Published:Updated:

`கிங் கோலி இஸ் பேக்' - அணியின் மீதான விமர்சனங்கள் இருக்கட்டும், இது கோலியைக் கொண்டாடும் தருணம்!

விராட் கோலி ( Anjum Naveed )

பல மாதங்கள் சச்சினைக் காக்க வைத்து, அதன்பின் ஆசியக் கோப்பை தொடரில் வந்து சேர்ந்த அவரது 100-வது சதம் போல், கோலியின் மீண்டெழும் படலமும் அவரது 71-வது சதமும் ஆசியக் கோப்பை தொடரில்தான் அரங்கேறியிருக்கிறது.

`கிங் கோலி இஸ் பேக்' - அணியின் மீதான விமர்சனங்கள் இருக்கட்டும், இது கோலியைக் கொண்டாடும் தருணம்!

பல மாதங்கள் சச்சினைக் காக்க வைத்து, அதன்பின் ஆசியக் கோப்பை தொடரில் வந்து சேர்ந்த அவரது 100-வது சதம் போல், கோலியின் மீண்டெழும் படலமும் அவரது 71-வது சதமும் ஆசியக் கோப்பை தொடரில்தான் அரங்கேறியிருக்கிறது.

Published:Updated:
விராட் கோலி ( Anjum Naveed )
இடி முழக்கத்திற்கு நடுவே வானவில்லைத் தரிசிக்க முடிந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது கோலியின் 71-வது சதம்.

டிஃபெண்டிங் சாம்பியனான இந்தியாவிற்கு இம்முறை இறுதிப் போட்டியில்கூட இடமில்லை. எதிர்மறை விமர்சனங்கள் மட்டுமே சூப்பர் 4 சுற்றில் அவர்கள் முன்பாக வீசி எறியப்பட்டன. ஆனால், அவற்றிற்கான பதிலைத் தேடும் பணி எல்லாம் ஓரிரு நாள்கள் காத்திருக்கலாம், சற்று தாமதமாக அதன்மீது கவனம் செலுத்திக் கொள்ளலாம் எனுமளவு அதை மறக்கடிக்கும்படி கோலியின் 71-வது சதம் வந்து சேர்ந்து ரசிகர்களைக் கொண்டாட்ட மனநிலைக்கு எடுத்துச் சென்றிருக்கிறது.

சச்சின் டெண்டுல்கர் இருந்த இடத்தில் அவருக்கு அடுத்த தலைமுறை வீரராகக் கொண்டாடப்பட்டவர்தான் கோலி. எந்த எதிரணி பௌலர்களுக்கும் சவால் விடுக்கும் அவரது பேட்டுக்குச் சதங்கள் சாதாரணமானவை. அவரது திறன் எனும் நூலில்தான் பல இந்திய வெற்றிகள் கட்டமைக்கப்பட்டன.

விராட் கோலி
விராட் கோலி
Anjum Naveed

ஆனால், 2019 டிசம்பர் மாதத்திற்குப் பிறகு அவரது கரியரின் மீது அடர்ந்த இருள் படிந்திருந்தது. கிரகணம், சூரியனையே விழுங்கி விட்டது போன்ற காலகட்டம் அது. மனம் சற்றே வலுவிழந்திருக்கும் சமயம், சின்ன அடிகள் கூட பெரிய வலியைத் தரும். அது நமது வளர்ச்சிப் பாதையில் நம்மைப் பின்னோக்கிப் பயணிக்க வைக்கும். கோலி கடந்ததும் இப்படிப்பட்ட காயங்களைத்தான்.

ஃபார்ம் இழந்து தவித்ததிலிருந்து, கேப்டன் பதவி பறிப்பு வரை எல்லா இடர்பாடுகளையும் கோலி பார்த்துவிட்டார். ஆடிய களத்தில் எல்லாம் தோல்வியும் சொற்ப ரன்களுமே அவரை நலம் விசாரித்தன. வின்டேஜ் கோலி ஒருசில போட்டிகளில் தலை காட்டினாலும், அவர் ஒரு கவர் டிரைவோடோ, கண்களில் தெரியும் சின்ன ஒளியோடோ மங்கிப் போயிருந்தார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தியக் கிரிக்கெட் உலகம் தொலைத்து விட்டுத் தேடிக் கொண்டிருந்தது அவரது அந்த சதத்தை மட்டுமல்ல, அவரிடமிருந்த துடிப்பை, துள்ளலை, அணிக்குள் அவர் கொண்டு வரும் உயிர்ப்பை, களத்துடன் அவர் சேர்க்கும் ஒரு பூச்சு அக்ரஷனை என அத்தனையையும்தான். சங்கிலித் தொடராக ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்த நிகழ்வுகள் அவரது தன்னம்பிக்கையையே தொலைந்து போக வைத்திருந்தன. இன்னமும் சில போட்டிகளில் ஃபீல்டிங்கின் போதுகூட இருக்கும் இடம் தெரியாது லாங் ஆனிலோ, லாங் ஆஃபிலோ முகம் காட்டாது மறைந்து கொண்டிருந்தார். இந்திய அணியில் அவருக்குக் கண்டிப்பாக இடம் வேண்டுமா எனும் அளவெல்லாம் கேள்விக் கணைகள் தொடுக்கப்பட ஆரம்பித்துவிட்டன. அவருக்கு மாற்று வீரராக யாரை இறக்கலாம் என்றெல்லாம் ஆலோசனைகளை வழங்கத் தொடங்கி விட்டனர். இவ்வளவுக்கும் டி20-ல் அவரது ஆவரேஜான 50+ என்பதெல்லாம் எந்த ஒரு வீரருக்கும் இன்றுவரை கனவுதான். என்றாலும் நிகழ்காலம் கடந்த காலத்தை அழித்து மாற்றியது.

விராட் கோலி
விராட் கோலி
Anjum Naveed

நல்லவேளையாக நிலைமை கைமீறிப் போவதற்குள் தன்னை மீட்டெடுப்பதற்கான போராட்டத்தில் கோலியே ஈடுபட்டார். தனக்குத் தானே ஒரு சின்ன பிரேக் கூட எடுத்துக் கொண்டார். எந்த பேட்டை "என் பொம்மை அல்ல, இது என் ஆயுதம்" என முன்பாக சொல்லியுள்ளாரோ அந்த ஆயுதத்தையே மறந்த தளபதியாகத்தான் கோலி ஒரு மாதத்திற்கும் மேலாக பேட்டையே தொடாமல் வலம் வந்தார். ஆனால், அவருக்குள் இருந்த ஒரு போராட்டக்காரரை இந்த இடைவெளி வெளிக் கொண்டு வந்துவிட்டது. சில சமயம், நமது நம்பிக்கையைக் குலைக்கும்படி வெளியே கேட்கும் வார்த்தைகளைக் காதுகளுக்குள் அனுமதிக்காமல் நமக்கு உள்ளே கேட்கும் குரலுக்குச் செவிமடுத்தாலே போதும், எதையும் எதிர்கொள்ளும் ஆளுமையை அது கொண்டு வந்துவிடும். கோலிக்கும் தற்சமயம் அதுதான் நடந்திருக்கிறது. "Darkness can ignite you" என்பார்களே, அது போல் இருண்ட நாள்கள்தான் உள்ளே ஒளிந்திருந்த கோலியை மறுபடியும் ஒளிர வைத்துள்ளது.

பல மாதங்கள் சச்சினைக் காக்க வைத்து, அதன்பின் ஆசியக் கோப்பை தொடரில் வந்து சேர்ந்த அவரது 100-வது சதம் போல், கோலியின் மீண்டெழும் படலமும் அவரது 71-வது சதமும் ஆசியக் கோப்பை தொடரில்தான் அரங்கேறியிருக்கிறது. இந்தத் தொடர் முழுவதுமே கோலியின் சில இன்னிங்ஸ்கள், அவர் கொஞ்சம் கொஞ்சமாக மேடேறி வருகிறார் என்பதற்குக் கட்டியம் கூறிக் கொண்டேதான் இருந்தன. இருப்பினும், அவரே குறிப்பிட்டதைப் போல அவரது சதம் இந்த ஃபார்மேட்டில் வரும் என்பது யாருமே பெரிதாக எதிர்பார்க்காதது.

லீக் சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக வந்து சேர்ந்த 35, ஹாங்காங்கிற்கு எதிராக 134 ஸ்ட்ரைக் ரேட்டில் வந்த 59 ரன்கள், மறுபடியும் பாகிஸ்தானுடன் வந்த 60 ரன்கள் எனப் போட்டிக்குப் போட்டி மெருகேறி வந்த கோலியின் ஆட்டம், இலங்கைக்கு எதிரான போட்டியில் டக் அவுட் ஆனவுடன் மறுபடியும் சிறிது கலக்கம் தந்தது. ஆனால், ஆப்கனுடன் வந்து சேர்ந்திருக்கும் அவரது 71-வது சதம், அதுவும் அவரது முதல் டி20 சதம், கோலி முழுமையாக மீண்டு வந்ததைச் சொல்லியிருக்கிறது.
IND v AFG
IND v AFG
Anjum Naveed

ஆப்கன்தானே, இதற்கு எதிராகச் சதம் வந்தது பெரிய விஷயமா என்பதனை முந்தைய போட்டிகளில் அவர்களது பௌலிங் செயல்பாடுகளை வைத்துக் கணக்கிட்டாலே புரிந்து கொள்ள முடியும். அவருக்கு அதிகம் பரிட்சியமில்லாத ஓப்பனிங்கில் அதுவும் ரோஹித் இல்லாத நிலையில் இறங்குகிறார். பிரஷர் கேம் இல்லை, டெட் ரப்பர் என்பதால் பளு ஏற்றிக் கொள்ளாமல் ஆடினார் என்று இதனை ஒதுக்கி வைத்துவிட முடியாது. ஏனெனில், அணியின் மீது வேண்டுமெனில் அழுத்தம் இல்லாமல் இருக்கலாம். அவரைப் பொறுத்தவரை ஆடியே ஆக வேண்டுமென்ற அழுத்தம் இருந்து கொண்டுதான் இருந்தது. ஆனால், அது இம்மியளவும் அவரை அசைத்துப் பார்க்கவில்லை என்பதே நிதர்சனம்.

ராகுலின் அதிரடியைப் பார்த்துக் கொண்டிருந்த கோலி, பவர்பிளேயின் கடைசி ஓவரில்தான் பந்தைப் பறக்க விடும் வித்தைக்கு விடிவு தந்தார். அங்கிருந்து அவரது ரசனைக்குரிய ஒவ்வொரு ஷாட்டும் வெளிப்படத் தொடங்கியது. அதிலும், கோலியின் சில ஷாட்கள் அவர் ஃபார்முக்கு வந்துவிட்டதைத் திட்டவட்டமாக உறுதிப்படுத்தின. கவர் டிரைவ்கள் கண்ணைக் கவர்ந்தது என்றால், ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசப்பட்ட யார்க்கர்களும் பேக்வர்ட் பாயின்ட்டில் தஞ்சம் புகுந்தன. குறிப்பாக ஸ்பின்னர்களுக்கு எதிராக அவர் ஆடிய விதம்தான் இன்னமும் ஸ்பெஷல்‌. அவரது ஃபுட் வொர்க்கும், பேட் லாகவமாகக் காற்றில் அசைந்து ரன்களைக் களவாடியதும், அவருக்கு அதிகம் பரிட்சியமில்லாத ஸ்வீப் ஷாட்டைக் கூட முயன்றதும், அடுத்த சுற்றுக்கு அவர் தயாரானதையே காட்டியது.

ரஷித் கானின் பந்தை எந்த ஒரு பேட்ஸ்மேனும் பொதுவாக சாய்ஸில் விடவே விரும்புவார்கள். ஆனால், தனக்கு அதற்கும் பயமில்லை என்பதைப் போல் டீப் மிட் விக்கெட் திசையில் அதனை சிக்ஸராகப் பறக்கவிட்ட போதுதான் அவருக்குள் இருந்த அந்தப் பழைய கோலி, அதே கொண்டாட்ட மனநிலையோடு வெளிப்பட்டார்.
விராட் கோலி
விராட் கோலி
Anjum Naveed

உண்மையில் அவரிடம் சின்னத் தடுமாற்றமோ, ஆட்டமிழந்து விடுவோமோ என்ற அச்சமோ வெளிப்படவில்லை. ஏற்கெனவே இன்று ஒரு பெரிய இன்னிங்ஸ் லோடிங் என டீகோடிங் செய்து வந்ததைப் போலவேதான் ஆடினார். இந்தியா 200-ஐ தாண்டுமா என்ற எண்ணமெல்லாம் மாறி, ஒரு கட்டத்தில் கோலி மூன்றிலக்கத்தை எட்டுவாரா என்பதில் மட்டுமே கவனம் திரும்பியது. இதில் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டையுமே கோலி செய்து காட்டினார்.

டெத் ஓவர்களில் ரசிகர்களின் இதயத் துடிப்பு எகிறியது. பெரிய ஸ்கோரை சேஸ் செய்து அதனைப் பக்கத்தில் நெருங்குவதைப் போன்ற மனநிலை அவர்களிடம் நிலவ, அவரோ அதற்குப் பிறகுதான் இன்னமும் ரிலாக்ஸாகத் துணிவே துணை என ஆட ஆரம்பித்தார். ஆட்டத்தை ரசித்து ஆடத் தொடங்கினார். பந்தைச் சந்திக்க நிற்கும் போது அவரிடம் சின்னதாக நடன அசைவுகள் கூடத் தென்பட்டன.

முன்னதாக சதத்தின் மீது மட்டுமே அவரது பார்வை இருந்த போது அது வரவில்லை. இப்போட்டியில் அது வந்துவிடும் என நடப்பு நிமிடங்களில் கவனத்தைக் குவித்த போது அது இயல்பாகவே வந்துவிட்டது. முதல் சதம் தந்ததை விட இரட்டிப்பான மகிழ்ச்சியை இது கோலிக்குக் கொடுத்துள்ளது. ஆசியக் கோப்பையை வெல்லவில்லைதான் என்றாலும், கடலில் தொலைத்ததாகக் கருதிய முத்து திரும்பவும் கையில் கிடைத்தால் தோன்றும் மனநிலையே ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கோலி மட்டுமல்ல இன்னுமொருவரின் உயிர்த்தெழுதலையும் இப்போட்டி பார்த்துள்ளது. எக்கானமிக்கலாக பந்து வீசுவதற்குப் பெயர் பெற்ற ஸ்விங் நாயகனான புவனேஷ்வருக்கு இந்தத் தொடரின் சூப்பர் 4 டெத் ஓவர்கள் மரண அடி தந்துவிட்டன. வேரியேஷன்களின் வித்தகர்தான் என்றாலும், அது எதுவுமே அவருக்குச் சரியான திசையில் நகராமல் போய், ரசிகர்களின் வெறுப்பைச் சம்பாதித்துத் தந்தது. ஆனால், இப்போட்டியில் ஒரு மெய்டன் ஓவரோடு வந்த அவரது 5-4 ஸ்பெல், காலம் கடந்தும் பேச இருக்கிறது.

IND v AFG
IND v AFG
Anjum Naveed
ஆப்கனிடமோ முந்தைய போட்டியில் இருந்த துடிப்பில்லை, மனதளவில் தளர்ந்து போய் இருந்தது தெரிந்தது. இல்லையெனில் 101 ரன்கள் தோல்வி என்ற மிகப்பெரிய தோல்வி சற்றேனும் தடுக்கப்பட்டிருக்கும்.

இன்னமும் இந்திய அணியைப் பார்த்து, "குறையொன்றுமில்லை" எனப் பாட முடியவில்லை. ஆசியக் கோப்பை தொடர் முழுவதிலும் வெளிப்பட்ட குறைகளைக் களைய வேண்டும்தான், உலகக் கோப்பைக்கு முன்னதாக சீர்திருத்த வேண்டும்தான். எனினும் இப்போதைக்கு அதை எல்லாம் சற்றே மறந்து, இந்தியக் கிரிக்கெட்டின் முகமான கோலியைக் கொண்டாடலாம். ஒருசமயம், கிரிக்கெட்டின் மீது சற்றே ஆர்வக் குறைவு ஏற்பட்டிருந்தது எனச் சொன்னவர், தற்சமயம் பழைய மகிழ்ச்சியான மனநிலையோடு திரும்பியிருப்பதாகக் கூறியிருக்கிறார்.

இந்திய அணியைப் பொறுத்தவரை, இந்த ஆசியக் கோப்பை தொடர் அளித்திருக்கும் ஒரே ஆசீர்வாதம் `கிங் கோலி இஸ் பேக்' என்பது மட்டும்தான்.