சரிசெய்யவேண்டிய இரு சிக்கல்கள்!

Team India

விக்கெட் விழக்கூடாது என்று பேட்ஸ்மேன்கள் நினைப்பது சரிதான். ஆனால், அவர்கள் களத்தில் நின்றால்தான் அது சாத்தியம் என்ற மனநிலையில் ஆடுவதுதான் அணிக்கு சிக்கலை ஏற்படுத்துகிறது.

Published:Updated:

அரையிறுதிக்கு முன் இந்திய அணி சரிசெய்யவேண்டிய இரு சிக்கல்கள்!

விக்கெட் விழக்கூடாது என்று பேட்ஸ்மேன்கள் நினைப்பது சரிதான். ஆனால், அவர்கள் களத்தில் நின்றால்தான் அது சாத்தியம் என்ற மனநிலையில் ஆடுவதுதான் அணிக்கு சிக்கலை ஏற்படுத்துகிறது.

Team India

'Intent' - இந்திய பேட்ஸ்மேன்களை கேள்விக்குள்ளாக்கிய, பல சர்ச்சைகளுக்கு வழிவகுத்த, இந்த உலகக் கோப்பையின் வைரல் வார்த்தை. சச்சின், கங்குலி முதல் நாசர் உசேன், மெக்கல்லம் வரை பலரும் இந்திய பேட்ஸ்மேன்களின் நோக்கத்தைக் கேள்வி எழுப்பத் தவறவில்லை. லீக் போட்டிகளில் பெரிய சேதாரம் ஏதும் இல்லாமல் கரைசேர்ந்துவிட்டது மென் இன் புளூ. ஆனால், எல்லா போட்டிகளிலும் ஒரேபோல் இருக்காது. இந்தியா தடுமாறும் அந்த ஒரு போட்டி, 2015 உலகக் கோப்பை போல் அரையிறுதியாக இருக்கலாம். இல்லை, 2017 சாம்பியன்ஸ் டிராபி போல் ஃபைனலாக இருக்கலாம். ஆனால், இந்த முறை அப்படி நடக்க விட்டுவிடக்கூடாது. எந்தவொரு சிறு பிழையும் கோப்பைக் கனவைக் கலைக்க இடம் தந்துவிடக்கூடாது. சாம்பியன் ஆகவேண்டுமெனில், அந்த முன்னாள் வீரர்கள் சொன்னதுபோல், இந்திய பேட்ஸ்மேன்கள் தங்களின் நோக்கத்தை மாற்றிக்கொள்ளவேண்டும்.

இந்திய பௌலர்கள் பெரிதாக பேட்டிங்கில் கைகொடுக்கப்போவதில்லை. அதனால் என்ன, 7 பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். 7 தரமான பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். ஆனால், இந்திய பேட்ஸ்மேன்களுக்கு அவர்களின் பேட்டிங் ஆர்டர் மீது நம்பிக்கை இல்லை. தங்களுக்கு அடுத்து வரும் வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து, தங்களின் நேச்சுரலான ஆட்டத்தை ஆடவேண்டும்.
சௌரவ் கங்குலி
Dhoni
Dhoni

வங்கதேசத்துக்கு எதிரான போட்டிக்கு முன்பு இப்படிக் கூறியிருந்தார் கங்குலி. இந்த உலகக் கோப்பையில் இந்திய அணியின் மிகப்பெரிய பிரச்னையே இதுதான். இந்திய பேட்ஸ்மேன்கள் ஒவ்வொருவருமே மாற்றிக்கொள்ளவேண்டிய விஷயம் இது. தோனி, ஜாதவ் மட்டுமல்லாமல் கோலி, ரோஹித் போன்றவர்கள்கூட தங்களின் அணுகுமுறையை மாற்றிக்கொள்ளவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிராக ரோஹித் - கோலி பார்ட்னர்ஷிப் ஆடிய விதம், இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. மூன்றாவது ஓவரிலேயே ராகுல் அவுட்டாகிவிட்டார் என்பதற்காக, ஓவருக்கு 3 ரன்கள்கூட எடுக்காமல் இருந்தது சரியல்ல. அவர்கள் விக்கெட் முக்கியம்தான். ஆனால், அதேசமயம் ரன்ரேட் பற்றியும் யோசித்திருக்கவேண்டும். அவர்கள் அவுட்டாகிவிட்டால், அதன்பின் இந்திய அணி அவ்வளவுதான் என்ற நினைப்பில்தான் அப்படியொரு மெதுவான ஆட்டத்தை ஆடியிருக்கிறார்கள். அந்த நினைப்புதான் தவறு என்கிறார் கங்குலி.

Rohit and Kohli
Rohit and Kohli

அடுத்து, வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ் போட்டிகளில் கோலி ஆடிய ஆட்டம். ஒருகட்டத்தில் ரன்ரேட் குறைகிறது என்பதற்காக, வழக்கத்துக்கு மாறாக ஒவ்வொரு பந்தையும் அடிக்கத்தொடங்கியபோதுதான் அவுட் ஆனார். அடுத்த வரும் ஜாதவ், பாண்டியா போன்றவர்கள் அந்த வேலைகளைச் செய்வார்கள். ஆனால், அதை கேப்டன் நம்பவேண்டுமே! பொறுப்புகளைத் தன் தோள்களில் சுமப்பதை கோலி விரும்புவார்தான். ஆனால், அந்த பொறுப்புகளோடு, உலகக் கோப்பை எனும் நெருக்கடியும் சேரும்போது, அவரது ஆட்ட முறையிலும் மாற்றம் ஏற்படுகிறதல்லவா! அணியின் மீது நம்பிக்கை அதிகரித்தால்தானே அப்படியான மாற்றம் ஏற்படாமல் இருக்கும்.

இவர்கள் இருவரையும் விட தோனியின் அனுகுமுறைதான் இன்னும் கவலையளிப்பதாக இருக்கிறது. அவர்களாவது ஒன்று அதிரடி காட்டாமல் இருக்கிறார்கள், இல்லை அதிரடி காட்டி அவுட் ஆகிறார்கள். ஆனால், தோனி... தன்னோடு யார் களத்தில் இருந்தாலும், டெய்ல் எண்டர் ஒருவருடன் விளையாடுவது போலத்தான் ஆடுகிறார். மிடில் ஓவராக இருந்தாலும் சரி, டெத் ஓவராக இருந்தாலும் சரி ஸ்டிரைக் ரொட்டேட் செய்ய மறுக்கிறார்.

Team India
Team India
தன்னால் மட்டும்தான் இந்த நிலையில் சிக்ஸர் அடிக்க முடியும் என்று தோனி இன்னும் நம்புகிறார்.
சௌரவ் கங்குலி

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் தோல்வி உறுதியானபின்பு, கடைசி ஓவரில் சிங்கிள் போக மறுத்தபோது வர்ணனையில் கங்குலி சொன்ன வார்த்தைகள். கடந்த சில மாதங்களாக தோனியிடம் இதுதான் பிரச்னை. ஐ.பி.எல் தொடரில், பெங்களூரு அணிக்கெதிரான போட்டியில் இதைத்தான் செய்தார். 12 பந்துகளுக்கு 36 ரன்கள் தேவை. உடன் களத்தில் நிற்பது டுவைன் பிராவோ. சிக்ஸர் அடிக்கக்கூடியவர்தான். குறைந்தபட்சம் சிங்கிளாவது எடுக்கக்கூடியவர். ஆனால், 19-வது ஓவரில் மூன்று முறை சிங்கிள் எடுக்க மறுத்தார் தோனி. கடைசி ஓவரில் 24 ரன்கள் எடுத்தார்தான். ஆனால், ஒரு ரன் வித்யாசத்தில் தோல்விதான் மிஞ்சியது.

Dhoni
Dhoni

இங்கிலாந்துக்கு எதிரான அந்த கடைசி ஓவரில், அவர் சிங்கிள் அடித்திருந்தால் முடிவு மாறியிருக்கப்போவதில்லை. ஆனால், கேதர் ஜாதவ் போன்ற ஒரு பேட்ஸ்மேன் எதிர்முனையில் இருக்கும்போது அதை மறுப்பது ஏன் என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில், கோலி அவுட்டான பிறகு அவர் மெதுவாக ஆடியது சரிதான். அது ஏற்றுக்கொள்ளக்கூடியது. ஆனால், உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேன், 100+ ஸ்டிரைக் ரேட்டில் ஆடிக்கொண்டிருக்கும்போது மெதுவாக... 'அவ்வளவு மெதுவாக' ஆடவேண்டிய அவசியம் கொஞ்சமும் இல்லை.

விக்கெட் விழக்கூடாது என்று பேட்ஸ்மேன்கள் நினைப்பது சரிதான். ஆனால், அவர்கள் களத்தில் நின்றால்தான் அது சாத்தியம் என்ற மனநிலையில் ஆடுவதுதான் அணிக்கு சிக்கலை ஏற்படுத்துகிறது. ஹர்திக் பாண்டியா, கேதர் ஜாதவ், ரிஷப் பன்ட், தினேஷ் கார்த்திக்... யாரும் மிகப்பெரிய தருணங்களில் 100 சதவிகிதம் நம்பக்கூடியவர்கள் இல்லை. ஆனால், தனி ஆளாக ஒவ்வொருவருமே ஒருசில ஆட்டத்தை மாற்றக்கூடியவர்கள். மாற்றியவர்கள்! அவர்கள் மீது டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கொஞ்சமாவது நம்பிக்கை வைப்பது அவசியம். அப்போதுதான் அவர்களாலும் அவர்களின் வழக்கமான ஆட்டத்தை ஆட முடியும்.

Bumrah and Kohli
Bumrah and Kohli

டெத் பௌலர்?

கடந்த இரண்டு போட்டிகளால், புதிதாக எழுந்திருக்கிறது இந்த கேள்வி. இங்கிலாந்துக்கு எதிராக கடைசி 10 ஓவர்களில் இந்தியா விட்டுக்கொடுத்த ரன்கள் 92. வங்கதேசத்துக்கு எதிராக, கடைசி 8 ஓவர்களில் 61 ரன்கள். உலகக் கோப்பையை சிறப்பாகத் தொடங்கிய இந்திய பௌலிங் யூனிட், சற்று தடுமாறத் தொடங்கியிருக்கிறது. பும்ரா மட்டும்தான் கடைசி கட்டத்தில் சிக்கனமாகப் பந்துவீசுகிறார். ஷமி, விக்கெட்டுகள் வீழ்த்தினாலும் ரன்கள் அதிகம் விட்டுக்கொடுப்பதால், நாக் அவுட் போட்டிகளில் பலமான ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக இது பின்னடைவாக அமையும். பும்ராவுடன் சேர்ந்து டெத் ஓவரை வீச விராட்டுக்கு இருக்கும் ஒரே ஆப்ஷன் புவிதான்.

அப்படி அடுத்த போட்டிகளுக்கு புவி ஆடவேண்டுமெனில், இந்தியா 3 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கவேண்டும். ஏனெனில், அப்போதுதான் மிடில் ஓவர்களில் விக்கெட் வீழ்த்த முடியும். 3 வேகப்பந்துவீச்சாளர்கள் இருந்தால்தான், பும்ராவையும் மிடில் ஓவர்களில் தேவைப்படும்போது பயன்படுத்தமுடியும். 2 வேகப்பந்துவீச்சாளர்களோடு விளையாடும்போது, இந்தியாவுக்கு அந்த சுதந்திரம் கிடைப்பதில்லை.

Mo Shami
Mo Shami

உதாரணமாக, எப்போதெல்லாம் ஒரு பார்ட்னர்ஷிப்பை உடைக்கவேண்டியிருக்கிறதோ அப்போதெல்லாம் ஸ்டார்கை அழைக்கிறார் ஆஸ்திரேலிய கேப்டன் ஃபின்ச். வெறும் இரண்டு அல்லது மூன்று ஸ்பெல்களில் 10 ஓவர்களையும் முடிக்காமல் 4 ஸ்பெல்கள்கூட வீசுகிறார். ஏனெனில், அவர்களால் கம்மின்ஸ் மற்றும் பெரண்டார்ஃப் / கூல்டர்நைல் ஆகியோரைக்கொண்டு முதல் பவர்பிளேவையும் முடிக்க முடியும், மூன்றாவது பவர்பிளேவையும் முடிக்க முடியும்.

மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள் இருப்பதால் ஏற்படும் சாதகம் அது. பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகளால் ஆமிர், ஆர்ச்சர் போன்றவர்களை அதனால்தான் சிறிய ஸ்பெல்களை வீசவைக்க முடிகிறது. குல்தீப் யாதவ் பெரிதாக விக்கெட்டுகள் வீழ்த்தவில்லை என்பதனால், இந்திய அணி 3 வேகப்பந்துவீச்சாளர்களோடு களமிறங்குவதே நல்லது. கோலி அதற்குத் தயாராக இருப்பாரா?

Bhuvneshwar Kumar
Bhuvneshwar Kumar

இந்த இரு சிக்கல்களையும் சரிசெய்தால் மட்டுமே நாக் அவுட் போட்டிகளில் இந்தியாவால் சிறப்பாக செயல்பட முடியும். பௌலிங் பிரச்னை டீம் மீட்டிங்கில் சரிசெய்யக்கூடிய ஒரு விஷயம். ஆனால், அந்த முதல் பிரச்னை, ஒவ்வொரு வீரரும் தனிப்பட்ட முறையில் மாறினால் மட்டுமே ஒன்றாக வெற்றியைக் கொண்டாடமுடியும்!

இந்திய பேட்ஸ்மேன்களின் சமீபத்திய பர்ஃபாமன்ஸில் இந்தக் குறைபாடு இருக்கிறது என நம்புகிறீர்களா? . இந்தியா அரையிறுதியில் வெல்ல என்ன செய்ய வேண்டும் ? உங்கள் கருத்துக்களை கமென்ட்டில் பதிவிடுங்கள்.