உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய கிரிக்கெட் அணிக்கு நம்பர்-4 வீரராக எந்த வீரர் களமிறங்குவது என்ற சிக்கல் இருந்தது. 2018-ல் அம்பதி ராயுடு நல்ல ஃபார்மில் இருந்ததால், அவர் பொருத்தமாக இருப்பார் எனக் கூறப்பட்டது. ஆனால், உலகக்கோப்பைத் தொடருக்கான இந்திய அணியில் அவரது பெயர் இடபெறவில்லை. இதுதொடர்பான தனது அதிருப்தியை அப்போதே அவர் தெரிவித்திருந்தார். இருந்தாலும் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என நம்பிக்கொண்டிருந்தார்.

உலகக்கோப்பை போட்டியின்போது ஷிகர் தவான், விஜய் சங்கர் ஆகியோர் காயமடைந்தனர். இவர்களுக்குப் பதிலாக ரிஷப் பன்ட், மயங்க் அகர்வால் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர். இதில் அதிருப்தியடைந்த அம்பாதி ராயுடு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ராயுடுவின் ஓய்வுக்கு இந்திய தேர்வுக்குழுவின் செயல்பாடுகள்தான் காரணம் என முன்னாள் வீரர்கள் சிலர் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில், நீண்ட நாள்களுக்குப் பிறகு, ராயுடு ஓய்வு முடிவு குறித்து மனம் திறந்துள்ளார். ``உணர்ச்சிவசப்பட்டு இந்த முடிவை எடுக்கவில்லை. உலகக்கோப்பைத் தொடருக்காக நான் 4 - 5 வருடங்களாகக் கடுமையாக உழைத்து வந்தேன். அதில் தேர்வாகாததால் நான் ஏமாற்றமடைந்தேன். நான் புறக்கணிப்பட்டதாலோ, உணர்ச்சிவசப்பட்டோ இந்த முடிவை எடுக்கவில்லை. இதுதான் சரியான தருணம் எனத் தோன்றியது. எனவே ஓய்வை அறிவித்தேன்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எனக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஐபிஎல் போட்டிகளுக்காகத் தயாராகி வருகிறேன். நான் கண்டிப்பாக ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவேன். அதற்கு முதலில் முழு உடல்தகுதியை எட்ட வேண்டும். கடந்த சில மாதங்களாக நான் கிரிக்கெட் விளையாடவில்லை. முழு உடற்தகுதியை எட்ட 2 மாதங்கள் ஆகும். கிரிக்கெட்டை முழுமையாக நேசிக்கிறேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.