Published:Updated:

`ரன்னும் அடிக்கணும்; விக்கெட்டும் விழக்கூடாது’ - கொரோனா அச்சத்தை வெளிப்படுத்திய கங்குலி

சவுரவ் கங்குலி

கொரோனாவுக்கு எதிரான போரில் ஒருங்கிணைந்து வெல்வோம் என சவுரவ் கங்குலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Published:Updated:

`ரன்னும் அடிக்கணும்; விக்கெட்டும் விழக்கூடாது’ - கொரோனா அச்சத்தை வெளிப்படுத்திய கங்குலி

கொரோனாவுக்கு எதிரான போரில் ஒருங்கிணைந்து வெல்வோம் என சவுரவ் கங்குலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சவுரவ் கங்குலி

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. நாளுக்குநாள் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. `லாக்டெளன் போன்ற சூழ்நிலையை எதிர்பார்க்கவில்லை. இது கடினமான காலகட்டம்' என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு
ஊரடங்கு

``ஒரு கரடுமுரடான ஆடுகளத்தில் டெஸ்ட் போட்டி விளையாடுவது போன்று இப்போதைய சூழ்நிலை உள்ளது. பந்தை சீமிங் மற்றும் ஸ்பின் செய்ய முடியும். இந்த நேரத்தில் பேட்ஸ்மேன் சிறிய தவறு செய்தாலும் அவ்வளவுதான். இதுபோன்ற ஆடுகளங்களில் பேட்ஸ்மேன்கள் ரன்களைக் குவிக்க வேண்டும்; அதேநேரத்தில் தன்னுடைய விக்கெட்டையும் பாதுகாக்க வேண்டும். சிறிய தவறுகள்கூட செய்யாமல் கவனமாக விளையாடினால் வெற்றிபெற முடியும். இதுமிகவும் கடினமானது. ஆனால், ஒருங்கிணைந்து இதில் வெல்வோம் என்ற நம்பிக்கை உள்ளது.

தற்போதுள்ள சூழ்நிலை எனக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது. கொரோனா தாக்கம் காரணமாக ஏற்பட்டுள்ள உயிர்ச்சேதங்கள் எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இதை எப்படி சமாளிப்பது எனத் தெரியாமல் தவித்து வருகிறோம். உலகளவில் உள்ள சூழல், எனக்கு மிகுந்த கவலையை அளிக்கிறது. இது எங்கிருந்து எப்படி வந்தது என யாருக்கும் தெரியவில்லை. நாம் இதை எதிர்கொள்ளத் தயாராக இல்லை.

கங்குலி
கங்குலி

மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சூழல் மனதளவில் என்னைக் கடுமையாகப் பாதித்துள்ளது. எனக்குள் அச்சத்தை ஏற்படுத்துகிறது. மக்கள் என் வீட்டுக்குத் தேவையான காய்கறிகள் மற்றும் உணவுப்பொருள்களைக் கொண்டு வந்து தருகிறார்கள். இது ஒரு கலவையான உணர்வுதான். இதற்கு சீக்கிரம் ஒரு முடிவு வர வேண்டும்" என கங்குலி தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார்.

`100 ஹவர்ஸ் 100 ஸ்டார்ஸ்’ என்ற நிகழ்ச்சியில் பங்கெடுத்த கங்குலி, கோவிட் 19 குறித்த தனது வருத்தத்தைப் பதிவு செய்தார். ``லாக்டெளன் குறித்து நினைத்துக்கூட பார்க்கவில்லை. லாக்டெளன் தொடங்கி ஒருமாதம் ஆகிவிட்டது. ஆரம்பத்தில் இதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

கொரோனா
கொரோனா

இதுபோன்று வீட்டில் நீண்ட நாள்கள் இருப்பதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்ததில்லை. எனது வாழ்க்கை முறை என்பது வேலைக்காக அதிகம் பயணம் செய்ய வேண்டும். கடந்த 30-32 நாள்களாக நான் வீட்டில் இருக்கிறேன். என் மனைவி, தாய், மகள் மற்றும் சகோதரர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட்டு வருகிறேன்” எனக் கூறியுள்ளார்.