Published:Updated:

ICC T20 World Cup: கோலியாத்துகளை வீழ்த்திய தாவீதுகள்! இனியாவது சமவாய்ப்புகள் கிடைக்குமா?

Namibia

இத்தொடர் முழுவதும் 'Punching above your weight' எனத் தங்களது சக்தியைத் தாண்டி சாதித்திருக்கும் சிறிய அணிகளின் பெரிய விஸ்வரூபம் பற்றிய ஒரு பார்வைதான் இது.

Published:Updated:

ICC T20 World Cup: கோலியாத்துகளை வீழ்த்திய தாவீதுகள்! இனியாவது சமவாய்ப்புகள் கிடைக்குமா?

இத்தொடர் முழுவதும் 'Punching above your weight' எனத் தங்களது சக்தியைத் தாண்டி சாதித்திருக்கும் சிறிய அணிகளின் பெரிய விஸ்வரூபம் பற்றிய ஒரு பார்வைதான் இது.

Namibia
ஆகாயத்தையே அளக்கும் விமானம், சின்னஞ்சிறு பறவை மோதி சேதாரத்தைச் சந்திக்கும். அதேநிகழ்வு நிலத்தில் கிரிக்கெட் களத்தில் இந்த உலகக்கோப்பை முழுவதும் நடந்துள்ளது. அசோசியேட் நாடுகள் என டெஸ்ட் அந்தஸ்துகூட வழங்கப்படாமல் ஆண்டு முழுவதும் ஒதுக்கி வைக்கப்பட்ட அணிகள்தான் ஆச்சரியங்களுக்கும் அதிர்ச்சிகளுக்கும் ஆதாரமாக மாறியிருந்தன.

எந்தவொரு அசோசியேட் அணிக்கும் பெரிய நாடுகளுடன் ஆடுவதற்கான வாய்ப்பு, இப்படிப்பட்ட மிகப்பெரிய மேடைகளில் மட்டுமே பெரும்பாலும் கிடைக்கிறது. இந்தியா உள்ளிட்ட ஒருசில நாடுகள், இவர்களுடன் ஆட ஆயத்தமானாலும் தங்களுடைய பெஞ்ச் வலுவினைப் பரிசோதிக்கும் கருவிகளாகவே இவர்களைப் பயன்படுத்திக் கொள்கின்றன.

ICC T20 World Cup 2022
ICC T20 World Cup 2022

"தங்களது திறமைகளை உலகின் பார்வைக்குக் காட்ட மாட்டோமா, அதற்கான வாய்ப்பு வராதா?" என தங்களுக்குள் ஏக்கங்களோடு தேக்கி வைக்கப்பட்ட ஆற்றலை, வைராக்கியத்தோடு பன்மடங்கு பெருக்கி இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் எல்லோரும் வியக்கும் வண்ணம் காட்சிப்படுத்துகின்றன அசோசியேட் அணிகள். மற்ற அணிகள் இவர்களுடன் ஆடிப் பழகாததே இவர்களுக்குச் சாதகமான அம்சமாகவும் அமைந்து, ஆராய்ந்தறியா ஆயுதமாக இவர்களை உருமாற்றி விடுகிறது.

பெரிய நாடுகளுக்கு இது ஒரு முக்கியத் தொடர், அவ்வளவே! ஆனால் அசோஸியேட் அணிகளுக்கோ இவைதான் வாழ்வாதரமே! அவை அடுத்த கட்டத்துக்குத் தயாராகி விட்டதற்கான அத்தாட்சி இந்த வெற்றிகள்தான். அவ்வகையில், இத்தொடர் முழுவதும் 'Punching above your weight' எனத் தங்களது சக்தியைத் தாண்டி சாதித்திருக்கும் சிறிய அணிகளின் பெரிய விஸ்வரூபம் பற்றிய ஒரு பார்வைதான் இது.

நமீபியா

கடந்தாண்டு டி20 உலககோப்பையில் இந்தியாவை எதிர்கொண்ட பிறகு நமீபியா ஆடியுள்ள டி20 போட்டிகளை விரல்விட்டு எண்ணி விடலாம். மூன்று டி20 போட்டிகளை உகாண்டா உடனும், ஐந்து டி20 போட்டிகளை ஜிம்பாப்வே உடனும் மட்டுமே விளையாடியுள்ளது.
T20 World Cup - Namibia
T20 World Cup - Namibia

19 ஒருநாள் போட்டிகளில் ஆடியிருந்தாலும் அவைகூட நேபால், ஓமன் போன்ற அணிகளோடுதான். எல்லா அசோசியேட் அணிகளுக்கும் இதுதான் பிரச்னை. பெரிய அணிகளெல்லாம் காலண்டரின் எல்லா நாள்களையும் போட்டிகளைக் கொண்டு நிரப்பிக் கொண்டிருக்க, இவர்களுக்கோ போதுமான போட்டிகள் அமைவதில்லை.

கார் ஓட்டக் கற்றுக் கொள்ள முடியாவிட்டாலும் விர்ச்சுவல் ரியாலிட்டி மூலமாக அந்த அனுபவத்தையாவது பெற்றுவிட முயல்பவர்களைப் போன்று பெரிய அணிகள் ஆடும் வீடியோவைப் பார்த்துக் கற்றுக் கொள்பவர்கள்தான் இதுபோன்ற நாடுகளில் அதிகம். டிம் டேவிட்டே தனது ஆரம்பகால கட்டங்களில் இதைச் செய்ததாகக் கூறியிருக்கிறார்.

அப்படிப்பட்ட அணிகளில் ஒன்றான நமீபியா, ஆசிய சாம்பியனான இலங்கையைத் தொடரின் ஓப்பனரான தகுதிச் சுற்றில் வீழ்த்தியது கிரிக்கெட் உலகை வியப்பில் ஆழ்த்தியது. அதுவும் 55 ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியில் இலங்கையை 108 ரன்களுக்கே சுருட்டிவிட்டது. அவர் இவர் என்றில்லாமல் பந்துவீசிய அத்தனை பௌலர்களுமே ஒருங்கே இணைந்து ஆளுக்கு ஒன்றிரண்டு விக்கெட்டுகள் என எடுத்து இதைச் சாத்தியமாக்கினர்.

அயர்லாந்து

குரூப் லெவல் போட்டிகளிலேயே மேற்கிந்தியத்தீவுகளை வீழ்த்தி ஆரம்பகட்ட அதிர்ச்சி அளித்தது அயர்லாந்து. மற்ற அசோசியேட் நாடுகளைவிட பால் ஸ்டிர்லிங், பால்பிர்னி, டக்கர் உள்ளிட்ட அயர்லாந்து வீரர்களின் பெயர்கள் சர்வதேச அளவில் பிரபலம்தான். பால் ஸ்டிர்லிங்கிற்காவது டி20, டி10 லீக்குகளில் ஆடிய அனுபவமுண்டு. மற்றவர்களோ கொஞ்சம் கவுண்டியிலும் நிறைய உள்ளூர் போட்டிகளில் ஆடிதான் தங்களது திறனைக் கூர்மையாக்குகிறார்கள். இருப்பினும் சமீப காலகட்டங்களில் அயர்லாந்து சத்தமின்றி சாதிக்கிறது.

Ireland Cricket
Ireland Cricket
ICC
சூப்பர் 12 சுற்றில் இங்கிலாந்தினை டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அசர வைத்தது. `மழைதான் முடிவை மாற்றியது' என ஓரிரு குரல்கள் எழுந்தாலும், அனுபவமிக்க பட்லர், ஸ்டோக்ஸில் இருந்து இளமைத் துடிப்புள்ள ஹாரி ப்ரூக் வரை டாப் 5 விக்கெட்டுகளையுமே அயர்லாந்து அந்தப் போட்டியில் வீழ்த்தியிருந்தது.

அப்படியிருக்க மழை குறுக்கிடாமல் இருந்திருந்தாலும் அன்றிருந்த நிலைக்கு அயர்லாந்து வென்றிருக்கவே வாய்ப்புகள் அதிகமாக இருந்தன. நியூசிலாந்துக்கு எதிரான போட்டியிலும் ஜோஸுவா லிட்டில் ஹாட்ரிக் விக்கெட்டுகளோடு அசத்தி கவனம் ஈர்த்தார்.

ஸ்காட்லாந்து

மேற்கிந்தியத்தீவுகளை அடுத்த நிலைக்கு முன்னேறவிடாமல் வெளியேற்றியதில் ஸ்காட்லாந்தின் பங்குமிருந்தது. எந்தளவிற்கு அசோசியேட் நாடுகளின் வீரர்களிடம் அர்ப்பணிப்புணர்வு இருக்கிறதென்பதற்கு 3/12 ஸ்பெல் மூலமாக மேற்கிந்தியத்தீவுகளைச் சாய்த்த மார்க் வாட்டே உதாரணம்.
SCO vs WI
SCO vs WI
ICC

போட்டிக்கு முன்னதாக அவர்களது வீடியோ அனலிஸ்டுகள் வழங்கிய மேற்கிந்தியத்தீவுகளின் பேட்ஸ்மேன்கள் விளையாடிய வீடியோக்களின் மூலமாக அவர்களது வலிமையையும் பலவீனத்தையும் அறிந்து கொண்டதாகவும் அதைக் கொண்டே தனக்கான குறிப்புகளை உருவாக்கியதாகவும் போட்டியின் போது அவர் பயன்படுத்திய 'Cheat Sheet' குறித்த செய்திகள் வெளிவந்த போது மார்க் வாட் கூறியிருந்தார்.

அந்த அணி வீரர்களுடன் களத்தில் ஆட முடியாவிட்டாலும் தொழில்நுட்பத்துடன் அர்ப்பணிப்பையும் நிரம்பவே சேர்த்து, வேட்டைக்கு முன்னதாகவே சந்திக்க வேண்டிய எதிராளியைக் குறித்த தகவல்களை சேகரித்துச் சென்ற மார்க் வாட்தான், ஒவ்வொரு அசோசியேட் அணியும் குறைந்தபட்ச வசதிகள் மூலமாக எந்தளவு தங்களைச் செதுக்கிக் கொள்கிறார்கள் என்பதற்குச் சான்று. அவரது 22 யார்டர் பௌலிங் ஸ்டைலும் எந்தளவிற்கு வெவ்வேறு யுக்திகளை முயற்சி செய்கிறார்கள் என்பதையும் உணர்த்தியது.

ஜிம்பாப்வே

ராசா என்ற ஒரு வீரர் கொண்டு வந்த வெல்ல வேண்டுமென்ற வெறி, சமீபமாகவே அணி முழுவதிலும் எதிரொலித்தது. குளோபல் க்வாலிஃபயர் மூலமாக க்ரூப் லெவலுக்குள் நுழைந்தது முதல் சூப்பர் 12-க்கு தகுதி பெற்றது வரை எங்கேயுமே பின்தங்கி விடக்கூடாதென்ற முனைப்பு அவர்களிடமிருந்தது. சூப்பர் 12-ன் மற்ற போட்டிகளில் அவர்களது பேட்டிங் பலவீனத்தால் சிறப்பாக ஆடமுடியாமல் வெளியேறினாலும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அவர்களின் ஒட்டுமொத்த திறமையையும் வெளிப்படுத்தினர்.

Pakistan v Zimbabwe
Pakistan v Zimbabwe
ICC
131 ரன்கள் இலக்கு என்பது பாகிஸ்தான் போன்ற நாடுகளால் போகிற போக்கில் 15 ஓவர்களுக்குள்ளாகவே அடிக்கக்கூடிய ஸ்கோர்தான். ஆனால் அதை நினைத்து மனம் சோர்ந்துவிடாமல் வாழ்வா சாவா என்பது போன்ற போராட்டத்தை ஜிம்பாப்வே வெளிப்படுத்தியது.

பௌலர்களும் ஃபீல்டர்களும் கைகோர்த்து இறுதிவரை மோதிப் பார்க்கும் தங்களது போராட்ட குணத்துக்கான சான்றாக அப்போட்டியை மாற்றினர்.

நெதர்லாந்து

வாயு நிரப்பிய பலூனில் ஒரு புள்ளியில் தரப்பட்ட அழுத்தம் சரிசமமாக எல்லா இடங்களுக்கும் கடத்தப்படும். அதேபோல், ஒரே போட்டியின் முடிவின் வாயிலாக அதுவும் சூப்பர் 12 சுற்றின் கடைசி நாளில் தங்களது குழுவில் உள்ள அத்தனை அணிகளையும் அதன் ரசிகர்களையும் கால்குலேட்டரும் கையுமாக அலைய விட்டது நெதர்லாந்து. சற்றுநேரம்தான் என்றாலும் எல்லா அணிகளுக்கான அரையிறுதியின் வாய்ப்பையும் குற்றுயிரோடு உலவ வைத்தது அந்த வெற்றி. தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சுப்படை இந்தியாவையே தடுமாறச் செய்தது. கோப்பையையே அவர்கள் இம்முறை கையில் ஏந்தலாம் என்னும் அளவுக்குப் பேச்சுகளும் எழுந்தன. ஆனால், இது எதையுமே தலைக்குள் ஏற்றிக் கொள்ளாமல் சரிசமமாக வாளேந்தியது நெதர்லாந்து.

பொதுவாக மேக்ஸ் ஓ'டவுட் மற்றும் ஆக்கர்மேன் ஆகிய இருவர் மட்டுமே எதிரணி பௌலர்களின் பல்ஸையும் தங்கள் அணி கணக்கில் ரன்களையும் ஏற்றுபவர்கள். ஆனால், அந்தப் போட்டியில் டாப் ஆர்டரிலிருந்த மற்ற இருவரும் கூட சமபங்காற்றினர். பந்துவீச்சின் போதும் கூட்டுமுயற்சியால் எந்தவொரு பெரிய பார்ட்னர்ஷிப்பையும் கட்டமைக்க விடாமல் உருவாக உருவாக உடைத்தனர். ஒரு சாம்பியன் அணி எப்படி ஒரு போட்டியை அணுகுமோ அதேபோல் கையில் பிடித்த பிடியின் நுனியை எதிரணிக்குச் சற்றும் விட்டுத் தராமலே வெற்றியைக் கட்டி இழுத்துச் சென்றது நெதர்லாந்து.

நெதர்லாந்தின் மீகெரன் இரண்டாண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலியாவில் ரத்து செய்யப்பட்ட அந்த உலகக்கோப்பை திட்டமிடப்பட்டிருந்த நாளில்,

"இன்று நான் ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருக்க வேண்டும். ஆனால் உணவுப் பொட்டலங்களை டெலிவரி செய்து கொண்டிருக்கும் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்" என வெளியிட்ட ட்வீட் பலரது மனதையும் நெகிழச் செய்தது.
Netherlands
Netherlands
Netherlands Cricket

அதே மீகெரன்தான் இத்தொடரில் நெதர்லாந்தின் சார்பில் அதிக விக்கெட்டுகளை எடுத்ததில் இரண்டாவது இடத்தில் உள்ளவர். அவர்களில் பலருக்கு கிரிக்கெட்டுக்காக முழுநேரம்கூட செலவழிக்கக்கூட முடியாது. ஆனாலும், அது அவர்களைத் தன்னை நோக்கி ஈர்த்துக் கொண்டேதானிருக்கிறது.

மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து - இவையெல்லாமே டி20 உலகக் கோப்பையை ஒருமுறையாவது கையிலேந்திய அணிகள்தான். ஆனால், அவர்களையும் வீழ்த்தி தங்களது தன்னம்பிக்கைகான உரமாக அந்த வெற்றியை இந்த அணிகள் மாற்றிக் கொண்டுள்ளன.

"ஆறு மணி நேரங்கள், ஒரு மரத்தை வெட்டுவதற்காக எனக்குத் தரப்பட்டால், அதில் நான்கு மணி நேரங்கள், எனது கோடாரியைக் கூர்மையாக்கப் பயன்படுத்துவேன்" என ஆப்ரகாம் லிங்கன் சொன்னதாகச் சொல்வார்கள். உண்மையில் அசோசியேட் அணிகள் போட்டிகள் நடக்காத சமயத்தை இப்படித் தங்களது திறனைப் பெருக்கிக் கொள்ளப் பயன்படுத்துகின்றன. இப்படிப்பட்ட பெரிய மேடைகளில் எப்படி எதிரணியை வீழ்த்த வேண்டும் என்பது குறித்த மணிக்கணக்கில் அல்ல மாதக்கணக்கில் கனவு காண்கிறார்கள், திட்டம் தீட்டுகிறார்கள். அதுதான் அவர்களுக்குக் கைகொடுக்கிறது.

தங்களால் என்ன செய்ய முடியுமென்பதை பெரிய அணிகளுக்கு கடும் நெருக்கடி தந்து விட்டுக் கொடுக்காமல் இறுதிவரை போராடியே இந்த அணிகள் நிரூபித்திருக்கின்றன. இனி ஐசிசி தன்னால் என்ன செய்ய முடியுமோ அதனை இந்த அணிகளுக்காகவும் வீரர்களுக்காகவும் செய்ய வேண்டும். நெதர்லாந்து வீரர் மீகெரன் சமீபத்தில் சொல்லியிருந்ததைப் போல் இங்கிலாந்துக்குச் சுற்றுப் பயணத்திற்காக பெரிய அணிகள் பயணிக்கையில் வார்ம்அப் மேட்சாக நெதர்லாந்துக்கும் சென்று ஆடலாம். இதுபோன்ற போட்டிகள் ஒட்டுமொத்த கிரிக்கெட் சூழலையும் வளப்படுத்தும்.

ICC
ICC
அவர்களது தேவை எல்லாம் நின்றுபோர் செய்ய சில களங்களும் தங்களுக்கு டஃப் ஃபைட் தரக்கூடிய எதிரணிகளும்தான். அதுபோதும்! தரவரிசைப் பட்டியலில் தங்கள் நிலையை உயர்த்திக் கொள்ளும் வழிமுறையை எல்லாம் அவர்களே பார்த்துக் கொள்வார்கள்.