Published:Updated:

`அவர்தான் தீர்மானிக்கணும்; உலகக் கோப்பைக்குப் பிறகு சந்திக்கவில்லை!' - தோனி குறித்து ரவி சாஸ்திரி

உலகக் கோப்பைத் தொடருக்குப் பிறகு தோனியைப் பார்க்கவில்லை என இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

தோனி
தோனி

உலகக் கோப்பைத் தொடருக்குப் பின்னர், இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து தோனி `மிஸ்ஸிங்.’ வெஸ்ட் இண்டீஸ் அணி சுற்றுப்பயணம் முடிந்து தற்போது தென்னாப்பிரிக்கா தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. தோனி எப்போது ஓய்வு பெறுவார் என்ற கேள்வியைப் பலர் முன்வைத்தாலும் களத்தில் தோனி இல்லாதது ஏதோ வெறுமையை ஏற்படுத்துகிறது என ரசிகர்கள் உணர்கின்றனர். உலகக் கோப்பைத் தொடருக்குப் பின்பு இரண்டு மாத ஓய்வில் சென்ற தோனி இந்திய ராணுவத்தில் பணியாற்றச் சென்றார். 2 மாதம் ராணுவப் பணியை முடித்து வந்த தோனி தென்னாப்பிரிக்கா தொடரில் களமிறங்குவார் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்தனர். ஆனால், அது தொடர்பாக அறிவிப்புகள் ஏதும் வெளிவரவில்லை.

ரிஷப் பண்ட்
ரிஷப் பண்ட்

இந்திய அணியில் தோனியின் இடத்துக்கு ரிஷப் பண்ட் வந்தார். அணிக்குள் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் வந்தார் ரிஷப் பண்ட். உலகக் கோப்பைத் தொடரில்கூட இந்த இளம் வீரருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. ரிஷப் பண்ட் தொடர்ந்து சொதப்பியதால் அணிக்குள் சஹா அழைக்கப்பட்டுள்ளார். தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சஹா விளையாடினார். இந்நிலையில் ரசிகர்களின் கண்கள் தோனியை தேட ஆரம்பித்துள்ளன.

இதற்கிடையில் தோனி கால்பந்து வீடியோ இணையத்தில் வைரலானது. மும்பையில் அறக்கட்டளை சார்பாக நடந்த கால்பந்து போட்டியில் தோனி பங்கேற்று விளையாடினார். லியாண்டர் பயஸ், பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூர் உள்ளிட்டோரும் இதில் கலந்துகொண்டு விளையாடினர்.

கோலி - ரவி சாஸ்திரி
கோலி - ரவி சாஸ்திரி

இந்நிலையில், தோனி குறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியிடம் சில கேள்விகள் முன் வைக்கப்பட்டன. இதற்கு பதிலளித்த ரவி சாஸ்திரி, ``தோனி எங்களின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராக இருக்கிறார். தோனி திரும்பி வர விரும்புகிறாரா என்பதை அவர்தான் தீர்மானிக்க வேண்டும். உலகக் கோப்பைத் தொடருக்குப் பிறகு, நான் அவரை சந்திக்கவில்லை. முதலில் அவர் விளையாட தொடங்க வேண்டும். என்ன நடக்கிறது என்பதைப் பிறகு பார்ப்போம். அவர் விளையாட ஆர்வமாக இருந்தால் நிச்சயம் தேர்வாளர்களுக்குத் தெரியப்படுத்துவார்” எனப் பேசியுள்ளார்.