Published:Updated:

ஜெயித்தாலும் பாகிஸ்தானிடம் தட்டுத்தடுமாறிய இங்கிலாந்து... எப்படியிருந்தது முதல் டெஸ்ட்? #EngVsPak

#EngVsPak
News
#EngVsPak ( ENGLAND CRICKET )

இங்கிலாந்து வெற்றி பெற்றாலும் பாகிஸ்தான் இங்கிலாந்துக்கு மரண பயத்தைக் காட்டிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

கரீபியன்களுடனான டெஸ்ட் தொடரை முடித்த கையோடு அதே இங்கிலாந்து அணி அப்படியே பாகிஸ்தானுடன் டெஸ்ட் போட்டியில் மோதிக்கொண்டிருக்கிறது. கடந்த புதன்கிழமை தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் அசார் அலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதே மான்செஸ்டர் மைதானத்தில் விண்டீஸ்களுக்கு எதிராக நடந்த கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளிலுமே இங்கிலாந்து முதல் பேட்டிங் செய்து நல்ல ஸ்கோரை எட்டி ஆட்டத்தை பாசிட்டிவ்வாக முடித்திருந்ததை இங்கிலாந்திலிருந்தே பார்த்துக்கொண்டிருந்த பாகிஸ்தான் அணி, டாஸில் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கலாம். அந்தப் போட்டிகளில் முதல் இன்னிங்ஸில் விண்டீஸின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு மைதானம் அவ்வளவாக ஒத்துழைத்திருக்காது. எனவே, இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் கொஞ்சம் சிரமமின்றி ஆடினர். ஆனால், இந்தப் போட்டியில் பந்தில் நல்ல மூவ்மென்ட் இருக்கவே செய்தது. அப்படியிருந்தாலும் முதல் இன்னிங்ஸில் பிராட் - ஆண்டர்சன் - நியூ பால் கூட்டணியை ஓரளவுக்கு சமாளித்து விக்கெட் விடாமலே அபித் அலியும் ஷன் மசூத்தும் டிஃபென்ஸிவ்வாக ஆடினர். அதே நேரத்தில் பிராட் - ஆண்டர்சனை விட வோக்ஸின் பந்துவீச்சில் ஸ்விங் அதிகமாகவே இருந்தது. அதை சப்போர்ட்டிவ்வாக வைத்துக்கொண்டு எந்த மூவ்மென்ட்டும் இல்லாத ஒரு டெலிவரியில் அசார் அலியின் விக்கெட்டை எடுத்தார் வோக்ஸ். ஆர்ச்சர் ஷார்ட் பாலாகப் போட்டு பேட்ஸ்மேனின் மனதை செட் செய்து ஒரு ஃபுல் லென்த் பாலில் அபித் அலியைப் போல்டாக்கினார். இந்த விக்கெட்டுகளுக்குப் பிறகுதான் நான்காவது பேட்ஸ்மேனாக களமிறங்கினார் பாபர் அசாம். லன்ச் முடிந்து இரண்டாவது செஷன் தொடங்கியதும்தான் மாயஜாலத்தை காட்டத் தொடங்கினார் அசாம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

எப்போதுமே எதிரணி கொஞ்சம் வலுப்பெற்றாலும் கூட தங்களது ஆதிக்கத்தை இங்கிலாந்து விட்டுக்கொடுக்காது. ஆனால், முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்தின் ஆதிக்கத்தை மொத்தமாக உடைத்துப் போட்டார் அசாம். எல்லாமே க்ளீன் ஹிட்டிங் கிரிக்கெட்டிங் ஷாட்டுகள். டாம் பெஸ், பேட்ஸ்மேனின் உடலின் பக்கம் திருப்பிய பந்துகளையெல்லாம் மணிக்கட்டைப் பயன்படுத்தி லாவகமாகப் பவுண்டரியாக்கினார். வோக்ஸ், ஆர்ச்சர், பிராட் எல்லாருக்குமே இதே நிலைமைதான். இந்த செஷனில் அசாம் ஆடிய ஆட்டம்தான் `கோலி - ஸ்மித் போன்று அசாமும் உலகத்தரம் வாய்ந்த வீரர்தான்' என நாசர் ஹுசைனைப் பேச வைத்தது. அசாம் நின்று பெரிய இன்னிங்ஸ் ஆடிவிடுவார் என்று நினைக்க இரண்டாவது நாளின் தொடக்கத்திலேயே ஆண்டர்சனிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். யாரும் எதிர்பார்க்காத வகையில் ஷான் மசூத் ஒரு தரமான டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடினார். ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே போடப்படும் பந்துகளைப் பெரும்பாலும் ஆடாமல் விட்டு மிகவும் நிதானமாக ஆடினார். ஆர்ச்சர், பிராட், ஆண்டர்சன், வோக்ஸ் என இங்கிலாந்தின் வேகப்பந்துவீச்சை எவ்வளவு வெறுப்பேற்ற முடியுமோ அவ்வளவு வெறுப்பேற்றினார். ஷான் மசூதின் இன்னிங்ஸால் பாகிஸ்தான் 326 ரன்களை எட்டியது.

பாபர் அசாம்
பாபர் அசாம்
PCB

பேட்டிங், பௌலிங் இரண்டிலுமே முதல் இன்னிங்ஸ் முழுவதும் பாகிஸ்தான் கையில்தான் ஆட்டம் இருந்தது. முதல் 6 ஓவர்களுக்குள்ளாகவே இங்கிலாந்தின் டாப் ஆர்டரை மொத்தமாக சிதைத்துவிட்டனர் பாகிஸ்தான் பௌலர்கள். சிப்லேவுக்கும் ஸ்டோக்ஸுக்கும் அப்பாஸ் வீசிய பந்தில் பெரிய வேரியேஷன் எதுவும் இருந்திருக்காது. ஆனாலும் பேட்ஸ்மேன்கள் கணிப்பதற்குள் விக்கெட் விழுந்திருக்கும். ஒருபக்கம் நஸீம் 140 கிலோ மீட்டரை விட்டு குறையாமல் பந்துவீசி பிரமாதப்படுத்தினார். இங்கிலாந்து பிட்ச்சில் வேகப்பந்து வீச்சுக்கு எவ்வளவு வேரியேஷன்கள் கிடைக்குமோ அத்தனையும் லெக் ஸ்பின்னர் யாஸிர் ஷாவுக்கும் கிடைத்தது. பேட்டிங்கில் ஷான் மசூத் எப்படி ஒரு சர்ப்ரைஸ் பேக்கேஜாக இருந்தாரோ, அதேபோல் பௌலிங்கில் யாஸிர் ஷா ஒரு சர்ப்ரைஸ் பேக்கேஜாக இருந்தார். லெக் கட்டர், கூக்ளி போட்டு விக்கெட் எடுக்கும் அதே சமயத்தில் எந்தவித டர்ன்னும் இல்லாமல் ஒரு சாதாரண டெலிவரியிலும் விக்கெட் எடுத்தார். இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து இவர் எடுத்த 8 விக்கெட்டுகள் ஆட்டம் இந்தளவுக்கு சுவாரஸ்யமானதற்கு முக்கிய காரணமாகும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

100 ரன்னுக்கு மேல் லீட் இருந்தும் பாகிஸ்தான் செகண்ட் இன்னிங்ஸில் முக்கிய பேட்ஸ்மேன்களான பாபர் அசாம், ஷான் மசூத் என யாரும் பெரிய அளவில் சோபிக்காததால் 277-ஐ மட்டுமே டார்கெட்டாக வைக்க முடிந்தது. இருந்தும் செகண்ட் இன்னிங்ஸில் ரூட், ஸ்டோக்ஸ் எனப் பெரிய தலைகளை சீக்கிரம் வெளியேற்றிவிட்டதால் பாகிஸ்தான் பக்கம் கொஞ்சம் நம்பிக்கை தெரிந்தது. ஆனால், பட்லர் - வோக்ஸ் கூட்டணி ஆட்டத்தை மாற்றிவிட்டது. டெஸ்ட் கரியரே ஊசலாட்டத்தில் இருந்த நிலையில் பட்லர் ஒரு முக்கியமான மேட்ச் வின்னிங் இன்னிங்ஸை ஆடியிருக்கிறார். பட்லருக்கு எப்போதும் டிஃபென்ஸிவ்வாக ஆடுவதா இல்லை தன்னுடைய நேச்சுரல் கேமை ஆடுவதா என்பதில் தடுமாற்றம் இருக்கும். இந்த இன்னிங்ஸில் எந்த தடுமாற்றமும் இல்லாமல், எல்லா பந்துகளையும் பவுண்டரி அடிக்கவேண்டும் என ஆசைப்படாமல் அடிக்கக்கூடிய பந்துகளை அடித்தும், தடுக்கவேண்டிய பந்துகளை தடுத்தும் ஆடினார். அதேபோல் க்றிஸ் வோக்ஸ் ஒரு புறம். அவரும் சீராக ரன் எடுத்து பார்ட்னர்ஷிப்புக்கு ஒத்துழைத்தது வெற்றிகரமாக அமைந்தது. இறுதியில் யாசிர் ஷா பட்லர், பிராட் இருவரையும் எல்பிடள்யு ஆக்கிய போது ஆட்டத்தில் திடீர் டிவிஸ்ட்டுகள் ஏற்படுமோ என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், வோக்ஸ் ஒரு பவுண்டரி அடித்து ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டார்.

கிறிஸ் வோக்ஸ், ஜோஸ் பட்லர்
கிறிஸ் வோக்ஸ், ஜோஸ் பட்லர்
England cricket

இங்கிலாந்து வெற்றி பெற்றாலும் பாகிஸ்தான் இங்கிலாந்துக்கு மரண பயத்தைக் காட்டிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அடுத்தடுத்த போட்டிகளிலும் இங்கிலாந்து வெல்ல வேண்டுமாயின் ஃபீல்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பட்லர், ஸ்டோக்ஸ், பிராட் போன்ற முக்கிய வீரர்களே கேட்சுகளைத் தவறவிடுவது பெரும் பின்னடைவாக முடிகிறது. முதல் இன்னிங்ஸில் ஷான் மசூத் 45 ரன்னில் இருக்கும்போது பட்லர் தவறவிட்ட ஒரு கேட்ச் மற்றும் ஸ்டம்பிங் சான்ஸ்தான் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் திணறியதற்கு மூல காரணம். ஃபீல்டிங்கில் இங்கிலாந்து கூடுதல் எச்சரிக்கையுடன் இருந்தே ஆக வேண்டும்.

இரண்டாவது டெஸ்ட் வரும் வியாழக்கிழமை தொடங்கவிருக்கிறது.