Published:Updated:

`11 சீரியஸ் வெற்றி; தென்னாப்பிரிக்காவுக்கு முதல்முறை!' - புனேயில் சாதித்த இந்திய அணி

தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருக்கிறது.

இந்திய அணி
இந்திய அணி ( AP )

புனேயில் நடைபெற்ற இந்தப் போட்டியில், டாஸ்வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி, தனது முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 601 என்ற இமாலய ஸ்கோருடன் டிக்ளேர் செய்தது. கேப்டன் விராட் கோலி 254 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். மயங்க் அகர்வால் 108 ரன்களும், ஜடேஜா 91 ரன்களும் எடுத்தனர். தென்னாப்பிரிக்கா தரப்பில் ரபாடா 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

விராட் கோலி, ரஹானே, ரோஹித் ஷர்மா
விராட் கோலி, ரஹானே, ரோஹித் ஷர்மா
AP

இதையடுத்து, முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி, 275 ரன்களில் ஆட்டமிழந்தது. குறிப்பாக, அந்த அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மொத்தமாக சொதப்பினர். முதல் 5 பேரில் அதிகபட்சமாக டி பிரெய்ன் 30 ரன்கள் எடுத்தார். மற்ற நால்வரும் ஒற்றை இலக்க ரன்களில் நடையைக் கட்டினர். கேப்டன் டுப்ளஸிஸ் 64 ரன்கள் எடுத்தார். தென்னாப்பிரிக்க அணி, 200 ரன்களுக்குள் ஆட்டமிழக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 8-வது விக்கெட்டுக்கு சுழற்பந்துவீச்சாளர் மகாராஜ் மற்றும் வேகப்பந்துவீச்சாளர் பிலாண்டர் ஆகியோர் இணைந்து 109 ரன்கள் சேர்த்தனர். இதனால் தென்னாப்பிரிக்க அணியால் 250 ரன்களைக் கடக்க முடிந்தது. மகாராஜ் 72 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்த நிலையில், பிலாண்டர் 44 ரன்களுடன் களத்தில் இருந்தார். இந்திய அணி தரப்பில் அஷ்வின் 4 விக்கெட்டுகளும், உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

50-வது டெஸ்ட்... நம்பர் 1 டீம்... கேப்டன் கோலி செய்த அந்த முக்கிய மாற்றம் என்ன?! #Kohli50

தென்னாப்பிரிக்க அணி, இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரைவிட 326 ரன்கள் பின்தங்கியிருந்தது. இதனால், இந்திய அணி, தென்னாப்பிரிக்க அணிக்கு ஃபாலோ ஆன் கொடுத்தது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், தென்னாப்பிரிக்க அணி ஃபாலோ ஆன் ஆவது இதுவே முதல்முறையாகும். இதையடுத்து, இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய தென்னாப்பிரிக்க அணிக்கு, நேர்த்தியான பந்துவீச்சு மூலம் இந்திய பௌலர்கள் நெருக்கடிகொடுத்தனர். முதல் இன்னிங்ஸைப் போலவே இரண்டாவது இன்னிங்ஸிலும் டாப் ஆர்டர் சரியவே, தென்னாப்பிரிக்காவின் தோல்வி ஏறக்குறைய உறுதியானது.

தென்னாப்பிரிக்க அணி
தென்னாப்பிரிக்க அணி
AP

தொடக்க வீரர் எல்கர் 48 ரன்களும், மிடில் ஆர்டரில் பவுமா 38 ரன்களும் எடுத்து வெளியேறினர். இவர்கள் இருவரைத் தவிர முதல் 7 பேட்ஸ்மேன்களில் மற்ற எவரும் இரட்டை இலக்க ரன்களை எட்டவில்லை. 8-வது விக்கெட்டுக்கு மீண்டும் ஜோடி சேர்ந்த மகாராஜ் - பிலாண்டர் ஜோடி, இந்த முறையும் இந்திய பௌலர்களைச் சோதித்தது. ஆனால், அதிக நேரம் இந்த ஜோடி நிலைக்கவில்லை. 129 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தநிலையில், இருவரும் இணைந்து 56 ரன்கள் சேர்த்தனர். உமேஷ் யாதவ் பந்துவீச்சில் 37 ரன்கள் சேர்த்தநிலையில், பிலாண்டர் வெளியேறினார்.

`களத்தில் 6 மணிநேரம்!' - ஒரே இன்னிங்ஸில் விராட் கோலி குவித்த சாதனைகள் #ViratKohli

தென்னாப்பிரிக்க அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 67.2 ஓவர்கள் மட்டுமே பேட் செய்தது. அந்த அணி, 189 ரன்களுக்கு ஆட்டமிழக்கவே, இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. முதல் போட்டியில் வென்றிருந்த இந்திய அணி, 3 போட்டிகள்கொண்ட தொடரையும், இந்த வெற்றி மூலம் 2-0 என்ற கணக்கில் வென்றது. இதன்மூலம் சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 11 தொடர்களை வென்ற அணி என்ற புதிய சாதனையையும் இந்திய அணி படைத்தது. இதற்கு முன்பாக ஆஸ்திரேலிய அணி, சொந்தமண்ணில் தொடர்ச்சியாக 10 டெஸ்ட் தொடர்களை வென்றதே அதிகமாக இருந்தது.

இந்திய அணி
இந்திய அணி
AP

கடந்த 2013-ம் ஆண்டு பிப்ரவரியில் இந்தியா வந்த ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை 4-0 என்ற கணக்கில் வென்று இந்திய அணி தொடர் வெற்றியைத் தொடங்கியிருந்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் இந்திய அணி, 32 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கிறது. இதில், 25 போட்டிகளில் வெற்றியும் ஒரு போட்டியில் தோல்வியையும் இந்திய அணி சந்தித்திருக்கிறது. இந்திய அணியின் ஒரே ஒரு தோல்வியும், இதே மைதானத்தில் சந்தித்ததுதான். கடந்த 2017-ம் ஆண்டு இந்தியா வந்த ஆஸ்திரேலியா அணி, புனேயில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் வென்றிருந்தது.

அதேபோல், 50 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ள கோலி, தனது 30-வது வெற்றியைப் பதிவுசெய்திருக்கிறார். உலக அளவில் 50 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாகச் செயல்பட்டு, அதிக வெற்றி ஈட்டியவர்கள் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் வாக் (37) மற்றும் ரிக்கி பாண்டிங் (35) மூன்றாவது இடத்தில் இருக்கிறார் கோலி.

விராட் கோலி
விராட் கோலி
AP

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்தப் போட்டியில், இரட்டை சதம் விளாசிய கேப்டன் கோலி, ஆட்டநாயகான அறிவிக்கப்பட்டார். இவ்விரு அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி, ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் வரும் 19-ம் தேதி தொடங்குகிறது.