Published:Updated:

16 வயது சச்சின் டெண்டுல்கர் இந்திய அணிக்குள் நுழைந்த கதை! #OnThisDay

The young master

இது சச்சின் சர்வதேச கிரிக்கெட்டில் செய்த சாதனைக் கதையில்லை. சர்வதேச அரங்கில் கால் பதிப்பதற்கு முந்தைய கதை. இளம் சச்சினின் கதை.

16 வயது சச்சின் டெண்டுல்கர் இந்திய அணிக்குள் நுழைந்த கதை! #OnThisDay

இது சச்சின் சர்வதேச கிரிக்கெட்டில் செய்த சாதனைக் கதையில்லை. சர்வதேச அரங்கில் கால் பதிப்பதற்கு முந்தைய கதை. இளம் சச்சினின் கதை.

Published:Updated:
The young master
சச்சின் தனது முதல் சர்வதேச ஆட்டத்தை ஆடிய தினம் இன்று. சச்சின் வெறும் பதினாறு வயதிற்குள்ளேயே அணிக்கு வந்துவிட்டதால் தான் இத்தனை சாதனைகளை படைக்க முடிந்தது என்று பலர் கூறுவர். ஆனால் அவர்களுக்கெல்லாம் தெரியாது பதினாறு வயதிற்குள்ளேயே அணிக்கு வருவது எவ்வளவு பெரிய சாதனை என்று. அதற்காக சச்சின் செய்த தியாகங்கள் பல. பயிற்சி எடுக்கும் இடத்திற்கும் வீட்டிற்கும் தூரம் அதிகமாக இருக்கிறது என்று அடம்பிடித்து வீட்டையே மாற்றியவர் அவர்! சச்சின் டெண்டுல்கர் - அந்தக் கால பம்பாயில் பள்ளிகளுக்கு இடையே நடக்கும் கிரிக்கெட்டின் சூப்பர்ஸ்டார்.

சச்சின் என்றால் சதம் என்பது அவர் சர்வதேச கிரிக்கெட்டிற்குள் நுழைந்த பின்பு கிடைத்த பெயரல்ல. அவர் பள்ளிக்கூட கிரிக்கெட் விளையாடும் போதே 'சச்சின் விளையாடினாலே சதம் கடப்பார்' என்பது மும்பை அறிந்த உண்மை. சச்சினும் அதற்கு ஏற்ப விளையாடும் ஒவ்வொரு ஆட்டத்திலும் ரசிகர்களுக்கு விருந்து படைப்பார். வேலை முடிந்து வீடு திரும்புபவர்கள்கூட சிறிது நேரம் ஓரமாக நின்று சச்சினின் ஆட்டத்தை ரசித்துவிட்டுச் செல்வது அப்போதெல்லாம் பம்பாயில் வாடிக்கை. சச்சின் ஆடினால் ஒவ்வொரு பந்தும் ஃப்ரீ ஹிட் மாதிரி வானத்தில் பறக்கும் என்றும் எதிரணி பந்து வீச்சாளர்கள் எல்லாம் ஓவர் டைம் பார்க்க வேண்டியது கட்டாயம் என்பதும் அப்போது மொத்த மும்பைக்கும் தெரியும்.

மும்பை, 1988.

அன்றைய நாள் ஆட்டம் முடிந்து சிறுவர்கள் சச்சின், காம்ப்ளி இருவரும் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். "காலையில் முதல் வேளையாக டிக்ளேர் செய்துவிட்டு ஆட்டத்தை வெற்றியுடன் முடிக்கப் பாருங்கள்" - பயிற்சியாளர் சற்று அழுத்தமாக கூறிவிட்டு சென்று விட்டார். வீடியோ கேமில் கிரிக்கெட் ஆடும் போது 99 ரன்களில் ஆட்டமிழந்தால்கூட அதை ஜீரணிப்பது சற்று கடினமான காரியம். ஆனால் இந்த சிறுவர்கள் முக்கியமான அரையிறுதி போட்டியில் ஆடிக் கொண்டிருக்கின்றனர். அதுவும், இருவரும் 192 மற்றும் 182 ரன்கள் என அடித்து குவித்திருக்கிறார்கள். இன்னமும் அரை மணி நேரம் களத்தில் இருந்தால்கூட இருவருமே இரட்டை சதம் கடக்க முடியும். ஆனால் பயிற்சியாளரோ ஆட்டத்தை விரைந்து முடிக்க வேண்டுமென டிக்ளேர் செய்யச் சொல்லிவிட்டார்.

மறுநாள் வந்தது. சிறுவர்கள் இருவரும் அன்றைய நாள் ஆட்டத்தைத் தொடங்கத் தயாராக இருக்கும்போது சுற்றிமுற்றி தேடிப் பார்த்தனர். அந்த ஸ்ட்ரிக்ட் பயிற்சியாளரை எங்கும் காணவில்லை. இருவரும் அவர் வேறு ஒரு ஆட்டத்தைக் காண சென்றிருக்கிறார் என்பதை உறுதி செய்துவிட்டு, பேட்டுடன் களத்திற்குள் இறங்குகின்றனர். மறுபடியும் இவர்களுக்கு பந்து வீச வேண்டுமா என்று நினைத்துக் கொண்டே எதிரணியும் வந்தது. "கோச் எப்போது வருவார் தெரியாது... அவர் வருவதற்குள் எவ்வளவு அடிக்க முடியுமோ அடித்து விட வேண்டும்" - இதுதான் அன்றைக்கு அவர்களின் டாஸ்க். மதியம் வரை இவர்கள் விளையாடிக்கொண்டே இருந்தது எப்படியோ பயிற்சியாளரின் காதுகளுக்கு சென்றுவிட, இன்னமும் டிக்ளேர் செய்யவில்லையா? என்ற கோபமான குரலில் டெலிபோன் ஒலிக்கிறது. பயத்துடன் நடுங்கிக் கொண்டே ஆட்டத்தை இருவரும் டிக்ளேர் செய்கிறார்கள். அடுத்த நாள் பத்திரிக்கைகள் '15 வயது சிறுவர்கள் தேசிய சாதனை' என்ற செய்தியைத் தாங்கி வந்தது.

சச்சின் டெண்டுல்கர், வினோத் காம்ப்ளி - இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டுக்கு 664 ரன்கள் சேர்த்தனர். இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் ஜாம்பவனாக பிற்காலத்தில் வலம் வந்த அமல் முஜும்தார் அன்றைய ஆட்டத்தின்போது, தான் இரண்டு நாள் முழுக்க காலில் பேடுகளை மாட்டிய வண்ணமாகவே அமர்ந்திருந்ததாக கூறினார். இந்த ஆட்டத்தின்போது, பந்து வீச்சாளர்கள் எல்லாம் களைப்பாகி அடுத்த ஓவர் யார் வீசப்போவது என்று கேட்டபோதெல்லாம் யாரும் முன்வரவில்லை என்றுகூட ஒரு செவிவழிச் செய்தி உண்டு. பம்பாய்க்குள் மட்டும் சுற்றிக்கொண்டிருந்த சச்சினின் பெயரை ஆல் இந்தியா பெர்மிட்டாக மாற்றியது இந்த ஆட்டம்தான். சதம் அடித்தால் பெரிதாகப் பேசப்படும் நிலை மாறி சச்சின் வேகமாக அவுட் ஆனால் அது பெரிதாகப் பேசப்பட ஆரம்பித்தது.

சச்சினுக்கு அவர் பயிற்சியாளர் அச்ரேக்கர் கொடுத்த பயிற்சி பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்கும். காலை ஏழு மணிக்கு ஆரம்பிக்கும் பயிற்சி இரவு எட்டு மணி வரைக்கு நீளும். ஸ்டம்ப்பில் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து, சச்சினை அவுட் செய்பவர்கள் இந்த நாணயத்தை எடுத்துச் செல்லலாம் என்று கூறுவாராம் பயிற்சியாளர் அச்ரேக்கர். யாராலும் முடியாமல் பல முறை சச்சின் தான் அந்த நாணயத்தை வென்றுள்ளார்.

தீவிர பயிற்சியின் விளைவாகத் தான் பள்ளிகளுக்கு இடையே நடந்த ஹாரிசன் ஷீல்ட் தொடரில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்தத் தொடரில் விளையாடும் போதே கைல்ஸ் ஷீல்ட் என்ற மற்றொரு தொடரிலும் ஆடினார் சச்சின். ஹாரிசன் ஷீல்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் 125 ரன்களுக்கு ஆட்டமிழந்த சச்சின், அதன் பிறகு அந்தத் தொடரில் 207, 326, 346 என்று ரன்களைக் குவித்தார். ஆச்சர்யமான விஷயம் என்ன என்றால் முதல் ஆட்டத்தில் ஆட்டமிழந்த பிறகு ஒரு முறைகூட அவர் அந்தத் தொடரில் ஆட்டமிழக்கவில்லை. இந்தத் தொடரின் அரையிறுதிப் போட்டியில்தான் சச்சின் காம்ப்ளியுடன் இணைந்து உலக சாதனை படைத்தார். இந்த அரையிறுதி ஆட்டம் முடிந்த அடுத்த நொடி மற்றொரு மைதானத்திற்குச் சென்று கைல்ஸ் ஷீல்ட் தொடரில் விளையாடி அதிலும் சதம் கடந்தார் சச்சின்.

ஹாரிசன் ஷீல்ட் தொடரின் இறுதி ஆட்டத்தில் சச்சின் 346 ரன்கள் குவிக்க அந்த ஆட்டத்தை கவாஸ்கர், வெங்சர்கார் போன்றவர்கள் எல்லாம் மைதானத்தில் அமர்ந்து பார்த்தனர். இந்த ஆட்டம் முடிந்த பிறகுதான் கவாஸ்கரின் பேட்டிங் பேடுகள் சச்சினுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டன. இந்த ஆட்டம் முடிந்த அடுத்த நாளே சச்சினின் பெயர் ரஞ்சி டிராபி தொடரில் இடம் பெற்றது. தொட்டதெல்லாம் துலங்கும் என்ற வாக்கியத்தின் அர்த்தத்தை பலரும் அப்போதுதான் உணர்ந்திருப்பர். ரஞ்சி போட்டியில் விளையாடிய முதல் ஆட்டத்திலேயே சதம் கடந்தார் சச்சின். ஏழு ஆட்டங்களில் 64.7 என்ற சராசரியுடன் 583 ரன்கள் எடுத்தார் சச்சின். உடனடியாக இரானி கோப்பை தொடரில் அவரது பெயர் இடம்பெற்றது.

The legends!
The legends!

ரஞ்சி தொடரில் கோப்பை வென்ற டெல்லி அணிக்கு எதிராக இரானி கோப்பை தொடர் தொடங்க இருந்தது. அந்த ஆட்டம் முடிந்ததும் தான் பாகிஸ்தான் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படவிருந்தது. மொத்த ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியின் ஸ்கோன் 304. அதில் சச்சினின் ரன்கள் மட்டும் 103. கபில் தேவ், அசாருதீன் போன்ற பெயர்களுடன் குட்டியாக சச்சினின் பெயரும் பாகிஸ்தான் தொடரில் இடம்பெற்றது. அதன் பின் அவர் 24 ஆண்டுகள் கிரிக்கெட்டின் முடிசூடா மன்னனாக விளங்கியது பலரும் அறிந்த வரலாறு.

பலரும் பக்குவம் அடைய தொடங்கும் பதின் பருவங்கள் முடிவதற்குள்ளேயே சச்சின் இரண்டு மூன்று நாடுகளில் சதம் கடந்து விட்டார். சச்சின் 16 வயதில் அணிக்கு வந்துவிட்டார் என்பதை விட 16 வயதிற்குள் அவர் எப்படி எல்லாம் தியாகம் செய்து என்ன எல்லாம் சாதித்தார் என்பதே நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய பாடம்.