Published:Updated:

பவர் ப்ளே - 7 | அதிகார தோரணையும், அஷ்வினின் மிரட்டலும்… இயான் மார்கனை பகைத்துக் கொள்ளலாமா?

இயான் மார்கன்

ஒருநாள் கிரிக்கெட்டில் இயான் மார்கனின் உத்தி ஒரு 10 வருடம் முன்னோக்கி இருந்தது என சொல்ல வேண்டும். முதல் 10 ஓவர்களில் ரன் குவிப்பது எளிது. கடைசி பத்து ஓவர்களில் கடினமான பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதனால் இடைப்பட்ட 30 ஓவர்கள் தான் டார்கெட்.

Published:Updated:

பவர் ப்ளே - 7 | அதிகார தோரணையும், அஷ்வினின் மிரட்டலும்… இயான் மார்கனை பகைத்துக் கொள்ளலாமா?

ஒருநாள் கிரிக்கெட்டில் இயான் மார்கனின் உத்தி ஒரு 10 வருடம் முன்னோக்கி இருந்தது என சொல்ல வேண்டும். முதல் 10 ஓவர்களில் ரன் குவிப்பது எளிது. கடைசி பத்து ஓவர்களில் கடினமான பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதனால் இடைப்பட்ட 30 ஓவர்கள் தான் டார்கெட்.

இயான் மார்கன்

அளவான பேச்சு, அதிகார தோரணை, சலனமில்லாத tintin முகம், கம்பீர நடை... இது தான் இயான் மார்கன். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தை தன்னுடைய கண்ணசைவில் வைத்திருக்கும் ஓர் ஆளுமை. ஒருநாள் கிரிக்கெட் என்றால் வாடையே ஆகாது என்றிருந்த இங்கிலாந்துக்கு உலககோப்பை வென்று கொடுத்த ஐரிஷ்காரர். ஒருநாளை டெஸ்ட்டின் குறைந்த வடிவமாக கருதிய அணியின் அணுகுமுறையை மாற்றி அதனை T20-ன் நீண்ட வடிவமாக பார்க்கும் fearlessness கிரிக்கெட்டை இங்கிலாந்துக்கு கற்றுக் கொடுத்தவர். மைக் பிரயர்லிக்கு பிறகு மேன் மேனேஜ்மென்டில் உச்சம் தொட்ட ஒரே இங்கிலாந்து கேப்டன் மார்கன்தான். நாளைக்கு அணியில் தான் இருக்கலாம் அல்லது இல்லாமல் போகலாம் ஆனால் தன்னுடைய தாக்கம் இல்லாத ஒரு அணியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தால் இன்னும் ஒரு கால் நூற்றாண்டுக்கு உருவாக்க முடியாது என்ற நிலைமையை அவர் ஏற்படுத்தியுள்ளார்.

Morganesque என்ற பதம் நடைமுறைக்கு வந்து நீண்ட காலமாகிவிட்டது. சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரை உதாரணமாகச் சொல்லலாம். கோவிட் பாதிப்பு காரணமாக இங்கிலாந்து அணி ஒரே இரவில் முழுவதுமாக மாற்றியமைக்கப்படுகிறது. பரிதாபமாக தோற்கும் என எதிர்பார்க்கப்பட்ட அந்த இரண்டாம் கட்ட அணி, யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிரடியாக விளையாடி பாகிஸ்தானுக்கு தண்ணி காட்டியது. தொடரை வென்றதும் சமூக ஊடகங்களில் ட்ரெண்ட் ஆன பெயர் இயான் மார்கன். அந்த தொடரில் அணிக்கு கேப்டன் பென் ஸ்டோக்ஸ்தான். ஆனால் களத்திற்கே வராமல் அணியை வழிநடத்திய சூப்பர் கேப்டன் மார்கன். எப்படி இங்கிலாந்து கிரிக்கெட்டில் தன்னுடைய கொடியை பறக்கவிட்டார் இந்த ஐரிஷ்காரர்?

வில்லியம்சன், மார்கன், ஃபின்ச், விராட் கோலி
வில்லியம்சன், மார்கன், ஃபின்ச், விராட் கோலி

கடந்த கால் நூற்றாண்டில் இங்கிலாந்து கிரிக்கெட்டை மாற்றியமைத்தவர்கள் என மூன்று அந்நியர்களை சொல்ல முடியும். ஒருவர் தென்னாப்பிரிக்காவின் விடாப்பிடி தன்மையுடன் இங்கிலாந்தின் மரபையும் ஏற்றுக் கொண்ட ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ். இன்னொருவர் கடைசி வரைக்கும் இங்கிலாந்தின் பகட்டை ஏற்றுக் கொள்ள முடியாமல் rebel ஆகவே இருந்து ஓய்வு பெற்ற கெவின் பீட்டர்சன். இந்த லிஸ்ட்டில் மூன்றாவதாக இடம்பிடிப்பவர்தான் மார்கன். அவர் ஸ்ட்ரஸைப்போல அணியை மட்டும் முன்னிருத்தவில்லை. அதே நேரம் பீட்டர்சன் போல தனித்து நின்றும் புரட்சி செய்ய முயற்சிக்கவில்லை. அணி இங்கிலாந்துக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். ஆனால் அதை விட அதிக விசுவாசத்தை தனக்கு காட்ட வேண்டும். இதுதான் மார்கன் method. இந்த மூன்று மாறுபட்ட ஆளுமைகளின் கூட்டு முயற்சி தான் இங்கிலாந்து அணியின் இன்றைய ஆதிக்கத்துக்கு காரணம். இவர்களை ஒன்று சேர்த்த புள்ளி, இங்கிலாந்து சந்தித்த 2015 உலகக் கோப்பை படுதோல்வி. வங்கதேசத்திடம் தோற்று காலிறுதிக்கு கூட தகுதி பெறாமல் உச்சபட்ச அவமானத்தை சந்தித்திருந்தது மார்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி.

இந்தக் களேபரமான காலகட்டத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் இயக்குநராக பொறுப்பேற்ற ஸ்ட்ராஸ் அணிக்கு புது இரத்தத்தை பாய்ச்ச தயாரானார். அணியின் நலனுக்காக தன்னுடைய அதிகாரத்தை கேள்விக்கு உள்ளாக்கிய பீட்டர்சன் உடன் கூட கைகோர்க்க பெருந்தன்மையுடன் அவர் முன்வந்தார். ஐபிஎல் கிரிக்கெட் தான் இனி எதிர்காலம், அதை மறுத்தால் பாதிப்பு நமக்குத்தான் என 2007-ல் இருந்தே சொல்லி வந்த பீட்டிர்சனின் கருத்துக்கள் ஏற்கப்பட்டன. குறைந்த ஓவர் கிரிக்கெட்டில் அனுபவம் மிக்க டிரெவர் பெய்லிஸ் அணியின் பயிற்சியாளராக்கப்பட்டார். கெவின் பீட்டர்சனுக்கு பிறகு அணியில் இருந்த ஒரே நவீன வீரரான மார்கனே கேப்டனாக தொடரட்டும் என முடிவெடுக்கப்பட்டது.

அணியின் அனலிஸ்ட்டாக நேதன் லீமேன் மீண்டும் பணியமர்த்தப்பட்டார். இந்த லீமேன் ஒரு தேர்ந்த கிரிக்கெட் அனலிஸ்ட். 2013-ல் இங்கிலாந்து அணி இந்தியாவில் தொடரை வென்றதில் அதிக பங்காற்றியவர். சச்சினுக்கு எப்படி பொறிவைக்க வேண்டுமென ஆண்டர்சனுக்கு கற்றுக் கொடுத்தவர். 2010-ல் டி20 உலகக்கோப்பையை வெல்வதிலும் முக்கியமாக இருந்தவர். இப்படி பீட்டர்சனின் தத்துவத்துடன் ஸ்ட்ராஸ் ஓர் அணியை கட்டமைத்து இயன் மார்கன் கையில் கொடுத்தார். இத்துடன் இந்த இரண்டு அந்நியர்களின் வேலை முடிந்துவிட்டது. இந்த ஃபவுண்டேஷனை வைத்துக் கொண்டு மார்கன் கட்டிய கட்டடம்தான் இன்றைக்கு இங்கிலாந்தை உலகின் நம்பர் 1 அணியாக மாற்றியிருக்கிறது. அப்படி என்னதான் செய்தார் மார்கன்?

Fearlessness கிரிக்கெட் தான் ஆட வேண்டும். ஆனாலும் கன்னாபின்னா என்று இல்லாமல் அதை சரியாக பிளான் செய்து ஆடவேண்டும் என திட்டமிட்டார் மார்கன். அணிக்கு விசுவாசம் மிக்கவர்கள் வேண்டும். இங்கே தனிமனித சாகசத்துக்கு இடம் கிடையாது என்பதில் அவர் தெளிவாக இருந்தார். அவர் ஒரு வீரருக்கு புள்ளி வைத்துவிட்டார் என்றால் குட்டிக்கரணமே போட்டாலும் மீண்டும் அணிக்கு திரும்ப முடியாது. அலெக்ஸ் ஹேல்ஸ்-ஐ கேட்டால் கண்ணீரைக் கட்டுப்படுத்திக் கொண்டு இதைப்பற்றி சொல்வார்.

இயான் மார்கன்
இயான் மார்கன்

2015 உலகக்கோப்பை தோல்வி மார்கனுக்கு ஒரு புதிய வெளிச்சத்தை காட்டியது என்றே சொல்ல வேண்டும். ஒரு மாறுபட்ட அப்ரோச் உடன் கிரிக்கெட் ஆடிய மெக்கல்லம் தலைமையிலான நியூசிலாந்து அணி ஃபைனல் வரை சென்றிருந்தது. ஒரு சில முன்னணி வீரர்களை மட்டுமே கொண்ட அணி இதை சாதித்தது மார்கனுக்கு ஆச்சரியமளித்தது. சரியான Blueprint ரெடி ஆனது. இங்கிலாந்து பாணி இனி மெக்கல்லம் பாணி என்பதை மார்கன் உறுதி செய்தார். நியூசிலாந்தின் பலவீனமான அதேநேரம் அவர்களுக்கு சாதகமாக முடிந்த குறைவான ரிசோர்ஸ் நிறைவான பலன் ஃபார்முலாவை இங்கிலாந்து அணியிலும் அவர் கொண்டு வந்தார்

2019 உலகக்கோப்பை அணியை 2015-லேயே அடையாளம் கண்டு, அவர்களுக்கு தொடர் வாய்ப்புகள் கொடுத்து வளர்த்தெடுப்பது என முடிவானது. கிட்டத்தட்ட உத்தேச அணி இதுதான். 2019 உலகக்கோப்பை ப்ராஜெக்ட் முடியும் வரை மற்ற வீரர்களுக்கு இடமில்லை. மார்கனுக்கு சாதகமான முறையில் ஒருநாள் கிரிக்கெட்டின் பவர் ப்ளே விதிகளும் அந்த சமயத்தில் மாற்றியமைக்கப்பட்டன. 11 - 40 வரை பவுண்டரி லைனில் 4 ஃபீல்டர்கள் மட்டும்தான் இருக்க முடியும் என்பது புதிய விதிமுறை. ஒருநாள் கிரிக்கெட்டில் மார்கனின் உத்தி ஒரு 10 வருடம் முன்னோக்கி இருந்தது என சொல்ல வேண்டும். முதல் 10 ஓவர்களில் ரன் குவிப்பது எளிது. அதை முழுமையாக பயன்படுத்தி ரன் திரட்ட வேண்டும். கடைசி பத்து ஓவர்களில் கடினமான பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதனால் இடைப்பட்ட 30 ஓவர்கள் தான் டார்கெட். அங்கே புயல் வேகத்தில் ரன் குவிக்க வேண்டுமென அணிக்கு அறிவுறுத்தினார்.

அதிரடி வீரர்களான பட்லர், பேர்ஸ்டோ, ஸ்டோக்ஸ், ஜேசன் ராய் போன்றவர்கள் அணியின் முக்கிய வீரர்களாக அடையாளம் காணப்பட்டனர். அதுநாள் வரைக்கும் இல்லாத வகையில் இங்கிலாந்தின் சுழற்பந்து வீச்சின் தலைமை ஒரு லெக் ஸ்பின்னரான ரஷீதுக்கு கொடுக்கப்பட்டது. 2019 உலகக்கோப்பை படுதோல்விக்கு பிறகு நடைபெற்ற தொடரின் முதல் போட்டியிலேயே இங்கிலாந்து 408 ரன்களை குவித்தது. அன்றிலிருந்து அது இங்கிலாந்து அணியல்ல ; மார்கன் அணி. 2016 டி20 உலகக் கோப்பையில் இறுதிப்போட்டி வரை இங்கிலாந்து சென்றது. ஒருநாள், டி20 தொடர்களில் தொடர் வெற்றிகள் என மார்கன் கொடி உயரப் பறந்தது.

ஒரு கேப்டனாக மார்கனின் வெற்றி ரகசியம், அவர் வீரர்களுக்கு கொடுக்கும் சுதந்திரம். ஓரிரு போட்டிகளின் முடிவுகளைக் கொண்டு அவர் அணித் தேர்வை முடிவு செய்வதில்லை. ஆனால் வீரர்கள் கொஞ்சம் சுயநலமாக யோசித்தாலும் அணியில் இடம் காலி. ஆட்டத்தின் கடைசி பந்தில் ரன் அவுட்டுக்கு பயந்து சிங்கிள் ஓடாமல் விட்ட டேவிட் மலானை 3 போட்டிகள் பென்ச்சில் உட்கார வைத்தது மார்கனின் வரலாறு. அந்தப் போட்டியில் மலான் சதமடித்து இருந்தார் என்பது கூடுதல் தகவல்.

இயான் மார்கன்
இயான் மார்கன்

மார்கனுக்கு அணியின் அனலிஸ்ட் லீமேன் நிறைய விதங்களில் டிப் கொடுக்கிறார். ஆனால், அந்தக் குறிப்புகளை மார்கன் எப்படி பயன்படுத்துகிறார் என்பதுதான் அவரை உலகின் தலைசிறந்த கேப்டனாக மாற்றியது. உதாரணமாக இங்கிலாந்தின் ஒரு குறிப்பிட்ட பேட்ஸ்மேனுக்கு எதிரணி பெளலர்கள் இந்த மாதிரி குடைச்சல் கொடுப்பார்கள் என மார்கனிடம் நோட் போட்டுக் கொடுக்கப்படுகிறது என வைத்துக் கொள்வோம். அதை அப்படியே எடுத்துக் கொண்டு போய் அந்த பேட்ஸ்மேனிடம் மார்கன் நீட்டிவிட மாட்டார். அன்றைய நாளில் அந்த பேட்ஸ்மேன் எப்படி இருக்கிறார் என பார்ப்பார். கொஞ்சம் தன்னம்பிக்கை குறைவாக காணப்படுகிறார் என்றால் நோட்டை மறைத்துவிட்டு "உன் கேமை நீ ஆடு" எனத் தட்டிக் கொடுத்துவிட்டு நகர்ந்துவிடுவார்.

ஒரு கேப்டன் அணி வீரர்களிடம் எதை வெளிப்படுத்த வேண்டும் எதை மறைக்க வேண்டும் எனத் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்கிறார் த ஆர்ட் ஆப் கேப்டன்சி புத்தகத்தை எழுதிய இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக் பியர்லி. அணித்தேர்வில் ஒரு விசித்திரமான பாணியை பின்பற்றுவதை மார்கன் வழக்கமாக வைத்திருக்கிறார்.

முந்தைய போட்டியில் ஒரு பேட்ஸ்மேன் சிறப்பாக செயல்பட்டு அணியை வெற்றிபெற வைத்திருக்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள். அடுத்த போட்டியில் அந்த வீரரை அணியில் இருந்து நீக்கி ஒரு ஆல்ரவுண்டரை அந்த இடத்தில் ஆடவைப்பார். அடுத்த முறை ஆல்ரவுண்டர் இடத்தில் ஸ்பெஷலிஸ்ட் ஸ்பின்னரை ஆட வைப்பார். இப்படி செய்து பார்ப்பதற்கு monte carlo simulation என்று பெயர். எந்த அணி சேர்க்கை உச்சபட்ச பலன் கொடுக்கும் என்பதை இது வெளிக்காட்டி விடும்.

இயான் மார்கன்
இயான் மார்கன்

தோனியை போலவே process-க்கு முக்கியத்துவம் கொடுப்பவராக மார்கன் இருந்தாலும் அவருடைய அணுகுமுறையில் ஒரு இறுக்கம் இருப்பதில்லை. 2019 உலக கோப்பை அணித் தேர்வுக்கு சில வாரங்கள் முன்பாக அதுநாள் வரை அணியில் ஓரங்கமாக இருங்க டேவிட் வில்லியை நீக்கிவிட்டு ஆர்ச்சரை அணிக்குள் கொண்டு வந்தார். அணித் தேர்வில் பன்முகத் தன்மையுடன் பல கலாச்சாரத்திற்கும் இடம் இருக்க வேண்டும் என்பது அவருடைய கொள்கை. கரீபிய வீரரான ஆர்ச்சர், பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட மொயின் அலி, ஆதில் ரஷீத், நியூசிலாந்து பின்புலம் கொண்ட ஸ்டோக்ஸ், தென்னாப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த ஜேசன் ராய் என எல்லாருக்கும் இங்கிலாந்து அணியில் இடமுண்டு. இதன் நீட்சியாகத்தான் 2019 உலகக்கோப்பை வெற்றிக்குப் பிறகு அவர் கொடுத்த செய்தியாளர் சந்திப்பைப் பார்க்க வேண்டும். "எங்களுடன் அல்லா இருக்கிறார்" என கிரிக்கெட் உலகிற்கு வெளிப்படையாக அறிவித்தார் மார்கன். 2019 உலகக்கோப்பை வெற்றி மார்கனை இங்கிலாந்து கிரிக்கெட்டின் அசைக்க முடியாத சக்தியாக மாற்றி இருக்கிறது.

டெஸ்ட் அணியின் கேப்டனாக, நாட்டின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக ரூட் இருந்தாலும் மார்கனுக்கு இருக்கும் அதிகாரம் அவருக்கு இல்லை. இங்கிலாந்து கிரிக்கெட் வரலாற்றில் இதுவரைக்கும் இல்லாத அளவுக்கு ஒரு தனிமனிதன் ஆதிக்கம் செலுத்துவதும் இப்போதுதான். இது நிறைய விதங்களில் இங்கிலாந்தின் எதிர்காலத்துக்கு பாதகமாக முடியலாம். உதாரணமாக இங்கிலாந்து டெஸ்ட் அணி பாதாளத்தில் விழுந்ததற்கு மார்கனின் சர்வாதிகாரமும் ஒரு காரணம்.

ரொட்டேஷன் பாலிசி என்று வரும் போது டெஸ்ட் கேப்டன் ரூட் தான் இரண்டாம் கட்ட அணியை வாங்கிக் கொண்டு செல்ல வேண்டும். மார்கன் தேர்வாளர்களுக்கு அழுத்தம் கொடுத்து தனக்கு வேண்டிய அணியை கேட்டு வாங்கிக் கொண்டு விடுவார். இது நீண்ட கால நோக்கில் இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடலாம். மேலும் மார்கன் உச்சபட்ச அதிகாரம் கொண்டவராக இருப்பதால் குறைந்த ஓவர் போட்டிகளுக்கு அடுத்த தலைமையை வளர்த்து எடுப்பதில் இங்கிலாந்து வாரியம் தயக்கம் காட்டுகிறது. மார்கனின் அதிகாரத்தை கேள்விக்கு உட்படுத்தும் விதமாக எதையாவது செய்யப் போய், அது அடுத்துவரும் உலககோப்பை தொடர்களை பாதித்து விடக் கூடாதே என்கிற கவலை அவர்களுக்கு.

இயான் மார்கன் - டேவிட் மலான்
இயான் மார்கன் - டேவிட் மலான்

இப்படி மார்கன் ஒரு கேப்டனாக அசைக்க முடியாத ஆளுமையாகவும் எதிர்காலத்தில் இங்கிலாந்து கிரிக்கெட்டை அசைக்க போகும் ஆளுமையாகும் இரட்டை பாத்திரத்தை ஏற்று நடிக்கிறார். அவருடைய அதிகாரம் தொடர்ந்து நீடித்து வருவதற்கு காரணம் அவருடைய பேட்டிங். 2016 தொடங்கி 2019 வரைக்கும் சுணக்கமாக இருந்த அவருடைய தனிப்பட்ட ஆட்டம் 2020-க்குப் பின் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் அவருடைய impact மிகவும் அபாயகரமாக உள்ளது. டி20-ல் அவர் சந்திக்கும் முதல் 10 பந்துகளில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் உலக சராசரியை விட அதிகம். அதைப்போல சுழற்பந்து வீச்சுக்கு எதிராகவும் தன்னுடைய ஆட்டத்தை கூர் திட்டியுள்ளார் மார்கன்.

சமகால டி20 கிரிக்கெட்டில் எந்த ஒரு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனும் மார்கனின் ஸ்ட்ரைக் ரேட்டில் சுழற்பந்து வீசசாளர்களை ஆதிக்கம் செலுத்துவதில்லை. கேப்டனாக மட்டுமே அவர் அறியப்படுவதால் அவருடைய தனிப்பட்ட பேட்டிங் பேசுபொருளாக மாறுவதில்லை. மார்கனின் பேஸ் பால் அப்ரோச் பேட்டிங் இங்கிலாந்தை மட்டும் மாற்றியமைக்கவில்லை. உலகின் பிற நாடுகளை சேர்ந்த வீரர்களும் மார்கன் போல சமீப காலத்தில் பேட்டிங்கை மாற்றிக் கொண்டுள்ளனர். நல்ல உதாரணம் மார்கன் கேப்டனாக இருக்கும் KKR அணி வீரரான நிதிஷ் ராணா. சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ளும் போது அவர் அப்படியே மார்கன் போலவே ஆடுகிறார்.

கேப்டனாக இந்த ஐபிஎல் சீசனில் அணியை சிறப்பாக வழிநடத்தினாலும், பேட்ஸ்மேனாக தடுமாறுகிறார் இயான் மார்கன். ஆனால், இந்த ஐபிஎல் ஃபார்மை வைத்து டி20 உலகக்கோப்பையில் மார்கன் சொதப்புவார் என சொல்லிவிடமுடியாது. ஏனென்றால் அவரிடம் பதுங்கி ஆடும் ஆட்டமே கிடையாது. மார்கனின் சிறப்பான, தரமான சம்பவங்களை சீக்கிரமே எதிர்பார்க்கலாம். அது இந்த ஐபிஎல்-ன் இறுதிக்கட்டத்திலேயே கூட நடக்கலாம்!