Published:Updated:

ஹிட்மேனை டெஸ்ட் மேனாக்கிய முதல் ஓவர்சீஸ் சதம்! எப்படிச் சாதித்தார் ரோஹித் ஷர்மா?

ரோஹித் ஷர்மா

ஒருநாள் போட்டிகளிலேயே இரட்டைச் சதங்கள் ரோஹித் ஷர்மாவுக்கு சர்வ சாதாரணம் என்றாலும், அந்த இன்னிங்ஸ்களைக்கூட பின்னுக்குத் தள்ளி ஒய்யாரமாக உச்சத்தில் ஏறியுள்ளது ஓவலில் வந்துள்ள அவரது முதல் டெஸ்ட் ஓவர்சீஸ் சதம்.

ஹிட்மேனை டெஸ்ட் மேனாக்கிய முதல் ஓவர்சீஸ் சதம்! எப்படிச் சாதித்தார் ரோஹித் ஷர்மா?

ஒருநாள் போட்டிகளிலேயே இரட்டைச் சதங்கள் ரோஹித் ஷர்மாவுக்கு சர்வ சாதாரணம் என்றாலும், அந்த இன்னிங்ஸ்களைக்கூட பின்னுக்குத் தள்ளி ஒய்யாரமாக உச்சத்தில் ஏறியுள்ளது ஓவலில் வந்துள்ள அவரது முதல் டெஸ்ட் ஓவர்சீஸ் சதம்.

Published:Updated:
ரோஹித் ஷர்மா
வொய்ட் பால் கிரிக்கெட்டில் இந்தியாவின் ஒப்பற்ற ஓப்பனர் ரோஹித் ஷர்மா. பல சாலச்சிறந்த சம்பவங்களை அதில் அவர் ஏற்கெனவே நிகழத்திக் காட்டிவிட்டார். எனினும், டெஸ்ட் ஃபார்மட்டில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவே அவர் வெகுவாகத் தடுமாறினார். அந்தத் தடுமாற்றத்திற்குக் காரணம், கட்டற்ற காட்டாறாய் எதிரணியின் பௌலிங் படையை ஊடுருவித் தாக்கும் அவரது அணுகுமுறைதான்.

2013-ம் ஆண்டு, சச்சினின் இறுதி டெஸ்ட் தொடரிலேயே, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக, அறிமுக வீரராகக் களமிறக்கப்பட்டிருந்தார், ரோஹித் ஷர்மா. அந்தப் போட்டியிலேயே 177 ரன்களைக் குவித்து, டெஸ்ட் அரங்கை அதிரவும் வைத்தார். அதே தொடரிலேயே, இன்னொரு சதமும், சத்தமின்றி வந்து சேர்ந்திருந்தது. ஆனாலும்கூட, அடுத்த சில ஆண்டுகள், ரோஹித்தால் டெஸ்ட் தொடரில் முழுமையாக ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. இரண்டாவது சதத்திற்குப் பின், அடுத்த டெஸ்ட் சதம் வந்து சேரவே நான்கு ஆண்டுகள் பிடித்தன. இந்தக் காலகட்டம் வரையிலும், பின்வரிசை வீரராகவே வலம் வந்தார் ரோஹித். அங்கே அவரால் எதிர்பார்த்த அளவு சோபிக்க முடியவில்லை.

ரோஹித் ஷர்மா
ரோஹித் ஷர்மா

சொல்லப் போனால் 2018 இங்கிலாந்து சுற்றுப் பயணத்தின் போது, இந்தக் காரணத்தாலேயே, இந்திய டெஸ்ட் அணியில் அவர் இடம்பெறவில்லை. ஆனால், சந்தித்த அந்த நிராகரிப்பில் இருந்து, ரோஹித் ஷர்மா மீண்டு வந்து, அதே இங்கிலாந்தின் ஓவலில், தனது முதல் ஓவர்சீஸ் சதத்தை பதிவு செய்திருக்கிறார். அதை அடைய, அவர் கடந்து வந்த பாதையும், அதற்காக அவரது ஆட்ட முறையை எந்தளவு மாற்றி அமைத்திருக்கிறார் என்பதும்தான், இந்த ஓவல் சதம், ஏன் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதற்கான காரணத்தைக் கூறுகிறது.

டெஸ்ட் ஃபார்மட்டைப் பொறுத்தவரை, அவரது பெயர் சொல்ல இத்தனை இருப்பினும், ரோஹித்தைப் பொறுத்தவரை, வேண்டத்தகாத ஒரு பட்டம் வேதாளமாக அவரது கழுத்தைச் சுற்றிக் கொண்டே இருந்தது. அது, 'ஹோம் டிராக் புல்லி' என்னும் வசைபாடல்.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

எட்டு ஆண்டுகள் ஆகியும் ஒரு ஓவர்சீஸ் சதம்கூட ரோஹித்தின் கணக்கில் ஏறாமல் இருந்தது. SENA நாடுகளுக்கு அடுத்ததாக வரலாம். துணைக் கண்டத்தில் கூட, அவரது பேட் ஒரு செஞ்சுரி செலிப்ரேசனைப் பார்த்ததில்லை. இதுவே, ரோஹித் ரெட் பால் கிரிக்கெட்டுக்கான மெட்டீரியல் இல்லை எனப் பல விமர்சனங்களை, பல சமயங்களில் கிளப்பியது. அதனைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி நம்பத்தகுந்த டெஸ்ட் பேட்ஸ்மேனாகத் தன்னை நிரூபித்திருந்த ரோஹித், தற்போது எட்டாண்டுக் காத்திருப்பையும் முடிவுக்குக் கொண்டு வந்து, தனது முதல் ஓவர்சீஸ் சதத்தையும் பதிவேற்றி, தன்னைத்தானே அடுத்த உயரத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார்.

இத்தொடரின் தொடக்கத்தில் இருந்தே, ரோஹித் எப்படியும், இதனை நிகழ்த்துவார் என்ற ஆருடங்கள் கணிக்கப்பட்டன. இரண்டு அரைசதங்களை, முதல் மூன்று போட்டிகளில் அடித்திருந்தார். அதில் ஒருமுறை 83 ரன்களோடு, சதத்தை, பக்கத்தில் சென்று கூடப் பார்த்தும் விட்டார். ஆனாலும், அவரது பல(வீன)ம் ஆன புல் ஷாட்டை வைத்தே அவருக்குக் குறி வைத்து, ஷார்ட் பால்களால் அவரது கதையை முடித்திருந்தது இங்கிலாந்து படை.

ரோஹித் ஷர்மா
ரோஹித் ஷர்மா

இந்த நிலையில், நடைபெற்று வரும் நான்காவது டெஸ்டில் முதல் இன்னிங்சிலும், 11 ரன்களோடு வெளியேறி ஏமாற்றம் அளித்தார் ரோஹித். நங்கூரமிட்ட தாக்கூரால், இந்தியா மீண்டு வந்தாலும், ஓப்பனர்களை நோக்கியே விரல்கள் குற்றஞ்சாட்டி நீண்டன. அதோடு, இத்தொடரிலும் அவரது சதம் எப்படியும் தவறும், அதை வைத்து அவர்மீது விமர்சனங்களைக் கணையாக்கி வீசலாம் எனவும் ஒரு கூட்டம் காத்துக் கொண்டுதான் இருந்தது. அத்தகைய நிலையில்தான் ரோஹித் இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கினார். ஆனால், ரோஹித் சமீபத்தில், "மூன்றிலக்கத்தின் மீது எனக்குக் கவலையில்லை, அணியின் நலத்திலேயே என் கவனம்" எனக் கூறி இருந்தார். இந்த இன்னிங்சிலும், அவரது அணுகுமுறை அப்படியானதாகவே இருந்தது.

இரண்டாவது நாளின் இறுதி செஷனில் இரண்டாவது இன்னிங்சிற்காகக் களமிறங்கியது இந்திய ஓப்பனிங் கூட்டணி. 15 ஓவர்களுக்கு மேல் மீதமிருந்த நிலையில், அன்றே விக்கெட் கணக்கைத் தொடங்க விரும்பியது இங்கிலாந்து. ஆனால் ரோஹித், ராகுல் கூட்டணி பக்குவமாகவும் பொறுப்பாகவும் சூழலைக் கையாண்டது. ஆண்டர்சன் வீசிய பந்தில், ரோஹித் தந்த ஸ்லிப் கேட்ச் வாய்ப்பை பர்ன்ஸ் தவறவிட, இரண்டாவது வாய்ப்பை கெட்டியாகப் பிடித்துக்கொண்டார் ரோஹித்.

அதற்கு முன்னதாக, மூன்று ஓவர்களிலேயே இரண்டு பவுண்டரிகளைப் பார்த்திருந்த ரோஹித்தின் பேட், அதன்பிறகு, நிதானித்து, அற்புதமான ஒரு டெஸ்ட் இன்னிங்சை கட்டமைக்கத் தொடங்கியது. இரண்டாவது நாளின் இறுதியில் ரோஹித் 20 ரன்களோடும் கேஎல் ராகுல் 22 ரன்களோடும் களத்தில் நின்றிருந்தாலும், ராகுலின் ஸ்ட்ரைக் ரேட் 54 எனில், ரோஹித்தின் ஸ்ட்ரைக் ரேட் வெறும் 36 ஆகத்தான் இருந்தது. நல்ல பந்துகளுக்கு பேட்டைத் தூக்கியோ, டிஃபெண்ட் செய்தோ, மரியாதைத் தந்திருந்தார் ரோஹித்.

ரோஹித் ஷர்மா
ரோஹித் ஷர்மா
மூன்றாவது நாள் ஆட்டத்தில் இந்த இணை, எந்தளவு தாக்குப்பிடிக்கிறதோ, அந்தளவு வெற்றியை ஊர்ஜிதம் செய்யலாம் என்பதால், ரோஹித்தின் ஆட்டத்தில், வழக்கத்துக்கு மாறான, மேம்பட்ட நிதானம் நிலவியது. இவ்வளவுக்கும், இன்னொரு பக்கம், பவுண்டரியோடு ஒரு சிக்ஸரை எல்லாம் பறக்கவிட்டுக் கொண்டிருந்தார் ராகுல்.

அட்டாக்கிங் பேட்டிங்கை இயல்பாகக் கொண்ட எந்த ஒரு பேட்ஸ்மேனுக்கும், இத்தகைய சூழலில், அடித்து ஆட வேண்டுமென்ற எண்ணம், தன்னிச்சையாக வெளிப்படும். அதுவே அவர்களைத் தவறு செய்யத் தூண்டும். ஆனால், ரோஹித் அந்த விஷயத்தில் மிக சிரத்தை எடுத்து ஆடினார். தவறான ஷாட்கள் என்பது பெரும்பாலும் இல்லை. இவ்வளவுக்கும் ஒருசில ஷார்ட் பால்கள் அவருக்கு ஆசை காட்டினாலும், அதனிடம் பணிந்து விடவில்லை ரோஹித். அவுட்சைட் த ஆஃப் ஸ்டம்பில் வீசப்பட்ட பந்துகளைக்கூட கவனமாகக் கையாண்டார்.

பேட்டுக்கும் பேடுக்குமான இடைவெளியை வெகுவாகக் குறைத்து, எல்பிடபிள்யூ மற்றும் போல்டாகும் வாய்ப்புகளைச் சமன்பாட்டில் இருந்து நீங்கச் செய்தவர், உடலுக்கு மிக அருகிலேயே பேட்டைப் பிடித்து, பால் எட்ஜாகாமலும் பார்த்துக் கொண்டார். ராகுல் ஆட்டமிழந்து, புஜாரா உள்ளே வந்தார். இருவரது ஆட்டமுமே அவர்களது வழக்கத்திற்கு மாறானதாகவே இருந்தது. புஜாரா அடித்து ஆடி ரன் ஏற்ற, ரோஹித் தனது அமைதிவழிப் போராட்டத்தையே தொடர்ந்து 145 பந்துகளில் அரை சதத்தைப் பூர்த்தி செய்தார். இதற்குப் பிறகுதான், ரோஹித்தின் அணுகுமுறை மாறத் தொடங்கியது.

டெஸ்ட் போட்டியில் பொதுவாக, பேட்ஸ்மேன்களுக்கு என்று ஒரு தியரி உண்டு. பௌலிங்கிற்குச் சாதகமான சூழ்நிலை நிலவும் பட்சத்தில், பொறுமை காத்து சரியான லைன் அண்ட் லெந்த்தைத் தவிர்த்து பௌலர்களைக் களைத்துபோல வைத்தாலே, தவறான பந்துகள்தானாக வந்து விழும். அதை பேட்ஸ்மென் ரன்களாக மாற்றிக்கொள்ளலாம். பொறுமைதான் பிரதானம்! அதனைக் கடைபிடித்தாலே பௌலர்கள் களைப்படையும் சமயத்தில் அடித்து ஆடலாம்.

ரோஹித் ஷர்மா
ரோஹித் ஷர்மா

ரோஹித்தும் அதையேதான் செய்திருந்தார். தனது முதல் பாதி இன்னிங்ஸை, பொறுமை என்னும் சிமெண்டைக் கொண்டே கட்டமைத்திருந்தார், ஆனால் அரைசதத்திற்குப் பின், அதே நிதானம் இருந்தாலும், சற்றே அடுத்த கியருக்கு மாறினார். ஷாட் செலக்ஷன் அவ்வளவு கனகச்சிதமாக இருந்தது. ஸ்வீப் ஷாட்களும், டிரைவ்களும் கருத்தைக் கவர்ந்து, கண்களைக் கொள்ளையடித்தன. குறிப்பாக, மொயின் அலியை அவர் எதிர்கொண்ட விதம்தான், ஆட்டத்தை மேலும் சுவாரஸ்யமாக்கியது.

80-களில் இருக்கும் எந்த பேட்ஸ்மேனுக்கும் பதற்றம் தொற்றிக் கொள்ளும். அப்படி இருக்க ஓவர்சீஸ் சதத்துக்காக, வருடக்கணக்காகக் காத்திருக்கும் ரோஹித்திடம், அது இருக்க வேண்டுமென்பதுதானே இயல்பான நியதி. ஆனால், விதிகளுக்கு விலக்கும் உண்டுதானே. அரைசதத்திற்குப் பின், உள்ளிருந்த அதிரடி பேட்ஸ்மேன் கட்டவிழ்த்து வந்து, மொயின் அலியின் பந்துகளைப் பதம் பார்த்தார். அவரது இன்சைட் அவுட் ஷாட் எல்லாம் வேறு ரகம்.
எனினும் ரசிகர்களுக்கே, சதத்தை அவர் நிறைவு செய்து வேண்டுமே எனப் பயம் தொற்றிக் கொண்டது. ஆனால், சிங்கிளில் சதத்தைத் தொட்டால், ஹிட்மேனுக்கு என்ன மரியாதை?

தான் சந்தித்த 204-வது பந்தை, அதுவும் ஸ்பின்னரான மொயின் அலி வீசிய பந்தையே சிக்ஸருக்குத் தூக்கி தனது முதல் ஓவர்சீஸ் டெஸ்ட் சதத்தை ரோஹித் அடித்தார். எட்டு ஆண்டுகளாகக் காத்திருந்த ஓவர்சீஸ் சதம், எட்டாவது சதமாக வந்து சேர்ந்தது. முதல் 50 ரன்களை 145 பந்துகளில் எடுத்திருந்தவர், அடுத்த 50 ரன்களை, வெறும் 59 பந்துகளில் எடுத்திருந்தார். அதன்பிறகு 127 ரன்களில் ஆட்டமிழந்திருந்தாலும், இங்கிலாந்திற்கான சேதாரத்தை வேண்டுமளவு செய்துவிட்டார். இந்தச் சதம், இங்கிலாந்தில் ஆடிய வேற்றுநாட்டு வீரர்களில், மூன்று ஃபார்மட்டிலும் சதமடித்த ஒரே வீரர் என்ற பெருமையையும் ரோஹித்துக்குத் தந்திருக்கிறது.

ரோஹித் ஷர்மா
ரோஹித் ஷர்மா
கோலியை, டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் முந்தியது, 15000 சர்வதேச ரன்களைக் கடந்தது, ஓப்பனராக 11000 சர்வதேச ரன்களைக் கடந்தது, இங்கிலாந்துக்கு எதிராக 2000 ரன்கள் என பல மைல்கற்களை இந்தப் போட்டியில், ரோஹித் கடந்திருக்கிறார். அதற்கும் மேலாக, 2017-ம் ஆண்டில், டெஸ்ட் தரவரிசையில் 52-வது இடத்தில் இருந்த ரோஹித், ஐந்தாவது இடத்திற்கு தற்போது முன்னேறி உள்ளார். நடப்புத் தொடரில் 300 ரன்களையும் கடந்துவிட்டார்.

இது எல்லாம் சிறப்பான சம்பவங்கள்தான் என்றாலும், தன் மீதான விமர்சனங்களுக்கான அவரது பதிலாக, வந்துள்ள இந்தச் சதம்தான், எல்லாவற்றிற்கும் மேலாகக் கூடுதல் வெளிச்சம் பாய்ச்சிக் கொண்டிருக்கிறது. ரோஹித் சதமடித்த டெஸ்ட் போட்டிகளில், இந்தியா தோற்றதில்லை என்பதால் இம்முறையும் அப்படியே நடக்க வேண்டுமென்பதே ரசிகர்களின் விருப்பம்.