Published:Updated:

கிரண் மோரே கண்டெடுத்த சூப்பர் கீப்பர்... இந்திய கிரிக்கெட் அணிக்குள் தோனி வந்த கதை! #Dhoni

ரஞ்சி டிராபி, துலீப் டிராபி, விஜய் ஹஸாரே டிராபி என ஏகப்பட்ட உள்ளூர் போட்டிகளை நடத்தியும் இந்தியாவுக்கான சரியான விக்கெட் கீப்பரை தேர்வாளர்களால் தேர்ந்தெடுக்கமுடியவில்லை.

90'களில் கிரிக்கெட் பார்த்தவர்களுக்கு இந்திய விக்கெட் கீப்பர்களைப் பார்த்தாலே பரிதாபமும், கோபமும், எரிச்சலும்தான் வரும். அப்போதைய சூழலில் விக்கெட் கீப்பிங், ஸ்டம்பிங் மட்டுமல்லாது பேட்டிங்கிலும் மற்ற டீம்களில் இருந்த விக்கெட் கீப்பர்கள் தெறிக்கவிடுவார்கள். ஆஸ்திரேலியாவில் இயான் ஹூலியே சிறந்த விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன். ஆனால், அவருக்கு அடுத்துவந்த ஆடம் கில்கிறிஸ்ட் விக்கெட் கீப்பர்களின் ஸ்டாண்டர்டையே மொத்தமாக மாற்றிக்காட்டினார். விக்கெட் கீப்பர்கள் எல்லாம் அதிரடி பேட்ஸ்மேன்களாவும் இருப்பார்கள் என்பதே அப்போதுதான் உலகுக்குத் தெரிய ஆரம்பித்தது.

கில்கிறிஸ்ட் வந்து வெளுத்துக்கொண்டிருந்தபோது தென்னாப்பிரிக்காவில் மார்க் பெளச்சர் வந்துவிட்டார். ஜிம்பாப்வேவின் ஆண்டி ஃப்ளவர், ரிவர்ஸ் ஸ்வீப்களால் தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கிக்கொண்டிருந்தார். இலங்கையின் கலுவித்தரானாவைப் பார்த்து பொறாமைப்பட்டபோதே அடுத்து சங்கக்காரா எனும் சூப்பர் ஸ்டார் வந்துவிட்டார் என ஒவ்வொரு அணியிலும் விக்கெட் கீப்பர்கள் அதிரடி ஆட்டம் ஆடிக்கொண்டிருந்தார்கள். ஆனால், இந்தியாவின் நிலைமையோ கவலைக்கிடமாக இருந்தது.

தோனி
தோனி

ரஞ்சி டிராபி, துலீப் டிராபி, விஜய் ஹஸாரே டிராபி என ஏகப்பட்ட உள்ளூர் போட்டிகளை நடத்தியும் இந்தியாவுக்கான சரியான விக்கெட் கீப்பரை இந்தியத் தேர்வாளர்களால் தேர்ந்தெடுக்கமுடியவில்லை. நயான் மோங்கியா, சபா கரீம், பார்த்தீப் பட்டேல், அஜய் ரத்ரா எனப் பல விக்கெட் கீப்பர்கள் இந்திய அணிக்குள் வந்தாலும் யாருமே உலகத்தரத்தில் அல்ல, உள்ளூர் தரத்துக்குக்கூட இல்லை. டெய்ல் எண்டர்களைப் போல ஆடக்கூடியவர்களாகவே இவர்கள் இருந்தார்கள். ஓரிரண்டு போட்டிகள் மட்டுமே விதிவிலக்கு.

விக்கெட் கீப்பர் என்பவரால் ப்ளேயிங் லெவனில் ஒரு எண்ணிக்கைதான் கூடுகிறதே தவிர அவரால் அணிக்குள் எந்த நல்லதும் நடப்பதில்லை என கங்குலியும், அப்போதைய பயிற்சியாளர் ஜான் ரைட்டும் முடிவெடுத்து அணியின் தூணான ராகுல் டிராவிட்டையே விக்கெட் கீப்பராகவும் செயல்படவைத்தார்கள். 50 ஓவர்கள் விக்கெட் கீப்பிங்கும் செய்து, ஓப்பனர்கள் சொதப்பும்போது மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும் 40 ஓவர்கள் வரை பேட்டிங் செய்து... என உயிரைக் கொடுத்துக்கொண்டிருந்தார் ராகுல் டிராவிட். பல கேட்சுகள், ஸ்டம்பிங்குகள் மிஸ்ஸாகும். ஆனாலும், 'அவர்தான் விக்கெட் கீப்பர் இல்லையே' என ரசிகர்கள் மட்டுமல்ல, கங்குலியே சமாதானம் சொல்லவேண்டியிருந்தது. 2003 உலகக்கோப்பைக்குப் பிறகு டிராவிட்டுக்கு விக்கெட் கீப்பிங் பெரிய சுமையாக இருக்க, மீண்டும் டெஸ்ட், ஒருநாள் என இரண்டுக்குமான விக்கெட் கீப்பர்களைத் தேட ஆரம்பித்தார்கள்.

Dhoni
Dhoni
BCCI

இந்த சூழலில்தான் 2004-ல் துலீப் டிராபியின் இறுதிப்போட்டி சண்டிகரில் நடக்கிறது. நார்த் ஸோன் vs ஈஸ்ட் ஸோன். நார்த் ஸோன் அணியில் கெளதம் கம்பீர், யுவராஜ் சிங், தினேஷ் மோங்கியா, ஆசிஷ் நெஹ்ரா என இந்தியாவின் ஸ்டார்கள் விளையாடுகிறார்கள். ஈஸ்ட் ஸோனுக்கு ஷிவ் சுந்தர் தாஸ், தபசிஸ் மொஹந்தி, ரோஹன் கவாஸ்கர் ஆகியோர் விளையாடுகிறார்கள். ஈஸ்ட் ஸோனின் விக்கெட் கீப்பராக, ஓப்பனிங் பேட்ஸ்மேனாக விளையாடுகிறார் எம்.எஸ்.தோனி.

''கிரிக்கெட் என்ன ஆஸ்திரேலியா அப்பன் வீட்டு சொத்தா?!''- தோனியின் சகாப்தம் தொடங்கிய கதை! #HBDDhoni

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு உறுப்பினரும், முன்னாள் விக்கெட் கீப்பருமான கிரண் மோரே அங்கே அந்த மேட்சைக் காண்பதற்காக வருகிறார். அங்கேதான் தோனியின் விக்கெட் கீப்பிங்கை கவனிக்கிறார் கிரண் மோரே. தான் உள்பட இதுவரை இந்திய அணியில் இருந்த எந்த விக்கெட் கீப்பரிடமும் இல்லாத வேகத்தையும், துல்லியத்தையும் கவனிக்கிறார். தோனியைப் பற்றி ஏற்கெனவே கேள்விப்பட்டிருந்தாலும் அவரது வேகமும், பெளலர்களோடு அவர் கோ ஆர்டினேட் செய்தவிதமும் அவரை ஈர்க்கிறது. அந்த மேட்சில் மட்டும் 5 பேட்ஸ்மேன்களை ஸ்டம்ப்பிங் முறையில் ஆவுட் ஆக்குகிறார் தோனி. அதில் யுவராஜ் சிங்கும் ஒருவர். பேட்ஸ்மேனாகவும் இரண்டாவது இன்னிங்ஸில் 60 ரன்கள் அடிக்கிறார் என முதல் பார்வையிலேயே மோரேவின் கவனத்தை முழுவதுமாகத் தன்பக்கம் திருப்புகிறார் தோனி.

தோனி
தோனி
ICC/Twitter

இந்திய அணிக்கு அப்போது மிகவும் அத்தியாவசியத் தேவையாக இருந்தது விக்கெட் கீப்பிங் ஸ்பாட்தான். தோனியைப் பார்த்தவருக்கு செம சந்தோஷம். உடனடியாக அவரை அணிக்குள் கொண்டுவரும் முயற்சிகளை எடுக்கிறார். ஆனால், அப்போது தேர்வுக்குழுவின் தலைவர் சயத் கிர்மானி. இந்தியாவின் அடுத்த விக்கெட் கீப்பராக எல்லோரும் தோனியை எதிர்பார்க்க, தமிழகத்தின் தினேஷ் கார்த்திக் அணிக்குள் நுழைகிறார். 2004 செப்டம்பரில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகிறார் தினேஷ் கார்த்திக். ஆனால், சில வாரங்களிலேயே பிசிசிஐ நிர்வாகத்திலும், தேர்வுக்குழுவிலும் மாற்றங்கள் நடக்கின்றன. அக்டோபரில் இந்திய தேர்வுக்குழுவின் தலைவராக கிரண் மோரே அறிவிக்கப்படுகிறார். அக்டோபரில் தலைவரானவர் டிசம்பரில் வங்கதேசம் செல்லும் இந்திய அணிக்குள் விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக்கு பதில் மகேந்திர சிங் தோனியின் பெயரை சேர்க்கிறார். இப்படித்தான் ஜார்கண்ட் வீரர் இந்திய அணி வீரராக மாறுகிறார்.

எல்லா விக்கெட் கீப்பர்களுமே தாவிப்பறந்து கேட்ச் பிடிப்பார்கள், ஸ்டம்பிங்குகள் செய்வார்கள். ஆனால், தோனியின் தனித்திறமையே அவருக்கு முன்னால் நிற்கும் பேட்ஸ்மேன்களின் மனதைக் கணிப்பதுதான். பேட்ஸ்மேனின் பல்ஸை சரியாகப் படித்ததால்தான் தோனியால் வெற்றிகரமான விக்கெட் கீப்பராக 15 ஆண்டுகள் இந்திய அணிக்குள் இருக்கமுடிந்தது. இந்த 15 ஆண்டுகளில் இந்தியாவுக்காக விளையாடிய அத்தனை ஸ்பின்னர்களுமே தங்களின் விக்கெட்களில் தோனிக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்று வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார்கள்.

Dhoni
Dhoni
bala

அணிக்குள் வந்ததும் கிரண் மோரேவையும் மறந்துவிடவில்லை தோனி. 2011-ல் இங்கிலாந்து டூரில் கீப்பராக சிலப் பின்னடைவுகளை அவர் சந்தித்தபோது அவர் கலந்தாலோசித்தது மோரேயுடன்தான். இந்திய அணி பயிற்சிகளில் ஈடுபடும்போது தோனி பேட்டிங் பயிற்சிதான் செய்வாரே தவிர, கீப்பிங் பயிற்சிகள் செய்யமாட்டார் எனச் சொல்வார்கள். விக்கெட் கீப்பரின் கண்கள் எப்போதும் அலர்ட்டாக இருக்கவேண்டும். அதற்கு பேட்மிட்டன்தான் சரியான பயிற்சி என பேட்மிட்டனைத் தொடர்ந்து விளையாடுவதையே தொடர்ந்து பயிற்சியாக மாற்றிக்கொண்டிருக்கிறார் தோனி. அதேப்போல் ஃபிட்னஸ் பயிற்சிகளுக்கு அவர் அதிகம் நம்பியிருந்தது ஜிம்களை அல்ல. கால்பந்தைத்தான்.

தோனி கிரிக்கெட் வீரர்தான்... ஆனால், கிரிக்கெட் நன்றாக விளையாட அவர் எல்லா விளையாட்டுகளையும் விளையாடிருக்கிறார்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு