Published:Updated:

`கனவில்கூட நினைத்துப் பார்த்ததில்லை!' - `ஸ்பெஷல் ஹாட்ரிக்' தீபக் சஹார் #INDvBAN

வங்கதேச அணிக்கெதிரான 3வது டி20 போட்டியில் 30 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, தொடரையும் 2-1 என்ற கணக்கில் வென்றது.

தீபக் சஹார்
தீபக் சஹார் ( BCCI )

இந்தியா, வங்கதேச அணிகள் இடையிலான 3வது டி20 போட்டி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடந்தது. முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றிருந்ததால், தொடர் யாருக்கு என்பதை முடிவு செய்யும் போட்டியாக இது இருந்தது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி, கே.எல்.ராகும் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரின் அரைசதங்கள் உதவியோடு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் குவித்தது. ஸ்ரேயாஸ் ஐயர், 62 ரன்களும் கே.எல்.ராகுல் 52 ரன்களும் எடுத்தனர். வங்கதேசம் தரப்பில் ஷஃபிபுல் இஸ்லாம் மற்றும் சௌம்யா சர்க்கார் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இந்திய அணி
இந்திய அணி
BCCI

175 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணிக்கு, 3வது ஓவரிலேயே அதிர்ச்சி கொடுத்தார் தீபக் சஹார். அவர் பந்துவீச்சில் லிட்டன் தாஸ் மற்றும் சௌம்யா சர்க்கார் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அப்போது வங்கதேச அணி, 2.5 ஓவர்களில் 12 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இதையடுத்து, 3வது விக்கெட்டுக்குக் கைகோத்த முகமது நயீம் - முகமது மிதுன் ஜோடி, இந்திய அணியின் பந்துவீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டது. தொடக்கவீரர் நயீம் அதிரடி காட்ட, அவருக்குப் பொறுமையாகக் கம்பெனி கொடுத்தார் மிதுன். இதனால், வங்கதேச அணி விரைவாக ரன்கள் சேர்த்தது. இந்த ஜோடி 98 ரன்கள் சேர்த்தநிலையில், மீண்டும் ஒரு மேஜிக் நிகழ்த்தினார் சஹார். அவர் வீசிய 13வது ஓவரின் கடைசி பந்தில் மிதுன் ஆட்டமிழந்து வெளியேறினார். இந்த விக்கெட் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது.

ஷகிப் ஹசனுக்கு ஏன் இந்தத் தண்டனை... வங்கதேச கிரிக்கெட்டும் கிரிக்கெட் அரசியலும்! #Shakib

அடுத்த ஓவரை வீசிய இளம் வீரர் சிவம் துபே, முஷிபிகுர் ரஹீமை வெளியேற்றினார். ரஹீம் தான் சந்தித்த முதல் பந்திலேயே வெளியேறினார். இதனால், வங்கதேச அணியின் ரன் ரேட் குறைந்தது. இந்த நிலையில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திக்கொண்டிருந்த நயீம் மற்றும் அஃபீப் ஹூசைன் ஆகியோரின் விக்கெட்டுகளை தனது கடைசி ஓவரின் 3 மற்றும் 4வது பந்துகளில் வீழ்த்தி இந்திய அணிக்கு நம்பிக்கை அளித்தார் இளம் வீரர் துபே. முகமது நயீம், 47 பந்துகளில் 81 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்துவந்த கேப்டன் மகமதுல்லா, சஹால் பந்துவீச்சில் வெளியேறினார். 18வது ஓவரின் கடைசி பந்தில் ஷஃபியுல் இஸ்லாம் விக்கெட்டை வீழ்த்திய சஹார், தனது கடைசி ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் முஸ்தாஃபிசுர் ரஹ்மான் மற்றும் அமினுல் இஸ்லாம் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை படைத்தார். இதன்மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய முதல் இந்திய பௌலர் என்ற பெருமையை சஹார் பெற்றார். வங்கதேச அணி 19.2 ஓவர்களில் 144 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் 30 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட தொடரையும் 2-1 என்ற கணக்கில் வென்றது.

ரோஹித் ஷர்மா, சிவம் துபே
ரோஹித் ஷர்மா, சிவம் துபே
BCCI

இந்தப் போட்டியில் 3.2 ஓவர்கள் பந்துவீசிய சஹார், 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார். சர்வதேச ஆடவர் டி20 போட்டிகளில் சிறந்த பந்துவீச்சு இதுவே. இதற்கு முன்பாக ஜிம்பாப்வே அணிக்கெதிராகக் கடந்த 2012ல் நடைபெற்ற போட்டியில் இலங்கையின் அஜந்தா மெண்டிஸ் 8 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்ததே சாதனையாக இருந்துவந்தது. அந்தச் சாதனையை சஹார் முறியடித்தார். ஆட்டநாயகனாகவும் தொடர் நாயகனாகவும் சஹாரே அறிவிக்கப்பட்டார்.

போட்டிக்குப் பின் பேசிய சஹார், ``இதுகுறித்து நான் எப்போதும் சிந்தித்ததில்லை. எனது கனவில் கூட இப்படி நடக்கும் என்று நான் எண்ணியதில்லை. கேப்டன் ரோஹித் ஷர்மா, முக்கியமான ஓவர்களை வீச எனக்கு வாய்ப்பளித்தார். அணி நிர்வாகமும் அதையே எதிர்பார்த்தது. ஒவ்வொரு முறை பந்துவீசும்போதும் அடுத்த பந்தைப் பற்றி மட்டுமே சிந்திப்பேன், எனது ஸ்பெல் முடியும்வரை'' என்றார்.

சஹார்
சஹார்
BCCI

கேப்டன் ரோஹித் ஷர்மா பேசுகையில், பந்துவீச்சாளர்களை வெகுவாகப் பாராட்டினார். மேலும், பேட்டிங்கில் கலக்கிய ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோரையும் அவர் பாராட்டத் தவறவில்லை.