கேன் வில்லியம்சன்... நம்பர் 1 பேட்ஸ்மேனாக உயர்ந்து நிற்கும் மாவீரன்! #KaneWilliamson

கோலி, ஸ்மித், ரூட், பாபர் அசாம் போன்ற ஸ்டார் பேட்ஸ்மேன்கள் எல்லாம் ஃபிரன்ட் ஃபுட் மூலமாக அதிக ரன்களைச் சேர்த்துக்கொண்டிருக்கும்போது, கேன் 'என் வழி தனி வழி' என பேக் ஃபுட்டில் கிளாசிக்கல் கிரிக்கெட்டை ஆடிக் கொண்டிருக்கிறார்.
உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேனாக கோலியைப் பின்னுக்குத்தள்ளி முதலிடம் பிடித்திருக்கும் கேன் வில்லியம்சனின் ஃபார்ம் தற்போது உச்சத்தில் இருக்கிறது. பாகிஸ்தான் அணிக்கு எதிராகத் தொடர் சதங்கள் அடித்து மிரட்டிக்கொண்டிருக்கும் கேன் வில்லியம்சன், இன்று கிறைஸ்ட்சர்ச்சில் 238 ரன்கள் குவித்திருக்கிறார்.
டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான ஃபைனலை நோக்கி இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் ஓட்டமெடுத்துக் கொண்டிருக்க, சத்தமில்லாமல் சாதித்துக் கொண்டிருக்கிறது நியூசிலாந்து! பாகிஸ்தானுக்கு எதிரான நடப்புத் தொடரின், இரண்டாவது போட்டியை வெல்லும் பட்சத்தில், டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான தரவரிசைப் பட்டியலில், நியூசிலாந்து முதலாம் இடத்திற்கு முன்னேறும்! இதற்கு முழுமுதற் காரணமாக இருப்பவர் கேப்டன் கேன் வில்லியம்சன்.

2010-ம் ஆண்டில், இந்தியாவுக்கு எதிராக தன்னுடைய அறிமுக டெஸ்ட் போட்டியில் ஆடினார் வில்லியம்சன். அகமதாபாத்தில் நடந்த அந்த முதல் போட்டியிலேயே 299 பந்துகளில், 131 ரன்களுடன், தன்னுடைய முதல் சதத்தைப் பதிவு செய்தார். டெஸ்ட் அரங்கத்தில் அன்று தொடங்கிய அவரது திறன்மிகுந்த ஆட்டம், இன்றுவரை எவ்வித தட்டுத்தடுமாற்றமும் இன்றி தொடர்கிறது. எல்லாவற்றிற்கும் மகுடம் சூடியதைப் போல, 2015-ம் ஆண்டுவாக்கில், டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் தான் பிடித்திருந்த முதலிடத்தை திரும்பக் கைப்பற்றி இருக்கிறார், வில்லியம்சன்.
2015-ம் ஆண்டின் இறுதியில் முதலிடத்தில் இருந்தார் வில்லியம்சன். அதன்பின் அந்த இடத்துக்கு கோலி மற்றும் ஸ்மித் ஆகியோருக்கு இடையே நடந்த 'நீயா நானா?!' யுத்தத்தில், இவர்கள் இருவரும்தான் முதலிடத்தை மாற்றி மாற்றி அலங்கரித்து வந்தனர். 2020-ம் ஆண்டு கூட, ஸ்மித் 313 நாட்களும், கோலி 51 நாட்களும் முதலாமிடத்தில் நீடிக்க, வருடத்தின் கடைசி நாளான டிசம்பர் 31 அன்று, இவர்கள் இருவரையும் பின்னால் தள்ளி, முதலிடத்தை முத்தமிட்டிருக்கிறார் வில்லியம்சன்.
சென்ற ஆண்டு டிசம்பர் முதல் வாரத்தில், மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தான் அடித்த 251 ரன்கள் மூலமாய், தரவரிசைப் பட்டியலில், கோலியுடன் இரண்டாமிடத்தைப் பகிர்ந்து கொண்ட வில்லியம்சன், பாகிஸ்தானுடனான நடப்புத் தொடரில் முதல் போட்டியில் அடித்த சதத்தின் மூலமாக முதலிடத்திற்கு முன்னேறினார். அதனைத் தொடர்ந்து, இரண்டாவது போட்டியிலும் சதத்தைப் பூர்த்தி செய்து, இந்த ஆண்டின் முதல் சதத்தைப் பதிவு செய்த வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். அதுவும் இரட்டை சதத்தைப் பதிவு செய்திருக்கிறார் கேன் வில்லியம்சன். இதன்மூலம் தொடர்ச்சியாக மூன்று டெஸ்ட்களில், மூன்று சதங்களை விளாசி, ஒரு தலைசிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேனாக உருவெடுத்துள்ளார். இதற்கு முன்பு 2015-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராகவும் (242) இங்கிலாந்துக்கு எதிராகவும் (132) அடுத்தடுத்த சதங்களை அவர் அடித்திருந்தார்.

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் அடித்த இந்த இரட்டை சதத்தில் முதல் ஐம்பது ரன்களை எட்ட 105 பந்துகளை எடுத்துக் கொண்ட கேன் வில்லியம்சன், அதற்கடுத்த 50 ரன்களை, வெறும் 35 பந்துகளில் எட்டினார். அது மட்டுமன்றி, இந்தச் சதத்தின் மூலமாக அவர், பல சாதனைகளையும் நிகழ்த்தி உள்ளார். வில்லியம்சனின் 24-வது சதம் இது. நான்காவது இரட்டை சதம். டெஸ்ட் ஃபார்மேட்டில், நியூசிலாந்து மண்ணில், அதிக சதங்களை (13) எடுத்த நியூசிலாந்து வீரர், என்ற சாதனையை அவர் நிகழ்த்தி இருக்கிறார்! மேலும், டெஸ்ட்டில் 50+ ஸ்கோரை அதிகபட்சமாக 56 முறை எடுத்த முதல் நியூசிலாந்து வீரர் என்ற பெருமையும் அவர் வசம் வந்துள்ளது!
குறிப்பாக நியூசிலாந்து மைதானங்களில் அவ்வளவு எளிதாக வீழ்த்தமுடியாத வீரராக இருக்கிறார் கேன் வில்லியம்சன். அவர் அடித்த 24 சதங்களில், 13 சதங்கள், நியூசிலாந்தில் அடித்தவைதான். இதில், ஐந்து சதங்களும், இரண்டு அரைச் சதங்களும் அடக்கம். மேலும் இவர் அடித்திருக்கும் நான்கு இரட்டை சதங்களுமே நியூசிலாந்து மைதானங்களில் அடிக்கப்பட்டவைதான்.
82 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள வில்லியம்சன் 7000 ரன்கள் எனும் மைல்கல்லை வெகு விரைவில் தொட உள்ளார்! டெஸ்ட் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை, 2010-ம் ஆண்டில் இருந்து விளையாடியுள்ள வீரர்களைக் கணக்கில் கொண்டு பார்த்தால், அதிக சராசரி உள்ள வீரர்கள் பட்டியலில் வில்லியம்சன் இரண்டாமிடத்தில் இருக்கிறார். இந்த நம்பர்கள் அத்தனையும் சொல்லும் அவர் எத்தனை நம்பத்தகுந்தவராக இருக்கிறார் என்பதனை!

வில்லியம்சனின் இன்னொரு மிகப் பெரிய பலம், விளையாடும் ஃபார்மேட்டுக்கு ஏற்றாற் போல் தன்னைத் தானே தகவமைத்துக் கொண்டே இருப்பது! இதே பாகிஸ்தானுடன் நடைபெற்ற இரண்டாவது டி20இல் 42 பந்துகளில் 57 ரன்களைக் குவித்திருந்தவர், அதற்கடுத்து வந்த டெஸ்ட் போட்டியிலோ அதற்கேற்றாற்போல் தன்னை மாற்றிக் கொண்டார்.
தற்போது கிரிக்கெட்டில் 'பியூர் கிளாஸ்' என்ற சொல்லுக்கு அர்த்தம் சொல்லுமாறு ஓர் ஆட்டத்தை அடையாளம் காட்ட வேண்டும் என்றால் அதற்கு வில்லியம்சன் விளையாடுவதைத்தான் காட்ட வேண்டும். கிரிக்கெட் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள ஷாட்களை அச்சுப் பிறழாமல் ஆடக் கூடியவராய் திகழும் வில்லியம்சனின் பேக்ஃபுட் ஷாட்கள் ஒவ்வொன்றும் கவித்துவமானது.
கோலி, ஸ்மித், ரூட், பாபர் அசாம் போன்ற ஸ்டார் பேட்ஸ்மேன்கள் எல்லாம் ஃபிரன்ட் ஃபுட் மூலமாக அதிக ரன்களைச் சேர்த்துக்கொண்டிருக்கும்போது, கேன் 'என் வழி தனி வழி' என பேக் ஃபுட்டில் கிளாசிக்கல் கிரிக்கெட்டை ஆடிக் கொண்டிருக்கிறார்.
முழுநேரக் கேப்டனாக இவர் எல்லா ஃபார்மேட்டிலும் பதவி ஏற்றுக் கொண்டதிலிருந்தே பல வெற்றிகளை வென்று குவித்துக் கொண்டிருக்கிறது நியூசிலாந்து. குறிப்பாக, சொந்த மண்ணில் வீழ்த்தவே முடியாத அணியாக இருக்கிறது. இந்த டெக்கேடின் டெஸ்ட் அணியின் கேப்டனாய் கோலியை ஐசிசி தேர்வு செய்திருந்தாலும், அக்தர், பிராட் ஹாக் மற்றும் நாசர் ஹுசைன் என பலரது தேர்வாகவும் இருந்தது வில்லியம்சன்தான். 2015-ம் ஆண்டு, மெக்கல்லமின் தலைமையில் எப்படி ஒரு எழுச்சியை, ஒருநாள் போட்டிகளில் நியூசிலாந்து கண்டதோ, அதே போன்றதொரு விஸ்வரூபத்தைத்தான் வில்லியம்சனின் தலைமையில் டெஸ்ட் போட்டி களத்தில், நடப்பு நியூசிலாந்து அணி செய்து வருகிறது.

வசீகரச் சிரிப்புக்குச் சொந்தக்காரரான வில்லியம்சனை, ஸ்போர்மன்ஷிப்புக்கான ஆளுருவாக அடையாளம் காட்டலாம். களத்திலும் களத்திற்கு வெளியேயும் ஒரு வீரர் நடந்து கொள்ள வேண்டிய அணுகுமுறையை இவரை விடவும் வேறொருவர் சரியாகச் செய்து காட்டி விட முடியாது. அதனால்தான் இந்தத் தலைமுறையின் ராகுல் டிராவிட்டாக, வெறுப்பவர் யாருமே இல்லாத வீரராக இருந்து வருகிறார் கேன்.
தலைசிறந்த பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவும் கிடைப்பதற்கரிய பொக்கிஷமாய், நியூசிலாந்துக்குக் கிடைத்துள்ளார் வில்லியம்சன். இனிவரும் நாட்களில், தன் அணியை அவர் சிகரங்களில் ஏற்றி வைப்பார் என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை. இவரது மேலான தலைமையில், டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை லார்ட்ஸில் விளையாடி டெஸ்ட் சாம்பியனாக, நியூசிலாந்து மகுடம் தரித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.