Published:Updated:

ரஹானே... ஸ்டாண்ட் இன் கேப்டனா, அவுட் ஸ்டாண்டிங் கேப்டனா... மெல்போர்னில் நடந்தது என்ன?! #AUSvIND

புதுப்பந்தையும் சிறிது நேரம் சமாளித்து அணியைச் சரிவிலிருந்து மீட்கப் போராடிய கிரீனின் இன்னிங்ஸ், 'இன்னிங்ஸ் தோல்வி' ஏற்படும் வாய்ப்பிலிருந்து, ஒரு கெளரவமான தோல்வியை நோக்கி ஆஸ்திரேலியாவை எடுத்துச் சென்றது.

அடிலெய்டு டெஸ்ட் முடிவால் ரசிகர்கள் வடித்த கண்ணீர், தற்போது ஆனந்தக் கண்ணீராய் மாறியுள்ளது. கோலி, ரோஹித், ஷமி போன்ற ஆளுமைகள் இல்லாமலே, மெல்போர்ன் டெஸ்ட் போட்டியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று காட்டி 1-1 என தொடரை உயிர்ப்பித்துள்ளார், கேப்டன் ரஹானே. 'ஸ்டாண்ட் இன் கேப்டன்' என அழைக்கப்பட்டவர், அவுட் ஸ்டாண்டிங் கேப்டனாக வெற்றி மகுடம் சூடியிருக்கிறார்.

இரண்டு ரன்கள் முன்னிலையோடு இன்றைய ஆட்டத்தைத் தொடர்ந்தனர் ஆஸ்திரேலியாவின் கிரீன் மற்றும் கம்மின்ஸ். இந்திய ரசிகர்களுக்கோ, "36 ரன்கள் லீட் எடுப்பதற்குள் நான்கு விக்கெட்டுகளின் கதையையும் முடித்து விடுங்கள், அவ்வளவு ரன்களை எடுக்க மட்டுமே நம்மவர்களால் முடியும்" என்பதே மனதுக்குள் கேட்கும் குரலாக இருந்தது. ஆனாலும் அந்த பயத்தில் நியாயம் இல்லாமல் இல்லை, இந்தியாவின் கடந்த கால வரலாறு அப்படி!

ரஹானே #AUSvIND
ரஹானே #AUSvIND

நேற்றைப் போலவே, இந்தக் கூட்டணி, பதற்றம் எதுவுமின்றி, இந்திய பெளலிங்கை எதிர்கொண்டது. இந்திய முகாமிலோ, கம்மின்ஸின் கேட்சை பன்ட் கைவிட்டதற்கான விலை மிகப் பெரியதாக இருக்கப் போகிறதோ என்று உள்ளுக்குள் உதறல் இருக்கத்தான் செய்தது. ஆனாலும் 'யாமிருக்க பயமேன்?!' என பும்ரா, ஷார்ட் பால் எனும் அஸ்திரத்தை கம்மின்ஸ் மேல் ஏவ, அதற்குப் பலியாகி வெளியேறினார் கம்மின்ஸ். ஒன்பதாவது பேட்ஸ்மேனாக ஸ்டார்க் உள்ளே வந்தார்.

மறுமுனையில் கிரீன், இதுவரை தொடரில் எந்தப் போட்டியிலும் பெரிதாக எடுபடாமல் போனதால், இந்த இன்னிங்ஸிலாலது தன் பெயரை எழுத வேண்டும் என்ற நோக்கத்தோடே ஆடினார். இதனால் இந்தியாவுக்கான இலக்கு கணிசமாக உயர்ந்து கொண்டே வந்தது, கூடவே பயமும்! அந்த அழுத்தத்தை உடனடியாய்க் குறைத்தது, சிராஜ் எடுத்த கிரீனின் விக்கெட். தனது 45 ரன்கள் மூலமாக, ஆஸ்திரேலியாவை 46 ரன்கள் முன்னிலை பெற வைத்து கிரீன் வெளியேறினார். புதுப்பந்தையும் சிறிது நேரம் சமாளித்து அணியைச் சரிவிலிருந்து மீட்கப் போராடிய கிரீனின் இன்னிங்ஸ், 'இன்னிங்ஸ் தோல்வி' ஏற்படும் வாய்ப்பிலிருந்து, ஒரு கெளரவமான தோல்வியை நோக்கி அணியை எடுத்துச் சென்றது. அடுத்ததாக இணைந்தது ஸ்டார்க் - லயான் கூட்டணி.

#AUSvIND
#AUSvIND
Asanka Brendon Ratnayake

உணவு இடைவேளைக்கு முந்தைய கடைசி ஓவரில், லயானின் விக்கெட்டை சிராஜ் வீழ்த்த, 185 ரன்களுக்கு ஒன்பதாவது விக்கெட்டை இழந்தது ஆஸ்திரேலியா. அதனால் ஆட்டம் இன்னும் அரை மணி நேரத்திற்கு நீட்டிக்கப்பட்டது‌. கடைசி விக்கெட்டுக்குக் கைகோத்த ஸ்டார்க் மற்றும் ஹேசில்வுட் கூட்டணியை உடைப்பதற்கும் இந்திய பெளலர்கள் கிட்டத்தட்ட 7 ஓவர்களை எடுத்துக் கொண்டனர். இறுதியாக, அஷ்வினின் சுழலில் ஸ்டம்ப் சிதற, ஹேசில்வுட் ஆட்டமிழந்தார். இந்தியாவுக்கு வெற்றி இலக்காய், 70 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய இன்னிங்ஸில் அதிகபட்சமாய் கிரீன் 45 ரன்களை எடுத்திருந்தார்.

இதற்கு முன்னதாக, ஆஸ்திரேலியாவில் நடந்த ஒரு டெஸ்ட் போட்டியில், ஒரு பேட்ஸ்மேன் கூட அரைச்சதத்தைத் தொடாதது, 1988-ம் ஆண்டுக்குப் பிறகு இதுவே முதல் முறை. மேலும் இந்த இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவின் ரன் விகிதமான 1.93தான் (80+ ஓவர்களை விளையாடிய போது) கடந்த 42 ஆண்டுகளில் அவர்களின் மிகக் குறைவான ரன் ரேட்! ஆஸ்திரேலியாவினை 200 ரன்களுக்கு ஆல்அவுட் ஆக்கியுள்ள இந்தியா, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற கடைசி 12 இன்னிங்ஸ்களில், இருமுறை மட்டுமே 300 ரன்களுக்கு மேல் அவர்களை அடிக்க விட்டிருக்கிறது. இந்த எண்கள் அத்தனையும் சொல்லும் இந்திய பெளலர்களின் ஆதிக்கத்தை!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

70 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கைத் துரத்தியது இந்தியா. அவ்வப்போது '36' கண்களில் தோன்றி மறைந்தாலும், இது அடிலெய்டும் இல்லை, எதிர்கொள்வது பிங்க் பந்தும் இல்லை என்பதால், அப்படி ஒரு பாதாளத்தில் விழ நேராது, வெற்றி உறுதிதான் என்ற உற்சாகத்தோடுதான் தொடங்கியது இந்தியாவின் இன்னிங்ஸ். ஓப்பனிங் இறங்கிய மயாங்க்குக்கு இழந்த தன்னம்பிக்கையையும், ஃபார்மையும் சேர்த்தே மீட்கும் வாய்ப்பும் கிடைக்க, அதனை வேண்டாம் என்று மறுத்ததைப் போல், ஸ்டார்க் பந்தில் வெறும் 5 ரன்களுடன் வெளியேறினார். ரோஹித் அடுத்த போட்டியிலிருந்து அணியுடன் இணைய வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படும் தருணத்தில், ஒவ்வொரு மோசமான ஆட்டமும், அணியில் தன்னுடைய இடத்தைக் கேள்விக்குறியாக்கும் என்பதை மயாங்க் உணரவில்லை. பற்றாக்குறைக்கு கேஎல் ராகுலை உள்ளே சேர்ப்பதற்கான கோரிக்கையும் பலமாய் எழுந்துள்ளதால், அடுத்தப் போட்டியில் இந்த மோசமான ஆட்டத்திற்குரிய பின்விளைவை அவர் எதிர்பார்க்கலாம்.

#AUSvIND
#AUSvIND

இன்னொரு ஓப்பனரான கில்லுடன் இணைந்தார் புஜாரா. முதல் இன்னிங்ஸில் சொதப்பிய புஜாரா, இந்தப் போட்டியிலும், ஒற்றை இலக்கத்தோடு வெளியேறினார். 19/2 என இந்தியா வந்து நிற்க, ரஹானே உள்ளே வந்தார்.

முதல் இன்னிங்ஸைப் போலவே சிறப்பான ஆட்டத்தை கில் வெளிப்படுத்தி 35 ரன்களைச் சேர்த்தார். ரஹானேவும் எந்த வித ஆர்ப்பாட்டமுமின்றி, தனது பங்கை ஆற்ற , இலக்கை இலகுவாய் எட்டியது இந்தியா. வின்னிங் ஷாட்டை ரஹானே அடிக்க, மெல்போர்னில் எட்டு விக்கெட் வித்தியாசத்தில், வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியை இந்தியா பதிவு செய்துள்ளது.

மெல்போர்னில் மாபெரும் வெற்றி... அடிலெய்ட் அவமானத்தைத் துடைத்தெறிந்த இந்தியா!  #AUSvIND

அடிலெய்டில் பட்ட அடிக்கும் அவமானத்திற்கும் சேர்த்து வைத்துத் திருப்பிக் கொடுத்துள்ளது இந்தியா. தொடரையும் 1-1 என சம நிலைப்படுத்தியுள்ளது. ரஹானேவின் வியூகங்கள், மேலான கேப்டன்ஷிப், அவரது அற்புதமான சதம், பெளலர்களின் விஸ்வரூபம், கில் மற்றும் ஜடேஜாவின் பெரும்பங்கு என எல்லாம் சேர்ந்து இந்தியாவுக்கு பெரிய வெற்றியைப் பரிசளித்திருக்கிறது. மயாங்க், புஜாரா உள்ளிட்ட சில பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து சோபிக்காமல்போவது, டெய்ல் எண்டர்களை வீழ்த்துதில் உள்ள பிரச்னை என இந்தியாவின் பக்கமும் சில ஓட்டைகள் இருக்கின்றன. அவற்றின் மேல் கண் வைத்து அடுத்த போட்டியில் ஆஸ்திரேலியா திருப்பி அடிக்கும் முன், இந்தியா அதைச் சரி செய்தால், அடுத்த போட்டி மட்டுமின்றி தொடரையும் வெல்லலாம்.

கடந்த போட்டியில் வாங்கிய அடியால் விழுந்த இந்தியா, ஸ்ப்ரிங் போல விழுந்த வேகத்திலேயே எழுந்து நின்றிருக்கிறது. மரண அடி தந்த வலியோடு எழுந்து நின்று திரும்ப அடிப்பதெற்கெல்லாம் எவ்வளவு மன உறுதி வேண்டும்?! மெல்போர்ன் வெற்றி இந்தியக் கிரிக்கெட் உள்ளவரை பேசப்படும்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு