4 ஆண்டுகளுக்கு முன்பு... ஒரு தேசத்தைத் தவிர, கிரிக்கெட் பார்க்கும் மற்ற தேசங்கள் அனைத்தின் ஆதரவோடும் பிராத்தனையோடும் மெல்போர்னில் களமிறங்கியது நியூசிலாந்து. தங்கள் கிரிக்கெட் வரலாற்றின் மிகமுக்கிய தருணத்தை வடிவமைக்க நினைத்த அவர்களது கனவுகளை, முதல் ஓவரிலேயே நொறுக்கினார் மிட்செல் ஸ்டார்க்.
பிரெண்டன் மெக்கல்லம் அவுட்டானதிலிருந்து மீளாத நியூசிலாந்து அணி, அந்த இறுதிப்போட்டியில், மைக்கேல் கிளார்க்கின் ஆஸ்திரேலிய அணியிடம் சரணடைந்தது. ஆனால், இப்போது மீண்டும் ஒருமுறை அவர்களுக்கான வாய்ப்பு காத்திருக்கிறது. இம்முறை, இன்னும் புகழ்பெற்ற மைதானத்தில்... கிரிக்கெட்டின் மெக்கா லார்ட்ஸில்... மீண்டும் உள்ளூர் அணியை எதிர்த்து..!
உலகக் கோப்பையில் எதிர்பாராத தோல்விகளைச் சந்தித்தாலும், தொடக்கத்தில் எவ்வளவு ஆபத்தாக கருதப்பட்டதோ, அதே நிலையை அடைந்திருக்கிறது இங்கிலாந்து அணி. பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என அனைத்து ஏரியாவிலும் முழு பலத்துடன் இருக்கிறது. ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட், கேப்டன் இயான் மோர்கன், ஜாஸ் பட்லர் என பேட்ஸ்மேன்கள் அனைவருமே குறைந்தபட்சம் ஒரு சதமாவது அடித்திருக்கிறார்கள். ஸ்டோக்ஸ், சதமடிக்காத குறைக்கு 4 அரைசதங்களும், 7 விக்கெட்டுகளும் வீழ்த்தி ஆல்ரவுண்டராக அசத்துகிறார்.

ஆர்ச்சர், வோக்ஸ் இருவரும் முதல் பவர்பிளேவில் மிரட்டினால், மிடில் ஓவர்களில் மெர்சல் காட்டுகிறது வுட், பிளங்கட் கூட்டணி. லீக் சுற்றில் பெரிதாக பர்ஃபார்ம் செய்யாத அடில் ரஷீத் அரையிறுதியில் விஸ்வரூபம் எடுத்துவிட்டார். மற்ற அணிகளைப் போல், இடத்தை நிரப்பும் வீரர்கள் ஒருவர் கூட இந்த அணியில் இல்லை. ஒவ்வொருவருமே ஒவ்வொரு வகையில் அணியின் நம்பிக்கையாக இருக்கிறார்கள். அதனால்தான், ஓரிரு சரிவுகளைச் சமாளித்து, இங்கிலாந்தால் மீண்டும் எழுந்துவர முடிந்தது.
நியூசிலாந்துக்குப் பிரச்னையே இந்த விஷயம்தான். கடந்த 2015 உலகக் கோப்பையின் டாப் ஸ்கோரர் மார்டின் குப்தில், தான் எப்பேர்பட்ட பேட்ஸ்மேன் என்பதையே மறந்துவிட்டார் போல! அப்போது, ஒரே போட்டியில் 237 ரன்கள் அடித்தவர், இப்போது 9 இன்னிங்ஸும் சேர்த்து 167 ரன்கள்தான் அடித்திருக்கிறார். முதல் போட்டிக்குப் பிறகு, 3 முறை மட்டுமே ஒற்றை இலக்கத்தைத் தாண்டியிருக்கிறார். ஃபீல்டிங்கில் ஏற்படுத்தும் தாக்கத்தை பேட்டிங்கில் அவர் ஏற்படுத்தவே இல்லை. அதேபோல்தான் அவரது சக ஓப்பனர்களும். முன்றோதான் சரியில்லை என்று பார்த்தால், நிகோல்ஸிடமும் எந்த மாற்றமும் கிடைக்கவில்லை.
நிச்சயமா இந்தப் போட்டியில் நிறைய கவனச் சிதறல்கள் இருக்கும். வரும் கூட்டம், எங்கள் கவனத்தை சிதறடிக்க முயற்சி செய்யும். எங்கள் மனதில் ஓடும் எண்ணங்களே சிக்கலாக இருக்கும். ஆனால், அதையெல்லாம் சரியாகக் கையாண்டால் மட்டுமே, வெற்றிக்கான வாய்ப்பை எங்களால் உருவாக்க முடியும்கேன் வில்லியம்சன்

மிடில் ஆர்டரில் டாம் லாதமும் சொதப்புகிறார். மொத்தத்தில் அந்த அணியின் இன்னிங்ஸை நிலைநாட்டுவது சீனியர்கள் வில்லியம்சன், ராஸ் டெய்லர் இருவர் மட்டுமே! ஆனால், இருவருமே விரைவாக ரன் சேர்ப்பதில்லை என்பதால், சேஸிங் செய்யவேண்டியதிருந்தால், நியூசிலாந்து பெரிய அடி வாங்கும். நீஷம், கிராந்தோம் இருவரும் சில கேமியோக்கள் ஆடியிருந்தாலும், இன்று எப்படியான தாக்கம் ஏற்படுத்துவார்கள் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
நியூசிலாந்தின் பலமே அவர்களின் பந்துவீச்சுதான். போல்ட், ஹென்றி, ஃபெர்குசன் மூவரும் மிகச் சிறப்பாக பந்துவீசுகின்றனர். விக்கெட் எடுப்பதோடு, ரன்களைக் கட்டுப்படுத்துவதிலும் நன்றாக செயல்படுகின்றனர். ஒரு அணி அவர்களை டிஃபன்ஸிவாக அணுகும்போது (இந்தியாவைப் போல்!), இவர்களது தாக்கம் அதிகமாகிறது. ஆனால், இங்கிலாந்து ஓப்பனர்கள், எதிரணி பௌலர்களைத் தொடக்கத்திலிருந்தே அட்டாக் செய்கிறார்கள். குறிப்பாக, ஜேசன் ராய்! சேவாக்கை விட ஒரு படி மேலே சென்று தாண்டவம் ஆடுகிறார். அதனால், அதற்குத் தகுந்த திட்டங்கள் தீட்டுவது மிகவும் முக்கியம்.
உலகக் கோப்பையை ஏந்துவது பற்றி நான் யோசிக்கவே இல்லை. ஆனால், நாங்கள் சாம்பியனானால், இந்தப் போட்டியை தொலைக்காட்சியில் பார்க்கும் சிறுவர்களுக்கு அது வாழ்நாள் நினைவாக அமையும்இயான் மோர்கன்

லெக் ஸ்பின்னர்களுக்கு எதிராகத்தான் இங்கிலாந்து ஓப்பனர்கள் கொஞ்சம் தடுமாறியிருக்கிறார்கள். ஆனால், இடது கை ஸ்பின்னர்களுக்கு எதிராக அல்ல. அதனால், லீக் பிரிவில் செய்ததுபோல் சான்ட்னரைக் கொண்டு பவர்பிளேவை நகர்த்துவது சரிபட்டு வராது. அதேபோல், ஃபைனல் நடக்கும் ஆடுகளம், கோல்ஃப் மைதானம்போல் பச்சைப் புற்களுடன் இருப்பதால், இரண்டாவது ஸ்பின்னராக சோதியைக் கொண்டுவரும் திட்டமும் எடுபடாது. போல்ட் - ஹென்றி கூட்டணிதான் அவர்களைக் கட்டுப்படுத்தவேண்டும். அந்த பார்ட்னர்ஷிப்பை உடைக்கவேண்டும்.
சுருங்கச் சொன்னால், ஒருசில வீரர்களால்தான் நியூசிலாந்து லார்ட்ஸ் வரை வந்துள்ளது. ஆனால், ஒரு அணியாக முழு ஃபார்மில் இருக்கும் இங்கிலாந்தை வீழ்த்த, அதேபோல் ஆடக்கூடாது. இதுவரை பெரிய தாக்கம் ஏற்படுத்தாத வீரர்கள், இன்று மிகப்பெரிய ஆட்டத்தை ஆடவேண்டும். அப்போதுதான் மெல்போர்னில் விட்டதை லார்ட்ஸில் பிடிக்க முடியும்!

பிளேயிங் லெவன்
இரு அணிகளுமே, அரையிறுதியில் விளையாடிய அதே அணியைக் களமிறக்கவே வாய்ப்பு அதிகம். பேர்ஸ்டோ, நிகோல்ஸ் இருவர் மட்டுமே காயத்தால் சற்று அவதிப்பட்டவர்கள். ஆனால், பேர்ஸ்டோவுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஒருவேளை, நிகோல்ஸின் காயம் கொஞ்சம் தீவிரமானதாக இருந்தால், அவருக்குப் பதில் முன்றோ களமிறங்க வாய்ப்புண்டு.
இங்கிலாந்து (உத்தேச அணி) : ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட், இயான் மோர்கன், பென் ஸ்டோக்ஸ், ஜாஸ் பட்லர், கிறிஸ் வோக்ஸ், லியாம் பிளங்கட், அடில் ரஷீத், ஜோஃப்ரா ஆர்ச்சர், மார்க் வுட்.
நியூசிலாந்து (உத்தேச அணி) : மார்டின் குப்தில், ஹென்றி நிகோல்ஸ் / காலின் முன்றோ, கேன் வில்லியம்சன், ராஸ் டெய்லர், டாம் லாதம், ஜேம்ஸ் நீஷம், காலின் டி கிராந்தோம், மிட்செல் சேன்ட்னர், மேட் ஹென்றி, லாகி ஃபெர்குசன், டிரென்ட் போல்ட்.