Published:Updated:

கேன் வில்லியம்சன் எனும் அமைதிப் புலி… காத்திருந்து, பதுங்கி, பின்பாய்ந்து சீறிய மாவீரனின் படை!

பல ஆண்டுகளாய், பல தொடர்களாய், கைகூடி விடாதா என ஏங்கித் தவித்த கோப்பை, இறுதியாக, சகல தகுதியுமுள்ள வில்லியம்சனின் கையில் சேர்ந்திருக்கிறது.

நான்கு தட்டுகளையுடைய, ஃபாபுலஸ் ஃபோர்களுக்குரிய தராசில், பேட்ஸ்மேனாக, சில சமயங்களில், கேன் வில்லியம்சனின் நிலைமாறலாம், ஏறலாம், இறங்கலாம். அயல்நாடுகளில், ரன் சேர்க்க அவர் திணறலாம். ஆனால், ஒரு கேப்டனாக, அவர் என்றும் தடுமாறியதில்லை. இரண்டு ஆண்டுகால நீண்ட டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில், நியூசிலாந்து வென்றதில், பலரது பங்கும் இருந்தாலும், மிக முக்கிய காரணம், வில்லியம்சனின் கேப்டன்ஷிப்.

ப்ளேயிங் லெவனில், ஸ்பின்னர்களைத் தவிர்த்து, வேகப்பந்து வீச்சாளர்களை முழுமையாக நம்பிக் களமிறங்கியது, மேட் ஹென்ரிக்கு 'நோ' சொல்லி, ஜேமிசனை உள்ளே எடுத்தது என அங்கேயே ஸ்கோர் செய்யத் தொடங்கினார், வில்லியம்சன்.

களத்தில், இந்தியா விளையாடிய முதல் இன்னிங்சிலேயே, பௌலிங் மாற்றங்கள், வியூகம் வகுத்து விக்கெட் வீழ்த்துதல் என அசத்தியிருந்த வில்லியம்சன், இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸில், கேப்டன்ஷிப்புக்கான பாடத்தையே நடத்தி, தான் ஏன் அக்கோப்பையை ஏந்தத் தகுதியானவர் என்பதையும் நிரூபித்தார்.

இறுதி நாள் ஆட்டத்தை, கோலி மற்றும் புஜாராவின் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி, தொடக்கத்திலிருந்தே முழுமையாக கைப்பற்றும் நோக்கில், சவுதி மற்றும் ஜேமிசனைக் கொண்டுதான் தொடங்கினார், வில்லியம்சன். ஏனெனில், இந்திய வீரர்கள், ஜேமிசனின் பந்தைத்தொடவேத் தயங்கினர். ‘’வென்றாக வேண்டுமெனில், விக்கெட்டுகள் வேண்டும்’' என்பதால், தொடக்கத்திலிருந்தே தடையறத் தாக்க வைத்தார். விளைவு முதல் அரைமணி நேரம் மட்டுமே, விக்கெட் இழப்பின்றி, மூச்சுப் பிடித்து நின்றது இந்தியத் தரப்பு.

ஜேமிசன், சவுதி, போல்ட், வாக்னர்
ஜேமிசன், சவுதி, போல்ட், வாக்னர்

அழுத்தம் ஏற்ற வேண்டும் என, அந்த ஸ்பெல்லில் மட்டுமே இருவரையும் ஏழு ஓவர்களை வீச வைத்தார் வில்லியம்சன். மற்ற ஸ்பெல்களில் எல்லாம், மூன்று அல்லது நான்கு ஓவர்களுக்கு ஒரு முறை பௌலர்களை மாற்றிக் கொண்டே இருந்தார். அது பேட்ஸ்மேன்களை, செட்டில் ஆக விடாமல், ஒரு பதற்றத்தோடு வைத்துக் கொண்டது. அதே போல், போல்ட்டை பல ஓவர்கள் கடந்த பின்பு, வாக்னருக்கும் பிறகுதான், கொண்டு வந்தார். ப்ரஷர் கேம் என்பதால், கிரந்தோமை இறுதி வரை, பந்து வீச வைக்கவில்லை வில்லியம்சன்.

கோலியை, முதல் இன்னிங்சில், அவுட் சைட் த ஆஃப் ஸ்டம்ப்பிலேயே பந்துவீசி, அதுதான் அவருக்கான பொறி என்பதைப் போல் தோற்றப் பிழை உருவாக்கி, இன் ஸ்விங்கரால் தூக்கியிருந்ததார் ஜேமிசன். கோலி இம்முறையும் இதுதான் திட்டமாக இருக்குமென, இரண்டாவது இன்னிங்ஸில், பேடுக்கு வரும் பந்துகளின் மேல், கூடுதல் கவனம் வைக்க, ஜேமிசனை வைத்து, ஷார்ட் ஆஃப் லென்த்தில், அவுட் சைட் த ஆஃப் ஸ்டம்ப்பில் பந்தை வீச வைத்து, அவரது விக்கெட்டை குறி வைத்துத் தூக்க வைத்தார் வில்லியம்சன்.

'பிளான் ஏ' வை செயல்படுத்துவார் என்று நினைக்கும் போது, 'பிளான் பி'யையும், 'பிளான் பி'க்குப் போவார் என்று எண்ணும் போது, 'பிளான் ஏ'வுக்கும் மாறி மாறி போய் வந்து, கணிக்க முடியாத கேம் பிளான்களை கணத்தில், களத்தில் நிறைவேற்றிக் கொண்டிருந்தார் வில்லியம்சன்.

எந்த வீரரை, எந்த இடத்தில், எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதை, அறிந்து வைத்திருப்பதுதானே, தலைமைப் பண்பிற்கான முதல் தகுதியே. அதை, இந்தப் போட்டியின், ஒவ்வொரு கட்டத்திலும் நிரூபித்தார், வில்லியம்சன். நான்கு பௌலர்களையும், நான்கு விதமாகப் பயன்படுத்தினார். சவுதியை பேஸிக் டெஸ்ட் லைனிலேயே தொடர்ந்து பந்துவீச வைத்தார். வாக்னரையோ, லைனை மாற்றி மாற்றி வீச வைத்ததோடு, குறிப்பாக பவுன்சர்களைப் போட வைத்தார்.

போல்ட்டை பேடைக் குறிவைத்து, பேட்ஸ்மேனை எல்பிடபிள்யூவாக்க வைக்கும் நோக்கில், வீச வைத்தார். இறுதியாக, ஜேமிசனை தேர்ட் மற்றும் ஃபோர்த் ஸ்டம்ப் லைனிலேயே பந்துவீச வைத்து, ஸ்லிப் கேட்சுக்கு போகும்படி, பேட்ஸ்மேன்களை இக்கட்டுக்கு உள்ளாக்கினார். நான்கு புறமும் தாக்குதல் தொடர்ந்து வர, என்ன நடக்கிறதென்றே புரியாத, ஒரு குழப்பத்தோடு இந்திய வீரர்கள் ஆடுவதைப் பார்க்க முடிந்தது. அதுவே அவர்களை, தவறான ஷாட்களை ஆட வைத்து, மோசமான முறையில் ஆட்டமிழக்கவும் வைத்தது.

கேன் வில்லியம்சன்
கேன் வில்லியம்சன்

ஜேமிசனைக் கொண்டு காய் நகர்த்தி, பேட்ஸ்மேன்களை வெட்டி வீழ்த்தி வெளியே அனுப்பியது அப்பட்டமாய் தெரிந்ததென்றால், வாக்னரைக் கொண்டு வில்லியம்சன் வலைவிரித்தது, தரமான தந்திரமாக இருந்தது. முதல் இன்னிங்சில், ரஹானேவின் விக்கெட் அப்படிப்பட்டதுதான். முதல் பந்தை ரஹானே தூக்கியடிக்க, இரண்டாவது பந்தை ஷார்ட் பாலாக போட வைத்தார் வில்லியம்சன். அதில் புல் ஷாட் ஆட முயற்சித்தார் ரஹானே! அச்சமயம், அங்கே ஒரு ஃபீல்டர் முளைத்திருப்பதை ரஹானே கவனிக்காமல், கச்சிதமாய் மாட்டிக் கொண்டார். ஆட்டமிழந்ததும், ரஹானே கொடுத்த ரியாக்ஷன், 'க்ளூலெஸ்' என்று சொல்லுவார்களே அப்படித்தான் இருந்தது. என்ன நடந்து விட்டது, என்ன செய்து விட்டேன் என்பதைப் போலிருந்தது முகபாவம்.

இரண்டாவது இன்னிங்ஸில், வாக்னரை வைத்து, ஜடேஜாவின் விக்கெட்டை வில்லியம்சன் தூக்கியதும், இன்னொரு மாஸ்டர் பிளான்தான். வந்ததிலிருந்தே சற்றே பதற்றம் காணப்பட்டது ஜடேஜாவிடம். பந்தை அடித்துவிட்டு, அது எங்கே போகிறது என்று கவனிக்காமல் கூட ஓடிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில், உணவு இடைவேளைக்கு சற்று முன்பு, ஓரளவு செட்டில் ஆனார் ஜடேஜா. அது எவ்வளவு ஆபத்தானது என்று வில்லியம்சனுக்கு தெரியும். எனவே, அவருக்கும், லஞ்ச் பிரேக்கிலேயே திட்டம் உருவானது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ரவுண்ட் த விக்கெட்டில் வந்து, ஜடேஜாவின் விலா எலும்புக்கே குறிவைத்தார் வாக்னர். சில பந்துகள், அவரது உடலையும் பதம் பார்த்தது. பின் சில பந்துகள், வைடு லெக் சைடில் போடப்பட்டு, இறுதியாக ஒரு பந்து வைடு ஆஃப் சைடில் போடப்பட, ஜடேஜா டிஃபென்ஸ் ஆட முயன்று எட்ஜாகி, கீப்பர் கேட்சானது.

அமைதியாக மைண்ட் கேம் ஆடினார் வில்லியம்சன். ஒவ்வொரு ஓவருக்கும், ஒவ்வொரு வீரருக்கும், ஒவ்வொரு மாதிரியான ஃபீல்ட் செட்டப் செய்து பிரமிக்க வைத்தார். மூன்றாம் நபராக, போட்டியை வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கே, அது மலைப்பை ஏற்படுத்தியது எனில், அதை நேருக்கு நேராக எதிர்கொண்ட, இந்திய பேட்ஸ்மேன்களது நிலைமை எப்படி இருந்திருக்கும்?!

டெய்ல் எண்டர்களின் விக்கெட்டுகளை வீழ்த்துவது எவ்வளவு முக்கியம் என்பதை, வில்லியம்சன், தெளிவாக உணர்ந்திருந்தார். ஏனெனில், முதல் இன்னிங்சில், நியூசிலாந்து, ஏழாவது விக்கெட் விழுந்த பிறகு, 57 ரன்களைச் சேர்த்திருந்தது‌. உண்மையில், நேற்றைய போட்டியில், இந்த 57 ரன்களின் பங்கு இல்லையெனில், கோப்பை, கைமாறிக்கூட இருந்திருக்கலாம்‌. இதை உணர்ந்ததால்தான், பயமுறுத்தும் பன்ட்டின் விக்கெட் விழுந்த பிறகும்கூட, ஆற அமர ரிலாக்ஸாகி விடவில்லை வில்லியம்சன்.

கேன் வில்லியம்சன் - கோலி அண்ட் கோ
கேன் வில்லியம்சன் - கோலி அண்ட் கோ

மாறாக, இந்தியா டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு, எந்த அளவுக்கு, திட்டங்களை வகுக்குமோ, அதே கவனத்துடன்தான், இந்தியாவின் டெய்ல் எண்டர்களுக்கும் வகுத்தார்.

அஷ்வினுக்கு வாக்னர் பந்தில் லெக் சைட் ஃபீல்டிங் செட் செய்து அவரை திணறச் செய்தார். ஷமிக்கு, ஷார்ட் தேர்ட் லெக் மேன் செட் செய்து அவரது விக்கெட்டை லாவகமாக தூக்கினார். ஒவ்வொருவருக்கும் திட்டம் வைத்திருக்கிறேன் என்பது போல்தான் இருந்தது அவரது ஒவ்வொரு நகர்வுகளும்.

பேட்ஸ்மேனாக, முதல் இன்னிங்சில், அவருடைய ஆட்டம் விமர்சனத்துக்குள்ளானது. 100 பந்துகளில், 15 ரன்களைச் சேர்த்திருந்தது விமர்சனத்துக்குள்ளானது. காத்திருந்து, பின்வாங்கி பின், தேவையான சந்தர்ப்பத்தில் பாய்வது தானே, புலியின் சாதுர்யம். அதைத்தான், செய்து காட்டினார் வில்லியம்சன். இரண்டாவது இன்னிங்ஸில், தன்னைப் பற்றிப் பேசியவர்களின் மூக்குடை வதைப் போன்ற ஒரு கேப்டன் இன்னிங்ஸை ஆடினார்.

WTC FINAL : கேன் வில்லியம்சனின் கூல் கேப்டன்ஸி… கோலியின் பிடிவாதத்தால் இன்னொரு ஐசிசி கோப்பை காலி!

போட்டிக்கு முன்பே, கோலி பிளேயிங் லெவனை அறிவித்ததும் தோல்விக்குக் காரணம் என ஒருசிலர் கொடி பிடிக்கின்றனர். "நான் எனது 'தி பெஸ்ட்' அணியுடன்தான் இறங்கினேன், எனக்கு வேறு ஆப்ஷன்கள் இல்லை!" எனக் கூறி இருந்தார் கோலி. ஆனால், உண்மையில், அணியில் இடம் பெற்றிருந்த ப்ளேயிங் லெவனுக்கு மட்டுமில்லை, பதினைந்து பேருக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த அணிக்குமே வில்லியம்சனிடம் திட்டம் இருந்தது.

அவரிடம் பதற்றம் இல்லை, முகத்தில் கடுகளவு பயமும் இல்லை, வெல்வோமா என்ற சந்தேகம் கூட இல்லை. "நாங்கள்தான் வெல்லப் போகிறோம்" என்பது போன்ற, ஒரு தீர்க்கமான தீர்க்கதரிசி போன்றுதான் வில்லியம்சன் போட்டி முழுவதும் உலா வந்தார்.

கேன் வில்லியம்சன் - ராஸ் டெய்லர்
கேன் வில்லியம்சன் - ராஸ் டெய்லர்

அந்த அபார நம்பிக்கைக்குக் காரணம் இல்லாமல் இல்லை. இரண்டு வருடங்களுக்கும் மேலான திட்டமிடல் இது. 2019-ல், இதே இங்கிலாந்தில், உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில், வலிகளை மட்டும் சுமந்து கொண்டு சென்றவர்தான். ஆனால், அந்த வலிகள்தான், அசுரத்தனமாக அவரை தனது சாரட்டை வழிநடத்த வைத்திருக்கிறது. மேடு பள்ளங்களில் ஏறி இறங்கினாலும், வெற்றி என்னும் கோட்டைத் தொட வைத்திருக்கிறது.

விழுந்த இடத்திலேயே, எழுந்து நிற்பதுதானே மாவீரனுக்கு அழகு. வில்லியம்சன் - மாவீரன். அந்தக் காரணத்தினால்தான், அவரிடம்தான் தோற்றோம் என்பது ஒருசில இந்திய ரசிகர்களுக்கு, வலியின் வீரியத்தை சற்றே குறைத்துள்ளது. ஏனெனில், இந்தியா போராடித் தோற்றிருப்பது, சாதாரண ஒரு அணியிடம் இல்லை. வில்லியம்சன் என்னும் ஒரு ஒப்பற்ற தலைவனிடமும், அவர் பல ஆண்டுகளாய், செதுக்கி உருவாக்கிய அணியிடமும்தான். நாளின் முடிவில், எல்லோர் உதடுகளும் உதிர்த்த வார்த்தைகள், "HE DESERVES IT".

ஆம்! கோப்பை சகல தகுதியும் உடையவரிடம்தான், தேடிச் சென்று சேர்ந்துள்ளது‌.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு