Published:Updated:

மீண்டும் FAB-4 வீரனாக ஜோ ரூட்... சென்னையில் 'ரூட்'டு தலயின் ஆட்டத்தில் அனல் பறக்கலாம்... எப்படி?

ஜோ ரூட்

ஒரே தொடரில் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் மேன் ஆஃப் தி மேட்ச் மற்றும் மேன் ஆஃப் தி சீரிஸ் என அடுக்கடுக்கான அவார்டுகளை வாங்கி புதுத்தெம்போடு இந்தியாவுக்கு வந்திருக்கிறார் ஜோ ரூட்.

மீண்டும் FAB-4 வீரனாக ஜோ ரூட்... சென்னையில் 'ரூட்'டு தலயின் ஆட்டத்தில் அனல் பறக்கலாம்... எப்படி?

ஒரே தொடரில் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் மேன் ஆஃப் தி மேட்ச் மற்றும் மேன் ஆஃப் தி சீரிஸ் என அடுக்கடுக்கான அவார்டுகளை வாங்கி புதுத்தெம்போடு இந்தியாவுக்கு வந்திருக்கிறார் ஜோ ரூட்.

Published:Updated:
ஜோ ரூட்
"ஃபாபுலஸ் 4-ல் நான் இருக்கிறேனா என்பது எனக்கே உறுதியாய்த் தெரியவில்லை!" - கடந்த ஆண்டு, வெறும் அரைச்சதங்களில் ஆட்டமிழந்து, ஒரு பெரிய இன்னிங்ஸ் என்பதையே ஆடத் தவறிய காலகட்டத்தில், ஜோ ரூட் உதிர்த்த வார்த்தைகள் இவை.

சுயசந்தேகம் என்பது பொதுவாய் நம்மைச் சரிய வைத்து சாய்த்து விடும். ஆனால், ரூட்டுக்கோ, ரூட் மாறி, அதே சுயசந்தேகம் அவரை தன்னைத்தானே மேம்படுத்தி, தகுதியுடையவராக மாற்றிக் கொள்ள உதவியுள்ளது. இலங்கைக்கு எதிரான தொடரில், அடுத்தடுத்தப் போட்டிகளில், இரட்டைச் சதத்தையும், சதத்தையும் பதிவு செய்து, தான் 'ஃபாபுலஸ் 4'-குத் தகுதியானவர்தான் என்பதை தனக்கும், உலகுக்கும் நிரூபித்துள்ளார், ஜோ ரூட்!

எங்கே போனார் அந்த வின்டேஜ் ரூட் என்பதுதான், கடந்த மூன்றாண்டுகளாக எழுப்பப்பட்ட கேள்வியாக இருந்தது. கேன் வில்லியம்சன், கோலி, ஸ்மித் ஆகியோர் தலையெடுக்கத் துவங்கும் முன்பே, டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய முழு ஆதிக்கத்தையும் விதைத்தவர்தான் ரூட்! புகோவ்ஸ்கி போல ஒரு சென்சேஷனல் ப்ளேயராக உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடியதனால், ஒரு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தார் ஜோ ரூட். அதனை அவர் பொய்யாக்கவில்லை. அறிமுகப் போட்டியில் ஆரம்பித்த அவரது சிறப்பான ஆட்டம், பல்லாண்டுகள் அற்புதமாய்த் தொடர்ந்தது!

விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், ஜோ ரூட், கேன் வில்லியம்சன்
விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், ஜோ ரூட், கேன் வில்லியம்சன்

அந்தக் கால கட்டங்களில், அவருடைய பேட்டிங் சராசரி 57 என்ற அளவில் இருந்து வந்தது. அதுவரை இங்கிலாந்துக்காக ஆடிய எந்த ஒரு பேட்ஸ்மேனும், இப்படி ஒரு பேட்டிங் சராசரியை வைத்திருந்ததில்லை. எட்டாத உயரங்கள் இல்லை எனும் அளவுக்கு, பேட்டிங்கில் நிறைய சாதனைகளைச் செய்து கொண்டே வந்தார்.

ரூட்டின் அசாத்திய வளர்ச்சியைப்போலவே கோலி, கேன் வில்லியம்சன், ஸ்மித் ஆகிய மூவருமே டெஸ்ட் அரங்கில் தங்களது தடத்தை ராட்சசக் காலடியுடன் பதித்திருந்தனர். அந்தக் காலகட்டத்தில் தான் மார்டின் க்ரோவ் 'ஃபாபுலஸ் 4' என்ற ஒரு சிறப்புப் பெயரை, இந்த நால்வர் அணிக்குச் சூட்டினார். அது மட்டுமில்லாமல் இவர்கள்தான் இன்னும் அடுத்த சில ஆண்டுகள் கிரிக்கெட் உலகையே ஆளப் போகிறார்கள் என்றும், முதல் இடம் என்னும் சிம்மாசனத்தைப் பிடிப்பதற்கான போட்டி, மியூசிக்கல் சேர் போட்டி போல இந்த நால்வருக்கும் இடையே நிகழ்ந்து கொண்டேதான் இருக்கப் போகிறது என்றும் குறிப்பிட்டிருந்தார். அவரது வாக்கு தீர்க்கதரிசனமானது!

22 யார்ட் ஒட்டப் பந்தயத்தில் விடாது ஓடிக் கொண்டிருந்தன, இந்த வெறி பிடித்த நான்கு முரட்டுக் காளைகளும்! இவர்கள் அடித்திருக்கும் ரன்களின் கூட்டுத் தொகை, டாப் 10-ல் மிச்சமிருக்கும் வீரர்களின் ரன்களின் கூடுதலைச் சமன் செய்து விடும் அளவிற்கு அசுரத்தனமாய் இருந்தது இவர்களது ரன் குவிப்பு வேகம்!

ரூட்டோ தன் பங்கிற்கு இந்த 'ஃபாபுலஸ் 4' என்ற அடையாளத்திற்கு பங்கம் விளைவிக்காதவாறு, மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டே இருந்தார். இப்படி, தன்னுடைய கிரிக்கெட் கரியரின் உச்சத்தை அவர், தொட்டிருந்த போதுதான், 2018 வாக்கில் இந்தச் சாம்பியனின் கோட்டையில் கொஞ்சம் ஓட்டை விழத் தொடங்கியது!

ஜோ ரூட்
ஜோ ரூட்

பேட்டிங் பொசிஷனில் ஏற்பட்ட குளறுபடிகள், கேப்டன்ஷிப் தந்த நெருக்கடி மற்றும் கூடுதல் அழுத்தம் எனப் பலவும் எதிர் பின்னூட்டமாகி, அவரை நிலைதடுமாற வைக்க, சற்றே வீழ்ச்சியைச் சந்திக்கத் தொடங்கியது அவரது கரியர் கிராஃப்! ஒரு பெரிய இன்னிங்ஸ் என்பது நிகழவே முடியாத விஷயம் எனும் அளவுக்கு, சதங்களை அவரிடமிருந்து பார்ப்பதே அரிதிலும் அரிதாக மாறிப் போனது.

இன்னமும் தெளிவாகச் சொல்ல வேண்டுமெனில், 2018-ம் ஆண்டு, 24 இன்னிங்ஸில், 948 ரன்கள் எடுத்த அவர், 2019-ம் ஆண்டு, 851 ரன்களை 23 இன்னிங்ஸிலும், 2020-ம் ஆண்டு, 13 இன்னிங்ஸில் வெறும் 464 ரன்களையும் சேர்த்திருந்தார். இந்த மோசமான ஆட்டத்தின் காரணமாக, ஸ்ட்ரைக்கிங் ரேட்டும் கூடவே சேர்ந்து அவரது பேட்டிங் ஆவரேஜும் 50க்குக் கீழே, இறங்குமுகம் கண்டது. ஏற்றம் இறக்கம் இரண்டும் இணைந்தேதான் ஒரு விளையாட்டு வீரனுடன் பயணிக்கும் என்றாலும் ரூட்டைப் பொறுத்தவரை, சற்று நீண்ட இடைவெளியாய், 2018-ல் இருந்தே அவர் சற்று பின்னடைவையே சந்தித்து வந்தார்.

யானை படுத்தாலும் குதிரை மட்டம் என்போம். அதைப்போல, இவரது மோசமான பேட்டிங் சராசரியே, இன்றைய தேதியில் பல பேட்ஸ்மேன்களின் சிறந்த பேட்டிங் சராசரி! சராசரியான ஒரு பேட்ஸ்மேனாக இல்லாததற்கான சாபக்கேடை அவர் இங்குதான் அனுபவிக்கத் தொடங்கினார். கிரீடமே முள் கிரீடமானது! ஸ்டார் பேட்ஸ்மேனாக, இந்த நூற்றாண்டில் இங்கிலாந்தின் தலைசிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் எனும் அளவுக்குத் தலையில் தூக்கி வைத்துக் கொள்ளப்பட்டு கொண்டாடப்பட்டவர் என்பதால், இந்த வீழ்ச்சி, பூதக்கண்ணாடி கொண்டு பெரிதாக்கப்பட்டது!

ஜோ ரூட் - ஜேசன் ஹோல்டர்
ஜோ ரூட் - ஜேசன் ஹோல்டர்

இதற்கும் ஒருபடி மேலே போய், ஃபாபுலஸ் 4-ல் இருப்பதற்கு இவருக்குத் தகுதி இருக்கிறதா என்னும் அளவுக்கு கேலியைத் தாங்கிய கேள்வியும் எழுந்தது. சில நேரங்களில், நமது குறையை மற்றவர்கள் சுட்டிக் காட்டினால், அதன் வலி அபரிதமானதாய் இருக்கும் என்பதால், நம்மை நாமே குற்றச்சாட்டிக் கொள்வோமே! அப்படி ஒரு தற்காப்புக் கேடயத்தோடுதான் ஃபாபுலஸ் 4-ல் என்னை நான் பொருத்திபார்க்க விரும்பவில்லை... என்னைவிட மற்ற 3 பேட்ஸ்மேகளும் மிகவும் நன்றாக ஆடுகிறார்கள் என்று கூறி அந்த ரேஸில் இருந்து சற்று விலகிக் கொண்டார் ரூட்!

பள்ளத்தில் பாய்ந்த இவரது பர்ஃபாமன்ஸ், தொடர்ச்சியாக பேசுபொருளானது. விராட் கோலிக்கு 2020-ம் ஆண்டு அதிசய நிகழ்வாக, சதமில்லாமல் முடிவுக்கு வந்ததைப் போலவே, ரூட்டுக்கும் சதமின்றி முடிந்தது 2020! ரூட்டின் கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு டெஸ்ட் சதமுமின்றி ஒரு ஆண்டு முடிவுக்கு வந்தது அதுவே முதல் முறை! கடைசியாக, 2019 நவம்பரில் நியூசிலாந்துக்கு எதிராக அவர் அடித்த சதத்திற்குப்பின் இந்த 13 மாத இடைவெளி சதமில்லா இடைவெளி அவரது தன்னம்பிக்கையையே ஆட்டம் காண வைத்துவிட்டது. சதங்கள் அரைச்சதங்களாகின, அடுத்து சில போட்டிகளில் அரைசதங்களே அபூர்வமாக மாறத் தொடங்கின!

ஆசிய மைதானத்தில் ஸ்பின் நன்றாக ஆடுவார் என அனைவருக்கும் தெரிந்திருந்தாலும், அவரது சமீபத்திய மோசமான ஃபார்ம் காரணமாக இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரூட் மீண்டு எழுவாரா என்ற கேள்வி எழுந்திருந்தது. இலங்கை அணி பலம் குறைந்த அணியாக கருதப்பட்டாலும் தங்களது சொந்த மண்ணில் ஏற்கனவே ஆஸ்திரலியாவை 3-0 என ஸ்பின் துணைகொண்டு வீழ்த்தியிருந்தது. அதேமாதிரி மீண்டும் ஒரு சுழல் ஜாலம் நிகழ்த்தி இங்கிலாந்தை வென்று விடுவார்களோ என்ற எண்ணம் எழாமல் இல்லை.

சந்தித்த சறுக்கல்களும், கடந்து வந்த கிண்டல்களும், அவமானங்களும், பொதித்து உள்ளே வைத்து, அதனால் ஏற்பட்ட வலி தந்த வைராக்கியத்தின் மூலமாகவே, இப்போது மறுபடியும் எழுந்து நின்றிருக்கிறார் ரூட்!

ஜோ ரூட்
ஜோ ரூட்

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில், முதல் போட்டியில், முதல் இன்னிங்ஸில், இரட்டைச் சதத்தைக் கடந்து, 228 ரன்களைக் குவித்தவர், இரண்டாவது போட்டியிலோ, 186 ரன்களைக் குவித்திருந்தார்! இந்த நான்கு இன்னிங்க்ஸில், 426 ரன்களை, 106.5 என்ற பேட்டிங் சராசரியோடு எடுத்துக் காட்டி, "இதோ என்னுடைய இரண்டாவது சுற்று ஆட்டம் தொடங்கி விட்டது!" என அறிவித்திருக்கிறார் ஜோ ரூட். அணியின் மொத்த ஸ்கோரில், 42.3 சதிவிகித ரன்கள், இவரது பேட்டிலிருந்தே வந்திருந்தன. மூன்றாண்டுகள் விட்டதற்கும் சேர்த்துப் பிடித்து விட வேண்டும் என்ற வெறி, அவரது ஆட்டத்தில் நிரம்பவே தென்பட்டது. இந்த இரண்டு போட்டியிலுமே, இங்கிலாந்து வெற்றியை முத்தமிட, அதில் சிங்கத்தின் பங்காய் பெரும் பங்காகவே இருந்தது, ஜோ ரூட்டின் பங்கு!

இலங்கை உடன் 426 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்து சார்பாக அதிக டெஸ்ட் ரன்களை அடித்தவர் பட்டியலில் 8,249 ரன்கள் எடுத்து கெவின் பீட்டர்சன், டேவிட் கவரை தாண்டி 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார் ரூட். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 186 ரன்களை எடுத்ததின் முலம் 150+ ரன்களை 9-வது முறையாகக் கடந்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் பொதுவாக இரட்டைச்சதங்கள் அடிக்கும்போது பேட்ஸ்மேன்கள் அதிக பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள் அடித்திருப்பார்கள். ஆனால் ரூட் தான் அடித்த 228 ரன்னில் வெறும் 78 ரன்களை மட்டும் பவுண்டரி மற்றும் சிக்ஸர்களால் எடுத்துவிட்டு மீதமிருக்கும் 150 ரன்களை ஒன்று, இரண்டு என ரன்களை ஓடி எடுத்துக்கொண்டேதான் இருந்தார். குறிப்பாக, ஸ்பின்னில் ஸ்ட்ரைக் ரொட்டேட்டை தனது பேக்ஃபுட் ஆட்டத்தினாலும், ஸ்விப் ஷாட் ஆட்டத்தினாலும் அழகாகக் கையாண்டார்.

Joe root
Joe root
England Cricket

ஆசிய மைதானத்தில் ஸ்பின்னர்களை சிறப்பாக எதிர்கொள்ள ஸ்வீப்ஷாட் முறையைk கையில் எடுத்தவர், அதை அற்புதமான முறையில் ஆடிக்காட்டி எதிர்வரும் இந்தியத் தொடருக்கு நான் உங்களுக்குப் பெரும் சவாலாக இருக்கப்போகிறேன் என மறைமுகமாகக் கூறியிருக்கிறார். ஒரே தொடரில் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் மேன் ஆஃப் தி மேட்ச் மற்றும் மேன் ஆஃப் தி சீரிஸ் என அடுக்கடுக்கான அவார்டுகளை வாங்கி புதுத்தெம்போடு இந்தியாவுக்கு வந்திருக்கிறார் ஜோ ரூட்.

வீழ்வதில் தவறில்லை, வீழ்ந்தே கிடப்பதில்தான் தவறு! சின்னதொரு வீழ்ச்சியை நடுவில் சந்தித்தாலும், தனது ஆகச் சிறந்த மனோபலத்தால், கம்பேக் கொடுத்து மறுபடியும் தன்னை நம்பர் 1-க்கான ரேஸில் இணைத்துக் கொண்டுள்ளார் ரூட்! இந்த 'ஃபாபுலஸ் 4' இன் ஆட்டத்தின் உச்சகட்டம் இனிமேல்தான் ஆரம்பம்!