முதல் டி20-ஐ இழந்திருந்த பாண்டியா அண்ட் கோவிற்கு இரண்டாவது போட்டி வாழ்வா, சாவா கணக்கிலானதாக மாறியது. ஆனால் போரிட வேண்டிய களமோ டி20-கானதாக இல்லாமல் டெஸ்ட்டின் ஐந்தாவது நாளுக்கான களம்போல காட்சிதந்து ஸ்பின்னர்களுக்குச் சிவப்புக் கம்பளம் விரித்துக் கொண்டிருந்தது. நியூசிலாந்து பேட்டிங்கைத் தேர்ந்தெடுக்க, இந்தியா உம்ரான் மாலிக்கிற்குப் பதிலாக சஹாலைச் சேர்த்து சுழற்பந்தால் வலைவிரிக்கத் தயாரானது.

முதல் ஓவரை மட்டும் சம்பிரதாயத்துக்காக தானே தொடங்கிவைத்து பின் ஸ்ட்ரெய்ட் டு தி பாயின்ட்டாக இரண்டாவது ஓவரிலேயே ஸ்பின்னர்களின் கையில் பந்தைக் கொடுத்தார் பாண்டியா. பவர்பிளேயில் அவரது இரு ஓவர்கள் தவிர்த்து முதல் 16 ஓவர்களுக்கு தப்பித்தவறிக் கூட வேகப்பந்து வீச்சாளர்களிடம் நகரவில்லை. சுழற்பந்திடமே சரணாகதி அடைந்தார். சஹால், சுந்தர், குல்தீப் கூட்டணியோடு ஹூடாவும் சோடை போகவில்லை. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை எடுத்து இட்ட பணியைச் சிறப்பாகவே செய்தனர். பவர்பிளேயிலேயே மூன்று விக்கெட்டுகளை இழந்து 33 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது நியூசிலாந்து. அதில் 17 ரன்கள்கூட பாண்டியாவின் இரு ஓவர்களில் தரப்பட்டதுதான். மற்றபடி சுழற்பந்து வீச்சாளர்களின் எக்கானமி நினைத்தவாறே கஞ்சத்தனமாகவே இருந்தது.
நன்றாகவே டர்ன் ஆன பந்துகள் அபாயகரமானதாக மாற, அதன் விளைவாக நியூசிலாந்து பேட்ஸ்மேன்களின் பேட் விக்கெட் என்னும் விபத்தைச் சந்தித்துக்கொண்டே இருந்தது. டவுன் த டிராக்கில் இறங்கிவந்து பந்து டர்ன் ஆவதற்குள் சந்தித்து ஆபத்தைத் தவிர்த்துக் கொள்ளாமல் ஹரிசாண்டல் பேட் ஷாட்தான் ஆடுவேன் என விடாப்பிடியாக ஆடி ரிவர்ஸ் ஸ்வீப்பிற்கு ஃபின் ஆலன், கான்வே, பிலிப்ஸ் மூவருமே தங்களது விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர். பவர்பிளே மட்டுமல்ல முதல் பத்து ஓவர்களிளுமே இதனால் 48 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது.
இப்படியாக நியூசிலாந்தின் பேட்டிங்கில் பொறுப்பற்ற தன்மையே இருந்தது. விக்கெட்டுகளை அடைகாத்து அடுத்த சில ஓவர்கள் தாக்குப்பிடித்து டெத்ஓவர்களில் தெறிக்கவிட்டு இன்னமும் கொஞ்சம் அதிக இலக்கை நிர்ணயித்திருந்தால் அவர்களது பௌலர்களுக்கான ராஜபாட்டையாக இரண்டாவது பாதி அமைந்திருக்கும். அதைச் செய்யத் தவறினர் பேட்ஸ்மேன்கள்.

இந்தியத்தரப்பின் சுழற்பந்துபடையும் அவர்களை முன்னேறவிடாமல் அந்தளவிற்கு மிரட்டியதுதான் என்றாலும் களமும் அதற்கான மேடையை அமைத்துக் கொடுத்தது. மொத்தம் 13 ஓவர்களை ஸ்பின்னர்களைக் கொண்டு வீசவைத்திருந்தார் பாண்டியா. அவர்கள் 55 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளையும் சாய்த்திருந்தனர். வேகப்பந்து வீச்சாளர்களில் முழு 4 ஓவர்கள் கோட்டாவை வீசியதும் பாண்டியா மட்டும்தான். அர்ஷ்தீப்புக்கான வாய்ப்பிற்காக அவர் 18-வது ஓவர்வரை காத்திருக்க வேண்டியிருந்தது. கேமியோவில் வந்து ஸ்கோர் செய்துவிடும் கதாபாத்திரம் போல இறுதியில் இரண்டு ஓவர்கள் மட்டுமே தரப்பட்டாலும் அர்ஷ்தீப் இரண்டு விக்கெட்டுகளை ஒரே ஓவரில் வீழ்த்தி அசத்தினார்.
மூன்று இலக்கத்தைக்கூட எட்ட முடியாமல் 99 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது ரன் எ பால் கணக்கில்கூட கண்களை வைத்திருக்காத அவர்களது மெத்தனத்தையே காட்டியது. அதுவே அவர்களது வீழ்ச்சிக்கான அடித்தளமிட்டது. சாண்ட்னர் மட்டுமே 19 ரன்களைச் சேர்த்திருந்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் யாருமே 14 ரன்களைக்கூட தாண்டவில்லை. ஆக, 100 ரன்கள் எடுத்தால் தொடரை உயிர்ப்போடு வைத்துக் கொள்ளலாம் என்ற நிலையில் இந்தியா இருந்தது.
100 ரன்கள் என்பது சூர்யகுமார் பேட்டின் கோரப் பசிக்கே போதாதே என நினைத்தால் இரண்டாவது பாதியில் நியூசிலாந்து பௌலர்களும், சாண்ட்னரின் ஃபீல்டிங் வியூகங்களும் போட்டி நினைத்த பாதையில் செல்ல அனுமதிக்கவில்லை. ஓப்பனிங்கில் கில் - இஷான் கூட்டணி பெரிதாகக் களைகட்டவில்லை. 23 பந்துகள் மட்டுமே தாக்குப்பிடித்து 17 ரன்களை மட்டுமே சேர்த்தனர். கில் ஒருநாள் போட்டிகளுக்குள் பொருந்திப் போகும் அளவிற்கு டி20-ல் நம்பிக்கை அளிப்பதில்லை. அவர் தவறவிடும் ஒவ்வொரு வாய்ப்பும், "நானும் இருக்கிறேன்" என ப்ரித்வி ஷாவினைத் தேர்வாளர்களுக்கு நினைவுபடுத்திக் கொண்டே இருக்கின்றன.

இந்தியாவின் தொடக்கமும் தடுமாற்றமே, 29 ரன்கள் மட்டுமே பவர்பிளேயில் வந்திருந்தன. 10 ஓவர்கள் இறுதியில்கூட 49 ரன்களை மட்டுமே சேர்ந்திருந்தது. அந்த நிலையில் நியூசிலாந்தின் பேட்டிங்கின் சாயல்தான் இந்தியாவின் பக்கமும் காணப்பட்டது. ஒரே வேறுபாடு, இந்தியா நியூசிலாந்து அளவிற்கு விக்கெட்டுகளை விட்டுவிடவில்லை என்பது மட்டும்தான்.
நியூசிலாந்தும் ஸ்பின் டு வின் பாலிசியில் தெளிவாக இருந்தது. மூன்று ஓவர்கள் மட்டுமே வேகப்பந்து வீச்சாளர்களுக்குத் தரப்பட்டன. மற்ற ஓவர்கள் எல்லாமே சுழற்பந்து வீச்சாளர்கள்தான். அவர்களது சுழல் பதிலடிக்கு பேட்ஸ்மேன்கள் திணற இந்தியாவின் ரன்குவிப்பில் பெரிதாகவே சுணக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்த ஓவர்களில் இஷான் மற்றும் ராகுல் திரிபாதி ஆகிய இரு விக்கெட்டுகளை இந்தியா இழந்துவிட்டது. சூர்யா - சுந்தர் கூட்டணி நான்கு ஓவர்கள் நின்று 20 ரன்களைச் சேர்த்தது. ரன்கள் ஒன்றிரண்டாக வந்து கொண்டிருந்ததே ஒழியப் பெரிய ஷாட்கள் பெரியளவில் அடிக்கப்படவே இல்லை. சூர்யாவால்கூட வழக்கம்போல் அதிரடி காட்ட முடியவில்லை. பிட்சின் தன்மை அறிந்து பௌலர்களுக்கான மரியாதையைத் தந்து அடக்கிதான் வாசித்தார். சுந்தரின் ரன்அவுட் சற்றே நியூசிலாந்தின் நம்பிக்கையை வலுப்படுத்தியது. அந்த நிலையில் 33 பந்துகளில் 30 ரன்கள்தான் வேண்டியிருந்தது என்றாலும் நியூசிலாந்திடம் இருந்த பௌலிங் ஆப்சன்கள் பயமுறுத்தின. மொத்தம் 8 பௌலர்களைப் போட்டி முழுவதும் பயன்படுத்தியிருந்தனர்.

பாண்டியா - சூர்யா கூட்டணிக்குப் பெரிதாக எதையும் செய்து சொதப்பிவிடாமல் ஆட்டத்தின் போக்கிலேயே நகர்ந்து, வாய்ப்பு கிடைக்கும் போது ரன்களை சேர்த்துக் கொள்வது மட்டுமே தேவையானதாக இருந்தது. அச்சுறுத்தும் சுழலையும் சந்தித்து அதனை நன்றாகவே செய்தனர். சூர்யாவாலேயே முதல் 30 பந்துகளில் ஒரு பவுண்டரியைக்கூட அடிக்க முடியவில்லை என்பதே பிட்சின் கடினத்தன்மைக்கான சான்று.
கடைசி ஓவரில் ஆறு ரன்கள் தேவையென்ற நிலையில், டிக்னர் அந்த ஓவரை வீசினார். முதல் நான்கு பந்துகளில் ஒன்று டாட் பாலாகி த்ரில்லை இரட்டிப்பாக்கியது. இறுதியாகத் தான் சந்தித்த ஷார்ட் ஆஃப் லெந்த்தில் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே தரை கண்ட பந்தைத் தனது முதல் பவுண்டரியாக ஆக்கி அதனையே வின்னிங் ஷாட்டாகவும் சூர்யா மாற்றினார். வெறும் ஒரு பந்து மட்டுமே எஞ்சியிருந்த நிலையில் வந்த இவ்வெற்றி ரசிகர்களைக் கடைசிவரை பரபரப்பாகவே வைத்துக் கொண்டது. ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா தொடரை 1-1 எனச் சமன் செய்தது. இரண்டு டி20 போட்டிகளிலுமே பிட்ச் குறித்து சற்றே சலசலப்புகள் எழுந்துள்ளன.

டெஸ்ட் போட்டிகளுக்கு ப்ளாட் டிராக்குகள் எப்படி இலக்கணங்களுக்குள் அடைபடாதோ, அது எப்படிப் போட்டியின் சுவாரஸ்யத்தையே உறிஞ்சிவிடுமோ, அதேபோல் டி20 போட்டிகளுக்கும் இப்படிப்பட்ட களம் கைகொடுக்காது என்பதே நிதர்சனம்.