Published:Updated:

ஜெய்ஸ்வாலின் ரன் வேட்டை... பாகிஸ்தானை கேஷுவலாக கலாய்த்த இந்தியாவின் ஜூனியர்ஸ்! #Under19WorldCup

Under19WorldCup
Under19WorldCup

இதற்கு முன் நடைபெற்ற போட்டிகளில் 5 முறை இந்தியா பாகிஸ்தானிடம் தோற்றிருக்கிறது. கடந்த முறை நடைபெற்ற அரை இறுதிப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

அண்டர் 19 உலகக் கோப்பை அரையிறுதியில் பாகிஸ்தானை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடர்ந்து 3-வது முறையாக இறுதிப்போட்டிகளுக்குள் நுழைந்துள்ளது இந்தியா. போட்டி ஆரம்பித்து இறுதிவரை ஆட்டம் இந்தியாவின் வசம்தான் இருந்தது. ஒரு முறைகூட பாகிஸ்தான் வீரர்களால் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. பல் பிடுங்கிய பாம்புபோல் தான் பாகிஸ்தானின் ஆட்டம் இருந்தது. கடந்த முறை சுப்மன் கில் பேட்டிங்கிலும் இஷான் போரல் பெளலிங்கிலும் அசத்தினார்கள் என்றால், இந்த முறை ஜெய்ஸ்வால் பேட்டிங்கிலும் மிஸ்ரா மற்றும் பிஷ்னோய் பெளலிங்கிலும் கலக்கினார்கள்.

நாக் அவுட் போட்டிகளில் பொதுவாக பேட்டிங் தேர்வு செய்து அதிக ஸ்கோர் எடுத்து எதிரணிக்கு நெருக்கடி கொடுப்பார்கள். டாஸ் ஜெயித்த பாகிஸ்தானும் பேட்டிங்கை தேர்வு செய்து இந்தியர்களுக்கு நெருக்கடி கொடுக்க முடிவு செய்தது. பேட்டிங் ஆடத் தொடங்கிய பாகிஸ்தானுக்கு இந்திய பெளலர் மிஸ்ரா அதிர்ச்சியளித்தார். ஷார்ட் பால் வீசி ஹுரைரா விக்கெட்டை அவர் வீழ்த்த, மறுபுறம் லெக் ஸ்பின்னர் பிஷ்னோய் தொடர்ந்து டைட் லைனில் வீச, மற்றுமொரு பாகிஸ்தான் பேட்ஸ்மேன் முனீர் அவுட் ஆனார். பாகிஸ்தான் சற்றே ஆட்டம் கண்டது.

ஹைதர் அலியுடன் கேப்டன் நசீர் ஜோடி சேர, இருவரும் பொறுமையாக ஸ்கோர் செய்ய ஆரம்பித்தனர். இருவரும் ரன்களை சிறுகச் சிறுக சேர்த்துக்கொண்டே வர, நெருக்கடி இந்தியா பக்கம் திரும்புவதுபோல்இருந்தது. நன்றாக ஆடிய ஹைதர் அலி அரைசதம் அடிக்க, அணியின் ஸ்கோர் 100 ரன்னை நோக்கிச் சென்றது.

பெளலர்களை மாற்றிக்கொண்டே இருந்த இந்தியாவுக்கு விக்கெட் எதுவும் கிடைக்கவில்லை. கேப்டன் பராக் இந்தத் தொடரில் பார்ட்னர்ஷிப் பிரேக்கராக இருக்கும் ஜெய்ஸ்வாலை பந்துவீச அழைத்தார். அதற்குக் கை மேல் பலன் கிடைத்தது. நன்றாக ஆடிக்கொண்டிருந்த ஹைதர் அலியை கவனம் சிதற வைத்து விக்கெட்டைத் தூக்கினார் ஜெய்ஸ்வால். அதற்குப் பிறகு விக்கெட்கள் தொடர்ச்சியான இடைவெளியில் விழுந்துகொண்டே வந்தது.

146 ரன் இருக்கும்போது அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த ஹாரிஸ் விக்கெட்டை மிட் விக்கெட்டில் மிகவும் கஷ்டமான கேட்சைப் பிடித்து சக்சேனா காலி செய்ய, அதற்கு அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் சீட்டு கட்டு சரிவதுபோல் சரிந்தனர். 26 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் காலியாக, பாகிஸ்தான் 172 ரன்களோடு இன்னிங்ஸை முடித்தது. இந்தியா சார்பில் மிஸ்ரா 3 விக்கெட்கள் பிஷ்னோய் மற்றும் கார்த்திக் தியாகி முறையே 2 விக்கெட் எடுத்தனர்.

172 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடத் தொடங்கிய இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் மற்றும் சக்சேனா இருவரும் அருமையான தொடக்கத்தை அளித்தனர். முதல் 10 ஓவர்களில் பொறுமையாகவும் கவனமாகவும் ஆடிய இருவரும் 33 ரன்கள் எடுத்தனர். பந்து சிறிது தேய ஆரம்பித்தது. ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதமாக மாறியதும், இருவரும் தங்களது கியரை அடுத்தடுத்து மேலே தூக்கினர். குறிப்பாக ஜெய்ஸ்வால் பாகிஸ்தான் பெளலர்களை ஒரு வழி செய்துவிட்டார். தொடர்ந்து டிரைவ்களாக ஆட ஆரம்பிக்க ரன்கள் பவுண்டரிகளாக வர ஆரம்பித்தது.

அணியின் ஸ்கோர் 52 ரன்கள் இருக்கும்போது சக்சேனாவுக்கு ஸ்லிப் திசையில் நின்றுகொண்டிருந்த ஹைதர் அலி கேட்ச்விட, கிடைத்த லைப்லைனை நன்றாகப் பிடித்துக்கொண்டு ஆட ஆரம்பித்தார் சக்சேனா. மறுபுறம் ஜெய்ஸ்வால் பவுலர்களைச் சிதறவிட்டுக் கொண்டிருந்தார். 66 பந்தில் 50 ரன்கள் அடித்து இந்தத் தொடரில் 4-வது அரை சதத்தைப் பதிவு செய்தார்.

சக்சேனா பொறுமையாக ஆடி 83 பந்துகளில் தனது அரை சதத்தைப் பதிவு செய்ய, 30 ஓவர்களில் அணியின் ஸ்கோர் 133 ரன்கள் ஆனது. வெற்றிக்கு 39 ரன்கள் தேவை என்றபோது, 76 ரன்னில் இருந்த ஜெய்ஸ்வால் அதிரடி ஆட்டத்தை கையில் எடுத்தார். அப்பாஸ் அப்ரிடி ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்கள் மிட் விக்கெட் திசையில் பறக்கவிட்டு சதத்தை நெருங்கினார். ஜெய்ஸ்வால் 99 ரன்களில் இருக்கும்போது வெற்றிக்குத் தேவை 3 ரன்கள் என இருந்தது. இடது கை சுழற்பந்து வீச்சாளர் அமீர் அலி வீச பந்தை டீப் மீட் விக்கெட் திசை நோக்கி சிக்ஸர்க்குப் பறக்கவிட்டு இந்த உலகக் கோப்பையில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார்.

113 பந்துகளைச் சந்தித்தவர் 8 பவுண்டரீஸ் 4 சிக்ஸர்கள் அடித்து 103 ரன்கள் எடுத்தார். மறுபுறம் சப்போர்டிங் ரோலில் அருமையாக ஆடிய சக்சேனா, 99 பந்துகளில் 6 பவுண்டரீஸ் அடித்து 59 ரன்கள் எடுத்திருந்தார். அட்டகாசமாக ஆடிக்கொண்டிருக்கும் ஜெய்ஸ்வால் இந்தத் தொடரில் இதுவரை 5 போட்டிகளில் 312 ரன்களைக் குவித்து ஆவரேஜ் 156 என வைத்துள்ளார்.

நாளை நடைபெறும் நியூசிலாந்து, வங்கதேசத்துக்கு இடையிலான மற்றுமொரு அரையில் வெற்றிபெறும் அணியை, இந்தியா 9-ம் தேதி இறுதி போட்டியில் சந்திக்கவுள்ளது.

3 ஈஸி வெற்றி, 1 போராட்டம்... அடுத்த கோப்பைக்கு பாய்ஸ் இன் ப்ளூ ரெடி!
பின் செல்ல