Published:Updated:

`உ.பி அவமானப்படுத்தியது; மேற்குவங்கம் காத்தது!' - நீதித்துறைக்கு நன்றி கூறிய ஷமியின் மனைவி

முகமது ஷமி மற்றும் அவரின் சகோதரர் ஹசித் அகமது ஆகியோருக்கு எதிராக அலிப்பூர் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.

Hasin Jahan, Cricketer Shami's wife
Hasin Jahan, Cricketer Shami's wife ( ANI )

இந்தியக் கிரிக்கெட் வீரர் முகமது ஷமியின் மீது 2018-ம் ஆண்டு அவரின் மனைவி ஹசின் ஜஹான் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார். `ஷமிக்கு பல்வேறு பெண்களுடன் தொடர்பு இருக்கிறது. திருமணத்துக்குப் பின்புதான் இந்த விஷயங்கள் எனக்குத் தெரியவந்தது. இதைக் கேட்டால் அடித்து துன்புறுத்துகிறார். மேலும், சூதாட்டத்தில் ஈடுபட்டார்' எனவும் குற்றம் சுமத்தினார் ஜஹான். சில பெண்களுக்கு அவர் ஃபேஸ்புக்கில் அனுப்பிய குறுஞ்செய்திகளை ஆதாரமாகக் காட்டினார். பாகிஸ்தானை சேர்ந்த பெண் ஒருவருடன் அவருக்குத் தொடர்பு இருப்பதாகவும் அவர் மூலமாகத்தான் ஷமி சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார். ஹசினின் குற்றச்சாட்டுகளுக்கு முதலில் மௌனம் காத்த ஷமி பின்னர், `ஹசின் கூறுவதில் எந்த உண்மையும் இல்லை' என்றார்.

Mohammed Shami
Mohammed Shami

இந்தப் பிரச்னை காரணமாக பிசிசிஐ 2018-ம் ஆண்டு ஷமியின் ஒப்பந்தத்தை நீட்டிப்பதில் காலதாமதம் செய்தது. பிசிசிஐ நடத்திய விசாரணைக்குப் பின்னரே அவரது ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டது. `ஷமி ஒரு சர்வதேச கிரிக்கெட் வீரராக இருப்பதால் அவருக்கு ஆதரவாக அனைவரும் நடந்துகொள்கின்றனர். நான் பொருளாதார பின்னணி இல்லாத சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவள். எனக்கு யாரும் உதவ முன்வரவில்லை' எனக் கொதித்துப்போய் ஹசின் ஜஹான் குற்றம்சாட்டினார்.

இந்நிலையில், கொல்கத்தா காவல்நிலையத்தில் ஷமி மற்றும் அவரின் சகோதரர் மீது ஹசின் ஜஹான் புகார் அளித்தார். இதன் தொடர்ச்சியாக ஷமி மீது வரதட்சணை கொடுமை மற்றும் பாலியல் தொந்தரவு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாகக் காவல்நிலையத்தில் ஆஜராகி விளக்கம் கொடுத்தார் ஷமி. இந்த வழக்கில் முகமது ஷமி மற்றும் அவரின் சகோதரர் ஹசித் அகமது ஆகியோருக்கு எதிராக அலிப்பூர் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. இருவரும் 15 நாள்களுக்குள் சரணடையுமாறும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மீண்டும் சிக்கலில் ஷமி; விஸ்வரூபம் எடுக்கும் மனைவியின் புகார் - கைது வாரண்ட் பிறப்பித்த நீதிமன்றம்!

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாடிவரும் ஷமி தற்போது ஜமைக்காவில் உள்ளார். இதுகுறித்து விளக்கமளித்துள்ள பிசிசிஐ அதிகாரிகள், ``ஷமி மீது வாரன்ட் பிறக்கப்பட்டிருப்பதை அறிவோம். சார்ஜ் சீட்டை பார்த்த பிறகுதான் இந்த விவகாரத்தில் முடிவு எடுக்கப்படும். கடந்த முறை அவர் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது. அதனால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுதொடர்பான விசாரணைக்கு பின்னர் அவர் குற்றமற்றவர் எனத் தெரியவந்தது. இந்த வழக்குத் தொடர்பாக அவரை அணியில் இருந்து உடனடியாக வெளியேற்ற வேண்டிய அவசியம் இல்லை” எனத் தெரிவித்துள்ளனர்.

Mohammed Shami
Mohammed Shami

ஷமிக்கு எதிராக வாரன்ட் பிறப்பிக்கப்பட்டிருப்பது குறித்து பேசிய ஹசின் ஜஹான் ``நான் நீதித்துறைக்கு கடமைப்பட்டவளாக இருக்கிறேன். ஒரு வருடத்துக்கும் மேலாக நீதிக்காகப் போராடி வந்தேன். ஷமி சர்வதேச கிரிக்கெட் வீரர். அவர் எவ்வளவு சக்திவாய்ந்த நபர் என்பது உங்களுக்குத் தெரியும். லால் பஜார் காவல்துறையினருக்கு நன்றி. இவ்வளவு அழுத்தங்களுக்கும் இடையில் உண்மையின் பக்கம் நின்றனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் நன்றி. நான் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவளாக இல்லாமல், மம்தா பானர்ஜி இங்கு முதலமைச்சராக இல்லாமல் இருந்திருந்தால் நான் இங்கு பாதுகாப்பாக இருக்க முடியாது. உத்தரப்பிரதேச காவலர்கள் என்னையும் என் மகளையும் அவமானப்படுத்தினர். கடவுளின் கருணையால் அவர்களால் வெற்றிபெற முடியவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.