Published:Updated:

தினேஷ் கார்த்திக்: ஏபிடி, மேக்ஸ்வெல் இல்லையா, நான் இருக்கிறேன்... ஆர்சிபியின் புதிய ஃபினிஷர் டிகே!

தினேஷ் கார்த்திக்

சர்வதேசப் போட்டிகளிலிருந்து பல காலத்திற்கு முன்பே விலகிய ஒரு வீரரால், எப்படி இந்த இளைஞர்களுடைய ஃபார்மட்டில் கோலோச்ச முடியும்? ஆனால், ஆர்சிபியின் புதிய ஏபிடியாக, ஃபினிஷர் அவதாரம் எடுத்துள்ளார் தினேஷ் கார்த்திக்.

Published:Updated:

தினேஷ் கார்த்திக்: ஏபிடி, மேக்ஸ்வெல் இல்லையா, நான் இருக்கிறேன்... ஆர்சிபியின் புதிய ஃபினிஷர் டிகே!

சர்வதேசப் போட்டிகளிலிருந்து பல காலத்திற்கு முன்பே விலகிய ஒரு வீரரால், எப்படி இந்த இளைஞர்களுடைய ஃபார்மட்டில் கோலோச்ச முடியும்? ஆனால், ஆர்சிபியின் புதிய ஏபிடியாக, ஃபினிஷர் அவதாரம் எடுத்துள்ளார் தினேஷ் கார்த்திக்.

தினேஷ் கார்த்திக்
திறமைகளும், வாய்ப்புகளும் ஒன்றாய்ச் சந்திக்கும் புள்ளியாகத்தான் ஐபிஎல் பார்க்கப்படுகிறது. இது சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கான மேடை மட்டுமல்ல, முடிந்ததாகக் கருதி, முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, ஏன் 'முற்றும்' என்றே எழுதப்பட்ட பலரது கதைகளிலும் புதிய அத்தியாயங்கள் இங்கே தொடங்கியுள்ளன. அந்த வரிசையில், தற்போது இணைந்துள்ள பிரதான வீரர்தான், தினேஷ் கார்த்திக். தொடரின் முதல் மூன்று ஆர்சிபி போட்டிகளிலும் அவரது செயல்பாடுகள், இதனையே உறுதி செய்துள்ளன.

இந்தாண்டு ஐபிஎல் ஏலத்தில், 5.50 கோடி கொடுத்து, ஆர்சிபி தினேஷ் கார்த்திக்கை வாங்கிய போது, அந்த முடிவில் சில ஆர்சிபி ரசிகர்களுக்கே பெரிதாக உடன்பாடில்லை. விமர்சனத் தோட்டாக்கள், அதிவேகமாக, சமூக வலைதளங்களில் எல்லாம் புறப்பட்டு வந்தன. கரியர் முடியும் தறுவாயில் இருக்கும் டு பிளெஸ்ஸியைக்கூட ஓப்பனராகவும், புதிய கேப்டனாகவும் ஏற்றுக்கொண்டவர்கள், ஃபினிஷராக தினேஷ் கார்த்திக்கை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என வெளிப்படையாகவே தெரிவித்திருந்தனர்.

தினேஷ் கார்த்திக்
தினேஷ் கார்த்திக்

இத்தனைக்கும் வீரராக, விக்கெட் கீப்பராக, டொமெஸ்டிக் கிரிக்கெட் உலகை அறிந்தவராக, பல தமிழக வீரர்களை மெருகேற்றிய அணித்தலைவராக அவரின் பணி அளப்பரியது. ஒரு கேப்டனாக பல வீரர்களுக்கு அடையாளத்தைத் தந்து உலகறிய வைத்தவர், சரியான வீரர்களைக் கனகச்சிதமான இடத்தில் பொருத்தி, வெல்வதற்கான வித்தையையும் தமிழக அணிக்குக் கற்றுத் தந்தார். கேப்டனாகவும் பல ஏற்ற இறக்கங்களைப் பார்த்த முன்னனுபவம் அவருக்கு உண்டு. இந்தக் காரணத்திற்காகவே, அவரை ஆர்சிபியில் கோலிக்கு அடுத்ததாக கேப்டன்ஷிப் பதவிக்கு ஏற்றவர் என டு ப்ளஸ்ஸி மற்றும் மேக்ஸ்வெல்லுக்குச் சரிசமமாகப் பார்த்தவர்களும் உண்டு. அப்படியிருக்க, அவரை சில ரசிகர்கள் தள்ளி வைத்துப் பார்க்கக் காரணம், அவருடைய வயது.

சர்வதேசப் போட்டிகளிலிருந்து பல காலத்திற்கு முன்பே விலகிய ஒரு வீரரால், எப்படி இந்த இளைஞர்களுடைய ஃபார்மட்டில் கோலோச்ச முடியும்?
மாதக் கணக்கில், வர்ணணையாளராக அடுத்தவர்களின் ஆட்டத்திறனைப் பற்றியும் போட்டிகளின் நீக்கு போக்குகள் பற்றியும் ஏற்ற இறக்கத்தோடு வர்ணித்துக் கொண்டிருப்பவர்; கிரிக்கெட்டை ஆதி முதல் அந்தம் வரை அறிந்து வைத்திருப்பவர்; என்றாலும்கூட அவருக்குக் களத்தில் மணிக்கணக்கான பயிற்சியும் முயற்சியும் ஐபிஎல் தவிர்த்த மாதங்களில் இல்லையே, அப்படி இருக்க எப்படி அவரிடம் எழுச்சியை எதிர்பார்க்க முடியும்?

இவையெல்லாம்தான், அவரை ஏற்றுக் கொள்ளாதவர்களின் வாதமாக இருந்தது. அவை எல்லாவற்றிற்கும், "கமென்ட்ரி பாக்ஸில் மட்டுமே உதடுகள் பேசும், களத்தில் பேட்தான் பேசும்" என்பதை மீண்டும் ஒருமுறை உரக்கச் சொல்லியிருக்கிறார் தினேஷ் கார்த்திக். அதற்கான சாம்பிள், இந்த சீசனில் மூன்று போட்டிகளில் 204.55 ஸ்ட்ரைக்ரேட்டில் அவரிடமிருந்து வந்து சேர்ந்திருக்கும் ரன்கள். தற்போதுள்ள நிலையில், ராஜபக்ஷ, வாஷிங்டன் சுந்தருக்கு அடுத்தபடியாக தொடரில் அதிக ஸ்ட்ரைக்ரேட் வைத்திருக்கும் வீரர் தினேஷ்தான்.

தினேஷ் கார்த்திக்
தினேஷ் கார்த்திக்

பொதுவாக ஒரு அணியின் ஃபினிஷர் எப்படி இருக்க வேண்டும்? அழுத்தத்தை அடித்தளத்தை மாற்றிக்கொண்டு, அதீத பிரஷருடன் ரேஸ் குதிரையாக தறிகெட்டு ஓடும் இரண்டாம் பாதி ஓவர்களை அவர்கள் சந்தித்தாக வேண்டும். ஒரு தவறான பந்தின் விலை, ஒரு போட்டியின் முடிவாகக்கூட இருக்கலாம். அதுவும் இறுதி ஓவர்கள், டெத் ஓவர்கள் எனச் சொல்லப்படுவதற்கு ஏற்ப மரணபீதியை ஏற்படுத்தும். அத்தகைய நிலையில் இறங்கி எட்ட வேண்டிய இலக்கு, விக்கெட் கையிருப்பு, வீச இருக்கும் பந்துகளின் எண்ணிக்கை, குறிவைக்க வேண்டிய பௌலர்கள், அவர்களிடம் எஞ்சியுள்ள ஓவர்கள், உடன் நிற்கும் இன்னொரு பேட்ஸ்மேனின் பலம் மற்றும் பலவீனங்கள், தன்னுடைய எல்லைகள், இவை எல்லாவற்றையும் மனதில் அசை போட்டு, சரியான வகையில், அதுவும் குறுகிய நேரத்திற்குள் செயல்பட வேண்டும். கண்ணை மூடிக் கொண்டு லாங் ஆஃபுக்கு ஒன்று, மிட் விக்கெட்டில் ஒன்று, ஃபீல்டரே இல்லை என லாங் ஆன் பக்கம் இன்னுமொன்று என பேட்டை சுற்றுவது மட்டுமல்ல, அதையும் தாண்டி பல கூறுகளை உள்ளடக்கியது ஃபினிஷிங் ரோல்.

ஏற்றப்படும் அழுத்தத்தை எதிரணியின் பக்கமே எதிரொளிக்கத் தெரிந்திருக்க வேண்டும். ஒன்றிரண்டு பெரிய ஷாட்களைக் கவனமாக அடித்தாலே பௌலிங் பக்கம் பதறும். புது ஸ்ட்ராடஜிக்கு எதிரணி மாறும் சமயங்களில் சில இடங்களில் தடுமாறும், தவறிழைக்கும். அந்தத் தவற்றினை தனது வாய்ப்பாக மாற்றினாலே ரன்கள் வந்து சேரும். இதைத்தான் பல போட்டிகளில் செய்து வருகிறார் ஃபினிஷர் தினேஷ் கார்த்திக். அழுத்தம் அவரை உடையச் செய்யாத அளவு, அவருடைய நிதானம் அவருக்குக் கைகொடுத்து முன்னெடுத்துச் செல்கிறது.

தினேஷ் கார்த்திக்
தினேஷ் கார்த்திக்
ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் கூட, ஒரு கட்டத்தில் இவருக்கு எப்படி ஃபீல்டிங் நிறுத்துவது என்ற குழப்பத்தை சாம்சன் முகத்தில் பார்க்க முடிந்தது. இதனால்தான் அவரால் தன் அணியை வெற்றியின் விளிம்புக்கு அழைத்துச் செல்ல முடிகிறது.

2013-ல் மும்பைக்காக ஆடிய போது அவரது ப்ரைம் ஃபார்மில் 500 ரன்களைக் கடந்தார். அங்கிருந்து டெல்லி, ஆர்சிபி, குஜராத், கேகேஆர் எனச் சென்று திரும்பவும் ஆர்சிபிக்கு வந்து சேர்ந்துள்ளார். ஐபிஎல் ஆரம்பித்த ஆண்டில் தொடங்கிய அவரது ஓட்டம், இன்னமும் தொடர்கிறது. ஒன்றிரண்டு சீசன்கள் தவிர்த்து, மற்ற எல்லா சீசன்களிலும் இவரது ஸ்ட்ரைக்ரேட்டும் சிறப்பாகவே இருந்து வந்திருக்கிறது. குறிப்பாக 2018-ம் ஆண்டு, கேகேஆரை பிளேஆஃபிற்கு எடுத்துச் சென்றார் என்பதையும் தாண்டி, வீரராகவும் அங்கே அவரது செயல்பாடுகள்தான் இன்னமும் அதிகமாகவே பேசப்படுகின்றன. கேகேஆரில் பல போட்டிகளில் இவரோ, மோர்கனோ, ரசலோ இவர்களில் யாரேனும் ஒருவர் நின்றுவிட்டாலே அணியின் வெற்றி உறதிபடுத்தப்பட்டுக் கொண்டிருந்தது. கரீபியன் வீரர்களால் மட்டுமே நிரப்ப முடியும் என்று பல அணிகள் கருதும் அந்த ஃபினிஷிங் ரோலை, ஒரு ஓவர்சீஸ் பிளேயருக்கான இடத்தை விரயமாக்காமல் இந்திய வீரராக செய்து முடிப்பார் என்பதுதான் அவரது கூடுதல் சிறப்பு. அதுதான் ஆர்சிபிக்குக் கிடைத்த பொக்கிஷம் அவர் என்பதை உணர்த்தியது.

இத்தொடரில் இதுவரை மூன்று போட்டிகளில் ஆர்சிபி விளையாடி, இரண்டில் வென்றுள்ளது. அந்த மூன்று போட்டிகளுக்கும் உள்ள ஒற்றுமைகள், களத்தில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் நின்று கொண்டிருந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் தினேஷ் கார்த்திக் என்பதுதான்.

பஞ்சாப்புக்கு எதிரான 32* (14):

தினேஷ் கார்த்திக்
தினேஷ் கார்த்திக்

டு ப்ளஸ்ஸி, அனுஜ், கோலி ஆகிய மூவருமே ஓரளவு ரன்களைச் சேர்த்திருந்தாலும் 18-வது ஓவரில் களமிறங்கி, பௌலர்களைக் கலங்கடித்தார் தினேஷ் கார்த்திக். ஒரு கட்டத்திற்குப் பின், ஸ்ட்ரைக்கை அவரிடம் மாற்றிவிட்டு, மறுபுறமிருந்து அதை அணுஅணுவாக ரசித்துக் கொண்டிருந்தார் கோலி. ஓடியன் ஸ்மித்தின் ஸ்லோ பாலும் சிக்ஸருக்குப் பறந்தது, சந்தீப்பின் யார்க்கரும் பவுண்டரிக்குப் பலியானது. அவரின் 228.57 ஸ்ட்ரைக்ரேட்தான் அணியை 200+ ரன்கள் குவிக்க வைத்தது. தோல்விமுகம் கண்டாலும், ஆர்சிபிக்குள் 'அவரது மறுவரவு, அணிக்கான மறுவாழ்வு' என்ற நம்பிக்கையை விதைத்தது

கேகேஆர்க்கு எதிரான 14* (7):

129-தான் இலக்கு என்றாலும் அதனைக் கடைசி ஓவர் வரை நீட்டிக்க வைத்துவிட்டது தொடக்கத்தில் விழுந்த அதிவேக விக்கெட்டுகள். களத்திற்குள் தினேஷ் கார்த்திக் வந்தபோது 10 பந்துகள்தான் இருந்தன என்றால், அதில் போட்டியை முடிப்பதற்கு அவருக்குத் தேவைப்பட்டது 7 பந்துகள் மட்டுமே. அதிலும் கடைசியாகச் சந்தித்த இரண்டு பந்தும் ரசலுடையது. ஆனால், அந்த இரண்டு பந்துகளுமே யார் வீசியது என்பதை எல்லாம் யோசிக்காமல் சிக்ஸர் மற்றும் பவுண்டரியாக மாறின.

ராஜஸ்தானுக்கு எதிராக 44* (23):

மிரட்டும் தோல்வி பயத்திடம் அதை ஏற்றுக் கொள்பவர் ஒரு ரகம் என்றால், அந்தத் தோல்வியையே தன்முன் மண்டியிடச் செய்பவர் ஒரு ரகம். தினேஷ் இதில் இரண்டாவது வகை. 170 ரன்கள் இலக்கைத் துரத்திய ஆர்சிபிக்கு விக்கெட்டுகளற்ற பவர்பிளே ஓவர்கள் நம்பிக்கை தந்தன. ஆனாலும், அடுத்த மூன்று ஓவர்களில் நான்கு விக்கெட்டுகள் விழுந்துவிட, மீதமுள்ள 45 பந்துகளில் 83 ரன்கள் சேர்க்க வேண்டும் எனத் தேவைப்படும் ரன்ரேட் 12-ஐ தொட்டிருந்தது. அந்தத் தருணத்தில் ஷபாஸ் முகமதுகூட சற்றே தடுமாற்றத்தில்தான் நின்றிருந்தார். ஏறக்குறைய தோல்வி ஊர்ஜிதப்படுத்தப்பட்ட போதுதான் அவர் வந்தார்.

தினேஷ் கார்த்திக்
தினேஷ் கார்த்திக்

களமிறங்கிய பின் சந்தித்த அஷ்வினின் ஓவரிலிருந்து தனது வெறியாட்டத்தைத் தொடங்கினார் தினேஷ். ஸ்லாட்டில் விழுந்த பந்து தண்டனைக்குட்பட்டு பவுண்டரி லைனில் தஞ்சம் புகுந்தது என்றால் புல் ஷாட்டுகள், ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப் ஆகியன கண்களுக்கு விருந்து வைத்தன. இதனாலேயே பல ரசிகர்கள் டிகே, மிஸ்டர் 360° ஆன ஏபிடியை நினைவூட்டுவதாகவும், அவரது ஷாட்டுகள் களத்தை முழுவதும் கட்டுக்குள் கொண்டு வருவதாக இருந்ததாகவும், ஏபிடி இல்லாத குறையை இவர் நிறைவேற்றுவதாகவும் கூறியிருந்தனர்.

அதிலும் எந்த ஆக்ரோஷத்தையும் கண்களிலோ முகத்திலோ காட்டாமல் அதை பேட்டிங்கில் காட்டுவதும் ஒரு கலைதான். அவரது கமென்டரி எப்படி இருக்குமோ அப்படித்தான் அவரது ஆட்டத்தில் இன்டென்ட் நிரம்பி வழிந்தது; அது கவனத்தைக் கவர்வதாகவும் அமைந்தது. அவரது ஆட்டம் கொடுத்த ஊக்கமும் நம்பிக்கையும்தான், ஷபாஸ் முகமதுவையும் சிறப்பாக ஆடச் செய்தது. அணியும் சுலபமாக வெற்றி பெற்றது.

இந்த ஃபினிஷர் ரோலை சர்வதேச அரங்கில் கிடைத்த சொற்பப் போட்டிகளிலும் தினேஷ் சரியாகவே செய்திருக்கிறார். 2018-ல் நிடாஸ் கோப்பைக்கான தொடரை யாராலும் மறக்க முடியாது. அத்தொடரில் பங்களாதேஷுடனான இறுதிப் போட்டியில், இறுதி இரண்டு ஓவர்களில் 34 ரன்கள் தேவைப்பட, 8 பந்துகளில் 29 ரன்களை அடித்து டி20 த்ரில்லரில் வெற்றியை இந்தியாவுக்குப் பரிசளித்தார்.
தினேஷ் கார்த்திக்
தினேஷ் கார்த்திக்

உலகத்தரம் வாய்ந்த தோனி இருந்ததால்தான், இவரது பெரும்பாலான நாள்கள் பேக்கப் விக்கெட் கீப்பராகவும், பிளேயிங் லெவனில் இல்லாததாகவும் கழிந்தன. அவரது முழுத்திறமையையும் வெளிப்படுத்த வாய்ப்பளித்த களங்கள் உள்ளூர் கிரிக்கெட்டும் ஐபிஎல்லும்தான்.

அதேபோல் தற்போது ஆர்சிபியில் மிகச் சிறப்பாக மேக்ஸ்வெல், ஏபிடி இல்லாத குறைகூடத் தெரியாத அளவு இவர் நிவர்த்தி செய்து வருகிறார்.

தினேஷ் கார்த்திக்
தினேஷ் கார்த்திக்

கடந்தாண்டு ஒரு ட்வீட்டில், தினேஷ் கமெண்டேட்டராக இருப்பதைக் குறிப்பிட்டு, "நான் நானாகவே இருக்கிறேன்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தார்". அதற்கு ரோஹித் சர்மா, "உங்களிடம் இன்னமும் கிரிக்கெட் மீதமுள்ளது" எனத் தெரிவித்திருந்தார். உண்மையில் 37 வயதை நெருங்கினாலும், இன்னமும் கிரிக்கெட் மீதான அவரது வேட்கை தணியவில்லை. டி20 ஃபார்மெட்டில் இந்தியாவுக்காக கம்பேக் கொடுக்க வேண்டும் அதற்காக எனது திறமையை பயிற்சியாளர் அபிஷேக் நாயரின் உதவியோடு வளர்த்துக் கொண்டுள்ளேன் என்று பிப்ரவரியில் கூறியிருந்தார் தினேஷ். அதற்கான ஆரம்பக்கட்டமாகக்கூட இது அமையலாம்.

எனது கதை முடியவில்லை, நான் முடிக்க வேண்டிய கதைகளே இன்னமும் பல இருக்கின்றன எனச் சொல்லாமல் சொல்லியுள்ளார் தினேஷ் கார்த்திக்.