Published:Updated:

`கோலியின் ஆக்ரோஷம்; தோனியின் பொறுமை!’ - க்ருணால் பாண்டியா விரும்புவது இதுதான்

கிரிக்கெட் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது மும்பை அணிக்கு நான் விளையாடியதுதான் என க்ருணால் பாண்டியா பேசியுள்ளார்.

க்ருணால் பாண்டியா
க்ருணால் பாண்டியா

விராட் கோலி தலைமையிலான இந்தியக் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து விளையாடவுள்ளது. இதற்காக வீரர்களின் பட்டியலை ஞாயிற்றுக்கிழமை பிசிசிஐ வெளியிட்டது. ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் நிறைய இளம்வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நவ்தீப் சைனி, கலீல் அஹமது, ராகுல் சாஹர், வாஷிங்டன் சுந்தர், தீபக் சாஹர் ஆகியோர் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. டி-20 போட்டிகளுக்கு க்ருணால் பாண்டியா அழைக்கப்பட்டுள்ளார். ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

விராட் கோலி
விராட் கோலி

இதுகுறித்து பேசியுள்ள க்ருணால் பாண்டியா, ``மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன். பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாகச் செயல்படவேண்டும் என விரும்புகிறேன். விராட் கோலியிடமிருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள விரும்புகிறேன். அவரிடம் இருக்கும் அந்த வெறி மற்றும் தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தும் திறன் ஆகியவற்றை கற்க விரும்புகிறேன்.

இந்திய ‘ஏ’ அணியில் விளையாடியது நிறைய அனுபவங்களை கற்றுக்கொடுத்துள்ளது. கடந்த 2 மற்றும் 3 ஆண்டுகளில் இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா நாடுகளில் விளையாடினேன். அப்போது சீனியர்களிடமிருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன்.

தோனி
தோனி

தோனியைப் போன்ற சிறந்த ஃபினிஷர் உலகக் கிரிக்கெட்டில் தற்போது யாரும் இல்லை. சூழ்நிலைகளை நன்கு புரிந்துகொண்டு அதற்கு ஏற்றவாறு தன்னைத் தயார் செய்துகொண்டு விளையாடும் திறன் தோனியிடம் உள்ளது. அதைக் கற்றுக்கொள்ள விரும்புகிறேன். எனது கிரிக்கெட் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது மும்பை அணிக்கு நான் விளையாடியதுதான். அங்குதான் எனது திறமையை வெளிப்படுத்த முடிந்தது” எனப் பேசியுள்ளார்.