Published:Updated:

ENG vs IND: பும்ரா - ஷமி பௌலிங் பார்ட்னர்ஷிப்; பதிலின்றி தவித்த இங்கிலாந்தின் அட்டாக்கிங் ஃபார்முலா!

ENG vs IND ( Matt Dunham )

நியூசிலாந்துடனான டெஸ்ட் தொடர் வெற்றி, இந்தியாவுடனான டெஸ்ட் வெற்றி இவற்றால் அந்தரத்தில் மிதந்து கொண்டிருந்த இங்கிலாந்தை நிகழுலகத்திற்கு இழுத்து வந்துள்ளது இந்த மோசமான தோல்வி.

ENG vs IND: பும்ரா - ஷமி பௌலிங் பார்ட்னர்ஷிப்; பதிலின்றி தவித்த இங்கிலாந்தின் அட்டாக்கிங் ஃபார்முலா!

நியூசிலாந்துடனான டெஸ்ட் தொடர் வெற்றி, இந்தியாவுடனான டெஸ்ட் வெற்றி இவற்றால் அந்தரத்தில் மிதந்து கொண்டிருந்த இங்கிலாந்தை நிகழுலகத்திற்கு இழுத்து வந்துள்ளது இந்த மோசமான தோல்வி.

Published:Updated:
ENG vs IND ( Matt Dunham )
அதிரடி கிரிக்கெட்டே எங்கள் பிரதானம் என்று சூளுரைத்துக் கொண்டிருக்கும் இங்கிலாந்து அணிக்கு சூடு வைத்துவிட்டது, பும்ரா & கோ! டெஸ்ட் கிரிக்கெட்டையே அட்டாக்கிங் பாணியில் ஆடுவதைக் குறித்துப் பாடமெடுத்த இங்கிலாந்துக்கு அதன் எதிர் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை இந்தியா காட்டிவிட்டது.

டி20 தொடரின் முதல் இரு போட்டிகளிலுமே, இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் தங்களின் ஆதிக்கத்தை நிலை நாட்டியிருந்தனர். அது விட்டகுறை தொட்டகுறையாக, ஒருநாள் தொடரிலும் தொடர்ந்துள்ளது. டெஸ்ட் மேட்சுக்கே ஃப்ளாட் பிட்சோடு கைகோர்த்த இங்கிலாந்து, முதல் ஒருநாள் போட்டிக்கு, க்ரீன் டாப் களத்தையே செட் செய்திருந்தது. பெளலர்கள் "அப்படியே சாப்பிடலாம்" என்பதால் ரோஹித்தும் பௌலிங்கையே தேர்ந்தெடுத்தார்.

ENG vs IND
ENG vs IND
Matt Dunham

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பும்ரா - இந்த நாளின் நாயகன் அவர்தான். என்னதான் பவர்பிளே, டெத் ஓவர்கள் என இரண்டிலுமே அச்சுறுத்துகிறார் என்றாலும், மூன்று ஃபார்மேட்டுக்கும் ஏற்றாற் போலவும் தன்னைத் தகவமைத்துக் கொள்கிறார் என்றாலும், ஒருநாள் போட்டிகளில் புதுப் பந்தில் விக்கெட் எடுக்கத் தவறுகிறார் என்ற குறை 2019 உலகக் கோப்பைக்குப் பிறகு இருந்து வந்தது. கடைசியாக ஆடியுள்ள 12 ஒருநாள் போட்டிகளில் பவர்பிளேயில் 47 ஓவர்களை அவர் வீசியிருப்பினும் அதில் ஒரு விக்கெட்டை மட்டுமே பும்ரா எடுத்திருந்தார். ஆனால், இப்போட்டியிலோ வீசிய முதல் ஓவரிலேயே இரு விக்கெட் மெய்டனோடுதான் தொடங்கியிருந்தார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

முதலில் ராய் மற்றும் ரூட் இருவரையுமே டக் அவுட்டாக்கி அதிர்ச்சித் தொடக்கம் கொடுத்தார். ஃபுல் லெந்தில் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே நகர்ந்த பந்து, இன்சைட் எட்ஜாகி ராயை வெளியேற்ற, களத்தில் கிடைத்த எக்ஸ்ட்ரா பவுன்ஸ், ரூட்டின் விக்கெட்டுக்கான ரூட்டு போட பும்ராவுக்கு உதவியது. களத்தில் பும்ரா, பேட்ஸ்மேன் மற்றும் பண்ட் மட்டும்தான் இருக்கிறார்களா என்னும் அளவு அவர்களின் மீதே பார்வையாளர்களின் முழு கவனமும் இருக்க வேண்டியிருந்தது. ஸ்கெட்சை பும்ரா போட, பேட்ஸ்மேன் அதில் விழ, கேட்ச்களைத் தவற விடாது அதனை உறுதிப்படுத்திப் படுத்திக் கொண்டே இருந்தார் பண்ட். அவரது ஒன் ஹாண்டட் சிக்ஸர்களைப் போன்றே ஒன் ஹாண்டட் கேட்சுகளும் இப்போட்டியில் அசர வைத்தன. ஒரு விக்கெட் கீப்பராகப் பல படிகள் முன்னேற்றம் அடைந்துவிட்டார் இந்த ஸ்பைடர்மேன்!

ENG vs IND
ENG vs IND
Matt Dunham

அதே பாணியில் இந்த இருவரது கூட்டணிதான் பும்ராவின் அடுத்த பலியாக பேர்ஸ்டோவை ஆக்கியது. மரண ஃபார்மில் இருக்கும் அவரும் பட்லரும் தொடர்ந்திருந்தால் இந்தியாவுக்குச் சேதாரம் சர்வ நிச்சயம். ஆனால், ஷார்ட் ஆஃப் லெந்தில் வந்து பேட்டில் எட்ஜான பும்ராவின் பந்து அதற்கான முடிவுரை எழுதியது. அடுத்ததாக லிவிங்ஸ்டோன், பும்ராவின் லைன் அண்ட் லெந்தைக் குழப்பும் வகையில் நகர்ந்து கொண்டே இருக்க, அவருக்கு எதிர்வினையாற்ற நேரம் தராமல் இன்ஸ்விங்கிக் யார்க்கர் ஒன்று ஸ்டம்பைத் தகர்த்தது.

எட்டு ஓவர்களுக்குள் இங்கிலாந்து எடுத்திருந்த வெறும் 26 ரன்களும் இழந்திருந்த 5 விக்கெட்டுகளும், அதில் டக் அவுட் ஆகியிருந்த நான்கு பேட்ஸ்மேன்களும் இந்தியாவின் ஏகாதிபத்தியத்தைச் சொல்லாமல் சொல்லியிருந்தனர். கடைசியாக டி20 ஆக முடிய வேண்டிய போட்டி, 20 ஓவர்கள் தாண்டியும் இழுத்துக் கொண்டிருக்க, 'டெய்ல் எண்டர்கள் ஸ்பெஷலிஸ்ட்' பும்ராவை ரோஹித் கூப்பிட, பும்ராவின் யார்க்கர், கேர்ஸை தனது ஐந்தாவது விக்கெட்டாகவும், ராம்ப் ஷாட் ஆட முயன்ற வில்லேயின் விக்கெட்டை ஆறாவதாகவும் வீழ்த்தி, ஒருநாள் போட்டிகளில் தனது சிறந்த பௌலிங் ஸ்பெல்லாக இதை மாற்றிக் கொண்டார் பும்ரா. ஸ்டூவர்ட் பின்னி, கும்ப்ளேவுக்கு அடுத்தபடியாக இந்திய பௌலர் ஒருவரின் சிறந்த ஒருநாள் போட்டி பௌலிங் ஸ்பெல் (6/19) இதுதான்.

வேகப்பந்து வீச்சாளர்களின் ஆதாரப் புள்ளிகளான ஸ்விங், சீம் மூவ்மென்ட், கூடவே கொஞ்சம் எக்ஸ்ட்ரா பவுன்ஸ் என எல்லாமே கைகொடுத்ததென்றாலும், தனது லைன் அண்ட் லெந்த்தில் அதனைக் கட்டி வைத்துத்தான் விக்கெட்டுகளை பும்ரா தனதாக்கினார். அவர் வீசிய பந்துகளில் பெரும்பாலானவை குட் லெந்தில் விழுந்திருந்தன. அதுவே பேட்ஸ்மேன்களைத் திணறடித்திருந்தன.
ENG vs IND
ENG vs IND
Matt Dunham

பும்ரா எடுத்ததில் சரிபாதி விக்கெட்டுகள்தான் என்றாலும், சளைத்ததில்லை ஷமியின் ஸ்பெல்லும்! பென் ஸ்டோக்ஸுக்கு அவர் வீசியது ஆடவே முடியாத ஒரு டெலிவரிதான். ரவுண்ட் தி விக்கெட்டில் வந்ததோடு, அது வீசப்பட்ட வேகமும் மூவ்மென்ட்டும் அதனைக் கடினமாக்கி விட்டது, ராய் மற்றும் ரூட்டின் வழியில் அவரது டக் அவுட்டும் அணிக்கான குழியை ஆழமாக வெட்டியது. ஒரு முனையில் நின்று போராடிக் கொண்டிருந்த பட்லருக்கும் பாரம்பரிய வலையான ஷார்ட் பாலை வீசி, புல் ஷாட் ஆட வைத்து ஷமி வெளியேற்றினார். இந்தப் பெரிய தலைகளில் எந்தத் தலை தப்பியிருந்தாலும் இந்தியாவின் தலை தப்பியிருப்பது கடினம். 150 அதிவேக ஒருநாள் விக்கெட்டுகளை எடுத்த இந்திய பௌலர் என்ற சாதனையையும் ஷமி இப்போட்டியில் நிகழ்த்தியிருந்தார். ஜாகீர் 103 போட்டிகளிலும், அகார்கர் 97 போட்டிகளிலும் நிகழ்த்தியிருந்த இந்தச் சாதனையை வெறும் 80 போட்டிகளில் ஷமி நிகழ்த்தியுள்ளார்.

அதேபோல் மொயின் அலியை காட் அண்ட் பௌலில் வெளியேற்றியது மூலமாக பிரஷித்தும் தனது பெயரில் ஒரு விக்கெட்டைச் சேர்த்துக் கொண்டிருந்தார். ஆகமொத்தம் பத்து விக்கெட்டுகளையும் வேகப்பந்து வீச்சாளர்களே எடுத்திருந்தனர். 86 என்னும் அவர்களது முந்தைய குறைந்த ஒருநாள் ஸ்கோருக்கும் குறைவாக இங்கிலாந்து சுருளாமல் இருந்ததற்குக் காரணம் பட்லரின் போராட்டமும், வில்லே - கேர்ஸ் கூட்டணியும்தான். ஒன்பதாவது விக்கெட் பார்ட்னர்ஷிப் கை கொடுக்காமல் போயிருந்தால் இங்கிலாந்தின் பாடு இன்னமும் திண்டாட்டமாக இருந்திருக்கும்.

ENG vs IND
ENG vs IND
Matt Dunham

காயம் காரணமாகக் கோலி ஆட முடியாமல் போனதோடு ரூட், பேர்ஸ்டோ, ஸ்டோக்ஸ் என முக்கிய வீரர்கள் அணிக்குத் திரும்பியதும் இங்கிலாந்து அடித்து ஆட்டம் காட்டப் போகும் போட்டியாக ஒரு தோற்றப் பிழையை இது உருவாக்கி வைத்திருக்க, 110-க்கு அவர்களை ஆல்அவுட் ஆக்கி அதகளம் காட்டியது இந்திய பௌலிங் படை.

பத்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி போதும், அதிவேகமாக எல்லாம் முடிக்க வேண்டாம் என்பது போல் நிதானமாக, அதே நேரம் ஒரே சீராக இலக்கை நோக்கிப் பயணித்தது ரோஹித் - தவான் கூட்டணி. இந்தியா குட் லெந்த் பந்துகளில் நெருக்கடி தந்தது என்றால், இங்கிலாந்து ரோஹித்தின் பலவீனம் என நினைத்தோ என்னவோ, அதிகமான ஷார்ட் பால்களை வீசியது. இது தவிர்த்து, வேறெந்த பெரிய பிரயத்தனத்தையும் இங்கிலாந்து படவில்லை. ஆனால், அந்த ஷார்ட் பாடல்களை எப்படிக் கவனிக்க வேண்டுமோ அப்படிக் கவனித்தார் ரோஹித்.

ENG vs IND
ENG vs IND
Matt Dunham

குறிப்பாக, ஓவர்டன்னின் ஓவரில் வந்து சேர்ந்த பேக் டு பேக் சிக்ஸர்கள் அமர்க்களத்தின் உச்சம். பௌலருக்குக் கை கொடுக்கக் கூடிய களத்தில், அவர்களையே பின்தங்க வைத்தது ரோஹித்தின் கிளாஸ் பேட்டிங்.

ஆக மொத்தம், ஆங்கரிங் ரோலை தவான் ஆட 49-வது பந்தில் ஓவர் தி ஃபைன் லெக்கில் அடித்த சிக்ஸரோடு தனது அரை சதத்தை ரோஹித் எட்டினார். இப்போட்டியையும் சேர்த்து 100 ரன்கள் பார்டனர்ஷிப்பை, இதுவரை 18 முறை ரோஹித் - தவான் கூட்டணி கட்டமைத்துள்ளது. அதிக 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை எட்டிய கூட்டணிகள் பட்டியலிலும் இக்கூட்டணி ரோஹித் - கோலி கூட்டணியோடு 3வது இடத்தைப் பங்கிட்டுக் கொண்டுள்ளது.

இறுதியாக 18.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டி (20 ஓவர்கள் நிறைவு பெறவில்லை) 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியும் பெற்றது இந்திய அணி. தொடரிலும் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

ENG vs IND
ENG vs IND
Matt Dunham

நியூசிலாந்துடனான டெஸ்ட் தொடர் வெற்றி, இந்தியாவுடனான டெஸ்ட் வெற்றி இவற்றால் அந்தரத்தில் மிதந்து கொண்டிருந்த இங்கிலாந்தை நிகழுலகத்திற்கு இழுத்து வந்துள்ளது இந்த மோசமான தோல்வி.

அளவுக்கதிகமான அட்டாக்கிங் கிரிக்கெட்டும் ஆபத்தென்பதை அவர்கள் உணரத் தொடங்கி இருப்பர். அதே சமயம், பேட்ஸ்மேன்களிலும் பேட்டிங் ஆர்டர்களிலும் வேண்டுமென்றால் குழப்பம் இருக்கலாம், ஆனால் 'பௌலிங்கில் நாங்கள் நாயகர்களே' என மறுபடியும் நிரூபித்துள்ளது பும்ரா - ஷமி இணை.