Published:Updated:

டக் அவுட் டு 136... சச்சினின் அந்த அட்வைஸ்... மெகா இன்னிங்ஸுக்கு எப்படித் தயாரானார் கோலி?!

கோலி தலைமையிலான இந்திய அணி

தொடர்ந்து 4 டெஸ்ட் போட்டிகளில் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுவருகிறது இந்திய அணி. அதாவது, இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா பேட்டைப் பிடிப்பதே இல்லை. இரண்டு டெஸ்ட்களின் ஹைலைட்ஸ் மட்டும் இங்கே!

Published:Updated:

டக் அவுட் டு 136... சச்சினின் அந்த அட்வைஸ்... மெகா இன்னிங்ஸுக்கு எப்படித் தயாரானார் கோலி?!

தொடர்ந்து 4 டெஸ்ட் போட்டிகளில் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுவருகிறது இந்திய அணி. அதாவது, இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா பேட்டைப் பிடிப்பதே இல்லை. இரண்டு டெஸ்ட்களின் ஹைலைட்ஸ் மட்டும் இங்கே!

கோலி தலைமையிலான இந்திய அணி

இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் மூன்று நாள்களில் முடித்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முதலிடத்தில், அதுவும் ஒரு தோல்வியைக்கூட சந்திக்காத அணியாக உச்சத்தில் இருக்கிறது கோலியின் படை!

தமீம் இக்பால், தடையில் உள்ள ஷகிப் ஆல் ஹசன் என சீனியர் வீரர்கள் இல்லாமல் இந்தியா வந்த வங்கதேச அணியிடம் போராட்ட குணமும் இல்லை, போராட வீரர்களும் இல்லை.

kohli
kohli

முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் & 130 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்திய அணி, இரண்டாவது டெஸ்ட்டில் இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. தொடர்ந்து 4 டெஸ்ட் போட்டிகளில் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுவருகிறது இந்திய அணி. அதாவது, இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா பேட்டைப் பிடிப்பதே இல்லை. இரண்டு டெஸ்ட்களின் ஹைலைட்ஸ் மட்டும் இங்கே!

மயாங்க் அகர்வால்

தென்னாப்பிரிக்கா தொடரில் இரட்டை சதம் மற்றும் சதம் அடித்து அசத்தியவர் இந்தத் தொடரில் ஒரு படி மேலே போய் தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்து அசத்தியிருக்கிறார். முதல் டெஸ்ட் போட்டியில் மயாங்க் அகர்வால் 32 ரன்னில் ஆடிக் கொண்டிருந்தபோது ஸ்லிப் திசையில் இம்ரல் கயேஸ் கேட்ச்சை விட கிடைத்த அந்த லைஃப்பை நன்றாகப் பயன்படுத்திக்கொண்டு பங்களாதேஷ் வீரர்களைப் பந்தாடிவிட்டார். கவர் டிரைவ், ஸ்ட்ரெயிட் டிரைவ், புல் ஷாட், டவுன் தி ட்ராக் ஷாட்ஸ் என பவுண்டரிகளை மழையாகவும் சிக்ஸர்களை மின்னல்களாகவும் இறக்கினார்.

28 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் என அதிரடி ஆட்டம் ஆடி 243 ரன்களைக் குவித்தார். அன்று ஒரு நாளில் மட்டும் 88 ஓவர்களில் இந்தியா 400 ரன்கள் எடுத்தது.

kohli
kohli

மயாங்க் ஆடிக்கொண்டிருக்கும்போது கோலி அவரை ட்ரெஸ்ஸிங் ரூமில் இருந்து உற்சாகப்படுத்திக்கொண்டே இருந்தார். 150 ரன்களை எடுத்தபோது 200 ரன்களை எடுக்க வேண்டும் எனவும், 200 ரன்களை எடுத்தபோது 300 ரன்களுக்குச் செல்லுமாறும் சொல்லிக்கொண்டிருந்தார். போட்டி முடிந்த உடன் கோலியிடம் இதைப்பற்றிக் கேட்கும்போது ``என் ஆரம்பகாலத்தில் பெரிய ஸ்கோர் அடிக்க நிறைய போட்டிகள் எடுத்துக்கொண்டேன். நான் செய்த தவற்றை எனது ஜூனியர்கள் செய்ய விரும்பவில்லை. வாய்ப்புகள் கிடைக்கும்போது பெரிய ஸ்கோர் எடுக்க வேண்டும்'' என்று சொன்னார் கோலி.

புஜாரா & ரஹானே

கோலி 5 பேட்ஸ்மேன்களை மட்டும் நம்பி போட்டிகளில் களம் இறங்கும்போது அனைத்து பேட்ஸ்மேன்களின் பங்களிப்பும் அவசியம். ஒருவர் தவறு செய்தாலும் அது அணிக்குப் பாதிப்பையே ஏற்படுத்தும். இதை உணர்ந்து மிகவும் பொறுப்பாக ஆடுகிறார்கள் புஜாரா மற்றும் ரஹானே. முதல் போட்டியில் மயாங்க் அகர்வால்க்கு உறுதுணையாக ஆடினார்கள் என்றால் இரண்டாவது போட்டியில் கோலிக்கு பக்கபலமாக நின்றார்கள்.

இருவரும் இந்தத் தொடரில் சதம் அடிக்காவிட்டாலும் அரைசதங்கள் மூலம் பெரிய பார்ட்னஷிப்புக்கு வழிவகுத்தார்கள். ரஹானே இதுவரை உலக சாம்பியன்ஷிப் டெஸ்ட் போட்டிகளில் 2 சதம், 5 அரைசதம் அடித்து 624 ரன்கள் குவித்து அதிக ரன் எடுத்தவர்கள் பட்டியலில் 3-வது இடத்தில் இருக்கிறார். மறுபுறம் புஜாரா 4 அரைசதங்கள் அடித்து 314 ரன்களைக் குவித்துள்ளார். இவர்களின் ஃபார்ம் இப்படியே தொடர்ந்தால் அடுத்துவரும் வெளிநாட்டுத் தொடர்களிலும் இந்தியா பல வெற்றிகளைக் குவிக்கும்.

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo |

முகமது ஷமி & உமேஷ் யாதவ்

இந்த யுகத்தின் தலைசிறந்த பந்துவீச்சாளர் ஸ்டெயினிடம் தற்போதுள்ள மிகச்சிறந்த பெளலர் என்ற பாராட்டை பெற்றிருக்கிறார் முகமது ஷமி. உலகக்கோப்பை முடிந்த உடன் பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷோயிப் அக்தரிடம் அட்வைஸ் பெற்று தனது பெளலிங் ரன் அப்பை குறைத்து வேகத்தை கூட்டியிருக்கிறார் ஷமி. இதனால் இன் ஸ்விங், அவுட் ஸ்விங் மற்றும் பந்து தேய்ந்த உடன் போடப்படும் ரிவர்ஸ் ஸ்விங் என அனைத்து வகையான ஸ்விங் பந்துகளாலும் எதிரணி பேட்ஸ்மேன்களைத் திணறடித்துக்கொண்டிருக்கிறார்.

முதல் டெஸ்ட் போட்டியில் முகமது ஷமி வங்கதேச பேட்ஸ்மேன்களைத் தனது ரிவர்ஸ் ஸ்விங்கால் மிரட்டினார். அவர் போட்ட ஸ்விங்குக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் பேட்ஸ்மேன் ஸ்லிப் திசையில் கேட்ச் கொடுத்தும், எல்.பி.டபிள்யு ஆகியும் பெவிலியனுக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர். இரண்டாவது போட்டியில் பிங்க் பந்தில் பவுன்சர்கள் வீசி நிறைய வீரர்களுக்கு மனதளவில் பயத்தை உண்டாக்கினார். தொடரின் முடிவில் 9 விக்கெட்கள் எடுத்து ஸ்டார் பௌலர் என்பதை மீண்டும் ஒரு முறை நிருபித்துள்ளார் ஷமி.

kohli
kohli

2000-ம் ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவின் பென்ச் வீரர்களே பலம் வாய்ந்த வீரர்களாக இருப்பார்கள். யாருக்காவது அடிபட்டால் அவருக்குப் பதில் இறங்கும் வீரர் முந்தைய வீரரின் அளவுக்குச் சிறந்த பங்களிப்பை அளிப்பார். அதனாலேயே பல வருடங்களாக சாம்பியன் அணியாகத் திகழ்ந்தது ஆஸ்திரேலியா. இப்போது அதே மாதிரி அணியாக இந்திய அணி உருவெடுத்துக் கொண்டிருக்கிறது. பும்ராவுக்கு ஏற்பட்ட காயத்தால் 3 வது பெளலராக அணிக்குள் நுழைந்த உமேஷ் யாதவ் இப்போது முதன்மையான பெளலராக உருவெடுத்திருக்கிறார்.

தனது நேர்த்தியான லைன் அண்ட் லெங்த் முலம் விக்கெட்களை வாரிக் குவித்துக்கொண்டிருக்கிறார். உமேஷின் வேகத்தில் வங்கதேச வீரர்கள் செய்வதறியாது தவித்தனர். மொத்தம் 12 விக்கெட்கள் எடுத்து அடுத்த டெஸ்ட் போட்டிக்கான ப்ளேயிங் லெவனில் தனது இடத்தை உறுதிசெய்துவிட்டார் உமேஷ்.

இஷாந்த் ஷர்மா

வாழ்க்கை எல்லாருக்கும் இரண்டாவது வாய்ப்பு கொடுக்கும். அந்த வாய்ப்பை உறுதியாகப் பிடித்துக்கொண்டு மேலே வருவது அவரவர் கைகளில்தான் இருக்கிறது. இஷாந்த் ஷர்மாவுக்கும் அந்த இரண்டாவது வாய்ப்பு கிடைத்தது, 2018-ம் ஆண்டு அந்த வாய்ப்பை இறுகிப் பிடித்துக்கொண்டு மேலே ஏறிக்கொண்டிருக்கிறார் இஷாந்த். ஒவருக்கு 1 டு 2 பந்துகளை சரியான லைன் அண்ட் லென்த்தில் போட்டவர் இப்போது 4 டு 5 பந்துகள் வீசுகிறார். 36-க்கு மேல இருந்த இவரின் பெளலிங் ஆவரேஜ் 20-க்குக் கீழ் வந்துவிட்டது.

ஆஃப் ஸ்டம்ப் லைனில் வீசும்போது பேட்ஸ்மேனை முன்னே ஆடவைத்து அவுட் ஸ்விங் பந்தில் எட்ஜ் ஆகி ஸ்லிப்க்கும் செல்லும் பாரம்பர்ய டெஸ்ட் கிரிக்கெட் வித்தையை இங்கிலாந்து கவுன்ட்டி கிரிக்கெட்டில் நன்றாகக் கற்றுத் தேர்ந்திருக்கிறார். மேலும் சசக்ஸ் கவுன்ட்டி அணியின் கோச் ஜேசன் கில்லெஸ்பி இஷாந்தை இன்ஸ்விங் பந்துகளை ஆஃப் ஸ்டம்ப் லைனில் வீசாமல் மிடில் ஸ்டம்ப் லைனில் குறிப்பாக, பேட்ஸ்மேனின் முட்டிக்கு வீசச் சொல்லி அறிவுரை கொடுக்க அதைச் செயல்படுத்தி வரிசையாகக் கொத்துக்கொத்தாக விக்கெட்டுகளை அள்ளிவருகிறார் இஷாந்த்.

kohli
kohli

வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் பிங்க் பந்தில் ஸ்டம்ப்களை அடுத்தடுத்து பறக்கவிட்டு இது நம்ம இஷாந்த்தானா என்று அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். 2007-ல் பாகிஸ்தான் உடனான போட்டியில் 5 விக்கெட் ஹால் எடுத்தவர் 12 வருடங்களுக்குப் பிறகு, அதே கொல்கத்தா மைதானத்தில் தனது 2வது 5 விக்கெட் ஹாலை எடுத்திருக்கிறார். தொடரின் முடிவில் 12 விக்கெட்கள் எடுத்து மேன் ஆஃப் தி மேட்ச் மற்றும் மேன் ஆஃப் தி சீரிஸ் விருதுகளை வாங்கியிருக்கிறார்.

கிங் கோலி!

பகலிரவு டெஸ்ட்டில் இந்தியா முதல்முறையாக ஆடுகிறது என்பதைவிட, பிங்க் பந்தை கோலி முதல்முறையாக எப்படி எதிர்கொள்ளப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு அதிகளவில் இருந்தது. ரோஹித், ரஹானே, புஜாரா எனப் பல வீரர்களுக்கு பிங்க் பந்தில் ஆடிப்பயிற்சி இருக்கிறது. ஆனால், கோலிக்கு இதுவே முதல்முறை. முதல் டெஸ்ட் போட்டியில் டக் அவுட் ஆனவர் இரண்டாவது போட்டியில் எதிர் அணி வீரரே பாராட்டும் அளவுக்கு பவுண்டரிகளை அடிக்க ஆரம்பித்தார். போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பு சச்சினிடம் பேசியிருந்தார் கோலி. அப்போது பிங்க் பந்து டெஸ்ட் போட்டியை எவ்வாறு அணுக வேண்டும் என்று கோலிக்கு சில அறிவுரைகள் சொல்லியிருந்தார் சச்சின். ``பிங்க் போட்டிகளில் மதியம் ஆரம்பிக்கும் முதல் செஷன் வெயிலின் காரணமாக இரண்டாவது செஷன் போலவும், இரண்டாவது செஷன் வெளிச்சம் மறைந்து இருள் வரத் தொடங்கும் நேரத்தில் ஆடுவதால் முதல் செஷன் போலவும், மூன்றாவது செஷன் டெஸ்ட் போட்டிகளில் 80வது ஓவரில் எடுக்கப்படும் புதுப்பந்து செஷன்போல மிகக் கடினமாகவும் இருக்கும். அதைச் சரியாகப் புரிந்துகொண்டு அதற்கு ஏற்றாற்போல் நம் ஆட்டத்தை மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும்'' என்று சொல்லியிருந்தார் சச்சின்.

சச்சினின் அட்வைஸை கோலி எப்போதுமே அசால்ட்டாக எடுத்துக்கொள்வதில்லை. சச்சின் அறிவுரையை அப்படியே செயல்படுத்தினார். அதுவும் முதல் நாள் இரவு ஒளி வெளிச்சத்தில் பிங்க் பந்தை அருமையாக எதிர்கொண்டார் கோலி. எந்தவிதமான சிரமங்களையும் சந்திக்கவில்லை. பிங்க் பந்தில் பல நாள்கள் விளையாடி அனுபவம் கொண்ட வீரர்போல் விளையாடினார். அவர் அடித்த கவர் டிரைவ்கள் ஒவ்வொன்றும் எதிர் அணி வீரரே கைதட்டும் அளவுக்கு இருந்தது. முதல் நாள் இரவு அரை சதம் அடித்தவர் இரண்டாம் நாள் காலையில் தனது கவர் டிரைவ் ஷாட்களை மேலும் அதிகப்படுத்தினார். கேப்டனாக அறிமுக டெஸ்ட் போட்டியில் சதமடித்தவர், பிங்க் டெஸ்ட் போட்டியிலும் அதே முறையைப் பின்பற்றி தனது 27வது டெஸ்ட் சதத்தை அடித்தார் கிங் கோலி.

தனது 439 இன்னிங்ஸில் 70 சதங்களை விளாசி சச்சின் சாதனையைப் பின்னுக்குத் தள்ளியுள்ளார் கோலி. சச்சின் இதற்கு முன் 505 இன்னிங்ஸில் 70 சதங்களை அடித்திருந்தார். கோலி எல்லா மைல்ஸ்டோன்களையும் அசால்ட்டாகக் கடந்து போய்க்கொண்டேயிருக்கிறார்.

அடுத்து வரும் நியூசிலாந்து டெஸ்ட் தொடர் கடும் சவால்கள் நிறைந்ததாகவே இருக்கும். சவால்களை சமாளித்து சாதனை படைக்கவே தயாராக இருக்கிறது இந்த கோலியின் படை!

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo |