Published:Updated:

T20 Worldcup 2022: வங்கதேசம் உள்ளே, இலங்கை வெளியேவா... என்னங்க ஐசிசி உங்க சட்டம்?!

இரண்டு அணிகளுமே முன்னதாக டி20 உலகக்கோப்பையை வென்று சாம்பியனான அணிகள். அப்பேற்பட்ட இரண்டு அணிகள் தகுதிச்சுற்றுக்குத் தள்ளப்படுவது நியாயமா எனும் கேள்வி எழுந்துள்ளது.

டி20 உலகக்கோப்பை போட்டிகள் பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த உலகக்கோப்பையே இன்னும் முடியவில்லை. ஆனால், அதற்குள் அடுத்த உலகக்கோப்பையை பற்றிய செய்திகள் பரவலாக வரத் தொடங்கியிருக்கின்றன.

அடுத்த ஆண்டு டி20 உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது. இந்த உலகக்கோப்பையில் ஆடும் தகுதியை ஐ.சி.சி தரவரிசைப்படி அணிகள் பெறுகின்றன. இந்த 2021 நவம்பர் 15 தேதி ஐ.சி.சி தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடித்திருக்கும் அணிகள் 2022 உலகக்கோப்பைக்கு நேரடியாக தகுதிப்பெறும். மற்ற அணிகள் தகுதிச்சுற்றில் ஆடியே ஆக வேண்டும். இதன்படி, இப்போது இலங்கை அணியும் வெஸ்ட் இண்டீஸ் அணியும் நேரடியாக தகுதிப்பெற முடியாமல் தகுதிச்சுற்றில் ஆட வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன. இரண்டு அணிகளும் இந்த உலகக்கோப்பையில் தங்கள் பயணத்தை முடித்துக் கொண்டதால் நவம்பர் 15-க்குள் ஐ.சி.சி தரவரிசையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பே இல்லை. அதனால், அடுத்த ஆண்டு அசோசியேட் அணிகளுடன் இரண்டு அணிகளும் தகுதிச்சுற்றில் ஆடி ஆக வேண்டும். டி20 உலகக்கோப்பை வென்று சாம்பியனான இரண்டு அணிகள் இப்படி தகுதிச்சுற்றுக்கு தள்ளப்படுவது நியாயமா எனும் கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது.

இந்த உலகக்கோப்பையில் இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளை விட மோசமாக ஆடியிருந்த வங்கதேச அணி நேரடியாக அடுத்த உலகக்கோப்பையின் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதிப்பெற்றிருக்கிறது.

வங்கதேச அணி இந்த உலகக்கோப்பையில் சூப்பர் 12 சுற்றில் ஆடிய 5 போட்டிகளிலுமே தோற்றிருக்கிறது. தகுதிச்சுற்றிலும் மூன்றில் இரண்டு போட்டிகளில் மட்டுமே வென்றிருந்தது, ஸ்காட்லாந்து அணியுடன் தோல்வியை தழுவியிருந்தது. அதேநேரத்தில், இலங்கை அணி தகுதிச்சுற்றில் ஆடிய 3 போட்டிகளிலுமே வென்றிருந்தது. சூப்பர் 12 சுற்றிலும் ஆடிய 5 போட்டிகளில் 2 போட்டிகளில் வென்றுள்ளது.

வங்கதேசம்
வங்கதேசம்

வெஸ்ட் இண்டீஸ் அணியும் ஆடிய 5 போட்டிகளில் 1 போட்டியில் வென்றுள்ளது. மிக மோசமாக ஆடிய வங்கதேசத்தால் அடுத்த உலகக்கோப்பைக்கு நேரடியாக தகுதிபெற முடிகிறது. ஆனால், போராடி வீழ்ந்த இலங்கையும் ஆறுதல் வெற்றிபெற்ற வெஸ்ட் இண்டீஸும் அசோசியேட் அணிகளுடன் மல்லுக்கட்ட வேண்டியிருக்கிறது.

இருநாட்டு தொடர்களில் சமீபமாக சொதப்பிக் கொண்டிருக்கும் இலங்கை அணி உலகக்கோப்பை போட்டிகளில் காட்டிய முனைப்பும் போராட்ட குணமும் மற்ற அணிகளை விட அதிகம். சூப்பர் 12 சுற்றில் தங்களது முதல் போட்டியிலேயே வங்கதேச அணியைத்தான் இலங்கை வீழ்த்தியிருந்தது. இதேதான் இலங்கை அணி தகுதிச்சுற்றுக்கு தள்ளப்பட்டிருக்கிறது. இதேதான் வெஸ்ட் இண்டீஸிற்கும். இந்த உலகக்கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் வீழ்த்திய ஒரே அணி வங்கதேசம் மட்டுமே.

இலங்கை கிரிக்கெட் அணி
இலங்கை கிரிக்கெட் அணி
AP

அடுத்த உலகக்கோப்பைக்கு இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. சிறு எழுச்சியை கண்டிருக்கும் இலங்கை இந்த இடைப்பட்ட இடைவெளியில் வெற்றிகளை வாரி குவிக்கலாம். வீழ்ச்சி பாதையில் இருக்கும் வங்கதேசம் இன்னும் சறுக்கிக் கொண்டே போகலாம். ஆனால், ஐ.சி.சிக்கு அதெல்லாம் முக்கியமில்லை. நவம்பர் 15 தேதி டாப் 8-ல் இருக்கிற அணிகள் மட்டும் போதும். இந்த தகுதி முறை மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பதே உலக கிரிக்கெட் ரசிகர்களின் எண்ணமாக இருக்கிறது.

2007-2012 ஆம் ஆண்டு உலகக்கோப்பை வரை ஐ.சி.சி ஒரு முறையை பின்பற்றியது. அதாவது, தரவரிசையில் முதல் 10 இடங்களில் இருக்கும் அணிகள் உலகக்கோப்பையின் முக்கியமான சுற்றுக்கு நேரடியாக தகுதிப்பெற்றுவிடும். தகுதிச்சுற்றுகள் நடத்தப்பட்டு அதிலிருந்து இரண்டு அணிகள் முக்கியச்சுற்றுக்கு தேர்வாகும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

2014-லிருந்து முதல் 8 இடங்களில் இருக்கும் அணிகள் மட்டுமே முக்கியச்சுற்றுக்கு தகுதிப்பெறும் என ஐ.சி.சி அறிவித்தது. 9 மற்றும் 10 வது இடத்தில் இருக்கும் அணிகள் தகுதிச்சுற்றில் ஆடியே உள்ளே வர முடியும் என மாற்றப்பட்டது. அணிகளின் எண்ணிக்கையும் 10 ஆக குறைக்கப்பட்டு சூப்பர் 10 சுற்று அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த உலகக்கோப்பையில் சூப்பர் 10 க்கு பதில் சூப்பர் 12 என மாற்றப்பட்டு கூடுதலாக இரண்டு அணிகளுக்கு இடம் கொடுக்கப்பட்டது. ஆனால், டாப் 8 அணிகள் மட்டுமே நேரடியாக தகுதிப்பெறும் என்பதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

அதிக அணிகளை பங்கேற்க செய்ய வேண்டும் என்கிற ஐ.சி.சி யின் எண்ணம் சரியானதாக இருந்தாலும் தரவரிசையை அதற்கு அளவுகோலாக வைக்கும் போது இலங்கை மாதிரியான அணிகள் பாதிக்கப்படவே செய்கின்றன. எப்படியும் வென்று உள்ளே வரத்தான் போகின்றன இந்த அணிகள்!

2012 வரை நடைமுறையில் இருந்த முறையையே மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது ரசிகர்களின் எண்ணமாக இருக்கிறது.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு