Published:Updated:

ஆண்டர்சன்: இங்கிலாந்துக்காக அதிக போட்டிகள், 30 வயதுக்கு மேல் 350 விக்கெட்டுகள்! எப்படிச் சாதித்தார்?

வேகப்பந்து வீச்சாளர்கள் சூப்பர் ஹியுமன் கிடையாது. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குப் பிறகு உடல் அவர்கள் சொல்வதைக் கேட்காது. இதுதான் யதார்த்தம். இந்த யதார்த்தத்தை ஆண்டர்சன் நன்கு உணர்ந்திருந்தார். அதனாலேயே பணமழை கொட்டும் டி20 போட்டிகளில் அவர் காலடி எடுத்து வைத்ததே இல்லை.

பொதுவாக, பேட்ஸ்மேன்களுக்கும் பௌலர்களுக்கும் இடையே நடக்கும் யுத்தம் என கிரிக்கெட் வர்ணிக்கப்படுகிறது. ஆனால், இந்த யுத்தத்தில் இருதரப்பும் சமவாய்ப்புகளுடன்தான் மோதிகின்றனரா என்பதே மிகப்பெரிய கேள்விக்குறி. ஒரு பேட்ஸ்மேனுக்கு கிடைக்கும் சௌகரியங்கள் பௌலர்களுக்கு எப்போதும் கிடைத்ததேயில்லை. ஐ.சி.சியின் விதிமுறைகளிலிருந்தே இந்த பாரபட்சங்கள் தொடங்கிவிடுகிறது. பேட்ஸ்மேன்கள் ஆயுதங்கள், கேடயங்கள் என சகலவிதமான போர்க்கருவிகளுடன் சாதகமான விதிகளையும் சேர்த்துக்கொண்டு களத்தில் இறங்க, பௌலர்களோ நிராயுதபாணியாக முழுக்க முழுக்க தங்களுடைய திறனை மட்டுமே நம்பி சண்டை செய்ய வேண்டியிருக்கிறது.

இதனாலயே கிரிக்கெட் களத்தில் ஒரு பௌலருக்கான ஆயுட்காலம் என்பது பேட்ஸ்மேன்களின் ஆயுட்காலத்தில் சரிபாதிதான் இருக்கும். ஆனால், இதை முற்றிலுமாக உடைத்தெறிந்த ஓய்வறியா குதிரை ஒன்று கிரிக்கெட் களத்தில் 18 ஆண்டுகளாக பந்துவீச்சாளராக ஓடிக்கொண்டிருக்கிறது. 18 ஆண்டுகள் தேசிய அணியில் ஒரு இடத்தை தக்கவைத்துக் கொள்வதென்பது பேட்ஸ்மேன்களே அரிதினும் அரிதாகச் செய்யும் ஒரு சாதனை. ஆனால், ஒரு வேகப்பந்து வீச்சாளராக இருந்துகொண்டு அதை அநாயாசமாக செய்து காண்பித்திருக்கிறார் ஜேம்ஸ் மைக்கேல் ஆண்டர்சன்.

ஜேம்ஸ் ஆண்டர்சன்
ஜேம்ஸ் ஆண்டர்சன்
Rui Vieira | AP

2003 சம்மர் சீசனில் இங்கிலாந்து அணிக்காக இளம்புயலாக அறிமுகமானார் ஆண்டர்சன். ஏறத்தாழ 18 ஆண்டுகள் கழித்து தன்னுடைய 18வது சம்மர் சீசனிலும் ஆடிக்கொண்டிருக்கிறார். 161 டெஸ்ட் போட்டிகளில் ஆடி இங்கிலாந்து அணிக்காக அதிக போட்டிகளில் ஆடியவர் என்கிற சாதனையை செய்திருந்தார் அலஸ்டயர் குக். ஆண்டர்சன் இப்போது அந்தச் சாதனையையும் முறியடித்துவிட்டார். நியூசிலாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றதன் மூலம் 162 போட்டிகளில் ஆடி அதிக போட்டிகளில் ஆடிய இங்கிலாந்து வீரர் என்கிற பெருமையையும் பெற்றுவிட்டார்.

ஒட்டுமொத்தமாக அதிக டெஸ்ட் போட்டிகளில் ஆடிய வீரர்களின் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் 200 போட்டிகளோடு முதலிடத்தில் இருக்கிறார். அவரைத் தொடர்ந்து 168 போட்டிகளில் ஆடிய ரிக்கி பாண்டிங், ஸ்டீவ் வாஹ் போன்றோர் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றனர். அடுத்து வரவிருக்கும் இந்தியாவுக்கெதிரான தொடர், ஆஷஸ் இரண்டிலும் ஆண்டர்சன் உறுதியாக ஆடுவார் என்பதால் ரிக்கி பாண்டிங் மற்றும் ஸ்டீவ் வாஹின் சாதனையை முறியடித்துவிடுவார். சச்சினுக்குப் பிறகு அதிக டெஸ்ட் போட்டிகளில் ஆடிய வீரர் என்கிற பெருமையோடு ஆண்டர்சன் கரியர் முடிவுக்கு வரலாம். விக்கெட்டுகள் எண்ணிக்கையில் பார்த்தாலும் 617 விக்கெட்டுகளுடன் அதிக விக்கெட் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர்கள் பட்டியலில் முதலிடத்திலேயே இருக்கிறார்.

ஒரு வேகப்பந்து வீச்சாளர் இத்தனை சாதனைகளோடு இவ்வளவு நீண்ட கரியரை கொண்டிருப்பது கிரிக்கெட் உலகம் இதுவரை கண்டிராத அதிசயம். ஒரு பேட்ஸ்மேனுக்கோ ஒரு ஸ்பின்னருக்கோ தேவைப்படும் உடல் உறுதியை விட ஒரு வேகப்பந்து வீச்சாளருக்கு தேவைப்படும் உடல் உறுதி இரண்டு மடங்கு அதிகம். காரணம், களத்தில் அதிகப்படியான உடலுழைப்பை கொடுக்க வேண்டியவர்கள் அவர்களே. எதோ சிமெண்ட் மூட்டையைக் கட்டிக்கொண்டு ஓடுவதைபோல முதுகு வலி பிய்த்து எடுக்கும். அடிக்கடி காயங்களும் உண்டாகும். அதிலிருந்து மீள ஒரு ப்ராசஸ் தேவைப்படும். அதற்கு ஒரு நேரம் எடுக்கும். இதனாலயே களத்தில் ஒரு வேகப்பந்து வீச்சாளரின் ஆயுட்காலம் ரொம்பவே குறைவாக இருக்கிறது. அரிதாக திடகாத்திரமாக நல்ல உடல்தகுதியோடு சில வேகப்பந்து வீச்சாளர்கள் தங்களுடைய கரியரை நீட்டித்தாலும் அவர்களின் டெக்னிக் அடிவாங்கியிருக்கும். பழைய ஃபார்மை அவர்கள் மீட்பதென்பது கடினமான காரியமாக இருக்கும். புதிய இளம் வீரர்களின் வருகையும் இடத்தைத் தக்கவைக்க வேண்டிய நெருக்கடியை உண்டாக்கும். இந்த விஷயங்கள்தான் ஆண்டர்சனை மேலும் மேலும் கொண்டாடத் தூண்டுகின்றன.

ஜேம்ஸ் ஆண்டர்சன்
ஜேம்ஸ் ஆண்டர்சன்
Rui Vieira | AP

கவுண்டி கிரிக்கெட்கள் கச்சிதமாக நடைபெறும் நாடு என்பதால் இங்கிலாந்து அணி ஒவ்வொரு சம்மரிலுமே புதிய வீரர்களை குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்களை அணிக்கு அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கும். 2003-ல் அப்படியொரு சம்மரில்தான் ஆண்டர்சன் அறிமுகமானார். அதற்கடுத்த சம்மர்களிலும் ஏகப்பட்ட வீரர்கள் இங்கிலாந்து அணிக்கு அறிமுகமாகிவிட்டனர். ஆனால், ஆண்டர்சனின் இடத்தை இன்றுவரை யாராலும் தட்டிப்பறிக்க முடியவில்லை. இன்றுவரை இங்கிலாந்துக்கு அவர்தான் மெயின் பௌலர். இன்றுவரை நியுபால் அவருக்குத்தான்!

ஆண்டர்சனுக்கும் காயங்கள் பெரிய பிரச்னையாகவே இருந்திருக்கின்றன. ஆண்டர்சனின் இடது தோள்பட்டை பயங்கரமாக அடிவாங்கியிருக்கிறது. "சில நேரங்களில் காலையில் எழுந்து டீசர்ட்டை அணிய முயன்றால் கைகளைக்கூட தூக்க முடியாது. அந்தளவுக்கு என்னுடைய இடது தோள்பட்டை காயமடைந்திருக்கிறது. ஃபிசியோக்களில் அறிவுரைப்படி சமாளித்துக் கொண்டிருக்கிறேன்" என ஆண்டர்சனே ஒரு முறை கூறியிருக்கிறார்.

வேகப்பந்து வீச்சாளர்கள் சூப்பர் ஹியுமன் கிடையாது. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குப் பிறகு உடல் அவர்கள் சொல்வதைக் கேட்காது. இதுதான் யதார்த்தம். இந்த யதார்த்தத்தை ஆண்டர்சன் நன்கு உணர்ந்திருந்தார். அதனாலேயே பணமழை கொட்டும் டி20 போட்டிகளில் அவர் காலடி எடுத்து வைத்ததே இல்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒருநாள் போட்டிகளிலும் 2015 உலகக்கோப்பையோடு ஓய்வை அறிவித்துவிட்டார். பொருளாதாரரீதியாக பெரும்பலனை தரும் லிமிட்டெட் ஓவர் போட்டிகளை மொத்தமாக துறந்து தன்னை பிரத்யேகமான ரெட் பால் கிரிக்கெட்டராக தகவமைத்துக் கொண்டார். டெஸ்ட் கிரிக்கெட் மட்டுமே ஆத்ம திருப்தியை தரும் என்பதை உணர்ந்தார். இதனால் ஆண்டு முழுவதும் உலகமெங்கும் பறந்து பறந்து கிரிக்கெட் ஆடும் நெருக்கடி அவருக்கு உண்டாகவில்லை. உடலுக்குத் தேவையான ஓய்வும் கிடைத்தது. அது அவருடைய டெஸ்ட் கரியரை நீட்டித்துக் கொள்ள சிறப்பான வழியாக அமைந்தது. தன்னுடைய திறமையை வெளிப்படுத்த டெஸ்ட் கிரிக்கெட் என்ற ஒற்றை ஃபார்மட் மட்டுமே இருந்ததால் ஆண்டர்சனின் விக்கெட்டுக்கான தாகமும் வெறியும் கூட அதிகரித்தது.

ஜேம்ஸ் ஆண்டர்சன்
ஜேம்ஸ் ஆண்டர்சன்
Rui Vieira | AP

டெக்னிக்கலாகவும் சில மாறுதல்களை காலப்போக்கில் செய்திருந்தார் ஆண்டர்சன். தொடக்கக் காலத்தில் 140-150 கி.மீ வேகத்தில் அசால்ட்டாக வீசி கொண்டிருந்தவர். காலப்போக்கில் ரன் அப்பை குறைத்து வேகத்தையும் குறைத்து, அதற்கேற்றவாறு ரிவர்ஸ் ஸ்விங், கட்டர்கள் போன்றவற்றையும் சிறப்பாக வீச கற்றுக்கொண்டார். இந்தத் தகவமைப்பும் அவருக்குப் பெரிய பலனை கொடுத்தது. 30 வயதுக்கு முன்பாக 268 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் ஆண்டர்சன். 30 வயதுக்கு பிறகு கிட்டத்தட்ட 350 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். வயது ஏற ஏற ஆண்டர்சனின் பந்துவீச்சு வீரியமும் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது.

ஆண்டர்சனை 'க்ளவுடர்சன்' என விமர்சிப்பவர்களும் உண்டு. கருமேகங்கள் நிறைந்த இங்கிலாந்து சூழலில் மட்டுமே ஆண்டர்சன் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார் என்பதற்காக இப்படி விமர்சிக்கப்படுகிறார். இதில் உண்மையில்லாமலும் இல்லை. லார்ட்ஸில் மட்டுமே 100 விக்கெட்டுக்கு மேல் வீழ்த்தியிருக்கிறார். முக்கால்வாசி விக்கெட்டுகள் இங்கிலாந்து மைதானங்களில் எடுக்கப்பட்டவையே. அவருடைய அவே ரெக்கார்ட் அவ்வளவு சிறப்பாக இல்லை. ஆனால், பெரும்பாலான பௌலர்கள் அப்படித்தானே! அவர்களின் சொந்த மைதானங்களில்தான் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பர். வெளியூர் மைதானங்களில் கொஞ்சம் அடக்கியே வாசித்திருப்பர். ஆண்டர்சனும் இதற்கு விதிவிலக்கல்ல என்றாலும் ரொம்ப மோசமான அவே ரெக்கார்டுகளை வைத்திருக்கவில்லை என்பதையும் ஒத்துக்கொள்ள வேண்டும்.

அமீரகத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் நன்றாக வீசியிருக்கிறார். சமீபத்தில் இந்தியாவுக்கு எதிராக சென்னையில் அவர் செய்த ரிவர்ஸ் ஸ்விங்கை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்துவிட முடியாது. எல்லாவற்றிற்கும் மேல் ஆஷஸ் இங்கிலாந்தின் கௌரவத்தை சுரண்டி பார்க்கும் தொடர். அதில், ஆண்டர்சனின் பங்கு அளப்பரியதாக இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஷஸ் தொடர்களில் மட்டும் 60க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்தின் மானம் காக்க பேருதவி புரிந்திருக்கிறார்.
ஜேம்ஸ் ஆண்டர்சன்
ஜேம்ஸ் ஆண்டர்சன்
Rui Vieira | AP

தேசிய அணியில் இப்படி என்றால் கவுண்டி போட்டிகளில் இன்னும் பல மைல்கல்களை தொடவிருக்கிறார். கவுண்டி போட்டிகளில் மட்டும் இதுவரை 995 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். விரைவிலேயே 1000வது விக்கெட்டை வீழ்த்திவிடுவார். உலகளவில் கடந்த நூறாண்டுகளில் 13 பௌலர்கள் மட்டுமே இந்தச் சாதனையை செய்திருக்கின்றனர். அதில், நான்கு பேர் மட்டுமே வேகப்பந்து வீச்சாளர்கள். இந்தப் பட்டியலில் சீக்கிரமே ஆண்டர்சனும் இணைந்துவிடுவார்.

கவர்ச்சிமிக்க டி20 யுகத்தில் பேட்ஸ்மேன்கள் ப்ராக்டிஸ் செய்ய பயன்படும் பௌலிங் மெஷினுக்கு ஒப்பாக பௌலர்களின் ரோல் சுருங்கிவிட்டது. இப்படியான சூழ்நிலையில் பௌலர்களின் கௌரவமாக ஆண்டர்சன் உதித்திருக்கிறார். எப்படி சச்சினின் சாதனைகளை யாராலும் முறியடிக்க முடியாதோ அதேபோன்று ஆண்டர்சனின் சாதனையையும் இனி வரும் பௌலர்களால் முறியடிக்கவே முடியாது என்பதை அறுதியிட்டு கூறலாம்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு