Published:Updated:

#ENGvsWI ஹோல்டர், ஜெர்மெய்ன் பிளாக்வுட்... கரீபியக் கிரிக்கெட்டின் புதுப்போராளிகள்! #RaiseTheBat

#ENGVsWI
#ENGVsWI

வெஸ்ட் இண்டீஸின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளருமான மைக்கேல் ஹோல்டிங் ரேஸிஸம் குறித்துப் பேசிய பேச்சு மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தப் பேச்சே வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கு மிகப்பெரிய தூண்டுதலாக அமைந்திருக்க வேண்டும். #ENGvsWI

உலகம் முழுவதும் தற்போது நிலவிவரும் அத்தனை பிரச்னைகளையும் நெகட்டிவிட்டிகளையும் இரண்டு மணி நேரத்திற்கு முற்றிலுமாக மறந்துபோக செய்து கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு புத்துணர்ச்சியைக் கொடுத்திருக்கிறது இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் இடையேயான சவுத்தாம்ப்டன் டெஸ்ட் போட்டியின் முடிவு.

கொரோனா பெரும் தொற்றின் காரணமாக 117 நாள்களுக்குப் பிறகு தொடங்கிய கிரிக்கெட் போட்டி என்பதோடு, ஃப்ளாய்டின் மறைவுக்குப் பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்ளும் போட்டி என்பதால் ஒருவித பரபரப்புடனேயே போட்டி தொடங்கியது. முதல்நாள் மழை குறுக்கிட 20 ஓவர்களுக்குள்ளாகவே முதல் நாள் முடிந்துவிட்டது. இந்த மழை இடைவெளியில் வர்ணணையாளரும், வெஸ்ட் இண்டீஸின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளருமான மைக்கேல் ஹோல்டிங் ரேஸிஸம் குறித்துப்பேசிய பேச்சு மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. வரலாறு எப்படி வெள்ளையினத்தவரை சாதனையாளர்களாகவும், கறுப்பினத்தவர்களை எப்படி திருடர்களாகவும் காட்டுகிறது என்பதைப்பற்றியும், தன்னுடைய சொந்தவாழ்வில் சந்தித்த நிறவெறி சம்பவங்களையும் பகிர்ந்திருந்தார் ஹோல்டிங். இந்தப் பேச்சே வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கு மிகப்பெரிய தூண்டுதலாக அமைந்திருக்க வேண்டும். #ENGVsWI

#ENGvsWI டெஸ்ட் மேட்ச் போல பார்வையாளர்களே இல்லாமல் ஐபிஎல் போட்டிகளையும் நடத்தலாமா? #VikatanPollResults
5 நாள்களும் இரு அணி வீரர்களும் ஒருவருக்கொருவர் கடும் சவால் அளிக்கும் வகையில் போட்டியிட்டு கடைசி செஷன் வரைக்குமே தரமான கிரிக்கெட்டை விளையாடி, உண்மையிலே வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டி என்பதற்கு 100% நியாயம் செய்துள்ளனர்.

டெஸ்ட்டில் எப்போதுமே கடைசி நாள் சேஸிங் என்பது பெரும் கஷ்டம்தான், அதுவும் இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் எனும்போது? 170 ரன் லீடிங்கோடு இரண்டு விக்கெட்டை கையில் வைத்துக்கொண்டு கடைசி நாளின் முதல் செஷனில் இங்கிலாந்து களமிறங்கும்போது ஆர்ச்சர் களத்தில் இருந்தார். வந்தவரைக்கும் லாபம் என்ற நோக்கில் மட்டையைச் சுழற்ற தயாராக இருந்த ஆர்ச்சரை சீக்கிரமே வெளியேற்றி இங்கிலாந்தை 199 லீடுக்குள் ஆல் அவுட் ஆக்கியது வெஸ்ட் இண்டீஸ்க்கான முதல் வெற்றி. இன்னும் 30-40 ரன்கள் கூடியிருந்தாலும் வெஸ்ட் இண்டீஸ்க்கு பிரச்னையாகத்தான் அமைந்திருக்கும்.

Jofra Archer
Jofra Archer
ENGLAND CRICKET
கடைசி நாளில் 200 ரன் டார்கெட் என்பதுமே போட்டி முடிவு எந்த அணிக்கும் சாதகமாகச் செல்லும் வகையிலான ஸ்கோர்தான். அதுவும் வெஸ்ட் இண்டீஸ் மாதிரியான ஒரு நிலையற்ற அணிக்கு 200 ரன் டார்கெட் என்பது கொஞ்சம் கூடுதல் கடினமே!

அதிலும் 27 ரன்களுக்கு 2 விக்கெட் என்ற நிலையில், மார்க்வுட் பந்துவீச்சில் ஹோப் ஆஃப் ஸ்டம்ப்பை பறிகொடுத்து வெளியேறியவுடனே ஆட்டம் இங்கிலாந்து பக்கம் திரும்புவதுபோல தெரிந்தது. ஆனால், இதன்பிறகு களத்தில் சேஸ், ப்ளாக்வுட், டவ்ரிச் மூவரும் காட்டிய நிதானம் ஆட்டத்தை வெஸ்ட் இண்டீஸ் பக்கம் மாற்றியது.

இவர்களின் இந்த நிதானம்தான் ஸ்டோக்ஸ்க்கு பதற்றத்தை கொடுக்க ஆரம்பித்தது. விக்கெட் விழுந்தால் போதும் என எல்லா அப்பீல்களுக்கும் ரிவியூ கேட்க ஆரம்பித்தார். இதற்கு இடையே மூன்று கேட்ச் ட்ராப்கள் வேறு. அதிலும் விக்கெட் கீப்பர் பட்லர், பர்ன்ஸ் விட்டதெல்லாம் ''என்ன கொடும சார்'' என்கிற ரேஞ்சிலேயே இருந்தது.

சேஸ்-பிளாக்வுட் பார்ட்னர்ஷிப்பின் நிதானத்தைப் பார்த்து வெறியான ஆர்ச்சர் ஒரு கட்டத்தில் ஷார்ட் பிட்ச் பாலாகவும் பவுன்சராகவும் போட்டுத்தாக்கினார். இது ஓரளவுக்கு வொர்க் அவுட்டும் ஆனது. முதல் இன்னிங்ஸிலிருந்தே வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கு எந்தப் பந்தை அடிக்காமல் விடுவது என்பதில் குழப்பம் இருந்தது. ஆர்ச்சர் ஓவருக்கு ஆறு பந்தையும் ஷார்ட் பிட்ச்சாகப் போட்டதால் சேஸ் குழம்பிப்போய், பேட்டை விட எட்ஜ் ஆகி கேட்ச் ஆனார். இதன்பிறகு பிளாக்வுட்டையும் ஷார்ட் பாலை வைத்தே காலியாக்கிவிடலாம் என அவருக்கும் அதே யுக்தியை பயன்படுத்தினார் ஆர்ச்சர். ஸ்லிப் ஆகி கீழே விழுந்தாலும் விழுவேனேத் தவிர ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து அவுட் ஆக மாட்டேன் என்பது போல் ஆர்ச்சரை வம்படியாக சமாளித்தார் பிளாக்வுட். ஆர்ச்சர்-பிளாக்வுட் ரைவல்ரி ஆர்வத்தைக் கூட்டியது. சேஸ் ஆட்டமிழந்தாலும் அடுத்து டவ்ரிச் நல்ல பார்ட்னர்ஷிப் கொடுக்க வெஸ்ட் இண்டீஸ் வெற்றியை நோக்கி முன்னேறியது.

Jermaine Blackwood
Jermaine Blackwood
Windies Cricket

கடைசியில் இங்கிலாந்து அணியின் லக்கி சார்ம் பென் ஸ்டோக்ஸ் நோ பாலில் டவ்ரிச்சின் விக்கெட்டை எடுத்து திரும்ப மீண்டும் அடுத்த பந்திலேயே அவரை வெளியேற்ற, வெஸ்ட் இண்டீஸின் வெற்றிக்கு ஸ்டோக்ஸ் எதுவும் மேஜிக்கல் பெர்ஃபார்மென்ஸினால் முட்டுக்கட்டை போட்டுவிடுவாரோ எனத் தோன்றியது. ஆனால், முடியவில்லை. வெஸ்ட் இண்டீஸ் முதல் டெஸ்ட் போட்டியை வெற்றிகரமாக வென்றது. ஒரே ஒரு குறை பிளாக்வுட் இன்னும் கொஞ்சம் பொறுத்திருந்து சதமடித்திருந்தால் வெஸ்ட் இண்டீஸின் வெற்றி இன்னும் வெறித்தனமாக இருந்திருக்கும்.

பிராத்வெயிட், சேஸ், டவ்ரிச், பிளாக்வுட், ஹோல்டர், கேப்ரியல், ஜோசப் என வழக்கத்துக்கு மாறாக ஒரு டீமாக வெஸ்ட் இண்டீஸ் அணி கடுமையாகப் போராடி இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியுள்ளது.

இங்கிலாந்தும் எந்த இடத்திலும் கேமை விட்டுக்கொடுக்காமல் கடைசி வரைப் போராடவே செய்தனர். இன்னும் ஒரு 30 ரன்கள் கூடுதலாக அடித்திருந்தாலோ, டிராப் ஆன அந்த 3 முக்கிய கேட்ச்சுகளை பிடித்திருந்தாலோ போட்டி இன்னும் சுவராஸ்யமாகியிருக்கும்.

வெஸ்ட் இண்டீஸ் வெற்றியை நெருங்கிக்கொண்டிருந்தபோது 'கம் ஆன் பாய்ஸ்' என உற்சாகமாக பெருமிதத்தோடு விவியன் ரிச்சட்ஸ் செய்திருந்த ட்வீட் போதும் இந்த வெற்றி வெஸ்ட் இண்டீஸ்க்கு எவ்வளவு முக்கியமானது என்பதை உணர்த்துவதற்கு!
West Indies
West Indies
Windies cricket

இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய கேப்டன் ஜேஸன் ஹோல்டரின் பங்கு இந்த வெற்றியில் மிக முக்கியமானது. அதேப்போல் வேகப்பந்து வீச்சாளர் கேப்ரியெல்லின் பெளலிங்கும்.

ஒவ்வொரு முறை ரேஸிஸம் தொடர்பான பிரச்னைகள் தலைதூக்கும் போதும் வெஸ்ட் இண்டீஸ் தனது கிரிக்கெட் மூலம் பதிலடி கொடுத்துகொண்டேதான் இருக்கிறது. இந்த முறையும் இங்கிலாந்து மண்ணில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்துவிட்டது. இப்படியே இந்தத் தொடரையும் வென்றுவிட்டால் வெஸ்ட் இண்டீஸ் வரலாற்றிலும் சரி, தற்போதைய சூழலிலும் சரி அது ஒரு மைல்கல் வெற்றியாக இருக்கும். கரீபியன் களப் போராளிகளின் போராட்டம் நிச்சயம் தொடரும். காத்திருப்போம்!

அடுத்த கட்டுரைக்கு