Published:Updated:

20வது ஓவரை மெய்டனாக வீசிய முதல் இந்தியர்! - அறிமுகப் போட்டியில் சாதித்த சைனி

Navdeep Saini
Navdeep Saini ( AP )

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ஃபீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் நவ்தீப் சைனி, தனது முதல் சர்வதேச டி20 போட்டிகளில் களம்கண்டார். இதையடுத்து பேட்டிங் செய்த, வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் ஓவரிலேயே தொடக்க வீரர் ஜான் கேம்பல் விக்கெட்டை இழந்தது. வாஷிங்டன் சுந்தர் வீசிய இரண்டாவது பந்தில் அவர் ஆட்டமிழந்தார்.

Navdeep Saini
Navdeep Saini
AP

அடுத்ததாக, புவனேஷ்வர்குமார் வீசிய பந்தில் எல்வின் லூவிஸ் வெளியேறினார். மறுமுனையில் 2 சிக்ஸர்கள் விளாசி அதிரடியாகத் தொடங்கிய பூரன், நவ்தீப் சைனி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்வரிசை வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, ஒரு முனையில் பொல்லார்டு மட்டும் போராடிக் கொண்டிருந்தார். அவர் 49 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 95 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

கடைசி ஓவரை வீசிய அறிமுக வீரர் சைனி, அதை மெய்டனாக வீசினார். இதன்மூலம், சர்வதேச டி20 போட்டிகளில் கடைசி ஓவரை மெய்டனாக வீசிய முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். 4 ஓவர்கள் பந்துவீசிய அவர் 17 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் 2 பேரைத் தவிர மற்ற வீரர்கள் யாரும் ஒற்றை இலக்க ரன்களைத் தாண்டவில்லை. தொடக்க வீரர்கள் இருவருமே ரன் கணக்கைத் தொடங்காமலேயே ஆட்டமிழந்து வெளியேறினர்.

டெல்லி வீரரான சைனி, சிறப்பாகச் செயல்பட்டார். அவரிடம் விக்கெட் வேட்கை இருக்கிறது. இங்கிருந்து தனது கரியரை அவர் கட்டமைத்துக் கொள்வார்.
விராட் கோலி

இதையடுத்து, 96 ரன்கள் என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு தவான் ஏமாற்றமளித்தார். 7வது ஓவரை வீசிய சுனில் நரேன், ரோஹித் ஷர்மா மற்றும் ரிஷப் பன்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அடுத்து கைகோத்த கோலி - மணீஷ் பாண்டே ஜோடி சிறிதுநேரம் தாக்குப்பிடித்தது. இறுதியில் 6 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி 16 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ரோஹித் ஷர்மா, 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிக்குப் பின்னர் இந்திய அணி விளையாடிய முதல் சர்வதேச போட்டியில் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது.

`ராஜராஜ சோழன் காலத்து `அழகிகுளம்'!' - 50 ஆண்டுகளுக்குப் பின் தூர்வாரப்பட்டு விழாக்கோலம்

போட்டிக்குப் பின் பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, `பிட்ச், சிறப்பானதாக இல்லை. ஆனால்,போட்டிக்கு முந்தைய நாள்களில் மழைப்பொழிவு இருந்ததால், பிட்சை இதைவிட சிறப்பானதாகப் பராமரிக்க முடியாது. போட்டியைத் தொடங்குவதற்காக தங்களாலான முயற்சிகளை ஏற்பாட்டாளர்கள் செய்திருந்தனர். போட்டி முழுவதும் பந்துவீச்சாளர்களே ஆதிக்கம் செலுத்தினர். டெல்லி வீரரான சைனி, சிறப்பாகச் செயல்பட்டார். அவரிடம் விக்கெட் வேட்கை இருக்கிறது. இங்கிருந்து தனது கரியரை அவர் கட்டமைத்துக் கொள்வார்'' என்றார்.

West Indies' Players
West Indies' Players
AP

வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பிராத்வெயிட் பேசுகையில்,``நாங்கள் சூழலை சரியாகக் கணிக்கவில்லை என்று நினைக்கிறேன். கிரண் பொலார்ட் அணிக்குத் திரும்பியிருப்பது கூடுதல் பலம். அவர், தனது அனுபவத்தைக் காட்டினார். நாங்கள் 130 ரன்கள் எடுத்திருந்தால், போட்டியே வேறுவிதமாக இருந்திருக்கும். நேர்மறையாக நாங்கள் போட்டியை அணுக வேண்டும். சுனில் நரேன் வீசிய 4 ஓவர்கள் மிகவும் முக்கியமானது'' என்றார். சிறப்பாகப் பந்துவீசிய சைனி, ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

அடுத்த கட்டுரைக்கு