Published:Updated:

` கம்பீரின் கிரிக்கெட் வாழ்க்கையை நான்தான் காலி செய்தேன்!’ - பாகிஸ்தான் கிரிக்கெட்டர் இர்பான்

'கம்பீரின் கிரிக்கெட் வாழ்க்கை என்னால்தான் முடிவுக்கு வந்தது' என பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் முகமது இர்பான் கூறியுள்ளார்.

கம்பீர், முகமது இர்பான்
கம்பீர், முகமது இர்பான்

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு கௌதம் கம்பீர் மீது அப்படி என்ன சிறப்புப் பாசம் எனத் தெரியவில்லை. #கம்பீர் vsபாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் என ஹேஸ்டேக் போடும் அளவுக்கு பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ளன. விளையாடிய போதுதான் களத்தில் மோதிக்கொண்டார்கள் என்றால், இப்போது கம்பீர் முழு நேர அரசியல்வாதியாகிவிட்டார். தற்போதும் தொடர்ந்து சீண்டிக்கொண்டே இருக்கிறார்கள். அவரும் தக்க பதிலடிகொடுத்துவருகிறார்.

முகமது இர்பான்
முகமது இர்பான்

இந்த முறை கம்பீரைச் சீண்டியிருப்பது பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் முகமது இர்பான். `` கம்பீரின் டி-20 மற்றும் ஒருநாள் போட்டி கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்ததற்கு நான் தான் காரணம்" என்கிறார், இந்த 7 அடி வேகப்பந்துவீச்சாளர். ''நான் இந்தியாவுக்கு எதிராக விளையாடும்போது, இந்திய வீரர்களுக்கு எனது பந்துவீச்சு வசதியாக இல்லை. அவர்களால் எனது பந்தைக் கணிக்க முடியவில்லை. என்னுடைய உயரம் அவர்களுக்கு மிகப்பெரிய பிரச்னையாக இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மேலும் பேசியவர், “2012-ம் ஆண்டு நடந்த இந்தியா - பாகிஸ்தான் தொடரின்போது கெளதம் கம்பீரின் விக்கெட்டை நான்கு முறை வீழ்த்தினேன். கம்பீர் என்னைப் பார்க்கவே விரும்பவில்லை. போட்டியின்போதும் சரி, பயிற்சியின் போதும் சரி, என்னை நேருக்குநேர் பார்ப்பதைத் தவிர்த்து வந்தார். என்னால்தான் அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது என நினைக்கிறேன். அந்தத் தொடருக்குப் பிறகு, அவர் குறுகிய போட்டிகள்கொண்ட தொடரில் ஆடவில்லை. கம்பீரின் டி-20, ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கைக்கு முடிவு கட்டியதற்காக ரசிகர்கள் பாராட்டினார்கள்” என்று கூறினார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள்
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள்

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி குறித்தும் சில வார்த்தைகளை இர்பான் கூறியுள்ளார். “என்னுடைய பந்துவீச்சு 130 -135 கி.மீ வேகத்தில் இருக்கும் என கோலி நினைத்தார். ஆனால், நான் 145 கி.மீ வேகத்தில் வீசியதால், எனது பந்துவீச்சை அவரால் தொடக்கூட முடியவில்லை. அப்போது, மறுமுனையில் இருந்த யுவராஜ் சிங்கின் பந்து வேகமாக வருவதால் அடிக்க வேண்டும். கட் செய்யும்படி பஞ்சாபி மொழியில் கூறினார். ஆனால், கோலி மூன்றாவது பந்தை அடிக்க முயன்று ஆட்டமிழந்தார்’ எனத் தெரிவித்துள்ளார்.