Published:Updated:

WTC21 : சென்சுரி அடித்த கபில்தேவ்.. சிங்கிள் தட்டிய ரவி சாஸ்திரி... சென்னை டெஸ்ட் 'டை' ஆன வரலாறு!

IND v AUS
IND v AUS ( @profdeano / Twitter )

முதல் ஓவரிலேயே மிட் ஆஃப், ஸ்கொயர், கவர் என சுற்றிமுற்றி அத்தனை திசைகளிலும் பவுண்டரி அடித்தார் கபில்தேவ். உலகக்கோப்பையில் ஆடியதை போன்ற இன்னொரு ஹீரோயிக் இன்னிங்ஸை ஆடத் தயாராகியிருந்தார்.

டி20 ஃபார்மேட்டிலேயே டை ஆகி சூப்பர் ஓவர் வரை செல்லும் போட்டிகள் ரொம்பவே குறைவுதான். ஒரு ஐபிஎல் தொடரிலேயே இரண்டு மூன்று போட்டிகளே சூப்பர் ஓவர் வரை செல்கின்றன. ஒருநாள் போட்டிகளில் வருடத்திற்கே ஒன்றிரண்டு போட்டிகள்தான் டை ஆகின்றன. அப்படியெனில் டெஸ்ட் போட்டிகளில் டை?

டெஸ்ட் போட்டிகளில் டை என்பது சாத்தியமற்ற ஒன்றாகத்தான் தோன்றும். ஆனால், டெஸ்ட் போட்டிகளும் டையில் முடிவதற்கான வாய்ப்பிருக்கிறது. நூற்றாண்டுக்கே ஒன்றிரண்டு முறை மட்டுமே நடைபெறும் அதிசயம் அது. கிரிக்கெட் வரலாற்றிலேயே இதுவரை இரண்டு டெஸ்ட் போட்டிகள் மட்டுமே டையில் முடிந்துள்ளன. வரலாற்று சிறப்புமிக்க இந்த இரண்டு போட்டிகளில் ஒன்றில் இந்தியா ஆடியிருக்கிறது. டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிக்கட்டத்தை இந்திய அணி எட்டியிருக்கும் நிலையில் அந்த வரலாற்று டெஸ்ட் குறித்த ஒரு குட்டி மீள்பார்வை...

கிரிக்கெட் உலகில் சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கென ஒரு பழம்பெருமையும் தனிமரியாதையும் இருக்கிறது. இந்திய அணியின் பல சரித்திர சம்பவங்கள் இங்கேதான் அரங்கேறியிருக்கிறது. 20 வருட காத்திருப்புக்கு பிறகு இந்திய அணியின் முதல் டெஸ்ட் வெற்றி சேப்பாக்கத்தில்தான் சாத்தியப்பட்டது.

சேப்பாக்கத்தில் நிகழ்ந்த இந்தியாவின் முதல் டெஸ்ட் வெற்றி... இங்கிலாந்தை வீழ்த்தியது எப்படி?
சேப்பாக்கம் ஸ்டேடியம்
சேப்பாக்கம் ஸ்டேடியம்

காலத்திற்கும் மறக்க முடியாத 1999 பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் இங்கேதான் நடந்திருக்கிறது. ஷேவாக் சென்னை மண்ணில்தான் முச்சதத்தை முத்தமிட்டார். தோனியின் கரியர் பெஸ்ட் இரட்டை சதம் இங்கேதான் அடிக்கப்பட்டது. இந்திய அணியின் வரலாற்றை சேப்பாக்கம் மைதானத்தை விடுத்து எழுதிவிடவே முடியாது. குறிப்பாக, 1986-ல் சேப்பாக்கத்தில் வைத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி செய்த நூற்றாண்டு சாதனையை மறந்தும் கூட தவறவிட்டுவிட முடியாது.

1960-ல் பிரிஸ்பேனில் வெஸ்ட் இண்டீஸுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே நடைபெற்ற போட்டி டையில் முடிந்திருந்தது. கிரிக்கெட் வரலாற்றில் 'டை' ஆன முதல் டெஸ்ட் போட்டி அதுவே. இதன்பிறகு, 1986-ல் சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதிய டெஸ்ட் போட்டி டை ஆனது. கிரிக்கெட் வரலாற்றில் இன்று வரை 'டை' ஆன போட்டிகள் இவை இரண்டும் மட்டும்தான்.

1986-ல் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுவதற்காக ஆஸ்திரேலிய அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. முதல் போட்டியே சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆலன் பார்டர் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் டேவிட் பூன், டீன் ஜோன்ஸ், கிரெக் மேத்யூ, ஸ்டீவ் வாக், ரே பிரைட் போன்ற வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். கபில்தேவ் தலைமையிலான இந்திய அணியில் கவாஸ்கர், ஸ்ரீகாந்த், மொஹிந்தர் அமர்நாத், அசாருதின், ரவிசாஸ்திரி போன்ற ஜாம்பவான்கள் பலரும் இடம்பிடித்திருந்தனர்.

ஆலன் பார்டர் டாஸ் வென்று பேட்டிங் செய்யப்போவதாக அறிவித்தார். ஆலன் பார்டர் உட்பட ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய அணியுமே இந்த தொடரில் இந்திய அணியை ஒரு கை பார்த்துவிட வேண்டும் என்கிற எண்ணத்தோடே வந்திருந்தது. காரணம், ஆஸ்திரேலிய அணியின் அப்போதைய வீழ்ச்சி. 1984-ல் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனான கிரெக் சேப்பல், டென்னிஸ் லில்லி, ராட் மார்ஷ் போன்ற முண்ணனி வீரர்கள் அணியிலிருந்து ஓய்வு பெற்றனர். ஜாம்பவான்களின் ஓய்வுக்கு பிறகு இப்போதைய இலங்கை அணி திணறுவதை போன்றே ஆஸ்திரேலிய அணியும் அப்போது திணறியது.

IND v AUS
IND v AUS
Australian Cricketers' Association via Facebook

1984 கிரெக் சேப்பலின் ஓய்வுக்குப் பிறகு மூன்று ஆண்டுகளாக எந்த சீரிஸையும் ஆஸ்திரேலியா அணி வென்றிருக்கவில்லை. ஆஸ்திரேலிய கிரிக்கெட்டே மங்க தொடங்கிவிடுமோ என்கிற பயம் அனைவருக்குமே உண்டாகியிருந்தது. இந்நிலையில்தான் இந்தியாவுக்கு ஆலன் பார்டர் தலைமையில் ஆஸ்திரேலிய அணி வந்திருந்தது. 1987 உலகக்கோப்பை இந்தியாவில் நடைபெற இருந்ததும் ஆலன் பார்டருக்கு மேலும் ஒரு நெருக்கடியை கொடுத்தது. இந்த தொடரை அந்த உலகக்கோப்பைக்கான ஒரு முன்னோட்டமாக வென்று காட்ட வேண்டும் என்கிற உந்துதலும் ஆலன் பார்டருக்கு இருந்தது.

இத்தனை எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்ய இறங்கியது. டேவிட் பூனும் மார்ஷும் ஓப்பனர்களாக களமிறங்கியிருந்தனர். மார்ஷ் சீக்கிரமே அவுட் ஆனாலும் நம்பர் 3-ல் வந்த டீன் ஜோன்ஸ் டேவிட் பூனுடன் நின்று நிதானமாக கூட்டணி போட்டார். டேவிட் பூன் நிதானமாக ஆடினாலும் ஷார்ட் பால்களை தொடர்ந்து ஹுக் ஷாட் ஃபைன் லெகிலும் ஸ்கொயரிலும் பவுண்டரியாக்கி அசத்திக் கொண்டிருந்தார். இன்னொருபுறம் டீன் ஜோன்ஸ் க்ரீஸை விட்டு இறங்கி வந்து இந்திய ஸ்பின்னர்களை வெளுத்தார். சதமடித்த டேவிட் பூனை கபில்தேவ் ஒரு வழியாக கேட்ச் ஆக்கி ஆட்டமிழக்க செய்திருப்பார்.

122 ரன்களில் பூன் வெளியேறியவுடன் ரே பிரைட் கொஞ்ச நேரம் ஆடிவிட்டு அவுட் ஆனார். நம்பர் 5-ல் கேப்டன் ஆலன் பார்டர் களமிறங்கினார். இங்கேதான் ஆட்டமே விறுவிறுப்பாக தொடங்கியது. சதத்தை தாண்டியிருந்த டீன் ஜோன்ஸ் தொடர்ந்து சிறப்பாக ஆட ஆலன் பார்டரும் இந்தியாவின் பௌலிங்கை சிதறடித்தார். சென்னை வெயிலை சமாளிக்க முடியாமல் டீன் ஜோன்ஸ் கடுமையாக திணறியிருந்தார். ஒரு கட்டத்தில் 170 ரன்களை அடித்திருந்த போது வாந்தியெடுத்து டிஹைட்ரேஷனின் உச்சத்துக்கு சென்றார். ''இனிமேலும் என்னால் பேட்டிங் செய்ய இயலாது. ட்ரெஸ்ஸிங் ரூமுக்கு அழைத்து செல்லுங்கள்'' என டீன் ஜோன்ஸ் கூற கேப்டன் ஆலன் பார்டர் இதற்கு அனுமதி கொடுக்கவில்லை. ''நன்றாக ஆடியிருக்கிறாய். இன்னும் பெரிய இன்னிங்ஸ் ஆடியாக வேண்டும். உனக்கு தொடர்ந்து நம்பர் 3-ல் ஆடுவதற்கு வாய்ப்பு காத்திருக்கிறது' என ஒரு மாதிரியாக வற்புறுத்தல் + உத்வேகம் இரண்டும் கலந்து அறிவுரை வழங்கி டீன் ஜோன்ஸை தொடர்ந்து பேட்டிங் ஆட வைத்துவிட்டார்.

IND v AUS | டீன் ஜோன்ஸ்
IND v AUS | டீன் ஜோன்ஸ்
cricket.com.au

ஆலன் பார்டர் எதிர்பார்த்ததை போலவே டீன் ஜோன்ஸ் இரட்டை சதத்தை கடந்தார். 210 ரன்களில் டீன் ஜோன்ஸ் அவுட் ஆனவுடன் நேராக ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ட்ரிப்ஸ் ஏற்றப்பட்டு டிஹைட்ரேஷனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. அன்று ஒரே நாளில் மட்டும் சென்னை வெயிலால் 7 கிலோ குறைந்திருக்கிறார் டீன் ஜோன்ஸ். ''ஜோன்ஸுக்கு எதாவது ஆகியிருந்தால் அதற்கான முழுப்பொறுப்பு நானாக மட்டுமே இருந்திருப்பேன். நல்லவேளை ஒன்றும் ஆகவில்லை'' என அன்றைய நாள் குறித்து ஆலன் பார்டர் கொஞ்சம் நகைச்சுவையாக பின்னாளில் பேசியிருந்தார். டீன் ஜோன்ஸ் அவுட் ஆனவுடன் ஆலன் பார்டர் சதத்தைக் கடந்து அவரும் அவுட் ஆனார். கிட்டத்தட்ட மூன்றாம் நாளின் முதல் செஷன் வரை ஆடிய ஆஸ்திரேலிய அணி 574 ரன்களை சேர்த்து டிக்ளேர் செய்தது.

''முதல் இன்னிங்ஸில் ஒரு அணி 500க்கு மேல் எடுத்துவிட்டாலே எதிரணி டெஸ்ட்டை எப்படியாவது டிரா செய்ய வேண்டும் என்றே நினைக்கும். ஆனால், நான் இந்த போட்டியை ரிசல்ட்டுக்காக ஆட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்'' என கேப்டன் கபில்தேவ் இந்த டெஸ்ட் குறித்த நினைவுகளை பகிரும்போது குறிப்பிட்டிருந்தார்.

கவாஸ்கரும் ஸ்ரீகாந்த்தும் இந்திய அணி சார்பில் ஓப்பனர்களாக இறங்கியிருப்பர். கவாஸ்கர் 8 ரன்னிலும் அடுத்து வந்த மொஹிந்தர் அமர்நாத் 1 ரன்னிலும் அவுட் ஆகியிருப்பர். ஆனால், இதெல்லாம் வேறெதோ தேசத்தில் நடப்பதை போன்று நினைத்துக்கொண்டு கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் மட்டும் தனது பாணியில் ஆஸியின் பௌலிங்கை வெளுத்தெடுத்தார். 9 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சருடன் 62 பந்துகளில் 53 ரன்களை எடுத்து நல்ல தொடக்கம் கொடுத்து அவுட் ஆனார். இதன்பிறகு, அசாருதின் ஒரு அரைசதத்தையும் ரவிசாஸ்திரி ஒரு அரைசதத்தையும் அடித்தனர். 500+ ஸ்கோருக்கு தேவையான பெரிய இன்னிங்ஸ் யாரிடமிருந்தும் வரவில்லை.

மூன்றாம் நாள் முடிவில் இந்திய அணி 270-7. ஃபாலோ ஆனை தவிர்க்க இந்தியாவுக்கு இன்னும் 104 ரன்கள் தேவை. கிட்டத்தட்ட ஒரு அசாத்தியமான சூழல். போட்டி முழுவதும் ஆஸ்திரேலியாவின் கையில்! ஆனால், ஒரே நம்பிக்கையாக கேப்டன் கபில்தேவ் மட்டும் நாட் அவுட்டாக இருந்தார். நான்காம் நாள் ஆட்டம் தொடங்கியது.

IND v AUS | கபில்தேவ்
IND v AUS | கபில்தேவ்

முதல் ஓவரிலேயே மிட் ஆஃப், ஸ்கொயர், கவர் என சுற்றிமுற்றி அத்தனை திசைகளிலும் பவுண்டரி அடித்தார் கபில்தேவ். உலகக்கோப்பையில் ஆடியதை போன்ற இன்னொரு ஹீரோயிக் இன்னிங்ஸை ஆடத் தயாரானார் கபில்தேவ். ஆஸ்திரேலிய பௌலர்கள் மீது ஈவு இரக்கமின்றி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தினார். மொத்தம் 21 பவுண்டரிகள். 138 பந்துகளில் 119 ரன்கள். இந்தியாவை ஃபாலோ ஆன் அபாயத்திலிருந்து தனி ஒருவனாக மீட்டார் கபில்தேவ். முதல் இன்னிங்ஸில் இந்தியா 397 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா 177 ரன்கள் முன்னிலையோடு இரண்டாம் இன்னிங்ஸைத் தொடங்கியது.

இந்த போட்டியை வென்றே ஆக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த ஆலன் பார்டர், வேகமாக ரன்கள் சேர்க்க கட்டளையிட்டார். ஒவ்வொரு பேட்ஸ்மேனும் குறிப்பிட்ட பங்களிப்பை அளிக்க 170-5 என்ற நிலையில் ஆலன் பார்டர் டிக்ளேர் செய்தார். இந்தியாவுக்கு 348 ரன்கள் டார்கெட். 87 ஓவர்கள் மட்டுமே மிச்சமிருக்கிறது.

எளிதாக வெல்ல வேண்டிய போட்டியை சொந்த மண்ணில் டிராவை நோக்கி ஜோ ரூட் நகர்த்தியதை இரண்டு நாட்களுக்கு முன்புதான் பார்த்திருந்தோம். ஆனால், கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கு முன்பு கடைசி நாளில் 348 ரன் டார்கெட்டை சேஸ் செய்தே ஆக வேண்டும் என கபில்தேவ் முடிவெடுத்திருக்கிறார். இதுவே ஒரு பெரும் ஆச்சர்யம். இதற்கு பிறகு நடந்ததுதான் வரலாறு.

கவாஸ்கரும் ஸ்ரீகாந்த்தும் ஓப்பனர்களாக இறங்க, ஸ்ரீகாந்த் வழக்கம்போல அதிரடியாக 39 ரன்களை அடித்து சேஸுக்கு பாசிட்டிவ் ரூட் போட்டு கொடுத்தார். கவாஸ்கர் நின்று ஆட அவரை சுற்றி அமர்நாத், அசாருதின் போன்றோர் கணிசமான பங்களிப்பை கொடுத்தனர். டீ பிரேக்கின் போது இந்திய அணி 193-2. கடைசி ஒரு செஷனில் 155 ரன்கள் அடிக்க வேண்டும். விக்கெட்டுகள் இருப்பதால் அடித்துவிடலாம் என நினைக்கையில் ரே பிரைட்டும், கிரெக் மேத்யூஸும் சிறப்பாக வீசி வரிசையாக விக்கெட்டுகளை வீழ்த்தினர். கவாஸ்கர் 90 ரன்களில் வெளியேற, கபில்தேவ் 1 ரன்னில் வெளியேறினார். கபில்தேவ் அவுட் ஆன உடனேயே இந்திய அணியின் ஒட்டுமொத்த நம்பிக்கையும் தகர்ந்தது. அணியின் துணை கேப்டனான ரவி சாஸ்திரி உள்ளே வந்தார். க்ரீஸுக்குள் வந்த முதல் பந்தே இறங்கி வந்து கவர்ஸில் பவுண்டரி. மேட்ச் இன்னும் கையை விட்டு செல்லவில்லை முடிந்த வரை போராடுவோம் என்கிற மனநிலையோடு அடித்து ஆடுகிறார்.

IND v AUS | ஆலன் பார்டர்
IND v AUS | ஆலன் பார்டர்
cricket.com.au

ரவிசாஸ்திரியின் ஸ்ட்ரைக் ரேட் 100 க்கும் மேல் இருந்தது. அவரின் அதிரடியால் ஒரு வழியாக கடைசி 4 ஓவர்களில் 17 ரன்கள் என்ற நிலைக்கு இந்தியாவின் பக்கம் மொத்தமாக போட்டி திரும்பியது. முடிந்தளவுக்கு நேரத்தை கடத்துவது, இந்திய பேட்ஸ்மேன்களை ஸ்லெட்ஜ் செய்து வெறுப்பேற்றுவது, அம்பயருடன் வாக்குவாதம் செய்வது என ஆஸ்திரேலிய வீரர்கள் தங்களுடைய க்ளீஷேவான ஸ்டைலை கையிலெடுத்தனர். ஆஸ்திரேலியா தோல்வியை ஒப்புக்கொள்ள தொடங்கிவிட்டது என்பதை உணர்த்தும் வகையில் இந்த நிகழ்வுகள் அமைய, ஆஸி வீரர்களே எதிர்பாராத வகையில் ரே பிரைட் அடுத்தடுத்த ஓவர்களில் 3 விக்கெட்டை வீழ்த்தி இந்தியாவுக்கு கடும் நெருக்கடி கொடுத்தார். இப்போது கையில் ஒரு விக்கெட்தான் இருக்கிறது. கடைசி ஓவரில் இந்திய அணிக்கு நான்கு ரன்கள் தேவை. இப்போதைய டி20 போட்டிகளை தாண்டிய ஒரு உச்சபட்ச விறுவிறுப்பும் பரபரப்பும் ஆட்டத்தில் தொற்றிக் கொண்டது. முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டை வீழ்த்திவிட்டு இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டை வீழ்த்தியிருந்த கிரெக் மேத்யூஸ் கையில் கடைசி ஓவர் கொடுக்கப்படுகிறது.

WTC இறுதிச்சுற்று - 2 : இலங்கையில் கேப்டன் கோலியின் முதல் வெற்றி… எப்படியிருந்தது அந்த முதல் டெஸ்ட்?

முதல் பந்தில் ரவிசாஸ்திரி டிஃபன்ஸ் ஆட, இரண்டாவது பந்தை ஸ்கொயரில் தட்டிவிட்டு இரண்டு ரன்னும் மூன்றாவது பந்தில் ஒரு ரன்னும் தட்டி, தோல்வியை தவிர்த்துவிட்ட சந்தோஷத்தில் நான் ஸ்ட்ரைக்கர் எண்ட்டில் தஞ்சமடைந்தார். இப்போது நம்பர் 11 பேட்ஸ்மேனான மணீந்தர் சிங் ஸ்ட்ரைக்கர். ஆலன் பார்டர் ஒட்டுமொத்த ஃபீல்டரையும் உள்ளே கொண்டு வந்து மணீந்தருக்கு கட்டம் கட்டுகிறார். நான்காவது பந்தை மேத்யூஸ் வீச எப்படியோ தொட்டு மட்டும் விட்டார் மணீந்தர். இரண்டு பந்துகளில் ஒரு ரன் தேவை என்ற நிலை. மேத்யூஸ் ஐந்தாவது பந்தை வீச பேடில் வாங்கினார் மணீந்தர் சிங். ரவி சாஸ்திரி ரன்னுக்காக ஓட, ஆஸ்திரேலிய வீரர்கள் ஆராவாரமாக துள்ளிக் குதித்தனர். காரணம், அம்பயர் விரலை உயர்த்திவிட்டார். மணீந்தர் சிங் lbw முறையில் அவுட். ஒரு பந்து மட்டுமே மீதமிருந்த நிலையில் இந்தியா ஆல் அவுட். போட்டியும் 'டை' ஆனது.

இந்த போட்டி 'டை' ஆனதால் மட்டுமே இன்று வரை நினைவில் இருக்கிறது என நாம் நினைத்துவிடக் கூடாது. இந்தப் போட்டியில் இந்தியா தோற்றிருந்தாலும் கூட காலத்திற்கும் நினைவு வைக்கப்பட்டிருக்கும். காரணம், இந்தியா காட்டிய முனைப்புமிக்க போர்க்குணம். 35 வருடங்களுக்கு முன்பு இப்படி ஒரு மூர்க்கத்தனமான முயற்சியில் இந்திய அணி இறங்கியதே பெரிய பெருமைதான்.
அடுத்த கட்டுரைக்கு