Published:Updated:

தோனி சாதனையை முறியடித்த கோலி! - வெஸ்ட் இண்டீஸ் தொடரை முழுமையாக வென்ற இந்தியா #WIvIND

தினேஷ் ராமையா

தோனி சாதனையை முறியடித்த கோலி! - வெஸ்ட் இண்டீஸ் தொடரை முழுமையாக வென்ற இந்தியா #WIvIND

Virat kohli
Virat kohli ( AP )

வெஸ்ட் இண்டீஸ் - இந்திய அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் ஜமைக்காவின் கிங்ஸ்டன் மைதானத்தில் நடந்தது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 416 ரன்கள் எடுத்தது. இதையடுத்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 117 ரன்களில் ஆட்டமிழந்தது. 299 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், வெஸ்ட் இண்டீஸுக்கு ஃபாலோ ஆன் கொடுக்காமல் இந்திய அணி தொடர்ந்து விளையாடியது.

Bumrah
Bumrah
ICC

இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 468 ரன்களை இந்திய அணி இலக்காக நிர்ணயித்தது. இமாலய இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 3-ம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 42 ரன்கள் எடுத்திருந்தது.

முந்தைய நாள் ஸ்கோருடன் நான்காம் நாள் ஆட்டத்தை வெஸ்ட் இண்டீஸ் தொடங்கியது. காயத்தால் டேரன் பிராவோ ரிட்டையர்ட் ஹர்ட் ஆக வெளியேறினார். அவருக்குப் பதிலாக கன்கஷன் வீரராக ஜெர்மைன் பிளாக்வுட் களம்கண்டார். வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். சிறிதுநேரம் தாக்குப்பிடித்த ஷம்ரா ப்ரூக்ஸ் மட்டும் வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அரைசதம் அடித்தார். இரண்டு போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஒருவர் அடித்த ஒரே அரைசதம் இது மட்டுமே.

ஸ்டீவ் ஸ்மித்துக்கு பதில் மார்னஸ் லேபுஸ்சேன்... அதென்ன கன்கஷன் பிளேயர்? #Ashes

59.5 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 210 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் 257 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வென்ற இந்திய அணி, தொடரையும் 2-0 என்ற கணக்கில் முழுமையாக வென்றது. இந்திய அணி தரப்பில் முகமது ஷமி மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். முதல் இன்னிங்ஸில் சதம் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் அரைசதமடித்து அசத்திய இந்திய வீரர் ஹனுமா விஹாரி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

இந்த வெற்றிமூலம் டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றிகளை ஈட்டிய இந்திய கேப்டன் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார். முன்னதாக, தோனி கேப்டனாக 60 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு 27 வெற்றிகளைப் பெற்றுத்தந்துள்ளார். தோனியின் சாதனையை கேப்டனாகத் தனது 48வது போட்டியிலேயே முந்தியிருக்கிறார் கோலி.

வெ.இ அணிக்கு எதிரான 2 -வது டெஸ்ட் - `கேப்டன் கோலி' குறிவைக்கும் சில சாதனைகள்
Virat Kohli
Virat Kohli
ICC

போட்டிக்குப் பின்னர் பேசிய விராட் கோலி, வீரர்களின் சிறப்பான செயல்பாட்டால் மட்டுமே இது சாத்தியம் என்று பேசினார். மேலும், பும்ரா, விஹாரி, இஷாந்த் ஷர்மா, ஷமி மற்றும் ஜடேஜா ஆகியோரையும் விராட் கோலி பாராட்டினார். இளம் வீரரான விஹாரி இந்தப் போட்டியில் சிறப்பாகச் செயல்பட்டதாகப் பாராட்டிய கோலி, வெஸ்ட் இண்டீஸின் பந்துவீச்சு குறித்தும் பேசினார். பேட்டிங்கில் செய்யும் சிறுசிறு தவறுகளை அந்த அணி களையுமானால், உலகின் எந்தவொரு அணிக்கும் டெஸ்ட் போட்டிகளில் சவால் அளிக்கும் அணியாக வெஸ்ட் இண்டீஸ் இருக்கும் என்றும் கோலி கூறினார்.