Published:Updated:

கேப்டன் கே.எல்.ராகுல்: "தோல்விகள் என்னைத் தீர்மானிக்காது. என் தலைமை பண்பினை முழுமையாக நம்புகிறேன்!"

கே.எல்.ராகுல்

"வைட்-பால் ஃபார்மர்ட்டில் ஒரு அணியாக சிறு சிறு மாற்றங்களை செய்ய வேண்டிய நேரமிது. தொடரை இழந்ததால் மட்டும் இதை நான் சொல்லவில்லை." - கே.எல்.ராகுல்

கேப்டன் கே.எல்.ராகுல்: "தோல்விகள் என்னைத் தீர்மானிக்காது. என் தலைமை பண்பினை முழுமையாக நம்புகிறேன்!"

"வைட்-பால் ஃபார்மர்ட்டில் ஒரு அணியாக சிறு சிறு மாற்றங்களை செய்ய வேண்டிய நேரமிது. தொடரை இழந்ததால் மட்டும் இதை நான் சொல்லவில்லை." - கே.எல்.ராகுல்

Published:Updated:
கே.எல்.ராகுல்
தன் கிரிக்கெட் வாழ்க்கையின் இரண்டு வெவ்வேறு எல்லைகளை கடந்த ஒரே வாரத்தில் தொட்டிருக்கிறார் கே.எல்.ராகுல். இந்த வருட ஐபிஎல் தொடரில் புதிதாக இணையவிருக்கும் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் தங்கள் அணியின் முதல் வீரராக கே.எல்.ராகுலை 17 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்தது. இதன் அதிகாரபூர்வ அறிவிப்பை கடந்த வெள்ளியன்று வெளியிட்டு இருந்தது அந்த அணியின் நிர்வாகம். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக சம்பளம் வாங்கும் வீரர் என்ற பெருமையை விராட் கோலியுடன் பகிர்ந்துள்ளார் ராகுல்.
KL Rahul
KL Rahul

இந்தியாவின் ஐபிஎல் தொடரை உலகின் மிகச்சிறந்த டி20 தொடர் என்று பலரும் போற்றுவது உண்மைதான். ஆனால் ஐபிஎல் தொடரானது விளையாட்டைத் தாண்டி வியாபார கைகளுக்கு என்றைக்கோ சென்றுவிட்டது என்பதையும் மறுப்பதற்கில்லை. இருந்தாலும், கிளப் கால்பந்து போட்டிகளில் வீரர்களுடன் போடப்படும் ஒப்பந்தம் போல கே.எல்.ராகுல் கையெழுத்திட்டுள்ள இந்த ஒப்பந்தம் அவர் கிரிக்கெட் கரியரின் மிக முக்கியமான நிகழ்வே.

ஆனால், இது நடந்து இரண்டே நாள்களில் ராகுலுக்கு மிகப்பெரிய பள்ளம் ஒன்றும் காத்திருந்தது. ஆம், ஆறுதல் வெற்றியாவது பெறமாட்டோமா என்று அனைவரும் ஏங்கிய நிலையில் தென்னாப்பிரிக்க அணியுடனான மூன்றாவது போட்டியிலும் தோல்வி அடைந்து வைட் வாஷ் ஆனது ராகுல் தலைமயிலான இந்தியா. தான் கேப்டன் செய்த முதல் டெஸ்ட் போட்டியை இழந்த போதே தென்னாப்பிரிக்க மண்ணில் இந்தியா தக்கவைத்திருந்த பல்வேறு சாதனைகளை ஒரு கேப்டானாக இழந்திருந்தார் ராகுல். அதைத் தொடர்ந்து நடந்த ஒருநாள் தொடரையும் முழுவதுமாக தோற்றத்தால் ராகுல் டிராவிட்டிற்கு பிறகு தென்னாப்பிரிக்க மண்ணில் வைட் வாஷ் ஆன கேப்டன் என்ற பெயருக்கு சொந்தக்காரர் ஆனார். இது மட்டுமல்லாமல் இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே தான் கேப்டன்சி செய்த முதல் மூன்று ஒரு நாள் போட்டிகளையும் இழக்கும் முதல் கேப்டன் கே.எல்.ராகுல்.

KL Rahul
KL Rahul

இதனால் ராகுலின் தலைமை பண்புகள் மீது ஜாகிர் உள்ளிட்ட பலரும் தங்களது விமர்சங்களை முன்வைத்தனர். இவை அனைத்திற்கும் தற்போது பதில் அளித்துள்ளார் ராகுல். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், “உண்மையைச் சொல்ல வேண்டுமானால் இந்தத் தென்னாப்பிரிக்க தொடர் எங்களுக்கு பல முக்கிய பாடங்களைக் கற்றுக்கொடுத்துள்ளது. அடுத்த 50 ஓவர் உலகக்கோப்பைக்கு அதிக அவகாசம் இல்லாததால் அத்தொடரை மனதில் வைத்து அணியில் குறிப்பிட்ட மாற்றங்களைச் செய்ய வேண்டிய தருணமிது.”

“இந்திய அணி கடந்த நான்கைந்து வருடங்களாக சிறந்த கிரிக்கெட்டை வெளிப்படுத்தியுள்ளதை யாரும் மறுக்கமுடியாது. ஆனால் வைட்-பால் ஃபார்மர்ட்டில் ஒரு அணியாக சிறு சிறு மாற்றங்களை செய்ய வேண்டிய நேரமிது. தொடரை இழந்ததால்மட்டும் இதை நான் சொல்லவில்லை” என்று கூறியுள்ளார்.

KL Rahul
KL Rahul

மேலும் தன் கேப்டன்சி பற்றி பேசியுள்ள அவர், “இந்திய அணியை தலைமை தாங்கி நடத்துவது எனக்கு இதுவே முதல் முறை. இத்தொடர் எனக்கு மிகச்சிறந்த அனுபவத்தை அளித்துள்ளது. இத்தொடரில் ஏற்பட்டுள்ள தோல்வி எங்களுக்கு பலவற்றையும் கற்றுக்கொடுத்துள்ளது. மேலும் வெற்றிகளை விட தோல்வியே சிறந்த பாடங்களை அளிக்கும்.

என் டெஸ்ட் கரியரும் இது போலதான். அவ்வபோது கிடைக்கும் வாய்ப்புகளை வைத்து அணியில் எனக்கான இடத்தை தக்கவைக்க நான் இத்தனை காலம் எடுக்கவேண்டி இருந்தது. அதேபோல தான் என் கேப்டன்சியும். என்னுடைய தலைமை பண்பின் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. போதிய அனுபவமின்றி பெரிய வெற்றிகளை தொடக்கத்திலேயே பெற்று பின்னர் அடுத்தடுத்து ஏற்படும் சரிவுகளை சமாளிக்க தெரியாமல் தடுமாறுவதை காட்டிலும் அனுபவத்தால் ஒரு தேர்ந்த கேப்டனாக உயர்வதையே நான் விரும்புகிறேன். போட்டியின் முடிவுகளை வைத்து என்னை நான் என்றுமே தீர்மானிப்பதில்லை. ஒரு கேப்டனாக சில இடங்களில் என்னை நானே திருத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது. அதை விரைவில் செய்து விடுவேன்” என்றார்.

இதுமட்டுமல்லாமல் லக்னோ அணியில் இடம்பெற்றிருக்கும் மற்றொரு இளம் வீரரான ரவி பிஷ்னாய் பற்றியும் பேசியுள்ளார் ராகுல், “ரவி பிஷ்னாய் மிக சிறந்த போராட்ட குணமுடையவர். அதை தனது முதல் ஐபிஎல் போட்டியிலேயே அவர் வெளிப்படுத்தியுள்ளார். எதிர்கால இந்திய அணியில் மிக முக்கிய ஸ்பின்னராக அவர் நிச்சயம் இருப்பார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை” என்று கூறியுள்ளார் கே.எல்.ராகுல்.

கே.எல்.ராகுலின் கேப்டன்சி குறித்து உங்களின் கருத்துகளை கமென்ட்டில் சொல்லுங்கள்.