Election bannerElection banner
Published:Updated:

கம்மின்ஸ் என்னும் கஜினி முகமது... #Cummins உலகின் நம்பர் 1 பெளலரான கதை!

Pat Cummins
Pat Cummins

முதல் இன்னிங்ஸைவிட ஆட்டத்தின் போக்கையும், வெற்றியையும் மொத்தமாக மாற்றும் இரண்டாவது இன்னிங்ஸின் இரும்பரசனாக இருக்கிறார் கம்மின்ஸ்.

பௌலரா, பந்து வீசும் இயந்திர மனிதனா, மோசமான ஸ்பெல் என்ற ஒன்றுகூட இவருடைய வாழ்நாளில் வீசியது கிடையாதா, இவர் வீசும் பந்துகளில் பேஸ், ஸ்விங், பவுன்ஸ் என சகலமும் இவரது சொன்ன பேச்சைக் கேட்கிறதே அதெப்படி, பார்னர்ஷிப்களை உடைக்க வேண்டுமென கேப்டன் நினைக்கும் போதெல்லாம் பந்து இவரது கைக்குப் போவது ஏன், இந்தியாவிடம் ஆஸ்திரேலியா தொடரையே பறிகொடுத்தாலும், தொடரின் நாயனாக இவர் ஜொலிப்பது எப்படி?! இவையெல்லாம் இந்தத் தலைமுறையின் ஆகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளரான ஆஸ்திரேலியாவின் கம்மின்ஸைப் பற்றிக் கேட்கப்படும் கேள்விகள்!

மைதானம் பந்துவீச்சிற்கு எந்தவித ஒத்துழைப்பும் தரவில்லை என்றால்கூட, பந்தை கம்மின்ஸிடம் கொடுங்கள் அவர் ஒத்துழைக்கவைப்பார் என்று வர்ணையாளர்கள் வர்ணித்துக் கொண்டிருக்கிறார்கள். கம்மின்ஸ்தான் இப்போது உலகின் நம்பர் 1 டெஸ்ட் பெளலர்.

2018-ல் இருந்து கம்மின்ஸ் எந்த அளவிற்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் தாக்கத்தை உண்டாக்கி இருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள அவரது சாதனைகளை மற்ற பெளலர்களோடு ஒப்பிட்டுப்பார்ப்பது அவசியம்.

Pat Cummins
Pat Cummins

2011-ம் ஆண்டு, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இவர் தனது அறிமுகப் போட்டியைத் தொடக்கிய போது, இவரது வயது வெறும் 18 தான்! தொடக்கப் போட்டியிலேயே, இரண்டாவது இன்னிங்ஸில், ஆறு விக்கெட்டுகளை வீழ்த்திய இந்த இளம் புயலின் மீதுதான் அத்தனை கண்களும் இருந்தன! கண்பட்டதால் புண்பட்டதோ என்னவோ, கிட்டத்தட்ட அடுத்த ஆறு ஆண்டுகள், கம்மின்ஸின் வாழ்க்கை, காயங்களோடே நகர்ந்தது.

காயத்திலிருந்து குணமாகித் திரும்புவார், சில ஒருநாள் போட்டிகளில் பங்கேற்பார், பல முதல் தரப் போட்டிகளில், தன்னுடைய முதல் தரமான ஆட்டத்தால், நம்பிக்கை அளிப்பார். "ஆஹா! அடுத்ததாக, டெஸ்ட் அணிக்குத் திரும்பப் போகிறேன், கனவு மெய்ப்படப் போகிறது'' என அவர் அணிக்குள் நுழையப் போகும் தருணத்தில், இன்னொரு காயம் அவரை முடக்கிப் போட்டு மூலையில் உட்கார வைக்கும்! மறுபடியும் மீண்டு வருதல், தயார்படுத்திக்கொள்ளுதல், கனவுகளைக் கண்களில் நிரப்புதல் எனத் திரும்பவும் எழுந்து நிற்கையில், மறுபடியும் ஒரு காயம் இவரது கனவைக் கலைத்து கண்ணாம்பூச்சி ஆடும், உடைந்து உட்கார வைக்கும்!

ஆனாலும், காலம் எல்லாவற்றையும் ஆற்றும், மாற்றும் என்பதுபோல மீண்டும் வந்தார் கம்மின்ஸ். தனது விடாமுயற்சியாலும் கடும் பயிற்சியாலும், தன்னைத் தானே தயார்படுத்திக்கொண்டு, மேம்படுத்தப்பட்ட வெர்ஷன் 2.0 ஆக, ஒரு அசாத்திய கம்பேக் கொடுத்தார் கம்மின்ஸ்! 2017-ல் இந்தியாவுக்கு எதிரான போட்டியில், ஸ்டார்க்கின் காயம் காரணமாக அணிக்குள் வந்தவர், மொத்தம் மூன்று இன்னிங்ஸில், எட்டு விக்கெட்டுகளை எடுத்து அசத்த, அணியில் இவருக்கான இடம் தொடர்ந்து உறுதிப்படுத்தப்பட்டது!

அதன்பிறகு, 2018-ல் இருந்து, கடந்த மூன்றாண்டுகளில் பெளலர்களுக்கான அத்தனை ஸ்டேட்ஸிலும் தனது பெயரை, பட்டியலின் முதல் பெயராய், பதிய வைத்துக்கொண்டிருக்கிறார் கம்மின்ஸ்! அவரது ரீ என்ட்ரிக்குப்பிறகு, 2018-ம் ஆண்டிலிருந்து, ஆஸ்திரேலியாவுக்காக மொத்தம், 25 போட்டிகளில் விளையாடி இருக்கிறார் கம்மின்ஸ். இதே காலகட்டத்தில் மற்ற வேகப்பந்து வீச்சாளர்களான, ஸ்டார்க் 22 போட்டிகளிலும், ஹேசில்வுட் 20 போட்டிகளிலும் பங்கேற்றிருக்கின்றனர்.

Pat Cummins
Pat Cummins

இந்தப் போட்டிகளில், கம்மின்ஸ் வீசியிருக்கும் ஓவர்களின் எண்ணிக்கைதான் ஆச்சர்யப்படுத்துகிறது, இந்த 25 போட்டிகளில் கம்மின்ஸ் வீசியிருக்கும் ஓவர்களின் எண்ணிக்கை 949.2. இவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் ஸ்டார்க் வெறும், 744.3 ஓவர்கள்தான் வீசியிருக்கிறார்.

இந்தியாவுக்கு எதிராக நடந்து முடிந்த கடைசித் தொடரில், நான்கு போட்டிகளில், புஜாரா மட்டுமே கம்மின்ஸின் 928 பந்துகளைச் சந்தித்து சாதித்திருந்தார். ஆஸ்திரேலிய பெளலிங் யூனிட் சுமையின் பெரும்பகுதியை கம்மின்ஸே சுமந்திருந்தார்!

ஆஸ்திரேலியா அளவிலும் சரி, சர்வதேச அளவிலும் சரி கம்மின்ஸுக்கு சரிக்குச்சமமாக, அதிக ஓவர்கள் வீசியவர் யாருமில்லையா எனக் கேட்டால், நானிருக்கிறேன் என ஸ்டூவர்ட் பிராட் முன்னால் வந்து நிற்கிறார். ஆனால், கம்மின்ஸைவிட ஆறு போட்டிகள் அதிகமாக விளையாடியிருக்கிறார் பிராட்.

சரி எத்தனை ஓவர்களை வீசுவது என்பதுகூட, உடல்தகுதியை வைத்து முடிவு செய்யப்படும் விஷயமாகப் பார்க்கப்படலாம்! எனவே, பௌலர்களின் தலையாயக் கடமையான விக்கெட் வீழ்த்தும் திறனை வைத்து இவர்களை ஒப்பிடலாம்!
கடந்த 3 ஆண்டுகளில், அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள்...
கம்மின்ஸ் - 25 போட்டிகளில் 128 விக்கெட்டுகள் பிராட் - 31 போட்டிகளில் 119 விக்கெட்டுகள் சவுத்தி - 19 போட்டிகளில், 94 விக்கெட்டுகள்
Pat Cummins
Pat Cummins

இதில் இரண்டாம் இடத்தில் இருக்கும் பிராடை விட அதிகமான விக்கெட்டுகளை, குறைவான போட்டிகளில், எடுத்திருக்கிறார் கம்மின்ஸ்! கடந்த தொடரில், இந்தியாவுக்கு எதிரான முதல் போட்டி, கம்மின்ஸின் 31 ஆவது போட்டி! அதில், தனது 150ஆவது விக்கெட்டாக, கோலியை வெளியேற்றினார் கம்மின்ஸ்! ஆல் டைம் கிரேட்டாகக் கொண்டாடப்படும், மெக்ராத்தே, தனது 31ஆவது போட்டியில் 137 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தி இருந்தார்! அந்த காலகட்டத்தில், மெக்ராத்தின் சராசரி மற்றும் ஸ்ட்ரைக் ரேட், 23.89 மற்றும் 53.8. ஆனால் கம்மின்ஸோ, 21.26 மற்றும் 46.3 என்ற எண்களுடன் மெக்ராத்தை மிஞ்சுகிறார். கம்மின்ஸ் எடுத்துள்ள 165 விக்கெட்டுகளில் 72 விக்கெட்டுகள் வெளிநாட்டில் எடுத்ததுதான்.

22 யார்டை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, ஜெட் வேகத்தில், தன்னுடைய துல்லிய பந்து வீச்சால், பேட்ஸ்மேனை மெக்ராத் அச்சமூட்டினாரெனில், அதே 22 யார்டில், ஏவுகணை வேதத்தில் தனது சிவப்புத் தோட்டாவை பாயச் செய்து, பேட்ஸ்மேனை, தன்னுடைய திறமையையே சந்தேகிக்க வைத்து, வீழ்த்தும் வித்தகர் கம்மின்ஸ்.

தொடர் வெற்றிதான்... ஆனால், இதை ஏன் உலகக்கோப்பைபோல் கொண்டாடுகிறோம் தெரியுமா?! #AUSvIND

அதனால்தான் பெளலிங் ஆவரேஜில் கம்மின்ஸ் முதல் இடத்தில் இருக்கிறார். கம்மின்ஸ் மற்ற பெளலர்கள்போல் 5 விக்கெட் ஹால் எடுக்கும் பெளலர் கிடையாது. அணிக்கு எப்போதும் எல்லாம் தேவைப்படுகிறதோ அப்போது எல்லாம் விக்கெட் எடுத்து எதிரணியின் பார்ட்னர்ஷிப்களை உடைப்பவர். அதனாலேயே அதிகமாக 3 மற்றும் 4 விக்கெட்டுகளை ஒவ்வொரு மேட்சிலும் வீழ்த்துவார். கடந்த 3 ஆண்டுகளில் கம்மின்ஸ் அதிகமாக 4 விக்கெட்டுகள் வீழ்த்தியதில் முதலிடத்தில் இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் அவர் ஆடிய 65 இன்னிங்ஸ்களில் 34 முறைக்கு மேல் 3 அல்லது அதற்கு மேல் விக்கெட் எடுத்து எதிரணி பேட்ஸ்மேன்களைத் திணறடித்துக்கொண்டிருக்கிறார்.

Australia v India
Australia v India
Tertius Pickard

முதல் இன்னிங்ஸைவிட ஆட்டத்தின் போக்கையும், வெற்றியையும் மொத்தமாக மாற்றும் இரண்டாவது இன்னிங்ஸின் இரும்பரசனாக இருக்கிறார் கம்மின்ஸ். கடந்த 3 ஆண்டுகளில் இரண்டாவது இன்னிங்ஸில் 59 விக்கெட்களை வீழ்த்தி பெளலிங் ஆவரேஜ் 17.23 என மிரள வைக்கிறார்.

"ஆஸ்திரலியாவின் தலைசிறந்த 3 வேகப்பந்து வீச்சாளர்கள் யார் என்று கேட்டால் மெக்ராத், கம்மின்ஸ், ஜான்சன் என்பேன்'' என ஆஸ்திரலியா ஜாம்பவான் ஷேன் வார்னேவே கம்மின்ஸைப் பாராட்டியுள்ளார்.

காயங்கள் தொடர்ந்து தூரத்தியபோதும், சிறிதும் மனம்தளராமல் கஜினிமுகமது படையெடுப்பது போல் பல வருடங்கள் தொடர்ந்து காயங்களுடன் படையெடுத்து எதிர்த்துப் போராடி இன்று வென்று காட்டியிருக்கிறார். இரண்டு வருடங்களாக நம்பர் 1 பெளலராக நீடித்து வரும் கம்மின்ஸின் இதே ஃபார்ம் தொடரும்பட்சத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டின் உலகம்போற்றும் தலைசிறந்த பெளலராக வருவார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு