Published:Updated:

இது டிரா அல்ல... இந்திய கிரிக்கெட்டின் மாபெரும் வெற்றி! #AUSvIND

#AUSvIND
#AUSvIND ( twitter.com/ICC )

118 பந்துகளில் 97 ரன்களை பன்ட் குவித்திருந்தார். அதே 118 பந்துகளில், வெறும் 7 ரன்களை விஹாரி எடுத்திருந்தார். எனினும் இரண்டும் அணிக்கு சமமான முக்கியத்துவம் வாய்ந்ததே! ஏனெனில் பன்ட்டின் ஆட்டம் வெற்றிக்கானதெனில், விஹாரியின் ஆட்டம், அணியை தோல்வியிலிருந்து மீட்பதுக்கானது!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

"நேற்றென்பது பொய்யே... இன்றைய தருணமே நிச்சயம்... அதுபோதும் உனது வருங்காலத்தை நீயே வடிவமைத்துக் கொள்!'' - இதுதான் இன்று இந்தியா ஆடிக் காட்டிய ஆட்டத்தின் சாராம்சமாக இருந்தது. பன்ட், புஜாரா, அஷ்வின், விஹாரி என அத்தனை பேரும் எழுச்சியுற, கடந்த இரு நாட்களில் ஏற்பட்ட பின்னடைவை, இன்றைய ஒருநாளில் சரிக்கட்டி, போட்டியை டிராவாக்கி, தொடரை சமனாகத் தொடர வைத்துள்ளது இந்தியா. இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் பீஷ்மர் ராகுல் டிராவிட்டின் பிறந்த நாளுக்குப் பரிசளிப்பதைப் போல அற்புத ஆட்டத்தை ஆடி உள்ளனர் இந்திய வீரர்கள்.

விக்கெட் மற்றும் வெற்றி வெறி கொண்டு ஆஸ்திரேலியா அலைய, 'விட்டுக் கொடுத்து விடுவோமா?!' என்ற வைராக்கியத்தோடு இந்தியாவும் தொடங்கியது. இரட்டை அரண்களாய் இந்தியர்கள் கருதிய புஜாராவும், ரஹானேவும் களம் கண்டனர். அட்டாக்கிங் பெளலிங், ஃபீல்டிங் வியூகங்களுடன், "ஆரம்பிக்கலாமா?!'' என்றது ஆஸ்திரேலியா.

90+ ஓவர்கள் நின்றே ஆக வேண்டிய கட்டாயத்துடன் களமிறங்கியது இந்தியா.

#AUSvIND
#AUSvIND
twitter.com/ICC

டெஸ்ட் போட்டி அச்சிலேயே வார்த்தெடுக்கப்பட்ட ரஹானேவும், புஜாராவும் இருக்கும்வரை, 'எதுவும் சாத்தியமே, இதுவும் சாத்தியமே!' என்ற எதிர்பார்ப்பில் கண்கொண்டே தொடங்கியது இந்திய நாள். ஆனாலும் அச்சுறுத்தவே செய்தது, ஆஸ்திரேலியாவின் பெளலர்கள் படை! அவர்களது ஏவுகணை வேகத்தில் வீழுமோ இந்தியா என்ற அச்சம் ரசிகர்களைக் கவ்வ, நடந்ததோ வேறு!

லயானின் சுழலில் சுருண்டார் ரஹானே. அரவுண்ட் த ஆஃப் ஸ்டெம்ப்பில் வீசப்பட்ட பந்தை, டிஃபெண்ட் செய்ய முயன்று, வேடிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் ரஹானே. கத்தி கொண்டு நமக்காய் சண்டையிடுவார் என எதிர்பார்த்த சாமுராய், திசைதிரும்பி நம்மையே குத்தியதைப் போலத்தான் இருந்தது ரஹானேவின் ஆட்டமிழப்பு! நான்கரை மணிக்கு அலாரம் வைத்து எழுந்த ரசிகர்களின் நம்பிக்கையைப் பொய்யாக்கி, கண்களையும் போர்வையையும் இழுத்து மூடிக் கொள்ள வைத்தது ரஹானேவின் விக்கெட்.

அடுத்ததாக விஹாரி உள்ளே வருவார் எனப் பார்த்திருந்த கண்கள், பன்ட்டைக் கண்டு அகலமாய் விரிந்தன. காயம் காரணமாக விளையாட இறங்குவாரா என்ற சந்தேகமே நிலவிய நிலையில், பன்ட் அதுவும் முன்கூட்டியே இறங்கியது ஆச்சர்யத்தையே வரவழைத்தது.

வலக்கை - இடக்கை உத்தியை மனதில் கொண்டோ, போட்டியில் தாக்கத்தைக் கொண்டு வந்து போக்கை மாற்றும் நோக்கோடோ இந்தியா பன்ட்டை முன்கூட்டியே இறக்கியது!

எண்ணம் எதுவாக இருப்பினும், அதை நூறு சதவிகிதம் நிறைவேற்ற வேண்டுமென்னும் வைராக்கியம் ததும்பி வழிந்தது பன்ட்டிடம். கேடயத்தைக் கையிலெடுத்து இறங்குவார் என ஆஸ்திரேலியா எதிர்பார்க்க, வாளைச் சுழற்றித் தாக்க ஆரம்பிக்க, ஸ்தம்பித்துப் போனது ஆஸ்திரேலியா. 3 ரன்கள் இருந்தபோது லயான் வீசிய பந்தை, பெய்ன் தவறவிட, அங்கே தொடங்கியது பன்ட்டின் ஆட்டம். பவுண்டரிகளுடன் சிக்ஸர்களையும் பறக்கவிட்டு, அவர் அரைச்சதம் கடக்க, ஏறிஏறி இறங்கியது ரசிகர்களின் ரத்த அழுத்தம். கத்திமேல் நடப்பதைப் போன்ற போட்டியை கேக் வாக்காக மாற்றியது இந்தக் கூட்டணி! டிரா என்பதைக் கேட்கத்தகாத வார்த்தையாய்க் கருதி, வெற்றியை மனதில் நிறுத்தி ஆடினர் இருவரும்!

#AUSvIND
#AUSvIND
Rick Rycroft

அசைந்து கொடுப்பவர்களா ஆஸ்திரேலியர்கள்?! ஓவருக்கொரு முறை அப்பீல் செய்து, ரசிகர்களின் அட்ரினல் சுரப்பிக்கு அதிகமாக வேலை வைத்தனர்! புதுப்பந்தெனும் கண்ணிவெடிக்காக, காத்திருக்கவும் தொடங்கினர். உணவுக்கான இடைவெளியின்போது, இந்த செஷனில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்த இந்தியாவின் ஸ்கோர், 206-ஐ தொட, பாதிக்கிணறு தாண்டப்பட்டிருந்தது.

இடைவேளைக்குப் பிறகு ஆட்டம் தொடங்கியது. இரண்டாவது பந்திலேயே ஸ்டார்க் வீசிய பந்து, பன்ட்டின் ஹெல்மெட்டைத் தாக்கி, கன்கஷன் இன்ஜுரி பயங்காட்டியது‌. ஃபிஸியோ வந்து பார்த்த பின்பு, பிரச்னை இல்லை எனப் போட்டி தொடர்ந்தது.

டெஸ்ட் கிரிக்கெட் சுவாரஸ்யமற்றது என்று யார் சொன்னது என கேள்வி எழுப்புவதைப் போலத்தான் இருந்தது போட்டியின் ஒவ்வொரு அங்குலமும்! புயலாய் பெளலர்கள் தாக்க, 'எங்களிடம் வைத்துக் கொள்ளாதே!' என ஒவ்வொரு பந்திலும் பதிலடி கொடுத்துக் கொண்டே இருந்தது இந்தியக் கூட்டணி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‌புஜாரா அரைசதம் கடக்க, சதத்தைத் தொட்டு சாதிக்கப் போகிறார் பன்ட் என்ற ஆசையை நிராசையாக்கியது லயான் வீசிய பந்து! இரண்டு முறை அவரது பந்தில், கேட்ச்டிராப்பால் தப்பித்த பன்ட், அவரிடமே சிக்கினார். 97 ரன்களுக்கு, கம்மின்ஸிடம் கேட்ச் கொடுத்து, தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார். ஆயினும், ஆஸ்திரேலியர்களுக்கு மரணபயம் காட்டி விட்டுதான் வெளியேறி இருந்தார் மாவீரனாய்! சதத்தைத் தொடா விட்டாலும் சரித்திரம் பேசப் போகும் இன்னிங்ஸ்தான் இது.

புதுப் பந்துடன் புது பேட்ஸ்மேனாய் உள்ளே வந்தார் விஹாரி. இந்தியாவுக்கு தோல்வி பயத்தோடு தொடங்கிய போட்டி, மெதுவாய் வெற்றிக்கான வழிகளைத் திறந்துவிடப்பட, அதன் தடத்தில் தொடர்ந்தது இந்தியக் கூட்டணி.

ஹாட்ரிக் பவுண்டரி அடித்து அமர்க்களமாய்த் தொடங்கிய புஜாரா, மெதுவாக அரைச்சதத்தை அடைந்ததற்காக போன இன்னிங்ஸில் விமர்சித்தவர்களை அறைந்தது போல இருந்தது அந்த மூன்று ஷாட்களும்! வெளியே அமர்ந்திருந்த ஜடேஜாவும் பேட் கட்டித் தயாராக, நிமிர்ந்து உட்கார்ந்தனர் இந்திய ரசிகர்கள்.

#AUSvIND
#AUSvIND
twitter.com/ICC

ஆனால், அதிர்ச்சி அளிக்கும் விதமாக, ஹேசில்வுட்டின் பந்தில், புஜாராவின் ஸ்டெம்ப் சிதற, 135 ரன்கள் மட்டுமே பின்தங்கியிருந்த இந்தியாவுக்கு அது ஒரு மிகப்பெரிய பின்னடைவாகவே பார்க்கப்பட்டது. ஜடேஜா வருவாரா என்று எதிர்நோக்கப்பட்டது‌. ஆனால் அஷ்வின் வந்தார். 40 ஓவர்களுக்கு மேல் விளையாட வேண்டி இருந்ததால், டிஃபென்சிவ் மோடுக்கு மாறியது இந்தியா‌. வரிசையாக மெய்டன் ஓவர்களை வீசி ஆஸ்திரேலியா அழுத்தம் கொடுக்க, வெற்றிக்கு 127 ரன்கள் தேவை என்ற நிலையில் முடிவுக்கு வந்தது இரண்டாவது செஷன்.

இந்தியா கௌரவமாய் டிரா செய்யப் போகிறதா அல்லது தோல்வியில் துவளப் போகிறதா என்று முன்னால் எடுத்து வைக்கப்பட்ட கேள்விகளோடே தொடங்கியது கடைசி செஷன்‌. வெற்றி என்பது அந்த நிலையிலிருந்து எட்டாக்கனியாகவே பார்க்கப்பட்டது. அயர வைக்கும் ஆஸ்திரேலியா முன் டிராவும் அவ்வளவு சுலபமில்லை என்ற தோற்றமே உண்டானது!

ஐந்தே விக்கெட்டுகள், அதிலும் ஜடேஜா ஆடுவது சந்தேகமே என்னும் நிலையில் இந்திய பேட்ஸ்மேன்களை சுருட்டுவது சுலபமே என்பதே ஆஸ்திரேலியாவின் எண்ணமாக இருந்தது. போதாக்குறைக்கு, இறங்கிய சில நிமிடங்களிலேயே ஹாம்ஸ்ட்ரிங்கால் அவதிப்பட ஆரம்பித்தார் விஹாரி. போன போட்டியில், அவரது ரன் அவுட் நினைவுக்கு வர, இன்றும் அதுதான் நேரப் போகிறதோ என்ற எண்ணமே உருவானது. அஷ்வினையும் இரண்டுமுறை பந்துகள் தாக்கி அவர் திணற, 'இவர்களால் என்ன செய்துவிட முடியும்... அரைமணி நேரத்தில் அத்தனை விக்கெட்டுகளையும் இந்தியா இழந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை' என்றுதான் இந்திய ரசிகர்கள் கூட நினைத்திருப்பார்கள்!

#AUSvIND
#AUSvIND
Rick Rycroft

ஆனால், நடந்ததோ வேறு! மன உறுதியின் மொத்தமாகத்தான் களத்தில் நின்றார் விஹாரி! தனது காயத்தைச் சிறிதும் பொருட்படுத்தாமல், அணியை சரிவிலிருந்து மீட்டு கரை சேர்க்க வேண்டுமென்பது மட்டுமே அவரது ஒற்றை குறிக்கோளாக இருந்தது. ஷாட் பால்கள் தோட்டாவாய்த் தாக்கினாலும் பவுன்சர்கள் பயமுறுத்தினாலும் அசைந்து கொடுக்கவில்லை விஹாரி! மறுபுறம் அஷ்வினும் அதையேதான் செய்தார். ஆடுகளமா, அவசரசிகிச்சைப் பிரிவா என்னுமளவிற்கு வலியால் துடித்தாலும், அது எதுவுமே இவர்களது வைராக்கியத்தின் நிழலைக் கூடத் தீண்ட முடியவில்லை. 118 பந்துகளில் 97 ரன்களை பன்ட் குவித்திருந்தார். அதே 118 பந்துகளில், வெறும் 7 ரன்களை விஹாரி எடுத்திருந்தார். எனினும் இரண்டும் அணிக்கு சமமான முக்கியத்துவம் வாய்ந்ததே! ஏனெனில் பன்ட்டின் ஆட்டம் வெற்றிக்கானதெனில், விஹாரியின் ஆட்டம், அணியை தோல்வியிலிருந்து மீட்பதுக்கானது!

கிட்டத்தட்ட 200 பந்துகளைச் சந்தித்தது இந்தக் கூட்டணி. கடந்த 41 ஆண்டு இந்தியக் கிரிக்கெட் வரலாற்றில், ஆசியாவுக்கு வெளியே நடந்த ஒரு போட்டியில், நான்காவது இன்னிங்ஸில் இந்தியா இத்தனை ஓவர்கள் பேட்டிங் செய்வது இதுவே முதன்முறை! அதுவும் காயம்பட்ட வீரர்கள் இந்த அளவுக்கு அணியை எடுத்துச் சென்றதன் மூலம், ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் மதிப்பையும் பெற்றுள்ளது இந்திய அணி!

முதல் இரு செஷன்களில் ஆக்ஷன் திரைப்படம் காட்டிய இந்திய அணி, கடைசி செஷனில் தன்னுடைய அர்ப்பணிப்பு, வைராக்கியம், மன உறுதி அத்தனையாலும் சென்ட்டிமென்ட் படம் காட்டி ரசிகர்களைக் கண்கலங்க வைத்துவிட்டது. இந்தக் கூட்டணியை வீழத்த இருந்த ஆறு பெளலர்களையும் மாற்றி மாற்றி ஏதேதோ மாயம் செய்து பார்த்தார் பெய்ன்! ஆனால் எதுவும் பலனலிக்கவில்லை! 2012-ல் டுபிளஸ்ஸிஸ், ஏபிடி நிகழ்த்திய சாதனையை விஹாரி அஷ்வின் கூட்டணி நிகழ்த்திக் காட்டிவிட்டது. இறுதியில் இந்தக் கூட்டணியை உடைக்கவே முடியாமல் முடிந்து போனது இன்றைய போட்டி.

#AUSvIND
#AUSvIND
Rick Rycroft
பல திருப்புமுனைகள், கண்ணாடி பிம்பமாய் மாறி மாறிப் போன போட்டியை, தங்களது மனோதிடத்தால் டிராவாக்கி, தொடரை தொடர்ந்து சமனிலையடைய வைத்திருக்கின்றனர் இந்த இரு தங்கமகன்கள்!

"வீழ்வோமென்று நினைத்தாயோ?!" என பலம் பொருந்திய ஆஸ்திரேலியாவுக்குப் பதிலடி கொடுத்திருக்கிறது இந்திய அணி! காயங்கள் உள்ளிட்ட பல விசைகள் பின்னோக்கி இழுத்தாலும், வரையற்ற உந்தத்தால் சரித்திரம் பேசப் போகும்படி ஓர் ஆட்டத்தினை ஆடி இருக்கிறது இந்திய அணி! மெல்போர்னில் பெற்ற வெற்றிக்கு கொஞ்சமும் குறைந்ததில்லை இந்த டிரா! 1-1 என்ற நிலையில் சமமாக இருக்கும் தொடர், பிரிஸ்பேன் போட்டி மீதான எதிர்பார்ப்பை இன்னொரு லெவலுக்கு எடுத்துச் சென்றுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு