Published:Updated:

317 ரன் வெற்றிக்கு சென்னை ரசிகர்களே காரணம்... நெகிழ்ந்த கோலி... அசத்திய அக்ஸர்! #INDvENG

கோலி
கோலி

317 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை தோற்கடித்து மாபெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது இந்தியா. வெற்றிக்கு முன்பாக சென்னை டெஸ்ட்டின் நான்காவது நாளான இன்று என்னெவெல்லாம் நடந்த்து?!

வீழ்வது வீழ்ச்சியல்ல வீழ்ந்தே கிடப்பதுதான் வீழ்ச்சி... வழக்கம்போல முதல் டெஸ்ட்டில் மிகமோசமான தோல்வியை சந்தித்த இந்தியா இரண்டாவது டெஸ்ட்டில் மிகப்பெரிய வெற்றியை ரசிகர்களுக்கு அர்ப்பணித்திருக்கிறது. எந்த சென்னை சேப்பாக்கத்தில் 227 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதோ, அதே மைதானத்தில், 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியிருக்கிறது இந்திய அணி.

அஷ்வினின் அபாரமான ஆல்ரவுண்டு பர்ஃபாமென்ஸ், ரோஹித் ஷர்மாவின் சதம், அக்ஸர் பட்டேல், ரிஷப் பன்ட், கோலி, ரஹானே என அனைவரும் கைகொடுக்க, அற்புதமான வெற்றியைப் பெற்றிருக்கிறது இந்திய அணி.

இங்கிலாந்தின் 7 விக்கெட்டுகளை, இரண்டு செஷன்களுக்குள் எடுக்க வேண்டும் என்ற முனைப்புடன்தான் இந்தியா இன்று களமிறங்கியது.

லாரன்ஸ் 19 ரன்களுடனும், ஜோ ரூட் 2 ரன்களுடனும் தங்களது ஆட்டத்தைத் தொடர, இந்தியா சிராஜை முதல் ஓவர் வீச வைத்தது. இந்திய மைதானத்தில் திணறிக் கொண்டிருக்கும் லாரன்ஸை, இந்தியா வெகுநேரம் ஆடவிடவில்லை.

4 ஓவர்கள் முடிந்ததும், அஷ்வினைப் பந்து வீச உள்ளே கொண்டு வந்தார் கோலி. பந்து வீசுவதற்கு முன் அஷ்வினும் கீப்பர் ரிஷப் பன்ட்டும் பேசிவைத்து, முதல் பந்தை வீச, லாரன்ஸ் அதை அடிக்க இறங்கும் போது, அற்புதமான முறையில் ஸ்டம்ப்பிங் செய்யப்பட்டார். இங்கிலாந்து விக்கெட்டுகள் சீட்டுக்கட்டுகளாக சரியப்போகிறது என லாரன்ஸ் விக்கெட் உணர்த்த ஆரம்பித்தது.

சென்னை ரசிகர்கள்
சென்னை ரசிகர்கள்

லாரன்ஸை தொடர்ந்து உள்ளே வந்த பென் ஸ்டோக்ஸுக்கு ஏகப்பட்ட டர்னர்களை வீச ஆரம்பித்தார் அஷ்வின். அதுவும் சில பந்துகள் பன்ட் நெஞ்சுக்கு அருகில் சென்றது. ஸ்டோக்ஸின் விக்கெட்டைத் தொடர்ந்து எடுத்துவரும் அஷ்வின் இந்தமுறையும் அதைச் செய்யத் தவறவில்லை. ஸ்டோக்ஸ் 8 ரன்கள் எடுத்திருந்த நிலையில், நான்காவது ஸ்டம்ப் லைனில் அஷ்வின் பந்துவீச, ஸ்டோக்ஸ் அதைத் தடுத்தாட முற்பட, பந்து இரண்டாவது ஸ்லிப்பில் நின்று கொண்டிருந்த கோலி கையில் தஞ்சம் புகுந்தது.

பென் ஸ்டோக்ஸைத் தொடர்ந்து போப் உள்ளே வந்தார். வந்தவுடன் சில பவுண்டரிகள் அடித்தவரை வந்த வேகத்திலயே அனுப்பி வைத்துவிட்டார் அக்ஸர் பட்டேல். அக்ஸர் வீசிய ஃபுல் லென்த் பந்தில் ஸ்வீப் ஆட முற்பட, பந்து டீப் மிட்விக்கெட் திசையில் நின்றுகொண்டிருந்த இஷாந்த் ஷர்மா கையில் எளிதாக தஞ்சம் புகுந்தது.

இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் போராடத் தயாராக இல்லை என்பதை அவர்களது பேட்டிங் ஸ்டைல் உணத்தியது. அஷ்வினும் அக்ஸரும் மாறிப் மாறி பந்து வீசி, விக்கெட்டுகளை அள்ளிக் கொண்டிருக்க, குல்தீப் எனக்கும் பந்துவீச வாய்ப்புக் கொடுங்கள், நானும் இவர்கள் விக்கெட்டை வீழ்த்துவேன் என்பதை போல் வெகுநேரம் பார்த்துக் கொண்டிருந்தார். ஒருவழியாக அவருக்கு பந்துவீசும் வாய்ப்பு 42-வது ஓவரில் கிடைக்க, ரூட் விக்கெட்டை தூக்கும் முயற்சியில் இறங்கினார். ஸ்வீப் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப் ஆடிக்கொண்டிருந்த ரூட்டுக்கு டாப் ஸ்பின் வீச, அதை ரூட் ரிவர்ஸ் ஸ்வீப் ஆட முற்படும்போது, பந்து எட்ஜ் வாங்கி சிராஜ் கைக்குச் சென்றது. ஆனால் எளிதான கேட்சைக் கோட்டை விட்டார், சிராஜ். இந்தத் தொடர் முழுவதும் எளிதான கேட்ச்களைக் கோட்டைவிடுவது இந்திய அணியில் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

ரூட் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை என்றால் என்ன, எதிரில் இருக்கும் ஃபோக்ஸை வீழ்த்துவோம் என்று, அதற்கடுத்த ஓவரில், மற்றொரு டாப் ஸ்பின்னை வீச, இந்தமுறை ஃபோக்ஸ் ஸ்வீப்ஷாட் ஆட முயன்றார். பந்து ஷார்ட் மிட்விக்கெட்டில் நின்றுகொண்டிருந்த அக்ஸர் பட்டேல் கையில் அழகாகப் போய் உட்கார்ந்தது. பல காலமாக பென்ச்சிலே உட்காரவைக்கப்பட்டு மிகவும் மனதளவில் தளர்ந்திருந்த குல்தீப் யாதவுக்கு, இந்த விக்கெட் மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக இருந்தது. அதைத்தான் அணியின் மொத்த கொண்டாட்டமும் உணர்த்தியது.

கோலி, அக்ஸர் பட்டேல்
கோலி, அக்ஸர் பட்டேல்

முதல் செஷனில் 63 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்து, 116 ரன்களுக்கு 7 விக்கெட்டுகள் என தத்தளித்துக் கொண்டிருந்தது இங்கிலாந்து அணி.

இரண்டாவது செஷனை வெகுநேரம் நீட்டிக்க விரும்பாத இந்திய அணி வந்த வேகத்தில் ஜோ ரூட்டைத் தூக்கியது. அக்ஸர் பட்டேல் வீசிய பந்தை டிஃபெண்ட் ஆட ஜோ ரூட் முயல, பந்து எக்ஸ்ட்ரா பவுன்சர் ஆகி முதல் ஸ்லிப்பில் நின்றுகொண்டிருந்த ரஹானேவின் கைகளுக்குச் சென்று சேர்ந்தது. 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த அக்ஸர் பட்டேல் அறிமுகப்போட்டியில் 5 விக்கெட்டுகள் எடுத்த பெளலர் என்ற பெருமையைப் பெறவேண்டும் என அடுத்த ஓவரை வீச வேகப்பந்து வீச்சாளர் ஸ்டோன்ஸ் லெக்சைட்டில் ஆட முற்பட்டு பேடில் வாங்க எல்பிடபிள்யூ ஆனது. இந்தியா சார்பாக அறிமுகப் போட்டியில் 5 விக்கெட்டுகள் எடுத்த 6-வது ஸ்பின் பெளலர் என்ற பெருமையைப் பெற்றார்.

இரண்டாவது டெஸ்ட் போட்டியை ஜெயிக்க ஒரு விக்கெட் மட்டுமே எடுக்க வேண்டும் என்ற நிலையில் மொயின் அலி அக்ஸர் பட்டேல் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்தும், அஷ்வின் ஓவரில் சிக்ஸர் மற்றும் பவுண்டரி அடித்தும் அதிரடி காட்டினார். ஆனால், அவரது ஆட்டம் வெகுநேரம் நீடிக்கவில்லை மொயின் அலியின் அதிரடி ஆட்டம். 43 ரன்கள் எடுத்திருந்தபோது குல்தீப் யாதவ் பந்தில் இறங்கிவந்து ஆடமுற்பட பன்ட்டின் மற்றொரு அற்புதமான ஸ்டெம்ப்பிங்கால் ஆட்டமிழந்தார். இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸில் ஃபோக்ஸ் அதிகபட்ச ஸ்கோராக 42 ரன்கள் அடிக்க, இரண்டாவது இன்னிங்ஸில் மொயின் அலி டாப் ஸ்கோராக 43 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

முதல் டெஸ்ட்டில் மோசமாகத் தோற்ற இந்திய அணி, இரண்டாவது டெஸ்ட்டில் வீறுகொண்டு எழுந்து, 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியிருக்கிறது. இந்திய அணி அதிக ரன்கள் வித்தியாசத்தில் 5-வது பெரிய வெற்றியைப் இன்று பதிவுசெய்துள்ளது.

ஓலி போப்
ஓலி போப்

முதல் இன்னிங்ஸில் ரோஹித் ஷர்மாவின் சதம், ரஹானே மற்றும் பன்ட்டின் அரை சதம், அஷ்வினின் 5 விக்கெட்டுகள் கைக்கொடுத்தால், இரண்டாவது இன்னிங்ஸில் கோலியின் அரை சதம் அஷ்வினின் சதம், அக்ஸர் பட்டேலின் 5 விக்கெட்டுகள், பன்ட்டின் அற்புதமான கேட்ச்கள் மற்றும் ஸ்டம்பிங்குகள் என ஆல்ரவுண்ட் பேக்கேஜாக அசத்தியிருக்கிறது இந்திய அணி.

இந்த வெற்றியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்திற்கு முன்னேறியிருக்கிறது.

போட்டி முடிந்ததும் பேசிய கோலி, இரண்டாவது டெஸ்ட் வெற்றியை சென்னை ரசிகர்களுக்கு அர்ப்பணித்தார். ''இரண்டாவது டெஸ்ட்டில் ரசிகர்கள் உள்ளேவந்தது எங்களுக்கு உற்சாகம் தந்தது. ஒரு டீமாக இணைந்து விளையாட மக்கள் ஊக்கமளித்தார்கள். சென்னை ரசிகர்கள் அறிவாளிகள். கிரிக்கெட்டை நன்குப் புரிந்தவர்கள். பெளலர்கள் சிறப்பாகப் பந்துவீச அவர்கள்தான் தூண்டுகோலாக இருந்தார்கள்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு