Published:Updated:

`இந்த வதந்தியால் யாருக்கு லாபம்னு தெரியலை!'- ரோஹித் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த கோலி

ராம் பிரசாத்

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன்பாக மும்பையில் இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவிசாஸ்திரி இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

விராட் கோலி
விராட் கோலி ( ANI )

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, துணைக் கேப்டன் ரோஹித் சர்மா இருவருக்கும் இடையே சுமுகமாக உறவு இல்லை. இருவருக்கும் இடையே பணிப்போர் நடந்துவருகிறது. செய்தியாளர்களின் கேள்விகளைத் தவிர்ப்பதற்காக விராட் கோலி வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன்பாக செய்தியாளர் சந்திப்பை தவிர்க்கவுள்ளார் என்ற தகவல் வெளியானது. ஆனால், பிசிசிஐ இந்தத் தகவலை திட்டவட்டமாக மறுத்தது. வழக்கம் போல் செய்தியாளர்கள் சந்திப்பு நடக்கும் என தெரிவிக்கப்பட்டது.

விராட் கோலி, ரவி சாஸ்திரி
விராட் கோலி, ரவி சாஸ்திரி
ANI

இன்று, மும்பையில் கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவிசாஸ்திரி இருவரும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய கோலி, ``டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் வீரர்களுக்கு சவாலாக இருக்கும். கற்றுக்கொள்வதற்கு ஒரு வாய்ப்பாக இது அமையும். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி-20 தொடர் இளம்வீரர்கள் தங்களது திறமையை வெளிக்காட்ட ஒரு வாய்ப்பாக அமையும். சில வீரர்கள் உள்ளூர் தொடர்களிலும், ஐபிஎல் போட்டிகளிலும் சிறப்பாக பங்காற்றியுள்ளனர். இந்த வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் தங்களது திறமையை காண்பித்துள்ளனர். இந்த வீரர்கள் அணியில் இணைந்திருப்பது சிறந்ததாகக் கருதுகிறேன்.

உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு இந்தியா செல்லாதது அனைவருக்கும் வருத்தமாகத்தான் இருக்கும். அதில் இருந்து கடந்து செல்ல வேண்டும். இது ஒரு முக்கியமான தருணம் அனைவரும் மீண்டும் ஒன்றிணைய வேண்டும். அடுத்த வருடம் டி-20 உலகக்கோப்பை தொடர் தொடங்குகிறது. அதனால் டி-20 போட்டிகளில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளோம். டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறோம். மூன்று வகையான கிரிக்கெட்டிலும் மாறி மாறி ஆடி வருகிறோம். மிடில்- ஆர்டர் குறித்த உங்கள் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என எனக்குத் தெரியவில்லை. அந்த இடத்துக்கு ஒரு நிலையான வீரரைத் தேடிக்கொண்டிருக்கிறோம்.

இந்திய அணி
இந்திய அணி

அணியில் பிளவு இருப்பதாக வரும் வதந்திகள் அபத்தமானது. இது விளையாட்டிலிருந்து உங்கள் கவனத்தை திசை திருப்பும் செயல். வெளியில் இருந்து சிலர் இதை உருவாக்குகிறார்கள். டிரெஸ்ஸிங் ரூம் குறித்து வதந்திகளையும், பொய்களையும் யாரோ உருவாக்குகிறார்கள். எங்களுக்குள் இதுபோன்ற பிரச்னைகள் இருந்தால் டிரெஸ்ஸிங் ரூமில் நல்ல விதமான சூழல் நிலவாது.

ஒரு அணியாக நாங்கள் அனைவரும் எங்களைப் புரிந்து வைத்துள்ளோம். எங்களுக்குள் பிரச்னைகள் இருந்தால் நாங்கள் சிறப்பாக விளையாட முடியாது. எனக்கு ஒரு நபரை பிடிக்கவில்லை என்றால் அதை நீங்கள் என் முகத்திலோ அல்லது என நடத்தையிலோ காணலாம். இது மிகவும் எளிது. இதுபோன்ற வதந்திகளைப் பரப்புவதால், யாருக்கு லாபம் என்று தெரியவில்லை.

நான் எப்போதும் ரோஹித்தைப் புகழ்ந்துதான் பேசியுள்ளேன். ஏனென்றால் அவர் நல்லவர் என நான் நம்புகிறேன். எங்களுக்குள் எந்தப் பிரச்னையும் இல்லை'' என கோலி தெரிவித்துள்ளார். இதன்மூலம் இத்தனை நாள்களாக வதந்திகளுக்கு கோலி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.