Published:Updated:

யூசுப் யுஹானா என்கிற முகமது யூசுப்... இவன் அடித்து ஆடியது கிரிக்கெட் மட்டுமல்ல! அண்டர் ஆர்ம்ஸ் - 17

முகமது யூசுப்

தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் சதங்களாகக் குவிக்கும் யூசுப் யுஹானாவுக்கு பெரிய அணிகளில் மட்டும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அவரின் மதம் ஒரு தடையாக இருக்கிறது.

யூசுப் யுஹானா என்கிற முகமது யூசுப்... இவன் அடித்து ஆடியது கிரிக்கெட் மட்டுமல்ல! அண்டர் ஆர்ம்ஸ் - 17

தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் சதங்களாகக் குவிக்கும் யூசுப் யுஹானாவுக்கு பெரிய அணிகளில் மட்டும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அவரின் மதம் ஒரு தடையாக இருக்கிறது.

Published:Updated:
முகமது யூசுப்
``பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டிலிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்திருக்கிறது. அதில் நான் இருப்பது பாகிஸ்தான் அணியின் நலனுக்கு தீங்குவிளைவிப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்கள். 12 ஆண்டுகளாக இந்த நாட்டுக்காக விளையாடியவன் நான். இப்போது நான் விளையாடுவதுதான் இந்த அணிக்கு தீங்கு விளைவிப்பதாக இருக்கிறது எனும்போது விளையாட்டில் இருந்தே விலகுகிறேன்.''
முகமது யூசுப்

நீங்கள் எவ்வளவு பெரிய உச்சத்தில் இருந்தாலும் உணர்ச்சிவயப்பட்டு எடுக்கும் ஒருசில முடிவுகளால் வாழ்க்கையே தடம் மாறிவிடும் என்பதற்கு முகமது யூசுப்பின் கரியரே உதாரணம். கிரிக்கெட்டை மிகவும் நேர்த்தியாக ஆடக்கூடிய பேட்ஸ்மேன்களுக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் இருப்பார்கள். அப்படி இந்த பாகிஸ்தான் வீரருக்கு இந்திய உள்பட அத்தனை நாடுகளிலும் அவ்வளவு ரசிகர்கள். கிரிக்கெட் கமென்ட்டேட்டர்கள் எலிகன்ட் பேட்ஸ்மேன், ஃபைனஸ்ட் பேட்ஸ்மேன் என்கிற வார்த்தைகளை ஒரு சிலருக்கே பயன்படுத்துவார்கள். அப்படி பல வார்த்தைகளால் வர்ணிக்கப்பட்ட அழகியல் ப்ளேயர் முகமது யூசுப். இந்தியாவில் ராகுல் டிராவிட் இருந்ததைப்போல பாகிஸ்தானுக்குத் தரமான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக, பாகிஸ்தானின் நம்பிக்கையாக இருந்தார். கிரிக்கெட்டில் இன்சைட் அவுட் ஷாட் எனச் சொல்வார்கள். லெக் ஸ்டம்ப்பை நோக்கி வீசப்படும் பந்தை, கொஞ்சம் நகர்ந்து போய், பேட்ஸ்மேன் ஆஃப் சைடில் அடிப்பதே இன்சைட் அவுட் ஷாட். இந்த ஷாட்டை முகமது யூசுப் அளவுக்கு சிறப்பாக ஆடியவர்கள் இல்லை. ஒவ்வொரு ஷாட்டிலும் அவ்வளவு துல்லியம் இருக்கும்.

முகமது யூசுப்
முகமது யூசுப்

2000-களின் தொடக்கத்தில் இன்சமாம் உல் ஹக், யூனிஸ் கான், முகமது யூசுப் என ஸ்ட்ராங்கான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களோடு விளையாடியது பாகிஸ்தான். இந்த மூவரில் முகமது யூசுப்பின் விக்கெட்டை வீழ்த்துவதையே பெளலர்கள் பெருமையாக நினைப்பார்கள். ஏனென்றால் எந்த லைனில் வீசினாலும், எந்த லென்த்தில் வீசினாலும் அதை சிறப்பாக தடுத்து ஆடக்கூடியவர். பெரும்பாலும் இவர் பந்துகளைப் பவர் கொண்டு அடுத்ததேயில்லை. ஆஃப் சைடில் அவர் அடிக்கும் ஷாட்களை அவ்வளவு ரசித்துப்பார்க்கலாம். பந்தின் வேகத்துக்கு ஏற்ப சிம்பிளாக பேட்டில் ஒரு தட்டுதான் தட்டுவார். பந்து பவுண்டரி லைனில் இருக்கும்.

ஒடுக்கப்பட்டவனின் பயணம்!

முகமது யூசுப்பின் கிரிக்கெட் கரியரைப் பார்க்கும் முன் அவர் குடும்பப் பின்னணியைப் தெரிந்துகொண்டால்தான் அவரின் பயணம் புரியும். பாகிஸ்தானிய தலித் குடும்பத்தைச் சேர்ந்தவர் யூசுப். இவரது குடும்பம் பிரிட்டிஷ் ஆட்சியில் கிறிஸ்துவத்தைத் தழுவுகிறது. அப்போது இவரின் பெயர் யூசுப் யுஹானா (ஜோசப் ஜான்). இவரின் அப்பாவுக்கு பாகிஸ்தான் ரயில்வேயில் தூய்மைப்பணியாளர் வேலை. ரயில்வே குவார்ட்டர்ஸில் வளர்கிறார் யூசுப் யுஹானா. ரயில்வே மைதானங்களில் அவர் கிரிக்கெட் ஆடும் ஸ்டைலைப் பார்க்கும் சில கிரிக்கெட் கிளப்புகள் அவரை அணியில் சேர்த்துக்கொள்கின்றன. தொடர்ந்து விளையாடுகிறார். ஆனால், வீட்டில் வறுமையை சமாளிக்கப் பணம் வேண்டும். டெய்லர் கடையில் வேலை பார்த்துக்கொண்டே கிரிக்கெட் விளையாடுகிறார்.

தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் சதங்களாகக் குவிக்கும் யூசுப் யுஹானாவுக்கு பெரிய அணிகளில் மட்டும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அவரின் மதம் ஒரு தடையாக இருக்கிறது. ஆனால், புறக்கணிக்கவே முடியாத வீரராக எழுந்து நிற்கிறார் யூசுப் யுஹானா. 1997-ல் லாகூர் அணி அவரைச் சேர்த்துகொள்கிறது. லாகூர் அணிக்காக சிறப்பாக விளையாட அடுத்த ஆண்டே பாகிஸ்தான் அணிக்குள் நுழைகிறார் யூசுப் யுஹானா. பாகிஸ்தான் அணியில் ஒரு கிறிஸ்தவர் என உலகமே அவரை திரும்பிப் பார்க்கிறது.

முகமது யூசுப்
முகமது யூசுப்
Twitter

24 வயது இளைஞனாக யூசுப் யுஹானா 1998-ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரானத் தொடரில் சேர்க்கப்படுகிறார். ஆனால், முதல் போட்டியில் ப்ளேயிங் லெவனில் இடம் கிடைக்கவில்லை. இரண்டாவது டெஸ்ட்டில் 5 ரன், 1 ரன் அடுத்தடுத்த இன்னிங்ஸ்களில் சொதப்ப அடுத்த டெஸ்ட்டில் அவர் சேர்க்கப்படவில்லை. தென்னாப்பிரிக்கா டூர் முடிந்ததுமே ஜிம்பாப்வேவுக்கு செல்கிறது பாகிஸ்தான். அங்கு முதல் டெஸ்ட்டிலேயே யூசுப்புக்கு வாய்ப்பு வழங்கப்பட அன்று அவர் அடித்த 60 ரன்கள்தான் பாகிஸ்தானின் டாப் ஸ்கோர். இரண்டாவது இன்னிங்ஸில் மீண்டும் 64 ரன்கள் என அந்தப் போட்டியை டிரா செய்வதற்கு உதவுகிறார். இரண்டாவது டெஸ்ட்டிலும் யூசுப் அடித்த அரைசதம் பாகிஸ்தானின் வெற்றிக்கு உதவ, அணிக்குள் மதிப்புமிக்க வீரராக உயர்கிறார் யூசுப் யுஹானா.

ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் தொடர்தான் யூசுப்புக்கு முதல் அறிமுகம். முதல் ஒருநாள் போட்டியிலேயே 62 பந்துகளில் 59 ரன்கள் அடித்து பாகிஸ்தானை வெற்றிபெறவைக்கிறார். இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் பாகிஸ்தானை சேஸ் செய்து வெற்றிபெற வைத்தது யூசுப்பின் 66 ரன்கள். ஜிம்பாப்வே தொடரை முடித்துக்கொண்டு மீண்டும் தென்னாப்பிரிக்காவில், இலங்கையோடு சேர்ந்து முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடப்போனது பாகிஸ்தான். ஆனால், இந்த ஒரு நாள் தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்ட சில போட்டிகளில் யூசுப் சொதப்ப அவரை ப்ளேயிங் லெவனில் இருந்து எடுத்தார் பாகிஸ்தான் கேப்டன் ரஷீத் லத்தீஃப்.

இதனைத் தொடர்ந்து அணிக்குள் வருவதும் போவதுமாக இருந்தவருக்கு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரானத் தொடர் நிரந்தர இடம் கொடுத்தது. பாகிஸ்தான் வந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 111 பந்துகளில் 100 ரன்கள் அடித்ததுதான் யூசுப்பின் முதல் சர்வதேச சதம்.
முகமது யூசுப்
முகமது யூசுப்

யூசுப் யுஹானாவின் கரியரில் முக்கியமானப்போட்டி பிரிஸ்பேனில் ஜனவரி 10, 2000-ம் ஆண்டு நடந்தது. இந்தியாவின் கேப்டன் சச்சின் ஃபார்மில் இல்லாமல் திணறிக்கொண்டிருந்ததால் அப்போது 2 டவுன் பேட்ஸ்மேனாக இறங்கிக்கொண்டிருந்தார். கங்குலியும், லக்‌ஷ்மணும்தான் இந்தப் போட்டியில் இந்தியாவின் ஓப்பனிங் பேட்மேன்கள். முதல் 6 ஓவர்களில் இந்தியாவின் ஸ்கோர் வெறும் 8 ரன்கள்தான். வாசிம் அக்ரம், வக்கார் யூனுஸ், ஷோயப் அக்தர், அப்துர் ரஸாக் என நான்கு வேகப்பந்து வீச்சாளர்களும் ஸ்விங், ரிவர்ஸ் ஸ்விங் என பயமுறத்த இந்தியாவின் விக்கெட்டுகள் விழுந்துகொண்டேயிருந்தன. கங்குலியும், ராபின் சிங்கும் மட்டுமே தாக்குப்பிடித்து ஆடினார்கள். கங்குலி 101 பந்துகளில் 61 ரன்கள் அடிக்க, ராபின் சிங் 84 பந்துகளில் 50 ரன்கள் அடித்து இந்தியாவின் ஸ்கோரை 195 ரன்களுக்குக் கொண்டுவந்தார்கள்.

பாகிஸ்தான் இந்த டார்கெட்டை ஈஸியாகச் சேஸ் செய்துவிடும் என எல்லோரும் நினைக்க, ஶ்ரீநாத், அகர்கர், பிரசாத் ஆகியோரின் பந்து வீச்சால் திணற ஆரம்பித்தது பாகிஸ்தான். ஷாகித் அஃப்ரிடி டக் அவுட் ஆகி கணக்கைத் தொடங்க இஜாஸ் அஹமது, இன்சமமாம் உல் ஹக், சயீத் அன்வர், அப்துர் ரஸாக், மொயின் கான் என 22 ஓவர்களுக்குள் 71 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்துவிட்டது பாகிஸ்தான். இந்திய ரசிகர்கள் பேட்டிங் சொதப்பலை மறந்து இந்தியாவின் பெளலிங்கை கொண்டாட ஆரம்பித்தார்கள். ஆனால், யூசுப் யுஹானா இந்தியாவிடம் இருந்து வெற்றியை பாகிஸ்தான் பக்கம் கொண்டுபோனார். இக்கட்டான சூழலில் எப்படி கொஞ்சமும் பதற்றப்பட்டாமல் ஆடுவது எனக் கற்றுக்கொள்ள, யூசுப்பின் அந்த இன்னிங்ஸைப் பார்க்கலாம். இந்தப் போட்டியில் 83 பந்துகளில் 63 ரன்கள் அடித்து பாகிஸ்தானை வெற்றிபெறவைத்தார் மொகமது யூசுப். கடைசி பந்தில் பாகிஸ்தான் பெற்ற த்ரில் வெற்றி இது.

தாக்காவில் இந்தியாவுக்கு எதிராக நடந்த ஆசியக் கோப்பை போட்டி யுஹானாவின் இன்னொரு பேர் சொல்லும் இன்னிங்ஸ். இந்த மேட்சில் 1 டவுன் பேட்ஸ்மேனாக உள்ளே வந்தவர் விக்கெட் கீப்பர் மொயின் கானோடு சேர்ந்து மிக முக்கியமான ஆங்கர் இன்னிங்ஸ் ஆடினார். 200 ரன்கள் அடிப்பார்கள் என எதிர்பார்க்க பாகிஸ்தானின் ஸ்கோரை 290 ரன்களுக்கு மேல் உயர்த்தினார். கடைசி ஓவரின் கடைசிப்பந்தை இவர் எதிர்கொண்டதுபோது 'யூசுப் யுஹானா 94 ரன்ஸ்' என ஸ்கோர்போர்டு காட்டியது. கடைசி ஒவரை வீசிக்கொண்டிருந்தவர் தமிழக வீரர் திருக்குமரன். 2011 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தோனி அடித்ததுபோன்று லாங் ஆனில் சிக்ஸர் அடித்து சென்சுரியோடு இன்னிங்ஸை முடித்தார் யூசுப். இதேபோல் 2002-லும் ஸிம்பாப்வேவுக்கு எதிராக கடைசிப்பந்தில் 94 ரன்களில் இருந்தபோது சிக்ஸர் அடித்து சதத்தை நிறைவு செய்திருக்கிறார்.

யூசுப் யுஹானா டு முகமது யூசுப்!

2005-ல் திடீரென யூசுப் யுஹானா இஸ்லாத்துக்கு மாறிவிட்டதாகவும், அவரது பெயர் முகமது யூசுப் என்றும் அறிவிக்கப்பட்டது. நீண்ட தாடியோடு களம் இறங்க ஆரம்பித்தார். யூசுப் யுஹானாவாக கரியரைத் தொடங்கியவர் முகமது யூசுப்பாக மாறியதும் கரியரின் உச்சம் தொட்டார்.

2006-ல் இவர் செய்ததெல்லாம் இனி எந்த கிரிக்கெட்டராலும் முறியடிக்க முடியாத சாதனைகள். அந்தப் புத்தாண்டை இந்தியாவுடனான டெஸ்ட் தொடரோடுதான் தொடங்கினார். ஜனவரியில் லாகூரில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் 199 பந்துகளில் 173 ரன்கள் அடித்தார் யூசுப். அடுத்த டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் 65 ரன்கள், இரண்டாவது இன்னிங்ஸில் மீண்டும் ஒரு சதம் அடித்து 126 ரன்கள். மூன்றாவது போட்டியில் முதல் இன்னிங்ஸில் டக் அவுட். ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் 97 ரன்கள் என அடுத்தடுத்து பெரிய ஸ்கோர்களோடு எதிர் அணியினருக்கு கிலி கிளப்பினார்.

முகமது யூசுப்
முகமது யூசுப்
அசத்தல் சதங்கள்!
இந்தியாவுக்கு அடுத்து இங்கிலாந்துக்கு எதிரானத் தொடரில் யூசுப்பின் வெறித்தனம் தொடர்ந்தது. லார்ட்ஸில் டபுள் சென்சுரி அடித்தார். அடுத்து லீட்ஸில் 192 ரன், அடுத்து ஓவலில் 128 ரன், வெஸ்ட் இண்டீஸூக்கு எதிராக முதல் டெஸ்ட்டில் 192 ரன், இரண்டாவது டெஸ்ட்டில் 191 ரன், மூன்றாவது டெஸ்ட்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலிலுமே 102, 124 என சதங்களை சரளமாக அடித்து மிரட்டினார்.

இங்கிலாந்தின் லார்ட்ஸில் யூசுப் ஆடிய இன்னிங்ஸ் இன்றுவரை உலகின் கிளாசிக்கல் இன்னிங்ஸ்களில் ஒன்றாகக் கொண்டாடப்படுகிறது. மார்பை நோக்கிவந்த பந்துகளை எல்லாம் ஸ்கொயர் கட்டாக்கி பவுண்டரிகளாகக் குவித்தார் யூசுப்.

அந்த ஆண்டு மட்டும் பல சாதனைகள் படைத்தார் யூசுப். அதில் முக்கியமானது டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் மிக அதிக ரன்கள் அடித்தவர் என்கிற சாதனை. சரியாக 30 ஆண்டுகளுக்கு முன்பு 1976-ல் இதேபோல் 19 இன்னிங்ஸ்களில் விவியன் ரிச்சர்ஸ் 1710 ரன்கள் அடித்திருந்ததே அதுவரையிலான சாதனை. இதில் 7 சதங்கள், 5 அரைதங்கள் அடித்திருந்தார் ரிச்சர்ட்ஸ்.

முறியடிக்கப்பட்ட ரிச்சர்ட்ஸ் சாதனை!

ஆனால், 1788 ரன்கள் குவித்து விவியன் ரிச்சர்ட்ஸின் சாதனையை முறியடித்தார் முகமது யூசுப். அந்த ஆண்டு மட்டும் இரட்டை சதம் உள்பட 9 சதங்கள் அடித்திருந்தார். மொத்தம் 19 இன்னிங்ஸ்களில் இந்த ரன்கள் அடிக்கப்பட்டதால் அவரின் ஆவரேஜ் ஒரு மேட்சுக்கு 99.33 ரன்கள். அந்த ஆண்டு மட்டும் 7 மேன் ஆஃப் தி மேட்ச், 3 மேன் ஆஃப் தி சீரிஸ் விருதுகள் வாங்கினார்.

உலக கிரிக்கெட்டே யூசுப்பை மிரண்டு போய் பார்த்தது. அப்போது யூசுப்புக்கு வயது 32தான் என்பதால் இன்னும் எப்படியும் 4 ஆண்டுகள் விளையாடுவார், பாகிஸ்தானின் நம்பர் 1 பேட்ஸ்மேனாக கரியரை முடிப்பார் என எல்லோரும் நினைக்க, அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள்தான் உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேனாக இருந்தவரை ஒரே ஆண்டில் உச்சத்தில் இருந்து அதலபாதாளத்தில் இறக்கியது.

Kapil Dev
Kapil Dev
Photo: Kapil Dev / Twitter

திடீரென பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் மீது அதிருப்தியானார் முகமது யூசுப். சீனியர் வீரரான, அணியின் ரன் மெஷினான தனக்கு உரிய அங்கிகாரம் கொடுக்கப்படுவதில்லை என்கிற அவரின் உள்ளக்குமுறல் வெளியே கேட்கத்தொடங்கியது. 2007-லும் ஒருநாள் போட்டிகளில் 1000 ரன்களுக்கு மேல் அடித்தார். ஆனால், அவரின் ஸ்கோரிங் ஏரியாவான டெஸ்ட் போட்டிகளில் பெரிதாக ஆடவில்லை. ஸீ டிவியின் சுபாஷ் சந்திரா இந்தியன் கிரிக்கெட் லீகை, கபில்தேவ் தலைமையில் தொடங்குகிறார் என அறிவிப்பு வந்ததும், ஐசிஎல் போட்டிகளில் கலந்துகொள்ள முடிவெடுத்தார். பாகிஸ்தானின் முன்னாள் வீரர்கள் இன்சமாம் உல் ஹக், மொயின் கான் எனப் பலரும் விளையாடிய 2007 ஐசிஎல் தொடருக்கு பிசிசிஐ கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்தது.

"இது நாங்கள் நடத்தும்போட்டியில்லை என்பதால் மற்ற நாட்டின் கிரிக்கெட் போர்டுகள் இதற்கு ஒத்துழைக்கக்கூடாது!"
என்றது பிசிசிஐ.

இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிஎல் போட்டிகளில் விளையாடக்கூடாது என தங்கள் நாட்டு வீரர்களுக்கும் தடை விதித்தது. ஐசிஎல் கிரிக்கெட்டில் இருந்து வெளியேறினால் 2008 ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடலாம் என்றது பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு. ஆனால், ஐசிஎல் சார்பாக முகமது யூசுப் மீது வழக்குத்தொடரப்பட்டிருந்தால் 2008 ஐபிஎல் ஏலத்தில் அவரை எந்த அணியுமே எடுக்கவில்லை.

இந்த நேரத்தில் பாகிஸ்தானின் கேப்டனாக இளம் வீரர் ஷோயப் மாலிக் அறிவிக்கப்பட்டார். இந்த முடிவு யூசுப்புக்கு அதிர்ச்சிகளை ஏற்படுத்தியதோடு, ஷோயப் மாலிக் தன்னை மதிப்பதில்லை என்று வெளிப்படையாகப் பேச ஆரம்பித்தார். அந்த காலகட்டத்தில் மட்டும் பாகிஸ்தானில் ஒருநாள் போட்டிகளுக்கு ஒரு கேப்டன், டெஸ்ட்டுக்கு ஒரு கேப்டன், டி20-க்கு ஒரு கேப்டன் என ஓர் அணிக்குள்ளேயே பல கேப்டன்கள் இருந்தது பல ஈகோ மோதல்களை உண்டாக்கியது. யூனிஸ் கான், முகமது யூசுப், ஷோயப் மாலிக், ஷாகித் அஃப்ரிடி என ஒரு டீமுக்குள்ளேயே தனித்தனி அணிகளாக இருந்தார்கள்.

ஷாகித் அஃப்ரிடி, சோயப் அக்தர்
ஷாகித் அஃப்ரிடி, சோயப் அக்தர்

இந்நிலையில் 2008-ல் பாகிஸ்தானில் நடக்க இருந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கும் ஷோயப் மாலிக் கேப்டனாக அறிவிக்கப்பட, புனித மாதமான ரமலான் மாதத்தில் போட்டிகள் நடப்பதால் தான் கலந்துகொள்ளமுடியாது என அறிவித்தார் முகமது யூசுப். கடைசியில் சாம்பியன்ஸ் டிராபி தொடரே பாதுகாப்பு காரணங்களால் அந்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறவில்லை. 2007-ல் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியவர் மீண்டும் 2009-ல் பாகிஸ்தான் அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாட வந்தார். இலங்கைக்கு எதிரான அந்தத் தொடரில் சதமும் அடித்தார். ஆனால், ஈகோ யுத்தங்கள் எல்லை மீறி போய்க்கொண்டிருந்தன.

2009 சாம்பியன் டிராபி போட்டிகளில் ஷாகித் அஃப்ரிடி பாகிஸ்தானின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்தத்தொடரில் பாகிஸ்தான் தோல்வியடைந்தது. இதனால் உடனடியாக மீண்டும் கேப்டனை மாற்றியது பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு. 2009-ல் நியூசிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடருக்கு முதல்முறையாக பாகிஸ்தானின் கேப்டனாக நியமிக்கப்பட்டார் முகமது யூசுப். இவர் தலைமையிலான அணி 1-1 என டெஸ்ட் தொடரை டிரா செய்தது. முகமது யூசுப்பும் ஓரளவுக்கு சிறப்பாகவே ஆடினார். ஆனால், பின்னர் யூனிஸ் கான் தலைமையிலான அணி நியூஸிலாந்திடம் 2-1 என தொடரை இழந்தது. இதைத்தொடர்ந்து நியூசிலாந்தில் இருந்து அப்படியே ஆஸ்திரேலியாவுக்குப்போன பாகிஸ்தான் அணிக்கு டெஸ்ட், ஒருநாள் தொடர் என இரண்டுக்குமே கேப்டனாக முகமது யூசுப் அறிவிக்கப்பட்டார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகளிலுமே பாகிஸ்தான் படு தோல்வியடைந்தது. ஐந்து ஒருநாள் போட்டிகளிலும் தோல்வி. பேட்ஸ்மேனாக ஒரே ஒரு மேட்சில் 58 ரன்கள் அடித்தார் முகமது யூசுப். மற்றப்போட்டிகளில் பெரிதாக ஆடவில்லை. இதனால் 4-0 என தொடரை இழக்க கடைசிப்போட்டியில் அவர் அணியில் இருந்தே நீக்கப்பட்டு ஷாகித் அஃப்ரிடி கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்தப் போட்டியிலும் பாகிஸ்தான் தோல்வியடைந்தது. டி20 போட்டிக்கு ஷோயப் மாலிக் கேப்டன். ஒரே போட்டிதான். அதிலும் பாகிஸ்தான் தோல்வியடைந்தது. ஆஸ்திரேலியாவில் ஒரே ஒரு போட்டியில்கூட பாகிஸ்தான் வெற்றிபெறவில்லை.

முகமது யூசுப்
முகமது யூசுப்
இந்தத் தொடர் முடிந்ததுமே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் படு தோல்விக்குக் காரணம் ஈகோ மோதல்கள்தான் எனக் கடுமையான நடவடிக்கைகள் எடுத்தது. முகமது யூசுப்புக்கும், யூனிஸ் கானுக்கும் கிரிக்கெட் விளையாட வாழ்நாள் தடை அறிவித்தது. ஷோயப் மாலிக்கிற்கு ஓர் ஆண்டு தடை விதிக்கப்பட்டது.

அந்த சூழலில்தான் இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்ட அந்த ஓய்வு குறித்த பேட்டியை வெளியிட்டார் முகமது யூசுப். ஆனால், சில மாதங்களிலேயே அதாவது ஆகஸ்ட்டில் இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரின் பாதியில் மீண்டும் அணிக்குள் அழைக்கப்பட்டார். சல்மான் பட் தலைமையிலான பாகிஸ்தான் அணி முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலுமே தோல்வியடைய மூன்றாவது டெஸ்ட்டுக்கு பாகிஸ்தானில் இருந்து பறந்து வந்தார் யூசுப். கம்பேக் இன்னிங்ஸில் 56 ரன்கள் அடித்தார். பாகிஸ்தான் இந்தப்போட்டியில் வென்றது. ஆனால் அடுத்த டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் டக் அவுட், இரண்டாவது இன்னிங்ஸில் 10 ரன்களில் அவுட் என ஃபார்ம் போனது.

இதற்கு அடுத்து நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2 டி20 போட்டிகளிலும், 5 ஒருநாள் போட்டிகளிலுமே விளையாடினார். ஆனால், எந்தப் போட்டியிலுமே பெரிதாக ரன் அடிக்கவில்லை. அதன்பிறகு டிராப் செய்யப்பட்டவர் மீண்டும் அணிக்குள் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விளையாட சேர்க்கப்பட்டார். ஆனால், கடைசி ஒருநாள் போட்டியில் மட்டுமே விளையாடி 3 ரன்கள் அடித்தார். இதுதான் அவரது கடைசி இன்னிங்ஸ். டெஸ்ட் தொடரில் சேர்க்கப்படவேயில்லை.

முகமது யூசுப்
முகமது யூசுப்
Screenshot from YouTube

விவியன் ரிச்சர்ட்ஸின் சாதனைகளையே தான் முறியடித்தபோதும் பாகிஸ்தான் அணி நிர்வாகம் அதை சரியாக அங்கீகரிக்கவில்லை என்பதுதான் முகமது யூசுப்பின் கோபம். அந்தக் கோபம், ஈகோவாக மாறி, அணிக்குள் இருந்த ஒற்றுமைத்தன்மையை குலைத்தது. கிரிக்கெட் என்பதே ஒரு பார்ட்னர்ஷிப் விளையாட்டுதான். பேட்ஸ்மேன் ரன் எடுக்கவேண்டும் என்றால் எதிரில் நிற்கும் நான் ஸ்ட்ரைக்கிங் பேட்ஸ்மேனும் ஓடவேண்டும். அப்போதுதான் ரன் கிடைக்கும். எதிரில் நின்றவர்கள் எல்லோருமே ஒரு கட்டத்தில் எதிரிகளாக இருக்க ஆட்டத்தில் இருந்து முகமது யூசுப்பின் கவனம் சிதைந்தது. இதனால் அவரால் பழையபடி அந்த அழகியல் விளையாட்டை விளையாடமுடியவில்லை. ஃபார்ம் இழந்தார். சர்ச்சைகளில் சிக்கினார். கேப்டன்களோடு மோதினார் என இன்னும் பல உச்சங்களைத்தொட்டிருக்கவேண்டிய கிரிக்கெட்டரின் கரியர் திடீர் எனக் காணாமல் போனது.

ஆனால், 14 ஆண்டுகள் கடந்துவிட்டன. இப்போதும் முகமது யூசுப்பின் அந்த 1788 ரன்கள் சாதனையை யாராலும் நெருங்க முடியவில்லை!