Published:Updated:

ஷாக் கொடுத்த இந்தியா `பி'... சீனியர்கள் இருந்தும் சொதப்பிய இந்தியா `ஏ'... தியோதர் டிராபி ஹைலைட்ஸ்!

Deodhar trophy

'பி' அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் கேயக்வாட் டக், அவுட்டானார். பார்த்திவ் பட்டேல் 14, அபராஜித் 13 என டாப் ஆர்டர் காலியாக, மற்றொரு ஓப்பனர் ஜய்ஸ்வலும் கேதர் ஜாதவும் நிலைத்து ஆட ஆரம்பித்தனர்‌. 92-4 என்ற கட்டத்தில் இருந்த அணியை 283 ரன்கள் எடுக்க உதவினர்.

ஷாக் கொடுத்த இந்தியா `பி'... சீனியர்கள் இருந்தும் சொதப்பிய இந்தியா `ஏ'... தியோதர் டிராபி ஹைலைட்ஸ்!

'பி' அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் கேயக்வாட் டக், அவுட்டானார். பார்த்திவ் பட்டேல் 14, அபராஜித் 13 என டாப் ஆர்டர் காலியாக, மற்றொரு ஓப்பனர் ஜய்ஸ்வலும் கேதர் ஜாதவும் நிலைத்து ஆட ஆரம்பித்தனர்‌. 92-4 என்ற கட்டத்தில் இருந்த அணியை 283 ரன்கள் எடுக்க உதவினர்.

Published:Updated:
Deodhar trophy

இந்தியா vs வங்கதேசம், ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான், இங்கிலாந்து vs நியூசிலாந்து என அக்டோபர் நவம்பர்களில்  கிரிக்கெட் உலகம் டாப் கியரில் சென்றுகொண்டிருக்கிறது. எதிர்பாராத திருப்பங்களை, வாரந்தோறும் சர்வதேச கிரிக்கெட் வாரி வழங்குகிறது. ஆனால், இந்த சர்வதேச ஆட்டங்களுக்கு வித்தான உள்ளூர் கிரிக்கெட் போட்டியை மருந்துக்குக்கூட இப்போதெல்லாம் யாரும் பார்ப்பதில்லை. இருந்தும், ஏகப்பட்ட அதிர்ச்சிகளும் ஆச்சர்யங்களும் உள்ளூர் போட்டிகளில் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

இந்திய கிரிக்கெட்டின் உள்ளூர் போட்டிகளில், ரஞ்சிப் போட்டியைத் தாண்டி யாருக்கும் தெரியாது. ஆனால், லிஸ்ட் 'ஏ' போட்டிகளான விஜய் ஹசாரே, தியோதர் கோப்பை, டி20 தொடரான சையது முஷ்டாக் அலி கோப்பை எனப் பலதரப்பட்ட போட்டிகள் உண்டு. விஜய் ஹசாரே போட்டிகள் மாநில அணிகளுக்கானவை. ரஞ்சியில் மோதும் அணிகள், இத்தொடரில் ஒருநாள் போட்டிகளில் மோதும். ரவுண்ட் ராபின் பார்மட்டில் போட்டிகள் அமையும். 38 அணிகளோடு 169 போட்டிகள் நிகழும்‌. ஆனால், தியோதர் கோப்பை அதற்கு நேரெதிரானது. இந்திய கிரிக்கெட் வாரியமான BCCI தேர்வுசெய்த வீரர்கள், இந்தியா A, B, C என்ற மூன்று அணிகளில் இருப்பர். வெறும் நான்கு‌ போட்டிகள். இந்தப் போட்டிகளே இந்திய அணியில் நுழைவதற்கான துருப்புச்சீட்டும்கூட. முதல் தர கிரிக்கெட் ஆடிய D.B தியோதரின் நினைவாக இந்தப் போட்டிகள் 1973-ம் ஆண்டு ஆரம்பிக்கப் பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த ஆண்டிற்கான தியோதர் கோப்பை, அக்டோபர் 31 முதல் நவம்பர் 4 வரை நடைபெற்றது. இந்தத் தொடரில், பார்த்திவ் பட்டேல் தலைமையிலான இந்தியா 'பி' அணி வெற்றிபெற்றது.

நான்கு நாள்கள் நடைபெற்ற தியோதர் கோப்பையின் நச் ஹைலைட்ஸ்:

தொடரின் ஆரம்பம் முதலே இந்தியா 'ஏ' அணியினர் மோசமான ஆட்டத்தைத்தான் வெளிப்படுத்தினர். அஷ்வின், உனத்கட் போன்ற அனுபவ வீரர்கள் இருந்தும் அந்த அணியினரால் பெரிதாக சோபிக்க முடியவில்லை. முதல் போட்டியில், 303 ரன் இலக்கைத் துரத்தி 194 ரன்களில் ஆல் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். பிட்ச் முதலில் பேட் செய்யும் அணிக்கே சாதகமாக இருப்பதை அறிந்தும் பீல்டிங்கைத் தேர்வுசெய்தார் கேப்டன். மாறாக, இந்தியா 'பி' அணியின் செயல்பாடு முதல் போட்டியிலேயே பிரமிக்கவைத்தது. 'பி' அணியின் வீரர் ராஜேஷ்வர் கெய்க்வாட் மற்றும் அபாரஜித்தின் சதங்கள் அணிக்கு சாதகமாக விளங்க, 302 ரன்கள் எடுத்து முதல் போட்டியிலேயே அபார வெற்றிபெற்றது இந்திய 'பி' அணி.

மயாங்க் அகர்வால்
மயாங்க் அகர்வால்

முதல் போட்டியில் 'பி' அணி அடித்துக் குனியவைத்தது. இந்திய 'ஏ' அணியை  இரண்டாவது போட்டியில் மேலும் அடித்து குப்புறத் தள்ளியது 'சி' அணி‌. முதலில் ஆடிய இந்தியா 'சி', 366 ரன்கள் குவித்தது. சிறந்த பௌலிங் லைன்-அப் இருந்தும், 'ஏ' அணியினர் ரன்களை வாரி வழங்கினர். பௌலிங்கில் பெரிதாக யாரும் மெனக்கெடவும் இல்லை. இது, எதிரணியினருக்கு சாதகமாக அமைய, அகர்வால், சுப்மான் கில், சூரியக்குமாரின் அபார ஆட்டத்தால் ஸ்கோர் எகிறியது. இந்திய 'ஏ' அணி பௌலிங்கில் விட்டதை பேட்டிங்கில் பிடிப்பார்கள் என்று நினைக்க, ஏமாற்றமே மிஞ்சியது. தோற்றுவிடுவோம் என்ற உடல்மொழியில்தான் அவர்கள் ஆட்டம் இருந்தது. எதிர்பார்த்ததுபோலவே 134 ரன்களில் ஆட்டமிழந்து, கடந்த 5 ஆண்டுகளின் இத்தொடரின் குறைந்தபட்ச ஸ்கோரைப் பதிவுசெய்தது அந்த அணி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இப்போட்டியில், 29 பந்துகளில் 72 ரன்களை வாணவேடிக்கை போல நிகழ்த்திக்காட்டினார் சூரியக்குமார் யாதவ். 248.27 இதுவே இத்தொடரின் அதிகபட்ச ஸ்ட்ரைக் ரேட் ஆகும். பௌலிங்கில் ஜலஜ் சக்சேனா 41 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தி, தனது சிறந்த பந்துவீச்சைப் பதிவுசெய்தார்.

சுப்மான் கில்
சுப்மான் கில்

மூன்றாவது போட்டி, இரு அணிகளும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றதால், இது வெறும் சம்பிரதாயப் போட்டியாகவே இருக்கும் என்ற எண்ணியவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இப்போட்டியிலும் நடப்பு சாம்பியன் இந்தியா 'சி' அணியின் கை ஓங்கியது. கடந்த போட்டிகளில் வலுவாக இன்னிங்ஸைக் கட்டமைத்த டாப் ஆர்டர் சற்று நிலைகுலைய, மிடில் ஆர்டர் அதை கட்டுக்குள் கொண்டுவந்து, 280 ரன்கள் எடுத்தனர். 32 ஓவர்களில் 126-5 என்ற நிலையில் இருந்த அணியை அக்சர் பட்டேலும் விராட் சிங்கும் மீட்டெடுத்தனர். அக்சர் ஒரு பக்கம் விளாசினாலும், விராட் பொறுமையாக ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்தார். இந்த வேகம் ப்ளஸ் விவேக ஃபார்மட் கூட்டணி கணிசமாக ஸ்கோரை உயர்த்தியது. அடுத்து ஆடிய 'பி' அணியினர் ஏமாற்றத்தையே பரிசாக அளித்தனர். அபாரஜித், அகர்வால், தினேஷ் கார்த்திக், ராணா என நட்சத்திர பேட்ஸ்மேன்கள் எல்லோரும் இந்தியா 'சி' அணியின் பௌலிங்கில் நடையைக்கட்ட, 144 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இந்தியா 'பி'. 'சி' அணியின் மயங் மார்கண்டே 25 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி, தனது சிறந்த பந்துவீச்சைப் பதிவுசெய்தார்.

இதே அணிகள், கடந்த திங்களன்று இறுதிப் போட்டியில் மோதின. அசுர பலத்துடன் இருந்த சி அணியினரே கோப்பை வெல்வார்கள் என எல்லோரும் கணித்தனர். டாஸ் வென்ற 'பி' அணி, பேட்டிங்கைத் தேர்வுசெய்தது. 'பி' அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் கெய்க்வாட் டக் அவுட்டானார். பார்த்திவ் பட்டேல் 14, அபாரஜித் 13 என டாப் ஆர்டர் காலியாக, மற்றொரு ஓப்பனர் ஜய்ஸ்வலும், கேதர் ஜாதவும் நிலைத்து ஆட ஆரம்பித்தனர்‌. 92-4 என்ற கட்டத்தில் இருந்த அணியை 283 ரன்கள் எடுக்க உதவினர். ஜய்ஸ்வல் 54, ஜாதவ் 86, விஜய் சங்கர் 45 ரன்கள் எடுத்ததால், 283 என்ற சற்று கடின இலக்கை 'பி' அணியினரால் நிர்ணயிக்க முடிந்தது.  'சி' அணி சார்பில் போரல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

முதலிரண்டு போட்டிகளில் 300 ரன்களுக்கு மேல் அடித்த 'சி' அணியினர், இந்த இலக்கை எளிதாகத் துரத்துவர் என்று எண்ணியவர்களுக்கு 'பி' அணியினரின் பந்துவீச்சு அதை தப்பென்று புரியவைத்தது. ஆட்டத்தின் முக்கிய திருப்புமுனையாக ஒரு 6 ஓவர்களைக் கூறலாம். அந்த 6 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் விழுந்தன. அணியின் 4 முக்கிய பேட்ஸ்மேன்கள், சுப்மான் கில், அகர்வால், சூரியக்குமார் யாதவ், தினேஷ் கார்த்திக் ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட்டாக, கார்க் மட்டும் போராடினார். லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்களான சக்சேனா, அக்சர் பட்டேல் அவருக்கு சிறப்பாகப் பங்களித்தாலும் ரன்ரேட்டில் பெரிதாக மாற்றம் ஏதும் ஏற்படவில்லை. இறுதியில், 232 ரன்களை மட்டும் 'சி' அணியினரால் எடுக்க முடிந்தது. இம்முறை பேட்டிங்கிலும் பௌலிங்கிலும் கலக்கிய 'பி' அணியினர், கடந்த ஆண்டு தவறவிட்ட கோப்பையை இந்த ஆண்டு ஜெயித்தனர்.

அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களில், 'சி' அணியின் ஜலஜ் சக்சேனா 10 விக்கெட்டுகள் வீழ்த்தி முதலிடம் பிடித்தார்.‌ 'சி' அணியின் போரல், 9 விக்கெட்டுகளுடன் இரண்டாமிடம் பிடித்தார்.
அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் 'பி' அணியின் பாபா அபாரஜித் 167 ரன்களுடன் முதலிடம் பிடித்தார். அவரின் சராசரி 55.66, இரண்டாம் இடம் பிடித்தது. மயாங்க் அகர்வால் 148. அவரின் சராசரி 74.00.
விராட் கோலியின் பத்தாண்டு கால சாதனையை சுப்மான் கில் கடந்த திங்களன்று முறியடித்தார். குறைந்த வயதில் இறுதிப் போட்டியில் ஆடிய கேப்டன் என்ற சாதனையைத் தனது 21-வது வயதில் 2009-2010 சீசனில் கோலி படைத்தார். இந்தத் தொடரில், சுப்மான் கில் இந்தியா 'சி' அணியை இறுதிப் போட்டி வரை அழைத்துச்சென்று, இந்தச் சாதனையைத் தனது 20-வது வயதில் முறியடித்தார்.
இறுதிப் போட்டியின்போது 'சி' அணியின் இஷான் போரல் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்‌. லிஸ்ட் 'ஏ' கிரிக்கெட் தொடரில் இதை இரண்டாவது முறையாக நிகழ்த்தினார்.
ஜலஜ் சக்சேனா, இஷான் போரல், நதீம் ஆகியோர் பௌலிங்கிலும், மயங்க் அகர்வால், பாபா அபாரஜித், சுப்மான் கில் ஆகியோர் பேட்டிங்கிலும் கவனிக்கத்தக்க வீரர்களாக உருவெடுத்தனர்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism