Published:Updated:

ஸ்மித் எனும் ராஜபோதை... அவமானத்தால் அழுதவன் மீண்டெழுந்த கதை!

steve smith

உச்சத்திலிருந்து பல அவமானங்களுடன் அதலபாதாளத்தில் விழுந்து மீண்டும் உச்சம் நோக்கி உயர்ந்து வருவது ஒரு பெரும்போதை... அது ஒரு ராஜபோதை... ஸ்மித் இப்போது ராஜபோதையில் திளைத்துக்கொண்டிருக்கிறார். நம்மையும் திளைக்கவைக்கிறார்!

ஸ்மித் எனும் ராஜபோதை... அவமானத்தால் அழுதவன் மீண்டெழுந்த கதை!

உச்சத்திலிருந்து பல அவமானங்களுடன் அதலபாதாளத்தில் விழுந்து மீண்டும் உச்சம் நோக்கி உயர்ந்து வருவது ஒரு பெரும்போதை... அது ஒரு ராஜபோதை... ஸ்மித் இப்போது ராஜபோதையில் திளைத்துக்கொண்டிருக்கிறார். நம்மையும் திளைக்கவைக்கிறார்!

Published:Updated:
steve smith

நீங்கள் மாணவராக இருக்கலாம்... அலுவலகத்தில் பணியாற்றலாம்... தொழில்முனைவோராக இருக்கலாம்... உங்கள் கல்லூரியில், அலுவலகத்தில், தொழிலில் அவமானப்படுத்தப்பட்டிருக்கிறீர்களா, நீங்கள் தவறு செய்யாமல் அதற்கான உச்சபட்ச தண்டனையை அனுபவித்திருக்கிறீர்களா, எல்லோர்முன்னும் கூனிக்குறுகியிருக்கிறீர்களா..?

steve smith
steve smith

இப்படி அவமானப்பட்டு, அழவைக்கப்பட்டு, குற்ற உணர்ச்சியால் குறுகவைத்த கூட்டத்துக்கு முன் மீண்டெழுந்திருக்கிறீர்களா, அவமானப்படுத்தியவர்களை அலட்சியப்படுத்திவிட்டு முன்னேறியிருக்கிறார்களா, ``செத்துட்டானா பார்?' என்று கேட்டவர்களை தொடர் வெற்றிகளால் பழிவாங்கியிருக்கிறீர்களா, உச்சத்தில் நின்று கேலி பேசியவர்களை கலங்கடித்திருக்கிறீர்களா, உங்களுக்கு மனவலியைக் கொடுத்தவர்களுக்கு நீங்கள் மன அழுத்தத்தைக் கொடுத்திருக்கிறீர்களா?

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உச்சத்திலிருந்து பல அவமானங்களுடன் அதலபாதாளத்தில் விழுந்து மீண்டும் உச்சம் நோக்கி உயர்ந்து வருவது ஒரு பெரும்போதை... அது ஒரு ராஜபோதை... ஸ்மித் இப்போது ராஜபோதையில் திளைத்துக்கொண்டிருக்கிறார். நம்மையும் திளைக்கவைக்கிறார்... பாசிட்டிவிட்டியின் உச்சத்தைக் காட்டிக்கொண்டிருக்கிறார்... நம் தோல்விகளை மறந்து வெற்றியை நோக்கி வெறியோடு நகரவைத்துக்கொண்டிருக்கிறார்.

கடந்த ஆண்டு சிட்னி விமானநிலையத்தில்... பல கோடி கண்களுக்கு முன்... ஒரு சிறுவனைப்போல ஸ்மித் தேம்பித் தேம்பி அழுதது இன்னமும் மனதைக் கலங்கடிக்கிறது. ``நான் தவறுசெய்துவிட்டேன்... என்னை மன்னித்துவிடுங்கள்'' என்று திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டேயிருந்தார் உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித்.

Steve Smith
Steve Smith

தன் தந்தையைப் பக்கத்தில்வைத்துக்கொண்டு ``என் குடும்பத்துக்கு எவ்வளவு பெரிய அவமானத்தை ஏற்படுத்திவிட்டேன்... என் நாட்டுக்கு என்னால் அவப்பெயர்... காலம் என்னை மன்னிக்குமா எனத் தெரியவில்லை... சிறுவர்களுக்கு மிகமோசமான முன்னுதாரணமாக ஆகிவிட்டேன்'' எனக் குற்ற உணர்வால் குறுகிப்போய், தாழ்உணர்ச்சியால் துவண்டுபோய், அவமானத்தால் மதிப்பிழந்துபோய், தலைகுனிந்து நின்ற ஸ்மித்தை ஓராண்டுக்கு முன் கிரிக்கெட் உலகமே பார்த்தது. அவர் மனம் திறந்து அழுதபோதும், தவறுக்காக மன்னிப்பு கேட்டபோதும் உலகம் அவரை `மோசடிக்காரர்' என்றே மீண்டும் மீண்டும் அவமானப்படுத்தியது.

ஆமாம்... நமக்கெல்லாம் தவறிழைத்தவர்கள், ஆதாரங்களுடன் பொதுவெளியில் சிக்கியவர்கள் எல்லாம் கேமராக்களுக்கு முன் சிரித்தமுகத்துடன் ``நான் ஒன்றும் தவறு செய்யவில்லை... எனக்கு எதிராக சதி நடக்கிறது... சட்டப்படி என்னை நிரூபிப்பேன்'' என்று எந்தக் குற்றவுணர்ச்சியும் இல்லாமல் பேசுவதைப் பார்த்துத்தான் பழக்கம். ஆனால் கேப்டனாக முன்நின்று, தவறுக்குப் பொறுப்பேற்று தலைகுனிந்து நின்ற தலைவனைப் பார்த்தது நமக்குப் புதிது.

அந்த உப்புத்தாள் ஐடியா அவருடையதல்ல... அந்த உப்புத்தாளை அவர் தொடவில்லை... அதை இன்னொருவர் கையில் அவர் திணிக்கவில்லை. ஆனால், தலைவனாக நின்று இதையெல்லாம் தடுத்திருக்கவேண்டும். மாறாக வேடிக்கை பார்த்தார் ஸ்மித். வேடிக்கை பார்த்ததற்கான தண்டனைதான் இத்தனை அவமானங்களும்!

கடந்த ஆண்டு மார்ச் மாதம்... கிரிக்கெட் கரியரில் மிக மிக முக்கியக் கட்டத்தில் இருந்தார் ஸ்டீவ் ஸ்மித். 2015-ல் மைக்கேல் கிளார்க்கின் ஓய்வுக்குப் பிறகு இரண்டரை ஆண்டுகளாக ஆஸ்திரேலிய கிரிக்கெட்டை தலைமையேற்று நடத்தும் பொறுப்பு. டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்றிலுமே ஆஸ்திரேலியாவுக்காக அசாத்திய பங்களிப்பு. கேப்டனாக ஆஸ்திரேலியாவுக்கு அவர் பெற்றுத்தந்த வெற்றிகள் அதிகம்.

தனி பேட்ஸ்மேனாக உச்சத்தில் இருந்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 60 சதவிகிதத்துக்கும் மேல் ஆவரேஜ் வைத்திருந்த ஒரே பேட்ஸ்மேன். டெஸ்ட் கிரிக்கெட் இன்னும் பல ஆண்டுகளுக்கு ஸ்டீவ் ஸ்மித்தின் கட்டுப்பாட்டில்தான் இருக்கும் என எல்லோரும் வியந்துகொண்டிருந்த தருணம். உச்சபட்ச ஃபார்மில் தனி ஒருவனாக ராஜநடை போட்டுக்கொண்டிருந்த நேரம்... ஒரே ஒரு சம்பவம் ஒட்டுமொத்த சாதனை வரலாற்றையுமே கிழித்து தூக்கித் தூரப்போட்டுவிட்டது. டெஸ்ட் கிரிக்கெட்டின் உச்சத்தில் இருந்தவர் அதலபாதாளத்தில் விழுந்தார்.

Steve Smith
Steve Smith

கேப்டன்ஸி பறிப்பு... ஓராண்டு காலம் கிரிக்கெட் விளையாடத் தடை... ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்கள் முன் குற்றவாளிக் கூண்டு... எல்லாவற்றுக்கும் மேல் எங்கு போனாலும் பின்தொடர்ந்த `சீட்டர்' பட்டம்... கிரிக்கெட் வரலாற்றில் இப்படி ஓர் அவமானத்தை எந்த வீரனும் சந்தித்ததில்லை... ஆனால், அத்தனை அவமானங்களையும் சுமந்தவன்தான் தடை முடிந்து டெஸ்ட் விளையாட வந்த மூன்றே வாரத்தில்... நான்கே இன்னிங்ஸ்களில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக மீண்டும் உச்சத்தில் உயர்ந்து நிற்கிறான்.

டெஸ்ட்டில் ஸ்மித்தின் ரீ-என்ட்ரிக்காகக் குறிக்கப்பட்ட இடம் இங்கிலாந்து... பரம எதிரியின் களம்... ஆஷஸ் எனும் கூடுதல் உஷ்ணம்... `சீட்டர்' என்னும் கேலிக்குரலால் வீழ்த்திவிடத்துடித்த இங்கிலாந்து ரசிகர்கள் ... இதை எதையுமே கண்டுகொள்ளவில்லை ஸ்மித். நான்கே இன்னிங்ஸ்களில் 500 ரன்களைக் கடந்திருக்கிறார். இரண்டு சதம், ஒரு இரட்டை சதம்... மீண்டும் உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேன் என்கிற பட்டம்... Yes... Steve Smith is back!

steve smith
steve smith

பர்மிங்ஹாமில் ஆடிய முதல் இன்னிங்ஸிலேயே 144 ரன்கள்... இரண்டாவது இன்னிங்ஸில் மீண்டும் ஒரு சதம்... 142 ரன்கள்... 250 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவுக்கு, இங்கிலாந்து மண்ணில் ஆஷஸ் வெற்றியைத் தொடங்கிவைத்தார் ஸ்மித். அடுத்த போட்டி லார்ட்ஸில்... 80 ரன்களில் மிகச்சிறந்த கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்த ஸ்மித்தின் தலையை நோக்கி பவுன்ஸரை வீசினார் ஆர்ச்சர். ஜோஃப்ரா ஆர்ச்சரின் பந்து ஸ்மித்தின் மூளையைத் தாக்கியது. பரிதாபமாக பிட்ச்சில் மயங்கி விழுந்தார்... மைதானத்திலிருந்து தூக்கிச் செல்லப்பட்டார். ஆனால், அப்போதும் ரசிகர்களிடமிருந்து `சீட்டர்' எனும் கேலிக்குரல் கேட்டது. மூன்றாவது டெஸ்ட்டில் விளையாட முடியவில்லை... ஜோஃப்ரா ஆர்ச்சர் சவால் விட்டார்... ஆனால் நடந்தது வேறு!

``ஆர்ச்சரின் பந்துவீச்சில் நான் தடுமாறுவதாகச் சொல்கிறார்கள். ஆனால் உண்மையில் அவர் என்னை ஆட்டமிழக்கச் செய்யவில்லை. பிட்ச்சில் சில பள்ளங்கள் இருந்தன. அதனால் அவர் பந்து என்னைத் தாக்கியது அவ்வளவுதான்... மற்ற பந்துவீச்சாளர்கள் கூட என்னை வீழ்த்தியுள்ளனர். ஆனால் ஆர்ச்சர் என்னை ஆட்டமிழக்கச் செய்யவில்லை. அவர்கள் எப்படிப் பந்து வீசினாலும் என்னை வீழ்த்த முடியாது. என்ன நடக்கிறது எனப் பார்க்கலாம்'' என கெத்தாகப் பேட்டி கொடுத்துவிட்டுத்தான் நான்காவது டெஸ்ட் ஆட, ஓல்டு டிராஃபோர்டு மைதானத்துக்கு வந்தார் ஸ்மித்.Qf

steve smith
steve smith

ஹாரிஸ் ஆட்டமிழந்து ஸ்மித் உள்ளேவர, சந்திக்கவேண்டிய முதல் பந்தே ஆர்ச்சருடையதாக அமைந்தது. 2 ஸ்லிப், ஒரு கல்லி, ஒரு லெக் ஸ்லிப், ஒரு ஷார்ட் லெக் என அட்டாக்கிங் ஃபீல்டு செட் செய்துவிட்டு மணிக்கு 140 வேகத்தில் பந்துவீச ஆரம்பித்தார் ஆர்ச்சர். அதில் அவருடைய ஆயுதமான பவுன்ஸர்களும் அடக்கம். ஆனால், ஸ்மித் ஆர்ச்சரை அசால்ட்டாகக் கடந்துபோனார். ஸ்மித் களத்தில் இருக்கும்வரை 23 ஓவர்கள் பந்து வீசினார் ஆர்ச்சர். ஸ்மித்தை அசைக்க முடியவில்லை. ஸ்மித் சொன்னதுதான் நடந்தது. இங்கிலாந்தின் ஸ்ட்ரைக் பெளலர்கள் யாராலும் ஸ்மித்தின் விக்கெட்டை வீழ்த்தமுடியவில்லை. 319 பந்துகளில் 211 ரன்கள்... டெஸ்ட் கிரிக்கெட்டின் மிகச்சிறந்த இன்னிஸ்களில் ஒன்றாக வரலாற்றில் நிற்கப்போகிறது ஸ்மித்தின் இந்த இரட்டை சதம்.

கிரிக்கெட் ரசிகர்களின் வாழ்வில் இது ஓர் உன்னத தருணம்... உலகின் மிகப்பெரிய, மிகச்சிறந்த, மிகமுக்கியமான பேட்ஸ்மேனின் ஆட்டத்தை சமகாலத்தில் பார்த்து ரசிக்கும் வாய்ப்பு...

ஸ்மித் ராஜபோதையைக் கொடுத்துக்கொண்டிருக்கிறார்... மகிழ்ந்திருப்போம்