Published:Updated:

காட்டான்கள் எனச் சொல்வார்கள்; நம்பாதீங்க... இவர்கள் கிரிக்கெட்டை காத்த கடவுள்கள்!

West Indies team ( Photo: Twitter / cricketworldcup )

1970-களில் ஓடவிட்டவர்களை திருப்பி நின்று சண்டை செய்து, விரட்டி விரட்டி வெளுத்திருக்கிறது வெஸ்ட் இண்டீஸ். அதுவும் சிங்கத்தின் குகைக்குள்ளேயே சென்று சிங்கங்களை சிதைத்திருக்கிறார்கள்.

காட்டான்கள் எனச் சொல்வார்கள்; நம்பாதீங்க... இவர்கள் கிரிக்கெட்டை காத்த கடவுள்கள்!

1970-களில் ஓடவிட்டவர்களை திருப்பி நின்று சண்டை செய்து, விரட்டி விரட்டி வெளுத்திருக்கிறது வெஸ்ட் இண்டீஸ். அதுவும் சிங்கத்தின் குகைக்குள்ளேயே சென்று சிங்கங்களை சிதைத்திருக்கிறார்கள்.

Published:Updated:
West Indies team ( Photo: Twitter / cricketworldcup )

``விவியன் ரிச்சர்ட்ஸா... அவன் செம காட்டான்பா... ஹெல்மெட்கூட போடமாட்டான்... காட்டடி, மாட்டடி அடிப்பான்!'' - கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்த காலத்தில் இப்படித்தான் அறிமுகமானார் விவியன் ரிச்சர்ட்ஸ். 90'ஸின் பிற்பாதியில் வெஸ்ட் இண்டீஸ் என்பது பிரமாதமான அணி அல்ல. லாரா, சந்தர்பால், ஆம்புரோஸ், வால்ஷ் என ஸ்டார் ப்ளேயர்கள் இருப்பார்கள். ஆனால், அணியாக அவர்கள் இணைந்து விளையாடி வெற்றிபெறமாட்டார்கள்.

ஆனால், இந்த அணி எப்படி 70-90 காலகட்டங்களில் நம்பர் 1 அணியாக இருந்தது, அதுவும் நிறத்தின் காரணமாக ஒடுக்கப்பட்ட மக்கள் எப்படி கிரிக்கெட்டை கண்டுபிடித்தவர்களையே வீழ்த்தி உலக சாம்பியன் ஆனார்கள், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா என கிரிக்கெட்டின் `ஆண்டைகளை' எப்படி ஓரங்கட்டினார்கள், விவியன் ரிச்சர்ஸ் ஏன் காட்டானாக அடையாளப்படுத்தப்பட்டார்..? இப்படி எல்லோருக்கும் பல கேள்விகள் மனதுக்குள் இருக்கும். இந்தக் கேள்விகளுக்கு விடை சொல்லும் ஆவணப்படம்தான் `Fire in Babylon'. சில ஆண்டுகளுக்கு முன்பே வெளியான ஆவணப்பதிவு என்றாலும் இப்போதுதான் #Blacklivesmatter போராட்டம் காரணமாக பிரபலமாகிவருகிறது. கிரிக்கெட் ரசிகர்கள் ஒவ்வொருவரும் தவறாமல் பார்க்கவேண்டிய ஆவணம் இது!

``ஒருத்தன் செத்தா முடியிற சண்டையாக்கா இது... ஜெயிக்கிறமோ இல்லையோ, முதல்ல சண்டை செய்யணும்... திருப்பி அடிக்கலைன்னா அவனுங்க நம்மளை அடிச்சி ஓடவிட்டுணே இருப்பானுங்க... இது நம்ம ஊருக்கா... இதை நாமதான் பாத்துக்கணும்... இதுக்காக நாமதான் சண்டை செய்யணும்!'' - `வடசென்னை' படத்தில் தனுஷ் பேசும் வசனம் இது. இப்படித்தான் 1970-களில் ஓடவிட்டவர்களை திருப்பி நின்று சண்டை செய்து, விரட்டி விரட்டி வெளுத்திருக்கிறது வெஸ்ட் இண்டீஸ். அதுவும் சிங்கத்தின் குகைக்குள்ளேயே சென்று சிங்கங்களை சிதைத்திருக்கிறார்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
சண்டை என்றால் சண்டை. ஆக்ரோஷம் என்றால் ஆக்ரோஷம். நீ சண்டை செய்தால் நானும் சண்டை செய்வேன் என்பதைத்தான் நாங்கள் உலகுக்கு உணர்த்த விரும்பினோம். எங்களுக்கான பணி காத்திருந்திருந்தது. நாங்கள் யாருக்கும் தாழ்ந்தவர்கள் இல்லை. எல்லோருக்கும் இணையானவர்கள் என்று நாங்கள் நம்பினோம். அதை இந்த உலகுக்கு நிரூபிக்கும் வாய்ப்பாக கிரிக்கெட்டைப் பார்த்தோம்.
விவியன் ரிச்சர்ட்ஸ்
கிரிக்கெட்டில் கறுப்பர்கள் கோலோச்சுவார்கள் என்பதை சில மக்களால் கற்பனைக்கூட செய்துபார்க்கமுடியவில்லை.
கார்டன் கிரீனிட்ஜ்
வெள்ளையர்கள் அவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டும் என நினைத்தார்கள். எங்களை தீவிரவாதிகள் என முத்திரைக் குத்தினார்கள். நாங்கள் நாடாக உருவாகிவிட்டோம், எழுந்துவிட்டோம் என இந்த உலகுக்கு உணர்த்தவேண்டிய நேரம் வந்தது. அதற்கு நாங்கள் கையில் எடுத்த ஆயுதம் கிரிக்கெட்.
காலின் கிராஃப்ட்
நாங்கள் பொழுதுபோக்காளர்கள். வெற்றியாளர்கள் கிடையாது. அப்போது உலகம் எங்களை அப்படித்தான் பார்த்தது. ஒரு நாள் வரும். அவர்களை நாங்கள் வீழ்த்துவோம் என்று எங்களுக்குத் தெரியும்.
ஆண்டி ராபர்ட்ஸ்
வெஸ்ட் இண்டீஸ் அணி கிரிக்கெட்டை அதன் மதிப்பு தெரிந்து விளையாடியது, வெற்றிபெற்றது.
பன்னி வெய்லர், பாப் மார்லே இசைக்குழு பாடகர்

1960-70-களில் நிறவெறி உச்சத்தில் இருந்த நேரம் அது. வெள்ளையரின் நிறவெறிக்கு எதிராக கறுப்பின மக்கள் போராடிக்கொண்டிருந்த காலம். அப்போதுதான் வெஸ்ட் இண்டீஸில், அதாவது கரீபியன் தீவுகளில் கிரிக்கெட் விளையாட்டு சூடு பிடிக்கிறது. கரீபிய தேசத்தின் மண்ணின் மைந்தர்கள் கிரிக்கெட்டை கையிலெடுக்கிறார்கள். எதற்காகத் தெரியுமா? வெள்ளையர்களிடம் நாங்கள் உங்களுக்கு இணையாவர்கள் என்பதை நிரூபிப்பதற்காக. நீங்கள் கண்டுபிடித்த, நீங்கள் சட்டங்கள் வகுத்துவைத்திருக்கும் உங்கள் விளையாட்டை விளையாடி உங்களை வீழ்த்துகிறோம் என்கிற மிகப்பெரிய சவாலோடு களத்தில் இறங்கியது வெஸ்ட் இண்டீஸ்.

இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களைப்போலவே கரீபியன் தீவுகளின் ஒவ்வொரு தீவும் வெவ்வேறு கலாசாரத்தை, உணவை, உடைப் பாரம்பர்யத்தைக் கொண்டவை. தனித்தனி தீவுகள் கிரிக்கெட்டுக்காக வெஸ்ட் இந்தியாவாக ஒன்றிணைந்தது. முதலில் அவர்களுக்கு வெள்ளையின கேப்டன்கள்தான் இருந்தார்கள். ஒரு கறுப்பர் தங்கள் அணியின் கேப்டனாவதற்கே அவர்கள் போராடவேண்டியிருந்தது. வெஸ்ட் இண்டீஸ் டீமை தோல்விகள் துரத்தின.

எல்லாத்தீவுகளில் இருந்தும் வந்துசேரும் வீரர்களை ஒன்றுதிரட்டி, அவர்களுக்குள் நாம் எல்லாம் ஒரே நாடு என்கிற எண்ணத்தை உருவாக்கி, அவர்கள் மனதுக்குள் வெற்றி வெறியை விதைத்து, ஒற்றை லட்சியத்தை நோக்கி ஓடவைக்க மிகச்சிறந்த கேப்டன், ஒரு தளபதி, ஒரு தலைவன் தேவைப்பட்டார். அந்தத் தலைவனாக வந்துநின்றவர்தான் க்ளைவ் லாய்ட்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கிரிக்கெட் வீரர் என்று சொல்லிக்கொள்ள எந்த அடையாளமும் க்ளைவ் லாய்டிடம் இருக்காது. அதிக எடைகொண்ட ஆறடி உருவம், ஃபிட்னஸ் இல்லா உடல், பெரிய கண்ணாடி என ஒரு அங்கிள் தோற்றத்தில் இருந்த இந்த க்ளைவ் லாய்ட்தான் கிரிக்கெட் உலகம் பார்த்த முதல் ரியல் தலைவன். கிரிக்கெட்டின் முதல் கூல் கேப்டன். அமைதியாக அனைத்தையும் உள்வாங்கிக்கொண்டு, எதிரணியின் திறமைகளை ஆராய்ந்து அதற்கேற்றபடி அணியை உருவாக்கி, ஒதுக்கி, ஒடுக்கி, ஓடவிடப்பட்ட அணியை செதுக்கி உலகின் நம்பர் ஒன் அணியாக உருவாக்கிய ஓர் தலைமுறைக்கான தலைவன் க்ளைவ் லாய்ட்.

தோல்வியாளர்கள் முதல்முறையாக வெற்றியாளர்களாக மாறுகிறார்கள். 1974-75-களில் இந்தியாவில் விளையாடுவதற்காக வருகிறது க்ளைவ் லாய்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி. இந்திய மண்ணில் 3-2 எனத் தொடரை வெல்கிறார்கள். அடுத்து இங்கிலாந்தில் ஒருநாள் உலகக்கோப்பை. ஆஸ்திரேலியாவை அந்தத்தொடரில் இரண்டு முறையும் தோற்கடித்து உலகக்கோப்பையை வெல்கிறார்கள். வெஸ்ட் இண்டீஸ் அணியை உலகமே உற்றுப்பார்க்க ஆரம்பிக்கிறது. அப்போதைய சூழலில் ஒருநாள் போட்டிகளில் வெல்வது, உலக சாம்பியன் ஆவதெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டமாட்டாது. கிரிக்கெட் என்றால் டெஸ்ட் கிரிக்கெட்தான். இந்த ஐந்து நாள் போட்டியில் யார் வெல்கிறார்களோ அவர்கள்தான் ரியல் சாம்பியன்ஸ். அப்போது கிரிக்கெட் அப்படித்தான்.

உலகக்கோப்பையை வென்ற அணியாக 1975-ல் செம கெத்தாக ஆஸ்திரேலியா போய் இறங்குகிறது கிளைவ் லாய்டின் படை. 6 டெஸ்ட்கள் கொண்ட தொடர் அது. முதல் டெஸ்ட் போட்டியில் இரு அணிகளுமே கடுமையாக மோத, இறுதியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெல்கிறது ஆஸ்திரேலியா.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆண்டி ராபர்ட்ஸ், மைக்கேல் ஹோல்டிங்கின் சிறப்பான பெளலிங் மற்றும் சில வீரர்களின் பேட்டிங்கால் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெறுகிறது. முதல்முறையாக ஆஸ்திரேலியாவில் வெற்றி. இந்தத் தோல்வியை ஆஸ்திரேலிய வீரர்கள், ஆஸ்திரேலிய வெள்ளையின மக்களால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. கிரெக் சேப்பல் தலைமையிலான அணிக்கு ஆஸ்திரேலியாவில் நெருக்கடி முற்றுகிறது. ``கேவலம்... கறுப்பர்களிடம் தோற்றுவிட்டார்கள்'' என மீடியாக்கள் கவர் ஸ்டோரிகள் எழுதுகின்றன. வெகுண்டெழுகிறது ஆஸ்திரேலியா. டெனிஸ் லில்லி, ஜெஃப் தாம்சனின் பெளன்சர்கள் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் தலையைக் குறைவைக்கின்றன. கைகள் உடைக்கப்படுகின்றன. ``லில்லி... லில்லி... கில்... கில்...கில்'' என வெஸ்ட் இண்டீஸ் வீரர்களை 'கொலைசெய்' என வெறியேற்றுகிறது வெள்ளையினக் கூட்டம். துப்பாக்கி முனையில் இருந்து வரும் புல்லட் போல லில்லியும், ஜெஃப் தாம்சனும் பந்துகளை எறிகிறார்கள். வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கு காயத்தை ஏற்படுத்துவதும், வலியை உண்டாக்குவதும்தான் ஆஸ்திரேலிய பெளலர்களின் நோக்கமாக இருக்கிறது. ஒரு ராணுவத் தாக்குதல்போல வெஸ்ட் இண்டீஸை சிதைக்கிறது ஆஸ்திரேலியா. வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அவமானப்படுத்தப்படுகிறார்கள். ஆஸ்திரேலிய கூட்டம் `பிளாக் பாஸ்டர்ட்ஸ்' என வெஸ்ட் இண்டீஸ் வீரர்களை வார்த்தைகளால் குத்திக்கிழிக்கிறது. ஜென்டில்மேன்'ஸ் கேம் என சொல்லப்பட்ட கிரிக்கெட், வெஸ்ட் இண்டீஸ் வீரர்களை வன்மத்துடன் அணுகுகிறது.

Viv Richards
Viv Richards
Screenshot taken from cricketworldcup.com

அடுத்த நான்கு போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸை தோல்வியடையவைத்து, அவமானப்படுத்தி, அசிங்கப்படுத்தி, 5-1 எனத் தொடரை வென்று மிகப்பெரிய தோல்வியாளர்களாக வெளியேற்றுகிறது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி.

கேப்டன் க்ளைவ் லாய்ட் மன அழுத்தத்தின் உச்சத்துக்கு செல்கிறார். ஒரு தலைவனாகத் தன்னைப் பற்றியே அவருக்குப் பல கேள்விகள் எழுகிறது. ஆனால், நம்பிக்கையோடு எழும்புகிறார். தன்னால் ஒரு மிகச்சிறந்த அணியைக் கட்டமைக்கமுடியும் என்கிற நம்பிக்கை அவருக்கு உருவாகிறது. கரீபியன் தீவுகள் முழுக்கச் சுற்றி, மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களை அடையாளம் காண்கிறார். அவரின் தேடல் தொடர்கிறது.

1976 ஜூனில் இங்கிலாந்தில் அடியெடுத்துவைக்கிறது, ஆஸ்திரேலியாவில் பெருத்த அவமானத்தை சந்தித்த க்ளைவ் லாய்டின் வெஸ்ட் இண்டீஸ் அணி. இங்கிலாந்து முழுக்க கறுப்பின மக்கள் வெஸ்ட் இண்டீஸின் வெற்றிக்காகப் பிரார்த்திக்கிறார்கள். வெஸ்ட் இண்டீஸ் தோற்றுவிட்டால் தாங்கள் வேலை செய்யும் இடங்களில் அவமானப்படுத்தப்படுவோம், கேலி செய்யப்படுவோம், இன்னும் கீழ்த்தரமாக நடத்தப்படுவோம் என்பது அவர்களுக்குத் தெரியும். அதனால் வெஸ்ட் இண்டீஸ் வெற்றிபெற்றேயாக வேண்டும் எனத் துடிக்கிறார்கள்.

தொடர் தொடங்குவதற்கு முன்பாக இங்கிலாந்து மீடியாவுக்குப் பேட்டி கொடுக்கிறார் கேப்டன் டோனி க்ரெய்க். ``வெஸ்ட் இண்டீஸ் வீரர்களை எங்கள் முன் ஊர்ந்துபோகவைப்போம்' எனத் திமிராகப் பேசுகிறார். முதல் டெஸ்ட் நாட்டிங்ஹாமில் தொடங்குகிறது. க்ளைவ் லாய்ட் வீரர்களிடம் பேசுகிறார். ``நண்பர்களே, என்னிடம் உங்களை உற்சாகப்படுத்துவதற்கான வார்த்தைகள் எதுவும் இல்லை. டோனி க்ரெய்க் சொல்லிவிட்டார். நாம் யார் என்பதை அவருக்குக் காட்டுவோம். ஊர்ந்து, தவழ்ந்து சென்ற காலம் முடிந்துவிட்டது என்பதை அவருக்கு உணர்த்துவோம்'' என்கிறார் லாய்ட். கேப்டனின் பேச்சை, தலைவனின் உணர்வை, அவனின் உணர்ச்சிகளை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறது டீம்.

விவியன் ரிச்சர்ட்ஸ் எனும் மாஸ்டர் பிளாஸ்டர் உருவாகிறார். முதல் இன்னிங்ஸில் 232 ரன்கள் அடிக்கிறார் ரிச்சர்ட்ஸ். 31 பவுண்டரி, 4 சிக்ஸர்கள். மிரண்டுபோகிறது இங்கிலாந்து. வேகப்பந்து வீச்சாளர்கள் எல்லாம் வலுவிழக்கிறார்கள். `தவழவிடுவோம்' என்று சொன்ன டோனி க்ரெய்க் டக் அவுட் ஆகிறார். அதுவும் ஆண்டி ராபர்ட்ஸ் பந்தில் கிளீன் போல்டு. மேட்ச் டிரா ஆகிறது. ஆனால், வெஸ்ட் இண்டீஸுக்குத் தேவை டிரா அல்ல... வெற்றி மட்டுமே!

இரண்டாவது டெஸ்ட் லார்ட்ஸில் தொடங்குகிறது. உடல் நலக்குறைபாட்டால் ரன் மெஷின் விவியன் ரிச்சர்ட்ஸால் இந்த டெஸ்ட்டில் ஆடமுடியாத நிலை. ஆனாலும், வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் சோர்ந்துவிடவில்லை. எப்போதெல்லாம் டோனி க்ரெய்க் பேட்டுடன் கிரீஸுக்கு வந்தாலும் கூடுதல் வெறியோடு பந்துவீசி அவரைப் பெவிலியனுக்கு அனுப்பிவைப்பதில் முனைப்புடன் செயல்பட்டது. ஆனால், இந்தப்போட்டியும் டிராவில் முடிகிறது. வெஸ்ட் இண்டீஸின் வெற்றி வெறி இன்னும் எகிறுகிறது.

மூன்றாவது டெஸ்ட்டில் கார்டன் கிரீனிட்ஜ் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சென்சுரி அடிக்கிறார். விவியன் ரிச்சர்ட்ஸ் இரண்டாவது இன்னிங்ஸில் மீண்டும் சென்சுரி. 425 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தில் பிரமாண்ட வெற்றியைப் பதிவுசெய்கிறது வெஸ்ட் இண்டீஸ். டோனி க்ரெய்க் அழுது புலம்புகிறார். தான் சொன்ன வார்த்தைகள் வேறு மாதிரி புரிந்துகொள்ளப்பட்டுவிட்டது என்கிறார். ஒரு வார்த்தைக்கான வீரியத்தை அப்போதுதான் உணர்கிறார். கலங்கியபடியே மன்னிப்பு கேட்கிறார்.

நான்காவது டெஸ்ட்... மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி... மீண்டும் கிரினிட்ஜ் சென்சுரி... விவியன் அரை சதம்.

ஐந்தாவது டெஸ்ட்... மாஸ்டர் பிளாஸ்டரின் ருத்ரதாண்டவம். 386 பந்துகளில் 291 ரன்கள் அடிக்கிறார் விவியன் ரிச்சர்ட்ஸ். பேய் அடித்ததுபோல திகைத்துப்போய் நிற்கிறது இங்கிலாந்து. ஸ்டேடியம் முழுக்க கறுப்பின மக்கள் ஆர்ப்பரிக்க, உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேனாக உயர்ந்துநிற்கிறார் விவியன் ரிச்சர்ட்ஸ். இந்த டெஸ்ட்டில் மட்டும் மைக்கேல் ஹோல்டிங் 14 விக்கெட்டுகள் எடுக்கிறார். வெஸ்ட் இண்டீஸ் தொடர்ந்து மூன்றாவது டெஸ்ட்டிலும் வெற்றிபெற்று தொடரை 3-0 என கைப்பற்றுகிறது.

Viv Richards
Viv Richards
Screenshot taken from cricketworldcup.com

தங்களுடைய `மாஸ்டர்'களின் மண்ணில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவுசெய்கிறது வெஸ்ட் இண்டீஸ். இங்கிலாந்தில் கறுப்பர்கள் பெற்ற வெற்றி ஆப்பிரிக்கா வரை கொண்டாடப்படுகிறது. ஆண்டைகளை முதல்முறையாக துரத்தி துரத்தி அடித்திருக்கிறார்கள் என ஆர்ப்பரிக்கிறது ஒடுக்கப்பட்ட மக்களின் உலகம்.

வெற்றிபெற ஆரம்பித்துவிட்டது வெஸ்ட் இண்டீஸ் அணி. ஆனால், அடுத்த போராட்டம் ஆரம்பமாகிறது. வெற்றி பெறுவதில் வெள்ளைக்காரர்களுக்கு சமமானவர்கள் எனக்காட்டியாகிவிட்டது. ஆனால், வருமானத்தில்... இங்கிலாந்து, ஆஸ்திரேலிய வீரர்களுடன் ஒப்பிடும்போது வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களின் வருமானம் மிகவும் குறைவு. கறுப்பின வீரர்கள் இருந்தாலும் வெஸ்ட் இண்டீஸ் போர்டின் நிர்வாகிகள் அப்போது முழுக்க முழுக்க வெள்ளையினத்தவர்தான். கிரிக்கெட்டில் இருந்து வரும் வருமானத்தால் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களால் வாழ்க்கையை நடத்தமுடியவில்லை.

அப்போதுதான் கிரிக்கெட்டில் இன்னொரு புரட்சி நடக்கிறது. ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பணக்காரர், தொழிலதிபர், டிவி சேனல் அதிபர் கெரி பேக்கர் கிரிக்கெட்டுக்குள் நுழைகிறார். வேர்ல்டு சீரிஸ் கிரிக்கெட் என்கிற போட்டி ஆஸ்திரேலியாவில் தொடங்கப்படுகிறது. முறையான கிரிக்கெட் அமைப்பு இல்லாமல் தனிப்பட்ட முறையில் கிரிக்கெட் போட்டியை நடத்துகிறார் கெரி பேக்கர். கிரிக்கெட்டர்கள் அப்போது வாங்கிய சம்பளத்தைவிட பல மடங்கு சம்பளம் கொடுக்கிறார். வெற்றிபெறும் அணிக்கு மிகப்பெரிய பரிசுத்தொகையை அறிவிக்கிறார். ஆனால், கனவுகளுடன் இந்தத்தொடரில் விளையாடப்போன அனைத்து கரீபிய வீரர்களுக்கும் தடை விதிக்கிறது வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் நிர்வாகம்.

இன்னொருபக்கம் கெரி பேக்கர் நினைத்துபோல வேர்ல்டு கிரிக்கெட் சீரிஸைக் காண கூட்டம் கூடவில்லை. இந்தப்போட்டித்தொடரின் வெற்றி வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் கையில்தான், அவர்களின் ஆக்ரோஷமான ஆட்டத்தில்தான் இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்கிறார் கெரி பேக்கர். ஜாலியாக, பெரிதாக வெற்றிக்காக மெனக்கெடாமல் ஆடிக்கொண்டிருந்த வெஸ்ட் இண்டீஸ் டீமுக்கு எச்சரிக்கைவிடுக்கிறார். ''சரியாக விளையாடவில்லை என்றால் திருப்பி ஊருக்கு அனுப்பப்படுவீர்கள்'' என்கிறார். கேப்டன் க்ளைவ் லாய்டிடம் ''உங்கள் டீம் ப்ளேயர்கள் ஃபிட்டாக இல்லை, ஃபிஸியோ, ட்ரெய்னரை அனுப்புகிறேன்'' எனப் பயிற்சியாளரை அனுப்புகிறார். கடுமையாகப் பயிற்சிகள் செய்கிறது வெஸ்ட் இண்டீஸ் டீம். உலகின் ஃபிட்டஸ்ட் டீமாக உருவெடுக்கிறது வெஸ்ட் இண்டீஸ். பறந்து பறந்து கேட்ச்களைப் பிடிப்பது, டைரக்ட் ஹிட் ரன் அவுட்கள் என ஆட்டத்தின் தரத்தையே உயர்த்துகிறது வெஸ்ட் இண்டீஸ் அணி.

வேர்ல்டு கிரிக்கெட் சீரிஸைக் காண கூட்டம் கூடுகிறது. `வெஸ்ட் இண்டீஸ்' வெற்றிபெற்று நாடு திரும்புகிறது. ஆனால், வெஸ்ட் இண்டீஸ் டீமில் வேர்ல்டு சீரிஸ் விளையாடிவர்களுக்கு இடம் இல்லை. போர்டு கைவிட்டாலும், மக்கள் இந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்களைக் கைவிடவில்லை. கிரிக்கெட் மைதானங்களில் மேட்சுகளை நடத்தவிடாமல் செய்கிறார்கள். தடை செய்யப்பட்ட வீரர்கள் மீண்டும் அணிக்குள் வரவேண்டும் எனப் போராட்டங்கள் நடக்கின்றன. வேறு வழியின்றி க்ளைவ் லாய்ட் தலைமையிலான அணியை வெஸ்ட் இண்டீஸ் அணிக்குள் சேர்க்கிறது கிரிக்கெட் போர்டு.

உலகின் நம்பர் 1 டீம்தான். ஆனால், ஆஸ்திரேலிய அணியை, ஆஸ்திரேலியாவில் வீழ்த்தாமல் எப்படி நம்பர் 1 அணி சொல்லிக்கொள்வது?!

79-80-ல் மீண்டும் ஆஸ்திரேலியாவுக்குப் புறப்படுகிறது வெஸ்ட் இண்டீஸ். மீண்டும் ஒரு ராணுவத் தாக்குதலை நடத்தத் தயாராகிறது ஆஸ்திரேலியா. ஸ்லெட்ஜிங்கின் சொந்தக்காரர்களான ஆஸ்திரேலிய வீரர்கள் வெஸ்ட் இண்டீஸுக்கு வார்த்தைகளால் சவால் விடுக்கிறார்கள். கெட்ட கெட்ட வார்த்தைகளால் கொக்கரிக்கிறார்கள். டென்னிஸ் லில்லி `உன் தலை உடையாமல் பார்த்துக்கொள்' என எச்சரிக்கை விடுக்கிறார்.

ஆனால், மாஸ்டர் பிளாஸ்டர் செம மாஸ் காட்டும் மோடில் வந்திறங்கியிருக்கிறார் என்பது ஆஸ்திரேலிய வீரர்களுக்குத் தெரியவில்லை. ``ஹெல்மெட்டோ, ப்ரொடெக்டிவ் கியர்களோ நான் அணிந்துகொள்ளவில்லை. எனக்கு பயம் இல்லை. வாழ்வோ, சாவோ... அது இந்த கிரிக்கெட் மைதானத்தில்தான் என்கிற ஒன்றைமட்டும்தான் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நான் சொல்ல ஆசைப்பட்டேன்'' என்றார் விவியன் ரிச்சர்ட்ஸ்.

Clive Lloyd
Clive Lloyd
Screenshot taken from cricketworldcup.com

கில்லிங் ஸ்பெஷலிஸ்ட் லில்லி மற்றும் ஹாக்கின் பந்துகளை ஹெல்மெட் இல்லாமல் தைரியமாக எதிர்கொள்கிறார் ரிச்சர்ட்ஸ். ஹாகின் ஒரு பந்து முழு வேகத்தில் எகிறிவந்து ரிச்சர்ட்ஸின் முகத்தில் அடிக்கிறது. ரிச்சர்ட்ஸ் காலி என நினைக்கிறது கூட்டம். ஆனால், எந்தவிதமான ரியாக்‌ஷனும் இல்லாமல் ஹாகையே முறைத்துப் பார்த்துக்கொண்டிருக்கிறார் ரிச்சர்ட்ஸ். அப்போதுதான் ரிச்சர்ட்ஸ் வேறு ஒருமனநிலையில் நின்றுகொன்டிருக்கிறார் என்பது ஆஸ்திரேலியாவுக்குப் புரிகிறது. முகத்தில் அடி வாங்கிய அடுத்த பந்தையே சிக்ஸருக்குப் பறக்கவிடுகிறார். ஒருபக்கம் பேட்டிங்கில் ரிச்சர்ட்ஸும், கிரினிட்ஜூம் வெளுத்தால் இன்னொருபக்கம் மைக்கேல் ஹோல்டிங்கின் பந்துகள் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களைப் பதம் பார்க்கின்றன. முதல் டெஸ்ட் டிராவில் முடிகிறது. ஆனால், வெஸ்ட் இண்டீஸுக்கு வெற்றிதானே வேண்டும். அடுத்த இரண்டு டெஸ்ட்களையும் வெல்கிறது வெஸ்ட் இண்டீஸ். எல்லா நாடுகளுக்கும் சென்று அந்த மண்ணில் அவர்களையே தோற்கடிக்கிறது வெஸ்ட் இண்டீஸ் அணி.

1984... மீண்டும் க்ளைவ் லாய்ட் தலைமையில் இங்கிலாந்து டூர். 76-ல் ஏதோ தெரியாமல் நிகழ்ந்துவிட்டது. இந்தமுறை இங்கிலாந்து விடாது என்கிறது பிரிட்டிஷ் மீடியா. ஆனால், இந்தமுறையும் இங்கிலாந்தை அடித்து துவைத்துக் காயப்போடுகிறது வெஸ்ட் இண்டீஸ். 5-0 என டெஸ்ட் தொடரை வென்று இங்கிலாந்தை வொயிட் வாஷ் செய்கிறது வெஸ்ட் இண்டீஸ். உலகில் நடந்த முதல் `பிளாக் வாஷ்'. இன்றுவரை இங்கிலாந்து, சொந்தமண்ணில் இப்படியொரு அவமானகரத் தோல்வியை சந்திக்கவில்லை. வெஸ்ட் இண்டீஸ் கம்பீரமாக எழுந்துநின்றது. கறுப்பர்கள் கிரிக்கெட்டை அடுத்த கட்டத்துக்கு கொண்டுபோனார்கள்.

வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கு கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டல்ல... சமத்துவத்தை நிலைநிறுத்துவதற்கான போர்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism