Published:Updated:

ENG vs IND: தாக்குப்பிடி, பின் திருப்பியடி - பண்ட்டின் பாட்ஷா பார்முலாவும், பாண்டியாவின் மேஜிக்கும்!

ENG vs IND ( Rui Vieira )

முதல் ஒருநாள் போட்டியில் குட் லெந்த் என்றால், இப்போட்டியில் ஷார்ட் பால்களே இந்தியாவின் ஆயுதம். அதை மிகச் சிறப்பாக பாண்டியா பயன்படுத்தினார். பாண்டியா எடுத்த நான்கு விக்கெட்டுகளுமே ஷார்ட் பாலில் விழுந்தவைதான்.

ENG vs IND: தாக்குப்பிடி, பின் திருப்பியடி - பண்ட்டின் பாட்ஷா பார்முலாவும், பாண்டியாவின் மேஜிக்கும்!

முதல் ஒருநாள் போட்டியில் குட் லெந்த் என்றால், இப்போட்டியில் ஷார்ட் பால்களே இந்தியாவின் ஆயுதம். அதை மிகச் சிறப்பாக பாண்டியா பயன்படுத்தினார். பாண்டியா எடுத்த நான்கு விக்கெட்டுகளுமே ஷார்ட் பாலில் விழுந்தவைதான்.

Published:Updated:
ENG vs IND ( Rui Vieira )
மான்செஸ்டரில் மான்ஸ்டர் அவதாரம் எடுத்து பண்ட்டும் பாண்டியாவும் இங்கிலாந்தின் கோப்பைக் கனவை அடித்து நொறுக்கி ஒருநாள் தொடரை வென்று கொடுத்துள்ளனர். இந்த இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் தொடரை மட்டும் சமன் செய்ய அனுமதித்த இந்தியா டி20, ஒருநாள் தொடர் இரண்டையுமே வென்றுள்ளது.

கோப்பை யாருக்கென முடிவு செய்யும் மூன்றாவது போட்டி கடினமானதாக இருக்குமென்றே எதிர்பார்க்கப்பட்டது. கடைசியாக இக்களத்தில் நடைபெற்ற ஒன்பது போட்டிகளில், ஆறில் 290-க்கும் அதிகமான இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது என்ற தரவு மட்டுமல்ல, பும்ரா இல்லாததும் ஹை ஸ்கோரிங் போட்டிக்கான ரெட் அலெர்ட்டை முதலிலேயே கொடுத்தது. ஆனால், இந்தியாவிடமோ வேறு வியூகம் இருந்தது. பவுன்சர்களை வீசியே இங்கிலாந்து பேட்ஸ்மேன்களைப் பதம் பார்த்து விட்டனர்.

ENG vs IND
ENG vs IND
Rui Vieira

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பும்ராவின் இடத்திலிருந்து அதனைச் செய்து முடித்தது நாம் எதிர்பார்த்த ஷமி அல்ல, பழைய பாண்டியாவாக அணிக்குத் திரும்பியுள்ள ஹர்திக். சிறப்பான தொடக்கத்தை சிராஜும், முடிவை சஹாலும் கொடுத்தனர்தான். ஆனால், இந்தப் போட்டியில் பிரதான பௌலராக ஜொலித்தவர் பாண்டியாதான்.

ரெட்பால் வார்ப்பில் வார்க்கப்பட்ட சிராஜ், பும்ரா அளவிற்குத் தாக்கத்தை ஏற்படுத்துவாரா என்ற சந்தேகமெழ, முதல் ஒருநாள் போட்டியில் பும்ரா செய்த அதே இரட்டை விக்கெட்டுகள் மெய்டனோடு தொடங்கி இவரும் ஆச்சரியமளித்தார். பேர்ஸ்டோவைத் தூக்கிய அப்பந்தும், ரூட்டை வெளியேற்றிய அவுட் ஸ்விங்கரும் சர்ப்ரைஸ் பேக்கேஜாகின. இருவருமே டக்அவுட் ஆகி வெளியேறியிருந்தனர். எனினும், இந்த அற்புதமான இரண்டு பந்துகளுக்குப் பிறகு சிராஜால் ரன் கசிவதைத் தடுக்க முடியவில்லை. இப்போட்டியில் அதிகமான எக்கானமியும் அவருடையதுதான். "அடித்துக் கொள், பிழைத்துப் போ" என்பது போன்ற லைன் அண்ட் லெந்த்திலேயே அவரது பந்துகள் இருந்தன.

ENG vs IND
ENG vs IND
Rui Vieira

சஹாலோ, முதல் ஸ்பெல்லில் சோபிக்காவிட்டாலும் இறுதியில் டெய்ல் எண்டர்களுக்கு எண்டு கார்டு போட்டார். போட்டியில் பவர்பிளே, இறுதி ஓவர்களில்கூட ரன்கள் குவிக்கப்படவில்லை. 21 - 26 ஓவர்களில்தான் இங்கிலாந்து அடித்து ரன் ஏற்றியது. 56 ரன்கள் அந்த ஓவர்களில் வந்தன. அதில் 10 மற்றும் 16 ரன்களைத் தந்த இரண்டு காஸ்ட்லி ஓவர்களை வீசியவர் சஹால்! தன்னை நிலைநிறுத்த சஹால் தடுமாறிய அந்த இடைவெளியில்தான் பட்லர் - மொயின் ஜோடி அவரை அட்டாக் செய்து ரன்களைச் சேர்த்தது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அடுத்ததாக அனுபவமற்ற பிரஷித்தாலும் சரி, அனுபவம் நிறைந்த ஷமியாலும் சரி, தங்களது லைன் அண்ட் லெந்தால் பேட்ஸ்மேன்களைத் திணறடிக்கவே முடியவில்லை. ஃபுல் லெந்தில் வந்த ஷமியின் பந்துகள் அடிவாங்க, பேக் ஆஃப் லெந்துக்கு அதை மாற்றிய அவர், ரன்களுக்கு அணை கட்டினாலும் விக்கெட் வேட்டையாடவில்லை. ஸ்விங் ஆகாத பந்துகள் அவருக்குப் பாதகமாகின. பிரஷித்தின் நிலையும் அதேதான். இத்தொடர் முழுவதுமே லைன் அண்ட் லெந்த்தை செட் செய்ய மிகவும் சிரமப்பட்டார். இப்போட்டியும் அதற்கு விதிவிலக்கல்ல.

இவர்கள் எல்லோருடைய குறைகளையும் பாண்டியா என்னும் மேஜிக்கல் மை அடித்து மாற்றி எழுதிவிட்டது. முதல் ஒருநாள் போட்டியில் குட் லெந்த் என்றால், இப்போட்டியில் ஷார்ட் பால்களே இந்தியாவின் ஆயுதம். அதை மிகச் சிறப்பாக பாண்டியா பயன்படுத்தினார். பாண்டியா எடுத்த நான்கு விக்கெட்டுகளுமே ஷார்ட் பாலில் விழுந்தவைதான்.
ENG vs IND
ENG vs IND
Rui Vieira

பார்ட்னர்ஷிப்பை உடைப்பதாக அவை இருந்ததுதான் கூடுதல் சிறப்பு. ராய் - ஸ்டோக்ஸ் இருவரையும் முறையே ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே மற்றும் லெக் ஸ்டம்புக்கு வெளியே நகர்ந்த பாண்டியாவின் பந்துகள் காலி செய்தன. ஆனால், இதையும் தூக்கிச் சாப்பிடுவது போலிருந்தது ஒன்பது ஓவர்கள் நீடித்த பட்லர் - லிவிங்ஸ்டோனின் பார்ட்னர்ஷிப்பை அவர் உடைத்த விதம்.

இரு ஓவர்கள் தொடர்ந்து ஷார்ட் பால்களை மட்டுமே வீசி லிவிங்ஸ்டனின் ஈகோவை சீண்டிக் கொண்டே இருக்க, அவரோ அதில் இரு சிக்ஸர்களை அடித்தாலும் அடுத்ததாக அதைப் போன்றதொரு பந்தை புல் செய்ய முயன்று பவுண்டரி லைனுக்கருகே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இரண்டு பந்துகள் இடைவெளியில் பட்லரையும் அதே முறையில் வெளியேற்றியதுதான் கூடுதல் சிறப்பு. ஸ்ரேயாஸை முந்தைய போட்டிகளில் ஷார்ட் பாலால் கட்டம் கட்டித் தூக்கிப் பெருமிதப்பட்ட இங்கிலாந்துக்கு அதே பாணியிலேயே திருப்பிக் கொடுத்தார் பாண்டியா. அவருக்குக் கைகொடுத்து ஜடேஜா பிடித்த அந்த இரு கேட்சுகளுமே செட்டான பேட்ஸ்மேன்கள் இருவரையும் செட் செய்து தூக்கியதைச் சொன்னது.

இடையில் அமைந்த மூன்று பார்ட்னர்ஷிப்கள்தான் ஆல்அவுட் ஆன இங்கிலாந்துக்கு ஆறுதலே! அதுதான் 260 என்ற இலக்குவரை எடுத்துச் சென்றது.

ENG vs IND
ENG vs IND
Rui Vieira

இந்த இலக்கு இந்திய அணிக்கு எட்ட எளிதானது என்ற எண்ணத்தைத் தூள் தூளாக்கியது இந்திய டாப் ஆர்டரை கூண்டோடு தூக்கிய டாப்லியின் டாப் கிளாஸ் ஸ்பெல். லெஃப்ட் ஆர்ம் பேஸ் பௌலர் என்றாலே சற்றே பயத்தோடே அணுகிப் பழகிய இந்திய டாப் ஆர்டருக்கு மீண்டுமொரு முறை அந்தப் பயத்தை ஆழமாக விதைத்து அனுப்பினார் டாப்லி. தவான், ரோஹித், கோலி ஆகிய மூவருமே ஒருவர் பின் ஒருவராக வெளியேறி இந்திய அணிக்கு அபாய மணியை அடித்தனர்.

ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே நகர்ந்த பந்துகள்தான் மூவரது விக்கெட்கள் விழவும் காரணமாக இருந்தன. ஃபுல் லெந்தில் வந்த பந்தைக் கணிக்கத் தவறி டிரைவ் செய்து பேக்வர்ட் பாயிண்டில் கேட்ச் கொடுத்து தவான் வெளியேறினார். இன்னொரு ஓப்பனரான ரோஹித்துக்கான வலை ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசப்பட்ட குட் லெந்த் பந்து. அதில் அவரும் எட்ஜாகி ஸ்லிப் கேட்சில் முடிந்தார்.

இந்நாள் கேப்டனின் வழியிலேயே 17 ரன்களில் முன்னாள் கேப்டனும் வெளியேறினார். 'சூடுபட்டாலும், நெருப்பைத்தான் நெருங்குவேன்' என்பது போல் எத்தனை முறை அதனாலேயே வீழ்ந்தாலும் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே நகரும் பந்தைத் தொடுவதை மட்டும் கோலியால் விடவே முடிவதில்லை. இந்த முறையும் அதுதான் நடந்தது. டாப்லியின் உயரம், களத்தில் கிடைத்த எக்ஸ்ட்ரா பவுன்ஸ் எல்லாம் சேர்ந்து அவருக்குச் சாதகமானது. இந்திய மிடில் ஆர்டர் சொதப்புவதைப் பார்த்துப் பழகிய கண்களுக்கு டாப் ஆர்டர் சோபிக்கவில்லை என்பது புதிதாக உள்ளது. உலகக் கோப்பையை நோக்கி நீளும் சாலையில் பயணிக்கத் தொடங்கிய இந்தியா, இன்னமும் பழுது நீக்க வேண்டிய பாகங்களோடு பயணிப்பதுதான் பரிதாபத்துக்குரியது.

ENG vs IND
ENG vs IND
Rui Vieira
38/3 என இருந்த இந்திய அணியை 72/4 எனக் கொண்டு வந்து நிறுத்தியதோடு சூர்யக்குமாரும் வெளியேறினார். கிட்டத்தட்ட ரசிகர்களின் நம்பிக்கை மொத்தமும் கரைந்து போனது அங்கேதான். ஆனால், பண்ட் - பாண்டியா இடையேயான பார்ட்னர்ஷிப்தான் போட்டிக்குள் இந்தியாவைத் திரும்பிக் கொண்டு வந்தது.

பௌலிங்கில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களைக் கலங்கடித்த பாண்டியா, பேட்டிங்கில் இங்கிலாந்து பௌலர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தார். மோசமான சூழல்தான் என்றாலும் பணிந்து போவது போல் ஆடாமல் அடித்து ஆடி அட்டாக் செய்தார். ஷார்ட் பால்களைச் சரியாகச் சமாளித்து ரன்கள் ஆக்கியதோடு, தொடர்ந்து ரன்கள் வந்து கொண்டே இருப்பதையும் உறுதி செய்தார். வெறும் 43 பந்துகளில் வந்து சேர்ந்த அரைசதமும், இறுதியில் 129 ஸ்ட்ரைக்ரேட்டோடு வந்து சேர்ந்த அவரின் 71 ரன்களும்தான் இந்தியா பக்கம் தேங்கியிருந்த அழுத்தத்துக்கு விடை கொடுத்தது. இலக்கை எட்டும் முன் ஆட்டமிழந்திருந்தாலும் அணிக்குத் தேவையானதைச் செய்து விட்டுதான் வெளியேறியிருந்தார் பாண்டியா.

ENG vs IND
ENG vs IND
Rui Vieira

பண்ட்டைப் பொறுத்தவரை, இந்தப் போட்டிக்கு முன்னதாக, ஒருநாள் போட்டிகளில் சேஸிங்கில் அவரது தரவுகள் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. வெறும் 12 மட்டுமே அவரது சராசரி. அதோடு நிலைத்து நின்று ஆடுவது எல்லாம் அவருக்குச் சுட்டுப் போட்டாலும் வராது. எத்தனையோ முறை பொறுப்பற்ற ஷாட் அவரது விக்கெட்டைக் காவு வாங்கியிருக்கிறது. ஆனால், இப்போட்டியில் பண்ட்டின் இன்னொரு பரிமாணம் வெளிப்பட்டது. அவரது ஆங்கரிங் ரோல்தான் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. மறுபக்கம் பாண்டியா, பண்ட்டின் பாணியில் ஆட்டம் காட்டிய போதுகூட பொறுமையே பெருமை என மாணிக்கமாக அமைதி காத்தார் பண்ட். வழக்கத்தை மீறிய பக்குவம் அவரது ஆட்டத்தில் வெளிப்பட்டது.

71 பந்துகளில்தான் பண்ட்டின் அரைசதமே வந்தது. ஆனால், அங்கிருந்து கியரை மாற்றி அடுத்த 35 பந்துகளிலேயே பாட்ஷா பாயாக மாறி சதத்தையும் எட்டினார். எல்லா ஃபார்மேட்டுக்குமான பௌலராக பும்ரா தன்னை நிருபித்திருக்க, தற்சமயம் அப்பட்டியலில் பேட்ஸ்மேனுக்கான இடத்தில் தனது பெயரையும் பண்ட் சேர்த்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் அவரது முதல் சதம் இது! டிசைடரில் அதுவும் எல்லாம் முடிந்ததென நினைத்த நிலையில் இது வந்ததுதான் இன்னமும் சிறப்பு.

"தாக்குப்பிடி, பின் திருப்பியடி" - இதுதான் இப்போட்டியில் பண்ட்டின் அணுகுமுறையாக இருந்தது. இறுதியாக வில்லேயின் ஓவரில் அவர் அடித்த ஐந்து பவுண்டரிகளும், ரூட் பந்தில் வின்னிங் ஷாட்டான அந்த ரிவர்ஸ் ஸ்வீப்பும் வழக்கமான பண்ட் ஸ்பெஷல் ஷாட்கள்.

ENG vs IND
ENG vs IND
Rui Vieira

பண்ட்டின் சதத்தோடு டெஸ்ட் தொடங்கியதென்றால், அவரது இன்னொரு சதத்தோடு சுற்றுப்பயணம் வெற்றிகரமாக முடிவுக்கு வந்துள்ளது. அவருடைய தனிப்பட்ட சாதனையாக மட்டும் இது இல்லாமல் இந்தியாவுக்கு 2-1 என்ற கணக்கில் தொடரை வெல்லவும் அது உதவியுள்ளது. 125 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரிஷப் பண்ட் ஆட்டநாயகனாகவும், இந்தத் தொடர் முழுக்கவே தன் ஆல்ரவுண்ட் ஆட்டத்தால் ஜொலித்த ஹர்திக் பாண்டியா தொடர்நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அசாருதீன், தோனிக்கு அடுத்தபடியாக இங்கிலாந்தில் பைலேட்டரல் தொடரை வென்ற கேப்டன் என்ற சாதனையை ரோஹித் ஷர்மா படைத்துள்ளார். அது மட்டுமின்றி அவர் கேப்டனாக இருந்த 7 தொடர்களையும் இந்தியா இதுவரை வென்றிருக்கிறது. இது தொடருமா?