Published:Updated:

நடராஜனின் 20, பாண்டியாவின் 42... தொடரைக் கைப்பற்றிய கேப்டன் கோலி! #AUSvIND

#AUSvIND
#AUSvIND

இலக்கை எட்டி இந்தியா கோப்பையைத் தூக்குமா, அல்லது போட்டியில் வென்று ஆஸ்திரேலியா தொடரை உயிர்ப்போடு வைத்துக் கொள்ளுமா என்ற எதிர்பார்ப்போடு தொடங்கியது இந்தியாவின் இன்னிங்ஸ்.

ஒருநாள் தொடரில் இழந்த கம்பீரத்தை ஒட்டுமொத்தமாய் டி20-யில் மீட்டிருக்கிறது கோலி அண்ட் கோ. கடைசி ஓவர் வரை அனல் பறந்த இரண்டாவது டி20 போட்டியில் வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றியிருக்கிறது இந்தியா.

காயத்தால் விலகிய ஃபின்சுக்கு பதிலாக மேத்யூ வேட் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். டாஸை வென்ற கோலி, சேஸிங் செய்ய முடிவெடுத்தார். ஃபின்ச், ஹேசில்வுட், ஸ்டார்க்குக்கு பதிலாக சாம்ஸ், ஸ்டோய்னிஸ், டை ஆகியோர் ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப்பட, இந்தியாவின் பக்கமோ ஜடேஜா, சமி, பாண்டேவுக்குப் பதிலாக சஹால், தாக்கூர் மற்றும் ஷ்ரேயாஸ் சேர்க்கப்பட்டிருந்தார்கள்.

கேப்டனாக மட்டுமின்றி ஓப்பனராகவும் வார்னரின் இடத்தை ஷார்ட்டுடன் சேர்ந்து வேடு நிரப்ப, சஹாரின் பந்துவீச்சில், மூன்று பவுண்டரிகளுடன் அமர்க்களமாய்த் தொடங்கியது ஆஸ்திரேலியாவின் இன்னிங்ஸ். 2019 பிபிஎல் முழுவதிலும், ஓப்பனர்களாக இறங்கி, டாப் ஸ்கோரர்களாக, ரன்மழை பொழியச் செய்த இந்தக் கூட்டணி, அடுத்தடுத்த ஓவர்களில் ரன்வேட்டையைத் தொடர்ந்தது.

#AUSvIND
#AUSvIND

அச்சமூட்டும் இந்த இருவரணியை உடைக்க, ஐந்தாவது ஓவரில் கோலி நடராஜனைக் கொண்டு வந்தார். மூன்றாவது பந்திலேயே, நடராஜன், ஷார்ட்டின் விக்கெட்டை வீழ்த்தி, கோலிக்கு உற்சாகமூட்ட, அடுத்ததாய் உள்ளே வந்ததோ ஸ்மித்‌. ஒரு விக்கெட்டை இழந்திருந்தாலும் வேடு அசராமல் 25 பந்துகளிலேயே அரைசதம் கடக்க ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இதன்பின், வாஷிங்டனின் ஓவரில் நடந்ததுதான் எதிர்பாராத திருப்புமுனை‌! வேடு அடித்த பந்தை கேட்ச் பிடிக்கத் தவறிய கோலி, சமயோசிதமாய் பந்தை ராகுலிடம் எறிந்து, கேட்ச் டிராப்பை ரன் அவுட்டால் ஈடு செய்தார். அடுத்ததாய் உள்ளே வந்தது மேக்ஸ்வெல்.

புதிதாய்க் கைகோர்த்த ஸ்மித் - மேக்ஸ்வெல் கூட்டணி போடப்பட்ட பந்துகளை எல்லாம் ரன்களாய் மாற்றி, 28 பந்துகளில் 45 ரன்களைக் குவித்திருந்த போது, வாஷிங்டன் சுந்தரின் பந்தில் மேக்ஸ்வெல் சிக்க, அபாயகரமான அந்தக் கூட்டணி முறிய, ஆஸ்திரேலியாவின் ரன் குவிப்புக்கு வேகத்தடை போடப்பட்டது. எனினும் அசரக் கூடியவர்களா அசுரபலம் கொண்ட ஆஸ்திரேலியர்கள்?

புதிதாய் உள்ளே வந்த ஹெர்குலஸுடன் கைகோத்த ஸ்மித், தனது அதிரடியைத் தொடர்ந்தார். குறிப்பாய், சஹாலின் ஒரு ஓவரை போட்டுப்பொளந்த இந்தக் கூட்டணி, அதில் இரண்டு சிக்ஸர்களுடன் ஒரு பவுண்டரியையும் விளாசி, 16 ஓவரிலேயே அணியின் ஸ்கோரை 150ஐ கடக்கச் செய்தது. இப்பொழுது இந்திய முகாமில் பதற்றம் அதிகரிக்க, அதனைத் தணிக்கும் விதமாய், ஸ்மித்தை சஹாலும், அதற்கடுத்த ஓவரிலேயே, ஹெர்குலஸை நடராஜனும் பெவிலியனுக்கு அனுப்பி வைத்தனர்.

#AUSvIND
#AUSvIND

புதிதாய் இணைந்த ஸ்டோய்னிஸ், சாம்ஸ், கொஞ்சமும் சளைக்காமல், இறுதி ஓவர்களில் 9 பந்துகளில் 23 ரன்களைக் குவிக்க 195 என்ற கடின இலக்கை இந்தியாவுக்கு நிர்ணயித்தது ஆஸ்திரேலியா. முதல் சில ஓவர்களில் தவற விட்டாலும், அதற்கடுத்து, சீரான இடைவெளியில் இந்தியா விக்கெட்டுகளை எடுத்தது. மற்ற பெளலர்கள் எல்லோரும் ரன்களை வாரி வழங்கிய வள்ளல்களாகவே மாறிப் போயிருக்க, இப்படி ஒரு ஹை ஸ்கோரிங் போட்டியில், வெறும் 20 ரன்களை மட்டுமே கொடுத்து, 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார் நடராஜன்.

முதல் டி20-ல் எழுச்சி கண்ட இந்திய பெளலிங், இந்தப் போட்டியில் பெட்டிக்குள் பாம்பாய் சுருண்டு படுத்துக் கொண்டது. ஆஸ்திரேலியாவோ, கடைசி 5 ஓவர்களில் 62 ரன்களைக் குவித்து விஸ்வரூபமெடுத்தது. "ஞாயிற்றுக்கிழமை மதியம் அதுவும் ஹை ஸ்கோரிங் கேமில் இந்தியா சேஸிங், வேறென்ன வேண்டும்?!" என சைட் டிஷ்களுடன் இந்திய ரசிகர்கள் குஷியாகினர்.
இலக்கை எட்டி இந்தியா கோப்பையைத் தூக்குமா, அல்லது போட்டியில் வென்று ஆஸ்திரேலியா தொடரை உயிர்ப்போடு வைத்துக் கொள்ளுமா என்ற எதிர்பார்ப்போடு தொடங்கியது இந்தியாவின் இன்னிங்ஸ்.

தொடக்கத்தை சுணக்கத்தோடு ஆரம்பித்த இந்தியா, அடுத்தடுத்த ஓவர்களில் தவான், ராகுல் அதிரடி விளாசலில் சுறுசுறுப்பானது. 4.4 ஓவர்களிலேயே 50 ரன்களைக் குவிக்க, 'நமது அணியா பவர்ப்ளேயில் விக்கெட் இழப்பின்றி விளையாடிக் கொண்டிருக்கிறது' என இந்திய ரசிகர்கள் கனவுலகில் உலவத் தொடங்கினர். ஆனால், ரசிகர்களை நிஜ உலகுக்கு அழைத்து வர, டையின் பந்தில் ராகுல் ஆட்டமிழந்தார். அதன்பின் இந்தியாவின் ரன்குவிப்பு வேகம் கொஞ்சம் மட்டுப்பட்டது. கோலியும் தவானும் இணைந்து 10 ஓவரில், அணியின் ஸ்கோரை 86 ரன்களுக்கு உயர்த்த, இன்னும் 60 பந்துகளில், 109 ரன்கள் அடிக்கவேண்டியிருந்தது. பார்ட்னர்ஷிப் மறுபடியும் பில்டப் ஆகத் தொடங்கிய நேரத்தில் ஸாம்பா பந்தில், தவான் ஆட்டமிழக்க, இந்திய ரசிகர்களின் கனவு ஆட்டம் கண்டது.

#AUSvIND
#AUSvIND

நான்காவது பேட்ஸ்மேனாக உள்ளே வந்தார் சாம்சன். அவரும் ஒரு பவுண்டரி ஒரு சிக்ஸர் அடித்ததுடன் என் பணி முடிந்தது என்பதைப் போல நடையைக் கட்டினார். மூன்று விக்கெட்டுகளை இழந்ததுடன், 38 பந்துகளில் 75 ரன்களைக் குவிக்க வேண்டும் என்ற இக்கட்டான நிலையை இந்தியா எட்ட, தேவைப்படும் ரன் ரேட் 12 என எகிறியது. ஆனால், அணியின் ஆபத்பாந்தவனாய் ஹர்திக், ஷ்ரேயாஸுக்கு முன்னதாகவே உள்ளே வந்தார். டை ஓவரில் 18 ரன்களை விளாசி, அதிரடி ஆட்டத்தைக் கையிலெடுத்தார். 4 ஓவரில் 46 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையை எட்ட, 24 பந்துகளில் 40 ரன்களைக் குவித்திருந்த கோலியின் விக்கெட்டை, சாம்ஸ் வீழ்த்த, இந்தியாவுக்கு நெருக்கடி தொடங்கியது‌.

உள்ளே வந்து பாண்டியாவுடன் கைகோத்த ஷ்ரேயாஸ், ஸாம்பாவின் ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் கணக்கைத் தொடங்கி, நம்பிக்கை அளித்தார். பிரஷர் கொஞ்சம் குறைக்கப்பட்டு, போட்டியின் போக்கு நம்பிக்கை அளித்தது. கடைசி இரண்டு ஓவர்களில், 25 ரன்கள் தேவைப்படும் தருணத்தில், பாண்டியா, அந்த ஓவரில், இரண்டு பேக் டு பேக் பவுண்டரிகளை அடித்தார்.

இறுதி ஓவர். எடுக்க வேண்டியதோ 14 ரன்கள் என்றாக போட்டியின் பரபரப்பான, படபடப்பு நிமிடங்கள் தொடங்கின. முதல் பந்தில் இரண்டு ரன்களை எடுத்த பாண்டியா, ரசிகர்களின் இதயத்துடிப்பை எகிற வைத்து, இரண்டாவது பந்தை சிக்ஸருக்குத் தூக்க 4 பந்துகளில் 6 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை வந்தது‌. மூன்றாவது பந்தில் ரன் எதுவும் எடுக்கப்படாமல் போக, மறுபடியும் இருக்கை விளிம்புத் தருணங்கள் தொடர, இதற்குமேல் எனக்குப் பொறுமை இல்லை என்பதைப் போல், நான்காவது பந்தை சிக்ஸருக்குத் தூக்கி, இந்தியாவை வெல்ல வைத்தார் பாண்டியா.

#AUSvIND
#AUSvIND
பெளலிங்கில் நடராஜன் பலம் காட்ட, பேட்டிங்கிலோ தவான் அடித்தளம் அமைத்துத் தர, வெகு நாட்களாகக் காத்திருந்த வின்டேஜ் கோலியின் தரிசனம் இன்று காணக் கிடைக்க, ஒருநாள் போட்டிகளில் செய்த மாயாஜாலத்தை பாண்டியா செய்து ஆட்டத்தை முடித்தார்.

22 பந்துகளில் 42 ரன்களைக் குவித்த பாண்டியாவால் இந்தியா அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியாவில் வெல்லும் இரண்டாவது டி20 தொடர் இது. கோலியோ, ஆறு நாடுகளில் டி20 தொடரை வென்ற முதல் கேப்டன் என்ற அபார சாதனையையும் நிகழ்த்தி இருக்கிறார். செவ்வாய்க்கிழமை நடக்க இருக்கும் கடைசி டி20 போட்டியிலும் இந்தியா வெல்லும் பட்சத்தில் 3-0 எனத் தொடர் நீலச்சலவை ஆகலாம்.

அடுத்த கட்டுரைக்கு