அரை இறுதி வாய்ப்பை எட்ட முடியாமல் பாகிஸ்தான் அணி தோல்வியைத் தழுவியது. பட்டியலில் 11 புள்ளிகளுடன் நியூசிலாந்துக்கு இணையாக இருந்தாலும், போதிய ரன் ரேட் இல்லாததால் அந்த அணி உலகக் கோப்பை தொடரை விட்டு வெளியேற நேர்ந்தது. இதற்கிடையே, தோல்வியால் தங்கள் சொந்த நாட்டுக்குத் திரும்பியுள்ள பாகிஸ்தான் அணி கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது, நேற்று கராச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தனது எதிர்காலம், இந்திய அணிக்கு எதிரான தோல்வி உள்ளிட்டவை குறித்து மனம்திறந்து பேசினார்.

அதில், ``எங்கள் பர்ஃபாமன்ஸ் குறித்து வருத்தம் தெரிவிக்க விரும்பவில்லை. கடினமாக உழைத்து எங்களின் பெஸ்ட்டை இந்தத் தொடரில் கொடுத்தோம். இந்தத் தொடரில் 2 அல்லது 3 புள்ளிகளைப் பெறவில்லை. 11 புள்ளிகளைப் பெற்று ஐந்தாம் இடம் பெற்றுள்ளோம். முதல் ஐந்து போட்டிகளில் நாங்கள் சரியாக விளையாடவில்லை. அதை ஒத்துக்கொள்கிறோம். ஆனால், கடைசி நான்கு மேட்சுகளில் சிறந்த கம்பேக் கொடுத்தோம். ஒரு அணியாக சிறந்த வகையில் செயலாற்றினோம். இளம் வீரர்கள், மூத்த வீரர்கள் என அனைவரும் சிறந்த பங்களிப்பைக் கொடுத்தனர்.
இந்திய அணிக்கு எதிராகத் தோல்வியைத் தழுவிய பின் அனைத்து வீரர்களுடன் ஒரு சிறிய மீட்டிங் நடத்தினோம். அப்போது நான் என் இதயத்திலிருந்து, மனத்தில் பட்டத்தைப் பேசினேன். ஐந்து போட்டிகளில் ஏற்பட்ட தோல்விக்கான காரணங்களைத் தெரிந்துகொண்டு விவாதித்தேன். இதன்பிறகு ஒவ்வொரு வீரரும் தகுந்த ரெஸ்பான்ஸை அளித்தனர்" என்றவர், தனது கேப்டன்ஷிப் குறித்தும் பேசினார். உலகக்கோப்பை தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என அணி நிர்வாகம் சர்ஃப்ராஸை வலியுறுத்தியதாகவும், அதற்கு அவர் மறுத்துவிட்டதாகவும் பாகிஸ்தானில் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இதுகுறித்துப் பேசிய சர்ஃப்ராஸ், ``நான் அப்படியெல்லாம் சொல்லவில்லை. பி.சி.பி அப்படி கேட்கவும் இல்லை. என்னை கேப்டனாக நியமித்தது பி.சி.பி தான். அதனால், என்னை நீக்குவதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது. அணிக்கு எந்த முடிவு தகுந்ததாக இருக்குமோ அதனை அவர்கள் எடுப்பார்கள். எது எப்படி இருந்தாலும் எனது கேப்டன்ஷிப் எதிர்காலத்தை பி.சி.பி-யே முடிவுசெய்யும்" என்று உருக்கமாகப் பேசினார்.
அப்போது, பாகிஸ்தான் அரையிறுதிக்கு வரக்கூடாது என்பதற்காகவே இந்திய அணி இங்கிலாந்திடம் தோல்வி அடைந்தது என பாக்., முன்னாள் வீரர்கள் பேசிவருவதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ``இல்லை இல்லை... இப்படிச் சொல்வது சரியில்லை. நாங்கள் வரக்கூடாது என இந்தியா தோற்றதாக நினைக்கவில்லை. அன்றைக்கு ஜெயிக்க வேண்டும் என இங்கிலாந்து சிறப்பாக விளையாடியது. அதனாலேயே இந்தியாவுக்கு தோல்வி ஏற்பட்டது" என்றார் சர்ஃப்ராஸ்.

இதே பத்திரிகையாளர் சந்திப்பின்போது, வங்கதேசம் குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர் ஒருவர், வங்கதேச வீரர்களை `பெங்காலிஸ்' என குறிப்பிட்டுப் பேசினார். அப்போது, ``தயவுசெய்து இந்த வார்த்தையைப் பயன்படுத்த வேண்டாம். இது உங்களுக்கு பிரச்னையாக மாறும். நீங்கள் ஆட்சேபிக்கத்தக்க வார்த்தையைப் பயன்படுத்துகிறீர்கள். அவர்களை வங்க தேசத்தவர்கள் என்றே அழையுங்கள்" என்று கூறினார். இதனால், கூட்டத்தில் சிறிது நேரம் பதற்றம் தொற்றிக்கொண்டது.