Published:Updated:

தோனி உருவாக்கிய சீனியர்ஸ் இல்லா அணி... டி20 ஆக மாறிய 2013 சாம்பியன்ஸ் டிராஃபியை இந்தியா வென்ற கதை!

தோனி
தோனி

தேர்வுக்குழுவின் முன்னால் தோனி அமர்கிறார். சாதாரண தோனியாக அல்ல, கபில்தேவுக்குப்பிறகு உலகக்கோப்பையை வென்று கொடுத்த வரலாற்று நாயகனாக! இப்போது தோனிதான் அரசன். தோனி வைத்ததுதான் சட்டம். தோனியின் திட்டங்களுக்கெல்லாம் முழுமனதோடு ஒப்புதல் கொடுத்தது பிசிசிஐ.

ஜூன் 23, 2013... இந்திய அணி சாம்பியன்ஸ் டிராஃபியை வென்ற தினம் இன்று. இந்திய கிரிக்கெட்டிற்கு ஆகப்பெரும் வெற்றிகளை தேடிக்கொடுத்த கேப்டன் தோனி, ஐ.சி.சி-யின் அனைத்து கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமையை பெற்ற தினம். இந்த வெற்றி அவ்வளவு எளிதில் சாத்தியப்பட்டு விடவில்லை. 2011 உலகக்கோப்பைக்கு பின்னால் இருந்த செயல்திட்டத்தை விட இந்த 2013 வெற்றிக்கு பின்னால் இருந்த செயல்திட்டம் மிகப்பெரியது.

தன்னுடைய கரியரிலேயே மிகவும் ரிஸ்க்கான முடிவுகளை இந்த தொடருக்காக தோனி எடுத்தார். இந்த 2013 சாம்பியன்ஸ் டிராஃபிக்காக தோனி ஏன் அவ்வளவு மெனக்கெடல்களை செய்தார், இந்த வெற்றியினால் இந்திய அணி பெற்றது என்ன?

2007-08 காலகட்டத்தில் தோனி கையில் முழுமையாக கேப்டன் பொறுப்பு வந்தவுடனேயே 2011 உலகக்கோப்பை குறித்து யோசிக்க தொடங்கிவிட்டார் தோனி. 2007 டி20 உலகக்கோப்பையை தன்னை போன்ற இளைஞர்கள் கூட்டத்தை மட்டுமே வைத்து வென்றதால் இந்திய அணியிலும் அதிகமாக இளம் வீரர்கள் இடம்பெற வேண்டும் என்று நினைத்தார்.

உடல் தகுதிமிக்க இளம் வீரர்களால் அணிக்கு பலவிதத்தில் பலன் கிடைக்கும் என நினைத்தார். ஆனால், தோனியின் எண்ணங்களுக்கு முழுமையாக தேர்வுக்குழு ஒத்துழைப்பு அளித்திருக்கவில்லை. தோனியின் சில முடிவுகளுக்கு மட்டும் தலையசைத்து சில வீரர்களை ஓரம்கட்டிய பிசிசிஐ தோனியின் லகானை தங்கள் கைக்குள்ளேயே வைத்திருந்தது. இதனால், அனுபவம் + இளமை கலந்த ஒரு அணியுடனே தோனி 2011 உலகக்கோப்பைக்குள் அடியெடுத்து வைத்தார். அணியை சிறப்பாக வழிநடத்தி உலகக்கோப்பையையும் வென்று கொடுத்தார்.

கோலி
கோலி

ஒரு சாதாரண வீரர் வெற்றியில் திளைத்துக் கொண்டிருக்கலாம். தோல்வியின் சோகத்தில் மூழ்கிக் கிடக்கலாம். ஆனால், ஒரு தலைவன் இவ்விரண்டையும் செய்யக்கூடாது. வெற்றியோ தோல்வியோ அடுத்த இலக்கை நோக்கி தன்னுடைய படையை முன்னகர்த்தி கொண்டே செல்ல வேண்டும். தோனியும் அதையே செய்ய நினைத்தார். 2011 உலகக் கோப்பையை வென்றுவிட்டோம். சந்தோஷம்தான், ஆனால் அதிலேயே மிதந்து கொண்டிருக்க முடியாது. அடுத்த இலக்கான 2015 உலகக்கோப்பைக்கு இப்போதிருந்த திட்டத்தை வகுத்து அணியை கட்டமைக்க வேண்டும்.

தேர்வுக்குழுவின் முன்னால் தோனி அமர்கிறார். சாதாரண தோனியாக அல்ல, கபில்தேவுக்குப்பிறகு உலகக்கோப்பையை வென்று கொடுத்த வரலாற்று நாயகனாக! இப்போது தோனிதான் அரசன். தோனி வைத்ததுதான் சட்டம். தோனியின் திட்டங்களுக்கெல்லாம் முழுமனதோடு ஒப்புதல் கொடுத்தது பிசிசிஐ.

தோனியும் 'மிஷன் 2015'-க்கான வேலையை தொடங்கினார். 2011 உலகக்கோப்பையில் ஆடிய அத்தனை சீனியர் வீரர்களையும் வெளியேற்றிவிட்டு, ஒரு புதிய இளம் அணியை கட்டமைத்து 2015 உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்பதுதான் தோனியின் திட்டம். 2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராஃபி நடைபெறுவதால் இந்தத் தொடரையே 2015 உலகக்கோப்பைக்கான முன்னோட்டமாக வென்று காட்ட வேண்டும். இதுதான் தோனியின் எண்ணம். அதாவது, 2013 சாம்பியன்ஸ் டிராஃபிக்குள் சீனியர்களையெல்லாம் ஓரங்கட்டி ஒரு இளம் அணியை கட்டமைத்து விட வேண்டும். அது எப்படி சாத்தியம்?

2011-ல் உலகக்கோப்பையை வென்று புகழின் உச்சியில் இருக்கும் வீரர்களை இரண்டே வருடத்தில் மொத்தமாக உட்கார வைக்க முடியுமா? முடியும். தோனி முடித்துக் காட்டினார். ஷேவாக், கம்பீர், சச்சின் மூவரையும் ஒரே ப்ளேயிங் லெவனில் ஆட வைக்க முடியாது என்பதில் உறுதியாக இருந்தார். சச்சின் ஏற்கெனவே ஓய்வு முடிவில்தான் இருந்தார் என்பதால் பெரிய பிரச்சனை இல்லை. ஷேவாக், கம்பீர் போன்றோரை அடுத்தடுத்த தொடர்களில் மெதுவாக ஓரம் கட்டிவிட்டு தனக்கான இளம் அணியை உருவாக்கினார் தோனி. ஃபிட்னஸ், ஃபீல்டிங், மாறிவரும் டி20 யுகம் போன்றவற்றை சீனியர்களின் ஓரங்கட்டலுக்கு காரணமாக சொன்னார் தோனி.

தோனி
தோனி

தோனியின் இந்த முடிவுகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டன. இந்தியாவும் முக்கிய சீரிஸ்களில் எல்லாம் கோட்டைவிட்டது. ஆஸ்திரேலியாவில் ட்ரை சீரிஸ், இங்கிலாந்துக்கு எதிரான ஹோம் சீரிஸ், பாகிஸ்தானுக்கு எதிரான ஹோம் சீரிஸ் என அடுத்தடுத்து அடிகள் விழுந்து கொண்டே இருந்தது. ஆனால், தோனி தனது ப்ராசஸில் மட்டுமே கவனம் செலுத்தினார். 2013 சாம்பியன்ஸ் டிராஃபிக்கு முன்பாக தனக்கான அணியை கட்டமைத்துக் கொண்டார்.

ரோஹித் ஷர்மா, தவான், உமேஷ் யாதவ், புவனேஷ்வர் குமார், அஷ்வின், ஜடேஜா என இளம் வீரர்களை முழுமையாக நம்பி தொடர் வாய்ப்புகளை கொடுத்தார். இந்நிலையில்தான் 2013 சாம்பியன்ஸ் டிராஃபி இங்கிலாந்தில் தொடங்கியது. தோனி தனது இளம் படையோடு களமிறங்கினார். இந்திய அணி மீது யாருக்கும் பெரிய எதிர்பார்ப்புகள் எல்லாம் இல்லை. சுமாரான ஒரு அணி செல்கிறது. மோசமில்லாமல் மானத்தை காப்பாற்றினால் போதும் என்பதே பலரின் எண்ணமாகவும் இருந்தது. ஆனால், நடந்தது வேறு.

சில முக்கியமான முடிவுகளை இந்த தொடருக்காக எடுத்திருந்தார் தோனி. அதில் ஒன்று மிடில் ஆர்டரில் ஆடிய ரோஹித்தை ஓப்பனிங் இறக்குவது என்பது. இந்த முடிவை தோனியே கொஞ்சம் சர்ப்ரைஸாகவே வைத்திருந்தார். இந்த தொடருக்கு முன்பாக நடந்த இரண்டு பயிற்சி போட்டிகளிலும் முரளி விஜய்யையும் தவானையுமே ஓப்பனிங்காக இறக்கியிருந்தார். இரண்டு போட்டிகளிலும் கடுமையாக சொதப்பினார் விஜய். ஆனால், மிடில் ஆர்டரில் தினேஷ் கார்த்திக் அட்டகாசமாக இரண்டு சதங்களை அடித்தார். இதை வைத்தே ரோஹித்தை ஓப்பனிங் இறக்குவதென்றும் ரோஹித்தின் மிடில் ஆர்டரில் தினேஷ் கார்த்திக்கை இறக்குவதென்றும் முடிவெடுத்தார் தோனி. இந்த முடிவு இந்திய கிரிக்கெட்டில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியிலேயே அரைசதம் அடித்து தனக்கான ஓப்பனிங் ஸ்லாட்டை வலுவாகப் பிடித்துக் கொண்டார் ரோஹித். தவானும் சதமடித்து பட்டையை கிளப்ப இந்த கூட்டணி நன்கு செட்டில் ஆனது. அடுத்தடுத்த போட்டியிலும் இவர்களின் சிறப்பான பார்ட்னர்ஷிப் தொடர்ந்தது. தவான் இரண்டு சதங்களையும் ஒரு அரைசதத்தையும் அடித்து இந்த தொடரில் மிரட்டி இருந்தார். பௌலிங்கில் புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ், இஷாந்த் ஷர்மா, அஷ்வின், ஜடேஜா ஆகியோர் சிறப்பாக வீசியிருந்தனர். இதன் விளைவாக, அரையிறுதியில் இலங்கையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. இப்போதுதான் தோனி மீதும் இந்தியா மீதும் பல ரசிகர்களுக்கும் நம்பிக்கை வந்தது.

இறுதிப்போட்டி நடைபெற்ற எட்ஜ்பாஸ்டன் மைதானம் வான்கடே போன்று மாறியது. மைதானம் முழுக்க இந்திய தரப்பு ரசிகர்கள் நிரம்பியிருக்க, அங்கொன்றும் இங்கொன்றுமாக இங்கிலாந்து ரசிகர்கள் இருந்தனர். கடுப்பேற்றும் இங்கிலாந்து வானிலை அங்கேயும் கைவரிசையை காட்டியது. தொடர்ந்து பல மணி நேரமாக போட்டி தடைபட்டது. இறுதியாக மழை நிற்க ஒருநாள் போட்டி டி20 ஆகி போனது. ஆளுக்கு 20 ஓவர்கள் என அம்பயர்கள் பிரித்து கொடுக்க போட்டி தொடங்கியது.

தோனி
தோனி

மழை பெய்திருந்ததால் பேட்டிங் செய்வதற்கு கடினமாக இருந்தது. இந்தியா முதலில் பேட் செய்து 129 ரன்களை மட்டுமே அடித்தது. கோலி நின்று ஆட, கடைசியில் அதிரடி காட்டிய ஜடேஜாவினாலேயே இது சாத்தியப்பட்டது.

130 டார்கெட் ரொம்பவே குறைவுதான் என்றாலும் பௌலிங்கிற்கு சாதகமான பிட்ச்சின் மீது நம்பிக்கையிருந்தது. அதற்கேற்றவாறே, தொடக்கத்தில் விக்கெட்டுகளும் விழுந்தது. அலெஸ்டர் குக்கை உமேஷ் யாதவ் அட்டகாசமாக குட் லென்த்தில் வீசி எட்ஜ் எடுக்க, பெல் மற்றும் ட்ராட் இருவரும் அஷ்வின் மற்றும் ஜடேஜாவிடம் ஏமாந்து ஸ்டம்பிங் ஆகினர். சரிசமமாக போட்டி சென்று கொண்டு இருந்தாலும் மார்கன், போபாராவும் நின்று ஆடினர். கடைசிக்கட்டத்தில் சிக்சர்களையும் அடித்து இங்கிலாந்தின் வெற்றியை நெருக்கமாக்கினர்.

இந்த போட்டி ஒருநாள் போட்டியிலிருந்து 20 ஓவராக மாற்றப்பட்டதால் கடைசி 2 ஓவர்கள் பவர்ப்ளே வேறு இங்கிலாந்துக்கு எஞ்சியிருந்தது. 18 பந்துகளுக்கு 28 ரன்கள் எடுக்க வேண்டிய சுலபமான நிலையே இருந்தது. இந்நிலையில் தோனி அஷ்வினை அழைப்பார் என எதிர்பார்க்கையில் சர்ப்ரைஸாக இஷாந்த்தை அழைத்தார். இந்த ஓவர்தான் போட்டியையே மாற்றியது. இஷாந்த் வீசிய முதல் பந்தையே மார்கன் சிக்சராக்க, பதற்றத்தில் அடுத்த இரண்டு பந்துகளையும் டிஃபன்ஸிவாக யோசித்து வைடாக வீசினார். ஒரே பந்தில் 8 ரன்கள் வந்துவிட்டது. இதன்பிறகுதான் அந்த மேஜிக் நடந்தது.

தோனி - சாம்பியன்ஸ் டிராஃபி
தோனி - சாம்பியன்ஸ் டிராஃபி

இஷாந்த் கொஞ்சம் ஷார்ட்டாக வீசிய அடுத்த இரண்டு பந்துகளிலும் பெரிய ஷாட் ஆட முயன்ற மார்கன், போபாரா இருவருமே அஷ்வினிடம் கேட்ச் ஆகினர். செட் ஆகியிருந்த இரண்டு பேட்ஸ்மேன்களை அடுத்தடுத்து வெளியேற்றியதன் மூலம் இந்திய அணி கேமுக்குள் வந்தது. இங்கிலாந்தால் இதற்கு மேல் ஒன்றுமே செய்ய முடியவில்லை. கையிலிருந்த மேட்ச்சை கோட்டைவிட்டது. கடைசி பந்தில் 6 ரன்கள் தேவை என்ற நிலையில் டாட் பாலை வீசி வின்னிங் டெலிவரியாக்கினார் அஷ்வின். அந்த பந்தை தோனி கேட்ச் செய்ய தவறியிருந்தாலும், கோப்பையை வென்ற உற்சாகத்தில் துள்ளி குதித்திருப்பார்.

தோனியிடமிருந்து இப்படியான கொண்டாட்டங்களை எப்போதும் பார்க்க முடியாது. 2011 உலகக்கோப்பை வெற்றியின்போது கூட அவர் இவ்வளவு கொண்டாட்டமாக இருந்ததில்லை. இந்த அணியை கட்டமைக்கும் ப்ராசஸில் அவர் எதிர்கொண்ட் விமர்சனங்களும் தன்னுடைய கரியரை பற்றி யோசிக்காமல் எடுத்த ரிஸ்க்குகளுமே தோனியை இப்படி கொண்டாட வைத்தது.

2011 உலகக்கோப்பையை வென்றிருந்த போது இது கங்குலி கட்டமைத்து கொடுத்த அணி, ஆனால் பாராட்டுகளை மட்டும் தோனி தட்டி சென்றுவிட்டார் என்கிற விமர்சனங்களும் எழுந்திருந்தது. ஆனால், இந்த 2013 சாம்பியன்ஸ் டிராஃபி வெற்றியை தோனியை தவிர வேறு யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. அது தோனி கட்டமைத்த அணியை கொண்டு தோனியே தேடிக்கொடுத்த வரலாற்று வெற்றி.

தோனி சீனியர்களை ஓரம்கட்டியது இன்று வரை விமர்சிக்கப்பட்டாலும், 2011-ல் இந்தியாவுக்கு எதிராக உலகக்கோப்பை இறுதிப்போட்டியை ஆடிய இலங்கை அணியின் தற்போதைய நிலையை பார்க்கும்போது தோனியின் முடிவில் அதிகப்படியான நியாயங்கள் இருப்பதாகவே தெரிகிறது. மேலும், தோனியின் அந்த அணிக்கட்டமைப்பே இன்று வரை இந்தியாவுக்கு அடித்தளமாக இருக்கிறது. ஒரு நல்ல தலைவன் நிகழ்காலத்தை தாண்டி எப்போதும் எதிர்காலம் குறித்த சிந்தனையோடு செயல்பட வேண்டும். அதுவே அந்த தலைவன் இல்லாத போதும் அந்த அணி தேக்கமடையாமல் முன்னேறி செல்ல உதவியாக இருக்கும்.

தோனி ஒரு மாபெரும் தலைவன்!

அடுத்த கட்டுரைக்கு