Published:Updated:

`ஃபாலோ-ஆனில் `க்ளாஸ் கோலி’; டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் `மாஸ் இந்தியா’’ - ஒயிட்வாஷ் தென்னாப்பிரிக்கா

தோனி, இன்று காலை ராஞ்சி மைதானம் வந்தார். இந்திய வீரர்களுக்குத் தனது பண்ணை வீட்டில்வைத்து விருந்து வழங்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

India Team
India Team

இந்தியா- தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி, ராஞ்சி மைதானத்தில் நடைபெற்றுது. முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றிபெற்று தொடரை இந்திய அணி கைப்பற்றிவிட்டபோதிலும், டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான முழுப் புள்ளிகளையும் பெற இந்திய அணி இந்தப் போட்டியிலும் வெற்றிபெறும் முனைப்பில் களமிறங்கியது.

கோலி
கோலி

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணிக்கு சரியான தொடக்கம் கிடைக்காமல் போனாலும், ரோஹித் ரஹானே ஜோடி இந்திய அணி பெரிய ஸ்கோரை எட்ட உதவியது. ரோஹித் 212 ரன்களும் ரஹானே 115 ரன்களும் எடுத்தனர். முதலாவது இன்னிங்ஸில், இந்திய அணி 497 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது.

அதன்பின்னர் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா பேட்ஸ்மேன்களை இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் கவனித்துக்கொண்டார்கள். இதனால், தென்னாப்பிரிக்கா அணி 162 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளும், ஷமி, நதீம், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர். இதைத் தொடர்ந்து, இந்திய அணி தென்னாப்பிரிக்கா அணிக்கு ஃபாலோ-ஆன் வழங்கியது.

ரோஹித் - ரஹானே
ரோஹித் - ரஹானே

இதன்மூலம், எதிரணிக்கு அதிக ஃபாலோ-ஆன்களை வழங்கிய இந்திய கேப்டன் என்னும் பெருமையைப் பெற்றார் கோலி. இதுவரை 8 ஃபாலோ-ஆன்களை கோலி வழங்கியுள்ளார். முன்னதாக, அசாருதீன் 7 ஃபாலோ-ஆன்களை வழங்கியிருந்தார்.

`போராட்டக் களத்தில் வங்கதேச முன்னணி வீரர்கள்!’ -பிசிசிஐ நிலைப்பாடு குறித்து கங்குலி

ஃபாலோ-ஆன் பெற்று களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணியால் முதலில் வாங்கிய அடியிலிருந்து மீண்டு வர முடியவில்லை. 133 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துவிட்டது. இந்திய அணி தரப்பில் ஷமி அதிகபட்சமாக 3 விக்கெடுகளையும், உமேஷ் யாதவ், நதீம் தலா 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர். இதன்மூலம், இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை 3-0 என கைப்பற்றியது. இந்தத் தொடரில் மாஸ் காட்டிய ரோஹித், ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

தோனி
தோனி

இதன்மூலம், சொந்த மண்ணில் தொடர்ச்சியாக அதிக தொடர்களை வென்ற அணி என்னும் சாதனையைப் படைத்தது. இந்த வெற்றியின்மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இரண்டு தொடர்களையும் முழுமையாக கைப்பற்றி, இந்திய அணி 240 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. இரண்டாவது இடத்தில் நியூசிலாந்து அணி 60 புள்ளிகளுடன் உள்ளது. இந்நிலையில் தோனி, இன்று காலை ராஞ்சி மைதானம் வந்தார். இந்திய வீரர்களுக்குத் தனது பண்ணை வீட்டில் விருந்து வழங்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அடுத்தாக, இந்திய அணி வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.