Published:Updated:

மதுர மக்கள்: "சிவகார்த்திகேயன் சம்பளம், கமல் சார் உதவி!" மாற்றுத்திறனாளி கிரிக்கெட்டர் சச்சின் சிவா

மதுர மக்கள்: சச்சின் சிவா

"நேர்ல பார்த்து விஷயத்தைச் சொன்னதும் அடுத்த ஒரு மணி நேரத்துல கமல் சார்தான் டிக்கெட்டுக்கான முழு பொறுப்பையும் ஏத்துக்கிட்டாங்க. டீமே கப் அடிச்சு வந்ததும் கமல் சாரைப் பார்த்தோம். அப்ப..."

Published:Updated:

மதுர மக்கள்: "சிவகார்த்திகேயன் சம்பளம், கமல் சார் உதவி!" மாற்றுத்திறனாளி கிரிக்கெட்டர் சச்சின் சிவா

"நேர்ல பார்த்து விஷயத்தைச் சொன்னதும் அடுத்த ஒரு மணி நேரத்துல கமல் சார்தான் டிக்கெட்டுக்கான முழு பொறுப்பையும் ஏத்துக்கிட்டாங்க. டீமே கப் அடிச்சு வந்ததும் கமல் சாரைப் பார்த்தோம். அப்ப..."

மதுர மக்கள்: சச்சின் சிவா

"ஒரு ஐபிஎல் மேட்சுக்கு சமமா மாற்றுத்திறனாளிகள் விளையாடுற கிரிக்கெட் இருக்கும். அப்படித்தான் எல்லாரும் பெர்பார்ம் பண்ணிட்டு இருக்கோம்.180 ரன் வரைக்கும் அடிப்போம். ஒரு கால் இருக்காது, சப்போர்ட்டுக்கு குச்சி வச்சுட்டு வந்து பௌலிங் போடுவாங்க. ஒரு கை உதவியோடதான் கேட்ச் பிடிப்பாங்க. சிக்ஸ் அடிப்பாங்க. பார்க்குற ரசிகர்களுக்கும் நார்மல் கிரிக்கெட்ட விட அதிக சுவாரஸ்யம் மிகுந்த போட்டியாதான் இருக்கும். ஆனா, சரியான் விளம்பர வெளிச்சம் இல்லாததால் வீரர்கள் சோர்ந்து போயிடுறாங்க. இப்படி நிறைய சிரமங்களுக்கும் இடையிலதான் நிறைய போட்டிகள் ஜெயிச்சுருக்கோம். தமிழ்நாட்டு டீமுக்காக ஆடுறோம். இந்தியாவுக்காக ஆடுறோம்னு, அந்த டீ ஷர்ட்ட போடுறப்போ ஒரு உணர்வு வரும். அதுதான் இவ்வளவு காலம் எங்களைத் தள்ளிட்டு வந்துருக்கு. இது எல்லாம் சரியாகிடும்ங்கிற நம்பிக்கைதான் இன்னமும் இயக்கிட்டு இருக்கு."

நீண்ட சாதனை பயணத்தை இவ்வளவு சுருக்கமாக முடித்துவிட்டு சிரிக்கிறார் சச்சின் சிவா. இந்திய மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் அணியின் துணை கேப்டன். சமீபத்திய துபாய் ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக அணியின் கேப்டன். சோதனைகள், நம்பிக்கை, சாதனைகள் என கரடுமுரடான பாதைகளில் பயணம் செய்தவரோடு பேசியதிலிருந்து...

"எனக்கு சொந்த ஊரு மதுரைதான். தெப்பக்குளம்தான் என்னோட ஏரியா. படிச்சது விளையாடுனதுன்னு எல்லாமே இதே ஏரியாதான். பொறக்கும்போது ஆரோக்கியமான குழந்தையாதான் பொறந்தேன். ஆனா, அடுத்த ஆறு மாசத்துல போலியோ அட்டாக். ஸ்கூல் காலகட்டத்துல எல்லாம் விளையாட்டு மேல ரொம்ப ஆர்வம் இருக்கும். ஆனா, விளையாட போனா யாரும் சேர்த்துக்க மாட்டாங்க. அதுவும் அந்த காலகட்டத்துல சச்சின் டெண்டுல்கரோட ஆட்டத்தைப் பார்த்து பார்த்து கிரிக்கெட் வெறி இன்னும் அதிகமாச்சு. அதன் தாக்கத்துலயே பேருல சச்சின்னு சேர்த்துட்டேன்.

காலெஜ் முதல் வருஷம் படிச்சப்போதான் மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளப்பயிற்சியாளர் ரஞ்சித்குமாரோட அறிமுகம் கிடைச்சது. அவர் மூலமா பத்து வருஷம் முன்னே தமிழ்நாட்டு டீமுக்காக ஆடுனேன்.

மாற்றுத்திறனாளிக்களுக்கான கிரிக்கெட்டுல என்னை வளர்த்துக்க ஆரம்பிச்ச நேரத்துல வீட்டுல ரொம்பவே எதிர்ப்பு இருந்துச்சு. கிரிக்கெட்டுக்கான கிட் வாங்கணும், பயிற்சி எடுக்கணும்னு வருமானத்துக்கான எந்த முகாந்திரமும் இல்லாததால அவுங்களுக்கும் நம்பிக்கை இல்லை. கல்யாணாத்துக்குப் பிறகு மாறிடுவான்னு கல்யாணமும் பண்ணி வச்சாங்க.

ஆனாலும், விளையாட்டுதான்னு உறுதியா இருந்தேன். இப்போ ரெண்டு குழந்தைங்க இருக்காங்க. கொரோனாவால ஸ்கூல் ஃபீஸ் கட்டுறதுக்கும் சிரமம்தான்.

சச்சின் சிவா அணி
சச்சின் சிவா அணி

விளையாடுறோம் ஆனாலும் கிரிக்கெட்டுக்கான அடிப்படை உபகரணங்களுக்கு கூட ஸ்பான்சர் இல்லாததால ஒரு கட்டத்துல கிரிக்கெட்டே வேணாம், குடும்பம் இருக்கு அதுக்குனு ஒரு வருமானம் வேணும்னு யோசிச்சேன். எல்லாத்தையும் விட்டு போயிடலாமான்னு நினைச்சப்போதான் நடிகர் சிவகார்த்திகேயன் வந்து மிகப்பெரிய நம்பிக்கைக் குடுத்தார்.

'அது எப்படி சிவா இப்படி ஒரு முடிவெடுக்கதோணுச்சி, பணம்தானே இப்போ தேவையா இருக்கு? மாச சம்பளம் வேலைக்கு போனா எவ்வளவு கிடைக்குமோ அதை நான் உங்களுக்கு தர்றேன்'னு திரும்ப கிரிக்கெட் பக்கம் உள்ளே இழுத்துவிட்டார். கடந்த ஒன்றரை வருஷமா எனக்கு சம்பளம் குடுத்து கிரிக்கெட் விளையாட வச்சுட்டு இருக்காரு. அவருக்குத்தான் நன்றி சொல்லணும், அதுபோக கிரிக்கெட் வீரர் விஜய் ஷங்கர் டீமுக்காகத் தொடர்ச்சியா சப்போர்ட் பண்ணிட்டு இருக்காரு.
சிவகார்த்திகேயனுடன் சச்சின் சிவா
சிவகார்த்திகேயனுடன் சச்சின் சிவா

அடிப்படையில் ஆல்ரவுண்டர் நான். ஆனா கேப்டனா இருப்பதால ரெண்டயும் பேலன்ஸ் பண்ண முடியாததால இப்போ சென்னை டீம் கேப்டன் பொறுப்புல இருந்து விலகிட்டேன். கடந்த அஞ்சு வருஷமா இந்திய கிரிக்கெட் டீம்ல இருக்க ஒரே தமிழ்நாட்டு ப்ளேயர் நான்தான். தமிழ்நாட்டுல இருந்து நான் மட்டும்தான் செலக்ட் ஆகிருந்தேன். இப்போ மூணு பேரு இருக்கோம். ஆரம்பத்துல மொழிப்பிரச்னை இருந்தது. இப்போ கொஞ்ச கொஞ்சமா அதுலயும் மாறிக்கிட்டு வர்றேன்."

சமீபத்துல துபாய்ல நடந்த ஐபிஎல் ஃபிளைட் டிக்கெட் பிரச்னை நடந்ததே என்னதான் ஆச்சு?

துபாய் ஐபிஎல்
துபாய் ஐபிஎல்

"நார்மல் கிரிக்கெட்டுக்கு குடுக்குற முக்கியத்துவம் மாதிரி மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட்டுக்கு பெரிய அளவுல முக்கியத்துவம் இல்ல. இன்னமும் சொல்லப்போனா பரிசுத்தொகை கூட சொல்லிக்கிறமாதிரி இருக்காது. அதுவே பலமுறை மிகப்பெரிய மன உளைச்சலை குடுத்துருக்கு. அப்படி ஒரு சம்பவம்தான் இந்தச் சம்பவமும். துபாய் மேட்ச்சுக்கு முதல்ல ஒரு பெங்களூரு கம்பெனிதான் ஸ்பான்சரா இருந்தாங்க. எல்லாரும் மேட்சுக்கு ஆவலா இருந்தோம். மேட்சுக்கு நாலு நாள் இருந்தப்போ அந்த கம்பெனி கைய விரிச்சுருச்சு. அப்போ கோவை போற சூழல் இருந்தது. கோவை தெற்குல கமல் சார் போட்டியிடுறாங்கன்னு தெரிஞ்சு கேட்டுப்பாக்கலாம்னு முயற்சி பண்ணுனேன். நேர்ல பார்த்து விஷயத்தைச் சொன்னதும் அடுத்த ஒரு மணி நேரத்துல கமல் சார்தான் டிக்கெட்டுக்கான முழு பொறுப்பையும் ஏத்துக்கிட்டாங்க. டீமே கப் அடிச்சு வந்ததும் கமல் சாரைப் பார்த்தோம். எங்களை நம்பி அவர் செஞ்ச மிகப்பெரிய உதவிக்குக் காணிக்கையா இந்த வெற்றியை சமர்ப்பிச்சோம்.

நமக்கு முன்ன போனவனே பொருளாதாரா ரீதியா பெருசா சோபிக்கலைன்னு அவனும் இருக்க விளையாட்டு ஆர்வத்தை சிதைச்சிக்க கூடாது. இன்னைக்கு நாங்க நிறைய தடைகள தாண்டி வந்துட்டோம். எங்களுக்குக் கிடைக்காத ஊக்கமும் சலுகைகளும் குறைந்தபட்சம் அடுத்த தலைமுறைக்காச்சும் கிடைக்கணும். இன்னும் நிறைய வீரர்கள் முன்னாடி வரணும். அதுதான் என்னோட கனவும் ஆசையும்!" என்கிறவர் கண்களில் நம்பிக்கை மிளிர்கிறது.

வாழ்த்துகள் சச்சின் சிவா! நிச்சயம் உங்கள் வெற்றி பலருக்கும் உத்வேகத்தைக் கொடுக்கும்.