2019-ம் ஆண்டு ஐபிஎல் தொடங்கி உலகக்கோப்பை வரை எக்கச்சக்க நோ பால் பிரச்னைகள். போட்டியின் முக்கியமான தருணங்களில் பெளலர்கள் நோ பால் வீசுவதை கவனிக்கத் தவறும் கள நடுவர்கள் மீது, வீரர்கள் அதிருப்தி தெரிவிப்பது வழக்கமாகிவிட்டது. இந்தத் தவறுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, ஐசிசி புதிய திட்டம் ஒன்றை அமல்படுத்த உள்ளது.
முதல்கட்டமாக அடுத்த ஆறு மாதங்களில் நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் இந்தத் திட்டம் பயன்படுத்தப்பட உள்ளது.ஜியாஃப் அலார்டிஸ்
`அடுத்த ஆறு மாதங்களில் நடைபெறும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில், நோ பால் வீசப்படுவதை நேரடியாக டிவி நடுவர் கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2016-ம் ஆண்டு இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதிய ஒரு நாள் தொடரின்போது பரிசோதனை முயற்சியாக இந்த நடைமுறை மேற்கொள்ளப்பட்டது. அதை மீண்டும் முயற்சி செய்ய ஐ.சி.சி முடிவெடுத்துள்ளது.
"ஒவ்வொரு டெலிவரியிலும் பெளலரின் ஃப்ரன்ட் ஃபூட் தரையைத் தொட்டவுடன் டிவி நடுவருக்கு புகைப்படம் அனுப்பப்படும். அது நோ பாலாக இருக்கும் பட்சத்தில் டிவி நடுவர் உடனடியாக கள நடுவருக்கு தகவல் சொல்வார். இந்த முறையைப் பின்பற்றினால், நோபால் பிரச்னைக்கு ஒரு தீர்வு கிடைக்கும்" என்று ஐசிசி கிரிக்கெட் ஆபரேஷன் பொது இயக்குநர் ஜியாஃப் அலார்டிஸ் தெரிவித்துள்ளார்.

`சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் அனைத்து இடங்களிலும் இந்தத் திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமா என்பதில் சந்தேகம் நீடிக்கிறது. எனவே, முதல்கட்டமாக அடுத்த ஆறு மாதங்களில் நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் இந்தத் திட்டம் பயன்படுத்தப்பட உள்ளது. இந்தப் புதிய அணுகுமுறை கைகொடுத்தால், அதை அப்படியே தொடர்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என ஐசிசி தெரிவித்துள்ளது.