Published:Updated:

`சச்சின் அவுட்... டிவி ஆஃப்... நான் ஆடியதைப் பார்க்கவே இல்லை!' - முகமது கைஃபின் நாட்வெஸ்ட் தொடர் நாஸ்டால்ஜியா

அப்போதெல்லாம் சச்சின் அவுட்டானால் அவ்வளவு தான் என டிவியை ஆஃப் செய்து விட்டு போய் விடுவார்கள்

முகமது கைஃப்
முகமது கைஃப்

இந்திய ரசிகர்களுக்கு சச்சின் கிரிக்கெட்டின் கடவுள் என்றால் கங்குலி கிரிக்கெட்டின் தாதா. அவரது ரசிகர்கள் அவரை செல்லமாக அப்படி தான் அழைப்பார்கள். 80’s, 90's கிட்ஸுகள் இந்திய கிரிக்கெட் அணியின் ஒவ்வொரு வெற்றியையும் கொண்டாடினார்கள். கிரிக்கெட்டின் மெக்கா என அழைக்கப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராகக் கடந்த 2002ம் ஆண்டு நடைபெற்ற நாட்வெஸ்ட் தொடரின் இறுதிப் போட்டியில் வென்றபின்னர் சட்டையைக் கழற்றி கொண்டாடினார் கேப்டன் கங்குலி. லார்ட்ஸ் மைதானத்தில் கங்குலி எப்படி இப்படி நடந்துக்கொள்ளலாம் என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர்கள் கேள்வி எழுப்பினர். இந்த விவகாரம் சர்ச்சையானது. இதற்கெல்லாம் கவலைப்படுவாரா தாதா.

லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணி
லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணி

உங்களுக்கு லார்ட்ஸ் மைதானம் மெக்கா என்றால் எங்களுக்கு மும்பை வான்கடே. உங்கள் வீரர்கள் இதற்கு முன்னர் அங்கு அப்படி நடந்துக்கொண்டனர் என பதிலடி கொடுத்தார். இந்தப்போட்டி கிரிக்கெட் ரசிகர்களால் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. கங்குலியின் இந்த கொண்டாட்டத்திற்கு பின்னால் இருந்த இரண்டு இளம் வீரர்கள். அப்போதெல்லாம் சச்சின் அவுட்டானால் அவ்வளவு தான் என டிவியை ஆஃப் செய்து விட்டு போய் விடுவார்கள்.

அந்தப்போட்டியில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 325 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய இந்திய அணிக்கு ஷேவாக், கங்குலி நல்ல தொடக்கம் அளித்தனர். 15 ஓவர்களில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்திருந்து.ஆனால் சில நிமிடங்களில் ஆட்டம் தலைகீழாக மாறியது. 23 ஒவர்களில் 146 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்தது. இதன்பின்னர் இளம்வீரர்களான யுவராஜ் சிங் - முகமது கைஃப் இருவரும் பொறுப்புடன் ஆடி இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். இந்தப்போட்டியில் வென்றதன் மூலம் அந்த சீரிஸையும் இந்தியா கைப்பற்றியது.

முகமது கைஃப்
முகமது கைஃப்

இந்த தருணங்கள் குறித்து முகமது கைஃப் `பிரேக் ஃபாஸ்ட் வித் சாம்பியன்ஸ்’ என்ற நிகழ்ச்சியில் பகிர்ந்துள்ளார். ``சச்சின் டெண்டுல்கர் அவுட்டானாலே அப்போது எல்லாம் இந்தியா தோற்றுவிடும் என ரசிகர்கள் முடிவு செய்துவிடுவார்கள். அந்தப்போட்டியின் போது எனது குடும்பத்தினரும் சச்சின் ஆட்டமிழந்த பின்பு டிவியை ஆஃப் செய்துவிட்டு பக்கத்தில் இருந்த தியேட்டருக்கு சென்றுவிட்டனர். அப்போது அங்கு ஷாருக்கான் நடிப்பில் வெளியான தேவ்தாஸ் படம் ஓடிக்கொண்டிருந்தது. நான் விளையாடி இந்திய அணியை வெற்றிபெற வைத்தது எல்லாம் அவர்களுக்கு தெரியாது.

இந்தியா வெற்றிப்பெற்றதும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மற்றும் குடும்ப நண்பர்கள் அனைவரும் தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்துக்கொள்ள எனது இல்லத்திற்கு வந்துள்ளார். வீடு தாழிடப்பட்டிருந்தது. எனது குடும்பத்தினர் கூட்டத்தை தவிர்ப்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு உள்ளே இருப்பதாக அவர்கள் நினைத்துக்கொண்டனர். பின்னர் தான் எனது குடும்பத்தினர் திரைப்படத்திற்கு சென்ற விவரம் தெரியவந்துள்ளது.

கைஃப்
கைஃப்

இதனையடுத்து அவர்கள் திரையரங்கு சென்று இந்தியா வென்ற விவரத்தை எனது பெற்றோரிடம் தெரிவித்தனர்'' என்று தனது நினைவுகளைப் பகிர்ந்திருக்கிறார்.

அந்தப் போட்டியில் யுவராஜ் சிங் - கைஃப் ஜோடி, 121 ரன்களை திரட்டியது. யுவராஜ் சிங் 63 பந்துகளில் 69 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். முகமது கைஃப் 87 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அந்தப் போட்டியில் கைஃப் ஆட்டநாயகன் விருதும் வென்றார்.