Published:Updated:

விபாசனா... மென்ட்டல் பேட்டில்... தினமும் 1000 பந்துகள்... மயாங்க் அகர்வால் உருவான கதை!

Mayank Agarwal
Mayank Agarwal

என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றவருக்குத் தந்தை கொடுத்த ஆலோசனைதான் திருப்புமுனை.

துணையாக ஆடிக்கொண்டிருந்தவர் திடீரென சிங்கத்துக்கு இணையாக ஆடினால் எப்படி இருக்கும்... ரோஹித்துக்குத் துணையாக ஆடிக்கொண்டிருக்கிறார் என்று நினைத்தவர்களுக்கு இரட்டை சதத்தைப் பரிசாக அளித்திருக்கிறார் மயாங்க் அகர்வால். நம்ம வீட்டுப்பிள்ளை ஜெயித்தால் நமக்கு எவ்வளவு சந்தோஷம் இருக்குமோ அவ்வளவு சந்தோஷம், நேற்று மயாங்க் அகர்வால் அடித்த டபுள் சென்ச்சுரியால் இந்திய ரசிகர்களுக்குக் கிடைத்தது.

மீம்ஸ் எல்லாம் உரம்... இனி இப்படித்தான் இருக்கும் ரோஹித்தான் இன்னிங்ஸ்! #RohitSharma #INDVsSA

முதல் நாள் வீசிய ரோஹித் அலையை இரண்டாவது நாள் தன் பக்கமாக திருப்பினார் மயாங்க் அகர்வால். அதுவும் 215 ரன் என்ற இமாலய ஸ்கோர். 23 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் எனத் தென் ஆப்பிரிக்காவின் பெளலர்களைத் தூக்கம் இழக்கவைத்த பேட்டிங். பெளலர்களின் லைன் அண்ட் லென்த்தை சரியாகப் படித்து, ஃபீல்டிங் செட்அப்பை சரியாகப் புரிந்து, மோசமான பந்துகளை மட்டுமே அடித்து என... மயாங்க் ஆடிய இன்னிங்ஸ் மிகப்பெரிய மெச்சூர்டு வீரர்கள் ஆடியதுபோன்ற ஓர் இன்னிங்ஸ். ஆமாம்... இந்த மெச்சூரிட்டிக்கு வர மயாங்க் போட்ட உழைப்பு சாதாரணமானதல்ல...

கர்நாடகாவில் பிறந்த மயாங்க் அகர்வால் இந்தியா அண்டர்-19 உலகக்கோப்பை அணியில் இடம் பிடித்து இந்திய அணி சார்பில் அதிக ரன்கள் அடித்து தனது கேரியரை அட்டகாசமாகத் தொடங்கினார். கிட்டத்தட்ட கனவுபோன்று சர்வதேச கிரிக்கெட் கதவுகள் அவருக்குத் திறந்தன.

19 வயதிலேயே ஐபிஎல் அறிமுகம். பெங்களூரு அணிக்காக விளையாடும் வாய்ப்பைப் பெற்றார். ஆனால், ஐபிஎல் அவருக்கு ஏமாற்றத்தையே கொடுத்தது. பெங்களூரு அணியில் 3 வருடங்கள் கடந்தும் எதுவும் பெரிதாக சாதிக்க முடியவில்லை. அடுத்து டெல்லி அணிக்கு இடம்பெயர்ந்தார். அங்கும் 3 வருடங்கள் வெறும் வருடங்களாகவே கழிந்தன. இதேநிலைதான் கர்நாடக மாநில அணியிலும் தொடர்ந்தது. அணியில் இருந்தாரே தவிர வெளியே சொல்லிக்கொள்ள எந்த சாதனைகளும் இல்லை.

Mayank Agarwal
Mayank Agarwal

என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றவருக்குத் தந்தை கொடுத்த ஆலோசனைதான் திருப்புமுனை. பெரிய இன்னிங்ஸ்கள் ஆடவேண்டும் என்றால் மனதிடம் அவசியம். மனபலமே பெரிய இன்னிங்ஸுகளுக்குப் பக்கபலமாக இருக்கும் என்று அவரது தந்தை மயாங்க்கை விபாசனா எனும் தியானப் பயிற்சிக்கு அனுப்புகிறார். முதலில் விருப்பமே இல்லாமல் சென்று கொண்டிருந்தவருக்கு நாள்கள் செல்லச் செல்ல அந்தப் பயிற்சிகள் தனக்குள் ஏதோ ஒரு மாற்றத்தை நிகழ்த்துவதை உணர்கிறார். மனதை ஒருமுகப்படுத்தும் பயிற்சியை மயாங்கிற்குக் கொடுத்தது விபாசனா.

அடுத்து மயாங்க்கின் பயிற்சியாளர் முரளி ஒரு நாளுக்கு 1000 பந்துகள் என்கிற பயிற்சியை அறிமுகப்படுத்துகிறார். ஒரு நாளில் 1000 பந்துகளை மயாங்க் எதிர்கொள்ள வேண்டும். விபாசனா கொடுத்த மனதை ஒருமுகப்படுத்தும் பயிற்சி, 1000 பந்துகளை எதிர்கொள்ளும்போது மயாங்கிற்கு கைகொடுக்கிறது. தினமும் 1000 பந்துகளை எதிர்கொண்டு பெரிய இன்னிங்ஸ்கள் ஆட தன்னைப் பக்குவப்படுத்திக்கொள்கிறார். தினமும் 6 மணி நேர பேட்டிங் பயிற்சி. அதன்பிறகு ஃபிட்னஸ் பயிற்சிகள், தினமும் 6-8 கி.மீட்டர் ஓட்டம் எனக் கடுமையாகத் தன்னைத் தயார்படுத்துகிறார்.

இந்திய A அணிக்கு ஆட அழைப்பு வருகிறது. அங்குதான் கடவுளின் உருவமாக மயாங்க்கின் வாழ்வில் இன்னொருவர் வருகிறார். ராகுல் டிராவிட்... இந்திய A அணியின் பயிற்சியாளரான ராகுல், மயாங்க்கை அடுத்தகட்டம் நோக்கிப் பட்டைதீட்டுகிறார். இந்தியாவின் சுவர் அங்கே மயாங்கிற்கு ஒரு நீண்ட இன்னிங்ஸ் ஆடுவதற்கான சூத்திரங்களைக் கற்றுத்தருகிறது. மனதோடு விளையாடும் Mental battle, Mind games டெக்னிக்குகளைக் கற்றுத்தருகிறார் டிராவிட்.

கடுமையான உழைப்பின் பலனாக 2017-2018 சீஸன் மயாங்கின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. ரஞ்சி போட்டிகளிலும் விஜய் ஹசாரே போட்டிகளிலும் சிகரங்களைத் தொட ஆரம்பிக்கிறார் மயாங்க். ரஞ்சி போட்டிகளில் வெறும் 27 நாள்களில் 1064 ரன்கள் என ரன்களால் ஒட்டுமொத்த தேர்வாளர்களின் பார்வையையும் தன்பக்கம் திருப்புகிறார். விஜய் ஹசாரே போட்டிகளில் 723 ரன்கள் அடித்து, ஒரு தொடரில் அதிக ரன்கள் அடித்தவர் என்கிற சாதனையைப் படைக்கிறார். மயாங்க் உடைத்தது சச்சினின் சாதனையை. ஆமாம், 2003 உலகக்கோப்பையில் சச்சின் 673 ரன்கள் அடித்ததே ஒரு தொடரில் அடித்த அதிகபட்ச ரன்களாக இருந்தது. அதைக் கடந்தார் மயாங்க்.

மயாங்க்  அகர்வால்
மயாங்க் அகர்வால்

2018 செப்டம்பரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் விளையாடும் வாய்ப்பு. அணிக்குள் நுழைகிறார். ஆனால் ஒரு போட்டியில்கூட விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. அடுத்து வந்த ஆஸ்திரேலியா தொடரில் பிரித்வி ஷாவுக்குக் காயம் ஏற்பட மயாங்க் அகர்வால் மாற்று வீரராகச் சேர்க்கப்படுகிறார். முதல் டெஸ்ட்டில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 76 ரன்கள் அடித்து தேர்வாளர்கள் தன் மீது வைத்த நம்பிக்கையைக் காப்பாற்றுகிறார் மயாங்க்.

ஓராண்டு இடைவெளியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இரட்டை சதங்களை அடித்து இந்திய டெஸ்ட் அணியில் தனக்கான ஓப்பனிங் ஸ்லாட்டை இறுதிசெய்திருக்கிறார் மயாங்க். வாழ்த்துகள் மயாங்க்... உங்கள் இன்னிங்ஸ்களால் எங்களை மயக்கிக்கொண்டேயிருங்கள்!

அடுத்த கட்டுரைக்கு